Posts

Showing posts from May, 2011

செழித்த தளங்களில் ஊடாடும் வினாக்கொக்கிகள்

என் இதயத்தின் இடுக்குகளில் எப்போதும் ஒரு தேன்கூடு ததும்பிச்சொரிந்து நினைவுகளை அழிக்கிறது! நாசியின் முன்னால் விரவிய நறுமணம் எப்போதும்  கடந்தகாலத்தை மூச்சிறைக்கச் செய்கிறது. என் கவிதை ஏட்டின் பக்கங்களில் மடித்து வைத்திருக்கும் வானவில் எழுத்துக்களை உறிஞ்சிக் கொள்கிறது. நிம்மதி பாவும் தளத்தின் புல்வெளிகளுக்குள் எப்போதும் ஒரு புதைகுழி ஒளிந்து கொள்கிறது. வாழ்க்கையில் என் இருப்பை  முடிவு செய்வது யார் என்பதைத்தான் அறிய முடிவதே இல்லை1

தமிழறிவோம்

தமிழின் நுட்பமான இலக்கணக் கூறுகளையும், அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டுபயன்படுத்தினால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதையும், பயன்படுத்த அவையாவும் எவ்வளவு எளிமையானவை என்பதையும், நமது பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் அவை எப்படியெல்லாம் மிகச்சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறியும் போது வியப்பு மேலிடுகிறது. பாருங்கள்! உயிரெழுத்துக்கு முன்பு வரும் சொற்களையும். மெய்யெழுத்துக்கு முன் வரும் சொற்களையும் அறிந்து கொள்வோம். ' ஒரு,ஓர் ': ஒரு மரம், ஓர் இலை. மரம் என்னும் சொல் மெய்யில் துவங்கும் போது ஒரு என்பதையும் , இலை என்று உயிரில் துவங்கும் போது ஓர் என்பதையும் பயன்படுத்துகிறோம் . இது இலக்கண விதி .  சான்று:  "ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்"                                                          குறள்-156 நாளை என்பதன் முன் 'ஒரு' என்று வந்துள்ளது. "வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு"                                                             குறள்-465 இங்கு , ஆறு என்பது உயிரில் த

உங்கள் வலைப்பதிவைப் பிரபலமாக்கச் சில யோசனைகள்!

உங்கள் வலைப்பதிவைப் பிரபலமாக்கச் சில யோசனைகள்! வேறுவேறு பெயர்களில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கித் தனக்குத் தானே பின்னூட்டமிட்டுக்கொள்வது, தொடர்பதிவர்களாகக் காட்டிக்கொள்ள வேறுவேறு பெயர்களில் வலைப்பூக்களை உருவாக்குவது இத்யாதி இத்யாதி.... இவையெல்லாம் ஓல்ட் டெக்னிக்ஸ்!உண்மையிலேயே உங்கள் வலைப்பதிவு பிரபலமாக வேண்டுமா? இதோ ... லட்டு லட்டாகச் சில ஐடியாக்கள்! ### உங்கள் பதிவைப் படிப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டுமானால் கணினி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். எனவே நீங்கள் வீட்டுக்கு வீடு இலவச கணினி கொடுக்கலாம். (என்னிலிருந்தே ஆரம்பிக்கலாம் ) ###பின்னூட்டமிடத் தலைக்கு ஆயிரம் ரூபாய் தரலாம்!(அக்கவுன்ட் நம்பர் அனுப்பட்டுமா?) ###ரஜினி, கமல்,விஜய்,மணிரத்னம்,ஷங்கர் போன்றோரின் படங்களை ரிலீஸ் ஆகும்முன்னே எப்படியாவது பிரதி யெடுத்து வலைப்பூவில் ஓட்டலாம்(வேலூரில்) !###நமது ப்ராடக்டை மார்கெட் செய்ய அதாவது போணி பண்ண விளம்பரங்கள் அவசியம்! எனவே தமிழ்த் தொலைக்காட்சிகள் (சன் டிவி, விஜய் டிவி உட்பட)அனைத்திலும் ப்ரைம்டைமில் உங்களது வலைப்பூவைப் பற்றி நாள்தோறும் விள்ம்பரம் செய்யலாம். வார, நாள

