நூல் வெளியீடு
எப்போதும் எல்லாவற்றிலும் உடனிருந்து ஊக்கப்படுத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது குடும்பத்தினருக்கும் பேரன்பு கலந்த நன்றியுடன் ஆரம்பிக்கிறேன்....!
வெளிப்படுதல் என்பது ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். உணர்வுகள் உச்சகட்டத்தில் எழுத்தாக, இசையாக, ஓவியமாக, சிற்பமாக, நடனமாகப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் போது அவை கலையாகப் பரிணமிக்கின்றன.
இலக்கற்றுச் சுற்றித் திரிந்ததைப் பயணக்கட்டுரைகளாக இணையத்திலும் இதழ்களிலும் எழுதி வந்ததையும்,
அவ்வப்போது கவிதையென எழுதி வைத்த சிறு சிறு குறிப்புகளையும் , தமிழென்னும் பெருங்கடலில் யாப்பென்னும் முத்தெடுக்கத் துழாவி ஆக்கிய செய்யுள்களையும் தொகுத்து நூலாக ஆக்கலாம் என்ற எண்ணம் மேலிடக் காரணமாக இருந்தவர்கள் திரு.சபரியும், திரு. ரகுநாதன் அவர்களும்.
தனது முகநூல் பக்கத்தின் கருத்துரைப் பகுதியில் எப்பொழுது பயணக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடப் போகிறீர்கள் எனத் திரு .சபரி அவர்கள் என்னை Tag செய்த போது தான் அந்த ஐடியா உதித்தது .நன்றி திரு .சபரி.
இந்த ஐடியாவைச் சொல்லி அணிந்துரை கேட்டதுமே மொத்தக் கட்டுரைகளையும் படித்துவிட்டுத் திறந்த மனதுடன் பாராட்டியதோடு அதியற்புதமான அணிந்துரையும் வழங்கி நூலுக்குத் தலைப்பையும், டேக் லைனையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்த திரு ரகுநாதன் அவர்களுக்கு நன்றி...!
மோட்டார் விகடன் இதழின் பொறுப்பாசிரியர் தமிழ்த்தென்றல் அவர்களும் ,கவிஞர் முகமது ரஃபி அவர்களும் அணிந்துரை வழங்கிச் சிறப்பிக்க மாமலை போற்றுதும் என்ற அட்டகாசமான பயணக் கட்டுரை நூல் உருவானது.
தமிழின் அனைத்து வகை யாப்பிலும் பாக்கள் இயற்றித் தமிழுக்கு அலங்காரம் செய்யும் விதமாகச் சூரல் பம்பிய சிறுகான் யாறு என்ற யாப்புச் சான்று நூலை எழுதி முடித்ததில் எனக்குப் பெருமிதமே மேலிட்டது .
குட்டிக் குட்டியாக க்யூட்டான , காதல் கொப்பளிக்கும் கவிதைகளைத் தொகுத்து ஒரு ஸ்பூன் வெட்கம் என்ற தலைப்பிட்டு நூலாக்கிய போது ஜாலியான உணர்வு ஏற்பட்டது. உற்ற நண்பன் அமுதனும், மதிப்புமிகு கவிஞர். நறுமுகையும் அணிந்துரை வழங்கி அழகு சேர்த்தார்கள் .
நான் ஓர் அரசு ஊழியனாதலின் துறை அனுமதி பெற்றே நூல்களை வெளியிட வேண்டும் என நின்ற போது எமது வட்டாரக் கல்வி அலுவலர் திரு ஃபிரான்சிஸ் சார்லஸ் ஐயா அவர்கள் உறுதுணையாக இருந்து வழிகாட்டித் துறை அனுமதி கிடைக்க உதவியதோடு வெளியீட்டு விழாவையும் தலைமையேற்று நடத்திக் கொடுத்ததெல்லாம் வாழ்வில் என்றும் நினைத்துப் பார்க்க வேண்டிய செயல்.... நன்றி ஐயா ....!
