எனது நூல் வெளியீட்டு விழா
நான் எழுதிய" சூரல் பம்பிய சிறுகான் யாறு" என்ற மரபுச் செய்யுள் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா கடந்த 17.04.2011 அன்று திருப்பூரில் நடைபெற்றது.மரபின் மீது இருக்கும் தீராக் காதலாலும், பள்ளிப் பருவந்தொட்டே எனக்கு மரபின் மீது இருக்கும் மயக்கத்தாலும் மரபுச் செய்யுள்களை எழுதிக்கொண்டு இருப்பது என் வழக்கம். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு 170 பக்கங்களில் இந்நூலை வெளியிட்டுள்ளேன். விழாவைத் தலைமையேற்று நடத்தித் தந்தவர் எனது மதிப்பிற்குரிய நண்பரும், இலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கிவருபவரும், பதியம் இலக்கிய அமைப்பின் தலைவருமான திரு.பாரதிவாசன் அவர்கள்!
எனது மரபுக்கவிதைத் தொகுதி மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் வெளியிடப்படுவதை விடவும் வேறென்ன பேறு நான் பெற முடியும்?
நூலை வெளியிட்டு மரபின் மைந்தன் முத்தையா நிகழ்த்திய விழாச் சிறப்புரை அரங்கத்தில் நிறைந்திருந்த பார்வையாளர்களின் நெஞ்சில் நிரம்பி நின்றது.
பெயரில் மட்டுமன்று முத்து, அவர்தம் சொற்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்தாம் என்றே சொல்லலாம். கணீரென்ற குரலில் , கருத்து மழை பொழிந்த மரபின் மைந்தன் ஒரு மாமனிதர், தமிழுக்குக் கிடைத்த கொடை எனலாம் .
நூலின் முதல் பிரதியை எனது பெற்றொர் பெற்றுக் கொண்டனர்.
கவிஞர் ஆதலையூர் சூரியகுமார் அவர்கள் என்னையும் நூலையும் அறிமுகப்படுத்தியதோடு, சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை சென்றது அவரது தீவிர வாசிப்பைக் காட்டியது.
பேராசிரியர்" கம்பன் கலைமணி" "செந்தமிழ் வித்தகர்" முனைவர்.புலவர். அமுதன் அவர்களும், பேராசிரியர்.முனைவர்.இந்திரசித்து அவர்களும் நிகழ்த்திய கருத்துரைகள் நூலின் பக்கங்களையெல்லம் அலசி ஆராய்ந்து சென்றது மட்டுமன்றி தமிழின் ஆழ அகல நீளங்களையும் விரித்துக் காட்டின.கவிஞர் நீரணி பவளக்குன்றன், வழக்கறிஞர்.சேதுராமன் அவர்கள், தலைமையாசிரியர்.திரு.வேலுசாமி அவர்கள், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் திரு.பி.என்.வேலுசாமி அவர்கள். மறைதிரு.சார்லஸ் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கலைஞர் தொலைக்காட்சியின் பழ.அமுதன் அவ்ர்கள் வழங்கிய தொகுப்புரை அரங்கின் ஏசியை விடக் குளுமையாக இருந்தது.
150 ரூபாய் விலைக்குறியிடப்பட்ட எனது நூலை வி.பி.பி யில் பெற விரும்புவோர் கீழ்க்காண் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். msrajiniprathapsingh@ymail.com
நூலைப் படித்த பிறகு தங்களின் மேலான கருத்துக்களுக்காகக் காத்துக் கொண்டிருக்க்றேன்.
நூலுக்கு அறிஞர்கள் வழங்கிய அணிந்துரைகளிலிருந்து சில பகுதிகள்:
நாஞ்சில் நாடன் அவர்கள்:
தலைப்பே வெகுவான கிள்ர்ச்சியை ஏற்படுத்துவது.நூலில் இருக்கும் அத்தனை பாடல்களுக்கும் இன்ன பாவினம் என்னும் தகவலும், இலக்கணமும் தரப்பட்டிருக்கிறது.இந்த வகையில் இஃதோர் புதிய முயற்சி!
இந்த நூலுக்கு நான் அணிந்துரைப்பது, பரிந்துரைப்பது, இதில் இருக்கும் கவிக்கூறுகளுக்காக அல்ல, தமிழில் கவிதை எழுத வருகிறவர், மரபானாஅலும், நவீனமானலும் அறிமுகமாகி இருக்க வேண்டிய செய்யுள் வடிவங்கள், அவற்றின் இலக்கணங்கள், அவற்றுக்கான கவிதைகள் பற்றிய தகவல்களுக்காகவும்தான்!
கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையாஅவர்கள்:
பல்வகை யாப்புகளிலும் சுவைமிக்க கவிதைகளை இந்தத் தொகையில் ரஜினி பிரதாப் சிங் தந்திருக்கிறார்!சிறந்த சொல்வளம் கொண்ட கவிதைகளை ரசிக்கும் விதமாய்ப் படைத்திருக்கிறார்.காலத்தால் நிலைபெறும் கவிதைகளைப் படைப்பதற்கான பொறி இவரிடம் இருப்பதை உணர்கிறேன்!
பேராசிரியர் "கம்பன் கலைமணி" "செந்தமிழ் வித்தகர்" முனைவர்.புலவர்.அமுதன் அவர்கள்.
மரபுக் கவிதையின் எல்லா வடிவங்களும் மறைந்து போய் விடாதவாறு
ஒவ்வொரு கவிதை வடிவுக்கும் தானே தன் கண்ணான கவிதைத் தூரிகையால் பொன்னான பாடல்களை ஆக்கித்தந்திருப்பது ஓர் அருஞ்செயல்! பற்பல கவித்துவ அடிகள் மிகுந்து கிடக்குமிந்நூலைக் கற்று மகிழுங்கள்! உங்களுக்கும் கவிதை வரக்கூடும்!
தமிழ்நாடு சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர் திரு. செ.முத்துசாமி அவர்கள்:
தமிழ் ஞாலத்தின் பார்வை பெறப் பாடுக. மேலும் பாடுக!மேன்மையுடன் பாடுக என வாழ்த்துகிறேன் நெஞ்சார!
நூல் வெளியீடு என்பது ஏறக்குறைய ஒரு பிரசவம் போலத்தான்! நூலை எழுதி , தொகுத்து, அச்சிட்டு , திருத்தம் செய்து, மீண்டும் அச்ச்சிட்டு, அணிந்துரைகள் வாங்கி ஐந்நூறு பேரை வைத்து விழா எடுப்பது என்ற இனிமையான சுமையைச் சுமக்க எனக்குத் தோள் கொடுத்த தோழர்கள் ரப்பத் ஃபாத்திமா, பழ.அமுதன்.லட்சுமணசாமி, யோகமூர்த்தி மற்றும் கவிஞர் ஆதலையூர் சூரியகுமார் ஆகியோருக்கு இவ்விழாவைச் சமர்ப்பிக்கிறேன்!
வணக்கம்!!
விழாக் காட்சிகளுக்கு மெனுபாரில் கண்ணுக்கினியன என்ற TAB - ஐச் சொடுக்கவும்
நன்றி நண்பரே!
ReplyDeleteValthukkal sir
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்துக்கள்.எழுத்துக்களை இன்னும் கொஞ்சம் சிறியதாக்கித்தந்தால் படிக்க சௌகரியமாக இருக்கும்.நன்றி.
ReplyDelete