நினைவுகள் தொடரும் பிறவி

சில பொழுதுகளில் நான்  என்னிடமிருந்து  விலகிநிற்கிறேன். அந்தத் தேவகணங்களைச்  சேமித்து வைக்கும் ஒழுகாத கோப்பை எனக்கில்லை! இன்னும் சில பொழுதுகளில் என்னை மறந்துவிடுகிறேன். அந்த அவசரப் பொழுதுகளை நினைவூட்ட ஒரு விடிவெள்ளி  என்னிடத்தில் இல்லை! சில பொழுதுகளில் நான் மலர்ந்திருக்கிரேன். அந்த அற்புத நொடிகளை அலங்கரித்து வைக்க என்னிடத்தில்  பூந்தோட்டம் இல்லை. என் கல்லறையோ  ஏற்கனவே கனவுகளால் நிரம்பி வழிகிறது! அகோ.....மீண்டும் ஒரு பிறவி தாரும்! முதலிலிருந்து  வாழ்ந்து பார்க்கிறேன்!

பிழையில்லாத் தமிழ்

# எனக்குச் சாப்பிட வேண்டும் # எனக்கு மருத்துவராக வெண்டும் மேற்காண் தொடர்களைப் படித்துப் பாருங்கள்! "நான் சாப்பிட வேண்டும்" அல்லது "எனக்குச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது" என்பனவற்றுள் ஒன்றுதான் சரியாக இருக்க முடியும்.  அதேபோல்,"நான் மருத்துவராக வேண்டும்" என்பதுதான் சரியான தமிழ். எனக்குச் சாப்பிட வேண்டும் என்பது மழலை மொழி. அதனை மழலையர் சொல்லும்போது ரசிக்க முடியும். முப்பதும் நாற்பதும் முடிந்தவர்கள் சொன்னால் "பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம்" என்னும் பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்கிறது. மற்றொன்று: 'வெண்ணம்மி' நிறுவனங்களின் தலைவர் மும்பை விரைந்தார்'   நாம் அடிக்கடிக் கேள்விப்படும் அல்லது வாசிக்கும் சொல்லாடல் வகைகளுள் இதுவும் ஒன்று.'வெண்ணம்மி நிறுவனங்களின் தலைவர் மும்பை ' என்று பொருள் படவில்லையா?மும்பை என்பது இடத்தின் பெயராக இல்லாமல் ஆளின் பெயராக அல்லவா அர்த்தப்படுகிறது? 'வெண்ணம்மி நிறுவனங்களின் தலைவர் மும்பைக்கு விரைந்தார்' என்பது தெளிவான , முழுமையான பொருளைத்தரும்!        வாழ்க தமிழ்!

கோழி வறுத்த கறியின் சொல்லாட்சி

சென்ற வாரத்திலொருநாள் கோயம்புத்துர்ரின் புகழ்பெற்ற உயர்தர அசைவ உணவகமொன்றின் 'மெனு கார்டில்' 'கோழி வறுத்த கறி' என்ற ஓர் அயிட்டத்தைப் பார்த்தேன். வறுத்த கோழிக்கறி என்பதைப் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன்;விரும்பிச் சுவைத்துமிருக்கிறேன். ஆனால் , கோழி வறுத்த கறி என்பதை இங்கு பார்த்துச் சற்றுக் குழம்பி விட்டேன். சமையல்காரர் வறுத்த கறியா அல்லது கோழியே வறுத்த கறியா என்னும் குழப்பம் ஏற்பட்டாலும் , சிக்கன் மசாலா, சிக்கன் 65, பெப்பர் சிக்கன் , ஜிஞ்சர் சிக்கன், பட்டர் சிக்கன், சில்லி சிக்கன் வகையறாக்களையே மெனுகார்டில் பார்த்துப் பார்த்துக் கண்களும் , நாக்கும் புளித்துச் சலித்து அலுத்துப் போயிருந்ததால், கோழி வறுத்த கறி என்ற பெயரே நாவில் 1/2 காலன் நீரை ஊற்றெடுக்கச் செய்து விட்டது. ஆணையிட்டதும் (ஆர்டர் செய்ததும்) அடுத்த அரை மணிநேரத்தில் ஆவிபறக்க அள்ளி வந்து ( அடேங்கப்பா .... எத்தனை 'அ') மேசையில் வைத்தார். உறைப்பும் கார்ப்பும் நாவைச் சுண்டியிழுத்தன. நிற்க...... 'சிக்கன்' என்ற சொல் தமிழ்ச் சொல்லாகிப் பலநாட்களாகி விட்டன. கவிப்பேரரசு சொன்னது போல 'கார்' 'சிக்கன்

கூடுவிட்டுப் போன பின்பும் கூடவருமோ பணமும்!

