கோழி வறுத்த கறியின் சொல்லாட்சி

சென்ற வாரத்திலொருநாள் கோயம்புத்துர்ரின் புகழ்பெற்ற உயர்தர அசைவ உணவகமொன்றின் 'மெனு கார்டில்' 'கோழி வறுத்த கறி' என்ற ஓர் அயிட்டத்தைப் பார்த்தேன். வறுத்த கோழிக்கறி என்பதைப் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன்;விரும்பிச் சுவைத்துமிருக்கிறேன். ஆனால் , கோழி வறுத்த கறி என்பதை இங்கு பார்த்துச் சற்றுக் குழம்பி விட்டேன். சமையல்காரர் வறுத்த கறியா அல்லது கோழியே வறுத்த கறியா என்னும் குழப்பம் ஏற்பட்டாலும் , சிக்கன் மசாலா, சிக்கன் 65, பெப்பர் சிக்கன் , ஜிஞ்சர் சிக்கன், பட்டர் சிக்கன், சில்லி சிக்கன் வகையறாக்களையே மெனுகார்டில் பார்த்துப் பார்த்துக் கண்களும் , நாக்கும் புளித்துச் சலித்து அலுத்துப் போயிருந்ததால், கோழி வறுத்த கறி என்ற பெயரே நாவில் 1/2 காலன் நீரை ஊற்றெடுக்கச் செய்து விட்டது. ஆணையிட்டதும் (ஆர்டர் செய்ததும்) அடுத்த அரை மணிநேரத்தில் ஆவிபறக்க அள்ளி வந்து ( அடேங்கப்பா .... எத்தனை 'அ') மேசையில் வைத்தார். உறைப்பும் கார்ப்பும் நாவைச் சுண்டியிழுத்தன. நிற்க......
'சிக்கன்' என்ற சொல் தமிழ்ச் சொல்லாகிப் பலநாட்களாகி விட்டன. கவிப்பேரரசு சொன்னது போல 'கார்' 'சிக்கன்' போன்ற சொற்கள் தமிழின் எழுத்திலகணத்துக்குட்பட்டு , தமிழே போல ஒலிப்பதால் , இவற்றைத்தமிழ்ச் சொற்களாகக் கருதிச் சொற்களஞ்சியம் பெருக்கலாம் என்று தோன்றுகிறது.
மகிழ்வுந்து என்பது சற்றுச் சுற்றி வளைத்துச் சொல்வது போல வசீகரமற்றுத் தொனிக்கிறது. ஆனால் 'பஸ்' என்னும் சொல் தமிழ்ச்சொல்லாக முடியாது. பேருந்து என்பதே சரியான வடிவம் . 'ஸகர' எழுத்துகள் கிரந்தமாக இருந்தாலும்  அவற்றின் வரிவடிவமின்றி ஒலி வடிவத்தைத் தமிழின் 'சகர' எழுத்துகளே நிரப்பிவிடுகின்றன. 'காசு', 'பசை', 'இசை','பசு'.... எனச் சொல்லிப் பாருங்கள்! அதே போலத்தான் 'காகம் ' என்று சொல்கையில் 'KAA' 'HA' Mஎன்று ஒலிக்கும். கிரந்த எழுத்துகளின்றியே தமிழின் இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன என்பதுவே தமிழின் வளத்துக்குச் சான்று.

அண்மையில் பாலக்காடு சென்றிருந்தேன். கேரளா எனது விருப்பமான இடம் என்பதாலும், கூப்பிடு தூரம்தான் என்பதாலும் அடிக்கடிச் செல்வதுண்டு. கேரள உணவு வகைகள் மீதும் எனக்குமிகப்பெரும் நாட்டம் உண்டு. பேரரசிச்  சோற்றை மீன்குழம்பில் ஊறவைத்துத் தின்பதின் சுவை அலாதியானது. பாலக்காட்டின் உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த போது, குழம்பை முடித்து விட்டு ரசத்துக்கு வாங்கும் போதும், உண்டு முடித்துத் தொகை செலுத்தும் போதும், அவர்களது " சோறு வேணுமா?","ரெண்டு சோறு எண்பது ரூபா!" என்ற சொற்பயன்பாடுகள் காதுகளுக்கு இனிமையாக இருந்தன. 
தமிழ் குறையும் நல்லுலகை மன்னிக்கவும் தமிழ் கூறும் நல்லுலகை நினைத்துப் பார்த்தேன் !'சோறு' என்ற சொல் அநாகரிகமான சொல்லாகிப் பல்லாண்டுகளாகிவிட்டன.  உணவகங்களில், " கொஞ்சம் ரைஸ் வைங்க", "சாப்பாடு தயார்" , "சாப்பாடு இருக்கா?" என்பன போன்ற உரைகளைத் தான் கேட்க முடியும்!
சாப்பாடு என்பது நாகரிகம் என்றும், ரைஸ் என்பது அதிநாகரிகம் என்றும் சோறு என்பது அநாகரிகம் என்றும் ஆழப் பதிந்துவிட்டன நம்மவர்களது மனங்களில்!

"சுத்தம் சோறு போடும்"
"சோழநாடு சோறுடைத்து"
"தேடிச் சோறு நிதந் தின்று"
"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்"
என்பன போன்ற வரிகளை நினைத்து இன்புறலாம்."சோறுண்டான், சோறள்ளித்தின்றான், சோறும் குழம்பும் சுவையாய் இருந்தன"
இவற்றையெல்லாம் சொல்லிப்பாருங்கள்! சொல்லவே சுவை பெருகும்!!

"உமிகொண் டரிசி துறப்பான் - தமிழின்
    உலகப் பெருமை மறப்பான்.
தமிழா உன்றன் தலைவிதி மாற்றத் 
    தரணியில் எவனினிப் பிறப்பான்?"

Comments

  1. enakku varutha kozhi kari kidaikkuma anuppivaithal nanum thinben

    ReplyDelete
  2. நீங்கள் ஒரு சாப்பாட்டு ராமன் என தெரிந்து கொண்டேன் அய்யா

    ReplyDelete
  3. ருசியான பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  4. soru kanda itam sorkkame

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.