நூல்கள் தயாரானதும் வெளியீட்டு விழா வைக்க முடிவானபோது," என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்..!" எனத் தோள் கொடுத்து நின்ற தோழர்கள் செல்வகுமார், மல்லிகார்ஜுனன் ,விஜயகுமார், ஆறுமுகம் ராஜேந்திரன், முருகன் ,தங்கராஜ் ,ADO Balamurali Sir ஆகியோருக்கும், கூடவே நின்று விழா ஏற்பாடுகளைச் செய்த திரு .ஓ.ஆர். சுப்பிரமணியம் அவர்கள், திரு .முருகேசன் அவர்கள், திரு. சதாசிவன் அவர்கள், திரு வேல்முருகன் அவர்கள் ,திரு. மரியதாஸ் ஆன்ட்ரூஸ் அவர்கள் ,திரு .கணேசன் அவர்கள், திரு .மோகன்ராஜ் அவர்கள் ஆகியோருக்கு நன்றிகளை உரித்தாக்க வேண்டிய தருணம் இது.
வெளியீட்டு விழாவை பொதுப் பெரும் நிகழ்வு போலக் கருதிச் சிற்றுண்டி, மதிய உணவு என அனைத்தையும் ஏற்றுக்கொண்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் அன்பை நினைக்கப் பேருவகை பெருகுகிறது.
நூல் வடிவமைப்பு, அச்சுக்கோப்பு, வெளியீட்டு விழா, Online promotions எனச் சுழன்று கொண்டிருக்கையில் இவை அனைத்திலும் என்னை விட வேகமும் ஆர்வமும் காட்டி என்னை ஒரு நொடி கூடச் சோர்ந்து போகாமல் பார்த்துக் கொண்ட அன்புச் சகோதரி சத்யபாரதி அவர்களும்,
அன்புச் சகோதரர்கள் திரு.லட்சுமணசாமி , திரு.மகேந்திரன் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த திரு. கார்த்திக் அவர்களும் என்னுடைய உளவலிமைக்குக் காரணமானவர்கள்.
விழாக்குழுவினராகச் செயல்பட்ட திருமதி.மாலதி, திருமதி.ஷாயிதா பானு, திருமதி. லதா , செல்வி.இலக்கியா ஆகியோருக்கும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி நவில்கிறேன்.
செல்வி.சௌமியா சிவராஜ், திருமதி நிர்மலா தேவி,திருமதி. பத்மாவதி, திரு . ரவி ,திரு. ரங்கசாமி ஆகியோர் விழாவிற்காகக் கொடுத்த உழைப்பும் உதவியும் பேரளவிலானவை.
இந்த மூன்று நூல்களும் அமேசான் , ஃப்ளிப்கார்ட் ,NOTION PRESS உள்ளிட்ட வணிகத் தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
Waterstones , Barnes and Noble, e-bay, Booktopia போன்ற பன்னாட்டுத் தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன.
அமேசான் கிண்டிலில் மின்னூலாகவும் தற்பொழுது கிடைக்கின்றது .
விரைவில் மாமலை போற்றுதும் நூலானது ஆங்கிலம் மற்றும் மலையாள மொழியாக்கங்களிலும் வெளியாக இருக்கிறது .
போரும் காதலும் என்ற தலைப்பில் சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளும், நீண்டகால அடிப்படையில் யாப்பருங்கலக்காரிகைக்கு ஒரு பேருரையும், பொதுமக்கள் ,மாணவர்கள், ஊடகத்துறையினர், அச்சுத்துறையினர், அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், இதழியலாளர்கள் எழுத்தாளர்கள் எனத் தமிழை எங்கெங்கெல்லாம் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கெல்லாம் அன்றாடப் பயன்பாட்டில் ஏற்படும் ஐயங்களை நீக்க ஒரு நடைமுறைப் பயன்பாட்டுச் சொற்களின் பட்டியலையும் ,தேவைப்படுபவர்க்கு அவற்றுக்குண்டான இலக்கண விளக்கங்களும் கொண்ட வலைத்தளம் ஒன்றை நிறுவுவதும் நமது அடுத்த திட்டங்கள் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் நன்றி!
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!