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு) ஆவிதான் போனபின்(பு) ஆரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்!                                                                             -நல்வழி - 22  திரைகடல் ஓடியும் திரவியம் தேடச் சொன்ன ஔவையார், தேடிவைத்த பணம் எதுவரைக்கும் கூடவரும் என்கிறார்.  அதனால்தான் தேடிவைத்த பணத்தையும் பிறவற்றையும் நாமும் துய்த்துப் பிறர்க்கும் கொடுத்து வாழ வேண்டும் என்கிறார். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென்னென்(று) இட்(டு) உண்(டு) இரும்.                                                                            நல்வழி - 10 வாழ்க்கைத் தத்துவத்தையும் அறவியலையும் ஔவைப்பாட்டி எவ்வளவு அழகாக நான்கு வரிகளின் நறுக்கென்று உரைத்து வைத்திருக்கிறார்! ஔவையின் எழுத்துகள் அனைத்தும் ஔடதம் அல்ல, அமுதம்.   ஔடதம், நோய் தீர்க்கும் மருந்து, அமுதமோ , நோய் வராமல் தடுக்கும் அதிசயம்!

XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன?

அண்மையில் ஒரு விழாவில் என்னுடன் பணிபுரியும் சகோதரியின் கணவருடன் அறிமுகமாக நேர்ந்தது. கோயம்புத்தூரில் வங்கியொன்றில் பணிபுரியும் அவர் , தமிழில் கொண்டிருக்கும் ஆர்வத்தையும், ஆழமான அறிவையும் கண்டு வியந்து போனேன் . அவருடன் உரையாடிக்கொண்டிருந்த இரண்டு மணி நேரத்தில் நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது.அருவி கொட்டுவதுபோல அவரது வாயிலிருந்து தகவல்கள் கொட்டுகின்றன. மனிதர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் , மலையாளம், சமஸ்கிருதம் முதலியவற்றிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்று, இன்னுமங்கு வாழ்ந்து வரும் சொற்களைப் பட்டியலிட்டு அவர் பேசியது வியப்பூட்டுவதாக இருந்தது.சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை விவாதித்த அந்தச் சந்திப்பின் முடிவில் அவர் என்னுடன் பகிர்ந்து ஒரு சிறு தகவல்தான் இந்த இடுகையைப் பதியத் தூண்டியது. 'ஜெராக்ஸ்'என்ற சொல் ஆங்கிலச் சொல்லாகி வெகுநாட்களாகின்றன. அடிப்படையில் அஃது ஒரு BRAND NAME!    இன்று அதனை ஒரு வினைச்சொல்லாகக் கூடப் பயன்படுத்தத் தொடங்கியாகிவிட்டது.அதற்குத் தமிழில் சரியான சொல் என்னவென்றால் 'நகல்'  என்றுதான் பலரும் சொல்

வருகை புரிந்தாரா? வந்தாரா?

"அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார்" "மாவட்ட ஆட்சியர் விழாவுக்கு வருகை தந்தார்" இத்தொடர்கள் தமிழில்தான் எழுதப் பட்டுள்ளன என்றாலும், இயல்பாக எழுதப்பட்டுள்ளனவா என்றால் , இல்லை என்றுதான் கூறவேண்டும்! "அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்தார்" "மாவட்ட ஆட்சியர் விழாவுக்கு வந்தார்" என்பவையே இயல்பான தமிழாம்! வருகை புரிந்தார் என்பது கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றதாகும். 'வந்தார்' என்ற வினையை'வருகை' என்று தொழிலாக்கி அதனுடன் 'புரிந்தார்' என்று மற்றொரு வினையைப் போட்டு..... தலை வலிக்கிறது!இது எப்படி இருக்கிறது என்றால், "அவர் கூழைக் குடித்தல் செய்தார்" "அவன் வேகமாக ஓடுதல் புரிந்தான்" "அவள் ஃப்ரான்ஸ் நாட்டில் பத்தண்டுகளாக வாழ்க்கை புரிந்து வருகிறாள்" "கடிதம் அனுப்புதல் செய்யப்பட்டது" என்னும் தொடர்களைப் போன்று இருக்கிறது! அதே போலத்தான் வருகை புரிந்தாரென்பதுவும்! குடித்தல் செய்தார்-குடித்தார் ஓடுதல் புரிந்தான் - ஓடினான் வாழ்க்கை புரிந்து வருகிறாள் - வாழ்ந்து வரு

