பாட்டி வடை சுட்ட கதை!


தமிழின் மிகப் பிரபலமான் , அனைத்து மக்களும் அறிந்த , "பாட்டி வடை சுட்ட கதை" யினை இங்கு வெண்பா வடிவத்தில் தருகிறேன். வெண்பா மீது கொண்ட தீவிரக் காதலால் பார்ப்பதையெல்லாம் வெண்பாவாக எழுதுவது எனக்கு ஒரு நோயாகவே ஆகிவிட்டது. நளவெண்பாவை ஒருமுறை படித்துப் பாருங்கள், வெண்பாவின் போதையை உணர்வீர்கள்!


காவியந்தான் பாடுவது கட்டாயம் என்னசொல்
சீவியென் மூளையைச் சிந்தித்து - நாவினால்
ஓதியே உங்கள் உயிரெடுப்பேன் ஆனாலும்
காதிரண்டால் கேட்பீர் கதை


தலைமுறைகள் கண்ட மரநிழல் ஒன்றில்
தலைநரைத்த பாட்டி தனியே - புலம்பி
வடைசுட்டு விற்றுத்தன் வாழ்வைக் கழித்து
நடைதளர்ந்தே போனாள் நலிந்து



எட்டித் திருடுமந்தக் காக்கைக்குப் பாட்டியும் 
பட்ட சிரமம் புரியுமா? - தட்டினில்
கொட்டிக் குவித்திருந்த குட்டிவடை மீதொருகண்
ஒட்டியே ஊறியது நாக்கு!


கிட்டப் பறந்து கிழவி அசருங்கால் 
தட்டப் பார்த்தது தருணமக் - கெட்டபுள்ளும்
என்னதான் செய்வாள் எழுபது தாண்டியபின்
கண்னயர்ந்தாள் பாட்டி களைத்து!



பசிவந்திடப் பத்தும் பறந்துபோம் என்பர்
பசியினால் காகம் பறந்து - விசையென
மொத்தவடைத் தட்டினில் ஒற்றைச் சிறுவடையைக்
கொத்தியே சென்றது கொண்டு!


ஓங்கி வளர்ந்தே உயர்ந்த மரமொன்றைப்
பாங்காய் அமர்ந்தபின் பார்த்தது - ஆங்கே
லபக்கிய பணடத்தை லாவகமாய் வாயில்
அதக்கிய வாறே அமர்ந்து


தின்றால் சிறுவடை தீர்ந்திடும் சீக்கிரம்
என்றந்தக் காக்கையும் எண்ணித்தான் - மென்று
விழுங்க மனமின்றி வாயில் வடையை
முழுதா வைத்திருக்கு மோ?


நரிக்கும் இருந்தது நாசி அதனை 
அரித்தே இழுத்திட்ட தாங்கே - மரத்தினில்
காக்கைதன் வாயால் கடித்த வடையன்
மூக்கைத் துளைக்கும் மணம்.


வந்தது காற்றென வேகத்தில் நரியங்கு
கண்டது மேலிருந்த காக்கையை - சிந்தனை
மூட்டையில் சற்றே முடிச்சை அவிழ்த்தபின்
போட்டது காணொரு போடு.



ஏய்காக்கா பாரு படாஷோக்காக் கீறமாநீ
போய்டாத பாட்டொண்ணு பாடென்க - வாய்திறந்து
காகம் உடனங்கு கானம் இசைத்திட்ட
தாகவே தன்னை மறந்து!


விழுந்தது கீழே வடையுமதைக் கவ்வி
நழுவிப் பறந்தது நரியும் - அழுதபடி
ஆண்டு பலவாய் அரற்றியும் காகத்திடம் 
மீண்டு வருமோ வடை?








Comments

  1. அருமையான வெண்பா வடிவம்
    புது மெருகு கொடுத்தது கதைக்கு.

    ReplyDelete
  2. இந்த வெண்பாக்கள் எனக்குப் பாடமாகும் என்று எண்ணுகிறேன். நன்றி.

    ReplyDelete
  3. காக்காய் வடைசுட்டக் காவியத்தை நன்றெனவே
    சோக்காய்ச் சிரித்திட சொன்னாயே! - ஆக்கத்தில்
    கொட்டிய வார்த்தையின் கோர்வைக்குள் நண்பனே
    தட்டுதே வெண்பா தலை!

    ReplyDelete
  4. காக்காய் வடைசுட்டக் காவியத்தை நன்றெனவே
    சோக்காய்ச் சிரித்திட சொன்னாயே! - ஆக்கத்தில்
    கொட்டிய வார்த்தையின் கோர்வைக்குள் நண்பனே
    தட்டுதே வெண்பா தளை!

    மன்னிக்கனும் ஈற்றடியில் “தளை“யைத் “தலை“ என்று தவறாக எழுதிவிட்டேன்.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?