க.சீ.சிவகுமார்-சமகால ஆளுமை
எனது பள்ளிப்பருவத்திலிருந்தே க.சீ.சிவகுமாரின் எழுத்துக்கள் என்னை வசீகரித்து வந்திருக்கின்றன.ஆனந்த விகடனின் மூலமாக அவரது சிறுகதைகள் எனக்கு அறிமுகமாயின.அவருடைய எழுத்துகளில் ஏதோ ஒருவித அன்னியோன்யமும், கிறக்கமும் எனக்கும் புரிபடத் தொடங்கின.சொக்கவைக்கும் நடைக்குச் சொந்தக்காரராகவே அவரை நான் இன்று அறிந்து வைத்திருக்கிறேன்.முன்னாளில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும், பின்னாளில் ஈரோடு மாவட்டத்திலும், இந்நாளில் திருப்பூர் மாவட்டத்திலும் இடம் பிடித்திருக்கும் கன்னிவாடிதான் அவரது ஊர் என்று அறிந்துகொண்டேன்.தாராபுரம், மூலனூர்ப் பகுதிகளைச் சுற்றியே அவரது கதைக்களம் அமைந்திருக்கும்.மிக நெருக்கமான ஓர் உணர்வு அவரது கதைகளில் மேலுடுவதை உணர்ந்திருக்கிறேன்.நகைச்சுவை இழையோடும் நடையில், சமூகத்தின் எளிய மனிதர்களைப் பேசுகின்றன அவரது கதைகள்.மனித மனத்தின் நுண்ணுனர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் , வெள்ளந்தியான கிராம மனிதர்களின் இயல்பு வாழ்க்கையும், குடும்பத்தின் அடிப்படை உறுப்பினர்களுக்கிடையிலான சுவாரஸ்யமான தொடர்புகளும் அவரது எழுத்துகளில் வெளிப்படுகின்றன.கதையின் நாயகன் மிக யதார்த்தமாகப் பேசுவதாகவே எல்லாக் கதைகளும் அமைந்திருக்கின்றன.ஜூனியர் விகடனில் அவர் எழுதிய ஆதிமங்கலத்து விசேஷங்கள் இன்றும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும்.சிவகுமாரின் வரிகள் பலவற்றை நான் அவ்வப்போது அசை போட்டு ஆனந்தப் படுவதுண்டு.ஆதிமங்கலத்து விசேஷங்களில் தொலைபேசி, சினிமா, கார் போன்றவை ஊருக்குள் அறிமுகமான புதிதில் நிகழ்ந்த கூத்துகளை அவர் விவரித்திருந்த விதம் அலாதியானது.எனது நண்பரும், தீவிர வாசிப்பாளருமான தமிழாசிரியர் திரு. கோவிந்தராஜ் அவர்களிடம் அந்தத் தொகுப்பைக்கொடுத்தேன். வாசித்துவிட்டு அழகான அனுபவம் என்ரு மிகவும் சிலாகித்தார்.ஆனந்த விகடனில் சிவகுமாரின் காதல் ஒளிக என்ற சிறுதொடர் மிகப் பரவசம் தருவதாக இருந்தது.எண்ணற்ற சிறுகதைகள் எழுதியுள்ள சிவகுமாரின் "நீலவானம் இல்லாத ஊரே இல்லை' என்ற தொகுப்பும் "கன்னிவாடி" என்ற தொகுப்[பும் வாசிப்பில் எனக்குப் புதிய பரிமாணங்களைக் காட்டின."நள்ளென் யாமம்"என்ற பெயரில் அவரது வலைப்பூ எனது வாசிப்புக்குத் தீனி போட்டு வருகிறது.சிறுகதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள், கவிதைகளும் அவரது படைப்புகளில் உண்டு. 'நிலா நாற்பது' என்னும் பிரிவில் அவரது குட்டிக்குட்டிக் கவிதைகள் ரசனை மிகுந்தவை . க.சீ.சிவகுமாரை வாசித்துப் பாருங்கள், புதியதோர் உணர்வைப் பெறுவீர்கள்!
பகிர்வுக்கு நன்றி,,,
ReplyDeletenice
ReplyDeleteக.சீ.சிவகுமார் எனக்கும் பிடித்த எழுத்தாளர் by Ramesh
ReplyDelete