"வானம்"--அறத்தின் மீதூரும் வினா!

"வானம் " படம் பார்க்க நேர்ந்தது.திரைக்கதைக்காகத்தான் எப்படியெல்லாம் மண்டையை உடைத்துக் கொண்டு சிந்திக்கிறார்கள்.பார்வையாளர்களை அரங்கத்துக்குள் வரவழைப்பதும் , வந்தவர்களை இறுதி வரை அமர வைப்பதும் அவ்வளவு எளிதான செயலன்று! "வானம்" நன்றாகத்தான் இருந்தது. வெவ்வேறு சம்பவங்களை ஒரே  புள்ளியில் இணைக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.அது ஒன்றுதான் அவர்களது ULTIMATE AIM ஆக இருந்திருக்க வேண்டும்.அதன் பிறகு திரைக்கதை தறிகெட்டு ஓடுவது போலத் தோன்றுகிறது.(எனக்கு!) திரைக்கதையானது இயக்குநரின் கட்டுக்குள் இருக்க வேண்டும்.அதன் போக்கில் இயக்குநர் ஓடக் கூடாது. ஆனால், வானம் பற்றி நான் சொல்ல வருவது, மகனின் படிப்புக்காகத் தன் சிறுநீரகத்தை விற்கச் சென்னை வரும் சரண்யாவின் மாமனாராக வரும் அந்தப் பெரியவரைப் பற்றித்தான்!அவரது பாத்திரப் படைப்பும் ,பாத்திரத்துக்கேற்ற நடிகர் தேர்வும் அற்புதமானவை.உடல் மொழியாலும், முகபாவத்தாலும் மட்டுமே பார்ப்பவர்களின் நெஞ்சைப் பிளந்து விடுகிறார்.மருத்துவமனையில் பணத்தைப் பறிகொடுத்து விட்டு அவர் தவிக்கும் காட்சியில், உண்மையிலே இருக்கையை விட்டு எழுந்துபோய் , அந்தப் பெரியவ

அடங்கொய்யாலா

முடியின் இறந்த செல்லை நோண்டி மீண்டும் முளைக்க வைக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் முழுகிக் கிடந்த நான், நேர்த்திக்கடன் கழிக்க மொட்டையடித்தால் ஒற்றைப்படையில் மூன்று பேருக்கு அடிக்க வேண்டும்  என்றொரு அறிஞன்  கையில் கத்தியுடன் சொன்னபோது மூடிக்கொண்டு இருக்க வேண்டியதாகிவிட்டது!

பிழையின்றித் தமிழ் எழுதுவோம்!

" இந்தியாவைக் காப்பது நமது கிராமங்கள் " இதிலென்ன பிழை இருக்கிறது? கிராமங்கள் என்று பன்மையில் வந்திருப்பதால் "இந்தியாவைக் 'காப்பவை' நமது கிராமங்கள்" என்று வந்திருக்க வேண்டும்!எழுவாயும் பயனிலையும் ஒரே எண்ணில் வரவேண்டும்(ஒருமை அல்லது பன்மை). அதே போல, கிராமங்கள் என்பதற்கு மாற்றாகச் சிற்றூர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் இத்தொடர் முழுவதுமாகத் தூய தமிழில் அமையும். கிராமம் என்பது வடமொழிச் சொல். பொதுவாக கி, தி, பி என்பவற்றுக்குப் பிறகு ரகர எழுத்துகள் வரும் சொற்களெல்லாம் தமிழ்ச்சொற்களாக இரா! சில சான்றுகள்! கிராமம்-க்ராமம்- சிற்றூர் கிரகம்- க்ரகம் - கோள் கிரீடம்- க்ரீடம்- முடி கிரமம்- க்ரமம்- வரிசை, ஒழுங்கு கிரகணம்- க்ரகணம்- பற்றுதல் திருப்தி- த்ருப்தி- நிறைவு பிரியம்- ப்ரியம்- அன்பு பிரச்சாரம் - ப்ரசார்- பரப்புரை போன்றவை. தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவோம்1தமிழின் இனிமை நுகர்வோம்!!
அண்மையில் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுலா சென்று வந்தேன். தமிழகத்தில்தான் எத்தனை இடங்கள் உள்ளன, சுற்றிப் பார்ப்பதற்கு!கோவில்கள், சரித்திரப் புகழ் பெற்ற இடங்கள், கடற்கரைகள், மலை வாழிடங்கள், அருவிகள், அணைக்கட்டுகள், என எண்ணற்ற இடங்கள்,. ஆனால் நான் பார்த்த பெரும்பாலான இடங்களில், தாம்பூலம் தரிக்கும்போது ஒரு சிறுகல் வாயில் அகப்பட்டு உறுத்துவது போல, ஒரு விஷயம் என்னை அரிக்கத் தொடங்கிவிட்டது. எங்கெங்கு காணினும் குப்பைகளும், அசுத்தங்களும் கிடக்கின்றன. நிறைந்து வழிந்து கொண்டும், நிறையாத போதும் சிதறிய குப்பைகள் சூழ்ந்தும் நிற்கும் குப்பைத்தொட்டிகள்,சேறும் சகதியும் விரவிக் கிடக்கும் தெருவோரங்கள்,மனித , விலங்குக் கழிவுகள் புதைந்து கிடக்கும் கடற்கரை மணல்வெளிகள், வெற்றிலைச் சாறும், உடைந்து முறிந்த சிகரெட் துண்டுகளும், இன்ன பிற லாகிரி வஸ்துக்களைக் கொண்டிருந்து, குறுக்கே கிழிக்கபட்ட உறைகளும் , வாடிய பூச்சரங்களும், தண்ணீர், குளிர்பானப் போத்தல்களும் , தின்பண்ட உறைகளும், பயன்படுத்தித் தூக்கி எறியும் குவளை, தட்டு, வட்டில் வகையறாக்களும், எங்கெங்கும் பொங்கிக் கிடக்கும் சாலைகள், பூங்காக்கள், கோவில் கோட்டை வாசல

'கல்தேசம்' சிறுகதைத் தொகுப்பு-ஒரு சிறிய பார்வை

அண்மையில் வெளியான 'கல்தேசம்' சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்தேன்.இனிய நண்பர், கவிஞர் ஆதலையூர் சூரியகுமாரின் முதல் சிறுகதைத்தொகுப்பு இது.பயணக்கட்டுரைகள், கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல தளங்களிலும் இயங்கும் சூரியகுமார் ஆழ்ந்த வாசிப்புடையவர்.கல்கி, குமுதம் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து கல்தேசம் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். 20 கதைகளடங்கிய இத்தொகுதியைப் படித்து முடிக்கும் போது , மானுடத்தின் மீதும், அறவியல் மீதும் ஆசிரியருக்கு இருக்கும் அக்கறையை உணர முடிந்தது. கல்தேசக் கதைகள் மனித மனங்களைப் பேசுகின்றன.இயற்கைக்காகக் கவலைப்படுகின்றன. காதலின் உன்னதத்தை உணர்த்துகின்றன.உணர்வுகளை உருவகப் படுத்துகின்றன. நெஞ்சை நெகிழச் செய்கின்றன, மொத்தத்தில் வாசிப்போரை மகிழச் செய்கின்றன. எளிமையான நடை சூரியகுமாருக்குக் கைவந்திருக்கிறது.கிரமியச் சொல்லாடலகள் கதைக்குச் சுவையூட்டுகின்றன.நுணுக்கமான விவரிப்புகளும் வருணனைகளும் சிறுகதை வடிவத்தைக் கொணருகின்றன.இயல்பான கதைப்போக்கில் ஆங்காங்கு தெறிக்கும் கவித்துவத் தொடர்கள் கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன. 'விழுந்த

எனது நூல் வெளியீட்டு விழா

நான் எழுதிய" சூரல் பம்பிய சிறுகான் யாறு " என்ற மரபுச் செய்யுள் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா கடந்த 17.04.2011 அன்று திருப்பூரில் நடைபெற்றது.மரபின் மீது இருக்கும் தீராக் காதலாலும், பள்ளிப் பருவந்தொட்டே எனக்கு மரபின் மீது இருக்கும் மயக்கத்தாலும் மரபுச் செய்யுள்களை எழுதிக்கொண்டு இருப்பது என் வழக்கம். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு 170 பக்கங்களில் இந்நூலை வெளியிட்டுள்ளேன். விழாவைத் தலைமையேற்று நடத்தித் தந்தவர் எனது மதிப்பிற்குரிய நண்பரும், இலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கிவருபவரும், பதியம் இலக்கிய அமைப்பின் தலைவருமான திரு.பாரதிவாசன் அவர்கள்! எனது மரபுக்கவிதைத் தொகுதி மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் வெளியிடப்படுவதை விடவும் வேறென்ன பேறு நான் பெற முடியும்? நூலை வெளியிட்டு மரபின் மைந்தன் முத்தையா நிகழ்த்திய விழாச் சிறப்புரை அரங்கத்தில் நிறைந்திருந்த பார்வையாளர்களின் நெஞ்சில் நிரம்பி நின்றது. பெயரில் மட்டுமன்று முத்து, அவர்தம் சொற்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்தாம் என்றே சொல்லலாம். கணீரென்ற குரலில் , கருத்து மழை பொழிந்த மரபின் மைந்தன் ஒரு மாமனிதர், தமிழுக்குக

நூலை அஞ்சலில் பெற...

"சூரல் பம்பிய சிறுகான் யாறு" என்னும் என்னுடைய மரபுச் செய்யுள் தொகுப்பு நூலை வி.பி.பி.யில் பெற விரும்புவோர் msrajiniprathapsingh@ymail.com  என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 170 பக்கங்கள் கொண்ட இந்நூல் 150 ரூபாய் விலையிடப்பட்டுள்ளது. அஞ்சல் செலவை நாங்களே ஏற்றுக் கொள்வதால் நூலின் விலையை மட்டும் கொடுத்து நீங்கள் நூலைப் பெற்றுக் கொள்ளலாம்!

பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்!

1.வழக்கம் மாறுவதன் மறுபக்க்த்தில் தெரியும் சலனத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்!  (தலைப்பு....) எலியும் பூனையும் என்று சொல்வதுதான் வழக்கம். பூனையும்  நரியும் என்று  சொல்லிக்கொள்வதின் சுகத்தை உணரும் தருணங்களில் நான் 'டர்' ராகிறேன்! 2.யாமத்தின் பெருநிழல்! யாமத்தின் ஊடே  நழுவிச் செல்லும் தேவகணங்களில் சிந்தை தொலைத்து அலைந்து திரிந்து கனவுகள் துரத்தும் தூக்கத்தின் வேர்த்தூவிகளில் நுனிகலைத்துக் கொண்டிருக்கும் காமக்கிளை பரப்பிய கொடுவிரல்களின் நீட்சியைப்  பின் தொடர்ந்து செல்லத்  தொடுபுள்ளியின் மையங் கண்ட சோர்வில் தூங்கிப் போனேன்! 3.மலருக்கும் இலைக்கும் இடையே பனித்துளிகளை அள்ளிச் சென்றது யாரோ! (இதுதான் தலைப்பு) நீண்டாடும் கை! 4.அடப் போங்கப்பா!  (இதுவே தலைப்பு) இருளின் பிடியில் ஊறிய மலரைக் கொய்து பார்த்த நாள் முதலாய் என் உறக்கங்களில்  ஏதோ புதிய  விரலொன்று  முளைத்து நிற்கிறது! கவித.... கொட்டுச்சா..... எழுதித் தள்ளிட்டேன்!  எனக்கே ஒரு எழவும் புரியல! புல்லரிச்சு மண்ணரிச்சுப் புத்தி பேதலிச்சுப் போயிட்டேன் !   நேரமாச்சி....இப்பப் போயிட்டு வாரேன