எண்ணை.... எண்ணெய்...எது சரி ?
பலரும் எண்ணை என்று சொல்லியும் எழுதியும் வருகின்றனர். எண்ணெய் என்பதுதான் சரி.
அதிலும் எண்ணெய் என்பது நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெயை மட்டுமே குறிக்கும் .ஆனால் வழக்கத்தில் எண்ணெய் என்பது பொதுப்பெயர் ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது.
எள் +நெய் என்பதே எண்ணெய்
எள் + நெய் ~ எண்ணெய்
நெய் என்பது பொதுப்பெயராகத்தான் இருந்திருக்கிறது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்தான் எண்ணெய்.
எள்+ நெய் எப்படி எண்ணெய் ஆகிறது ....?
மெய்யீற்றுப் புணர்ச்சி விதியைப் பார்ப்போம்.
இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று புணரும் போது முதற்சொல்லான நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அது மெய்யீற்றுப் புணர்ச்சி ஆகும்.
எள் +நெய் என்பதில்
'ள்' என்னும் மெய்யெழுத்து நிலை மொழியின் ஈற்றெழுத்தாக இருக்கிறது.
வருமொழியின் முதல் எழுத்துக்கள் 'த' அல்லது 'ந' என்பனவாக இருக்கும் பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்துக்கள் ன்,ல்,ண்,ள் என்பனவாக இருந்தால் புணர்ச்சி எப்படி நடக்கும் எனக் கீழ்க்காணும் நன்னூல் விதி கூறுகிறது.
”னலமுன் றனவும், ணளமுன் டணவும்,
ஆகும் தநக்கள் ஆயுங் காலே” (நன்னூல், 237)
இவ்விதியின் படி நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் எவ்வாறு மாறுகின்றன எனப் பார்ப்போம்
எள்+நெய்
நிலைமொழி -எள்
வருமொழி - நெய்
நிலைமொழியின் ஈற்றெழுத்து ’ள்’
வருமொழியின் முதலெழுத்து ‘நெ’
இலக்கண விதியின் படி ‘ள் ‘ என்ற எழுத்து ‘ண் ‘ எனவும், ‘நெ’ என்ற எழுத்து ‘ணெ’ எனவும் மாறுகின்றன.
எள்+நெய்~எண்ணெய்
எதற்காக இவை போன்ற கடினமான விதிகள்... எள்நெய் என்றே சொல்லிவிட்டுப் போகலாமே என்பாரும் உண்டு.
இலக்கண விதிகள் வலிந்து திணிக்கப்பட்டவை அல்ல... பயன்பாட்டின் அடிப்படையில் மொழியியல் சார்ந்தும், ஒலியியல் சார்ந்தும் இயல்பாக வகுக்கப்பட்டவை .
எள்+நெய் என்பதை எள்நெய் என்று பலமுறை ஒலித்துப் பாருங்கள். இதற்கு ல,ள,ழ,ன,ண,ந ஒலிப்புமுறை தெரிந்திருக்க வேண்டும். சரியாக ஒலிக்கும் போது அஃது எண்ணெய் என்றுதான் கேட்கும்.
மொழியின் பயன்படுத்தப்படும் விதத்தை வைத்துத்தான் இலக்கண விதிகள் இவ்வாறு வகுக்கப்படுகின்றன.
எனவே, எண்ணெய் என்பதே சரியான பயன்பாடு.
இதேபோல
ன்,ல்,ண்,ள் ஆகிய எழுத்துகளுடன் ‘த’, ‘ந’ ஆகிய எழுத்துகள் புணர்ச்சியின்போது எவ்வாறு மாறுகின்றன என எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்பதற்குமுன் எண்ணெய் பற்றிய வேறொரு தகவலையும் பார்த்து விடலாம்.
கடலை + எண்ணெய் ~ கடலெண்ணெய், கடலையெண்ணெய் எது சரி?
கடல் + எண்ணெய் என்பதுதான் கடலெண்ணெய் என வரும். (”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதியின்படி, ல் + எ ~ லெ )
கடலை + எண்ணெய் ~ கடலையெண்ணெய்
இஃது உடம்படுமெய் . (உடம்படுமெய் பற்றி அறிய இங்கே தீண்டவும்.)
இனி மற்ற ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
”னலமுன் றனவும், ணளமுன் டணவும்,
ஆகும் தநக்கள் ஆயுங் காலே” (நன்னூல், 237)
ன்,ல்,ண்,ள் ஆகிய எழுத்துகளுடன் ‘த’, ‘ந’ ஆகிய எழுத்துகள் புணர்ச்சியின்போது எவ்வாறு மாறுகின்றன..?
ன்+ த ~ ற
ல்+ த ~ ற
ன்+ந ~ ன
ல்+ந ~ ன
ண்+த ~ட
ள்+த ~ ட
ண்+ந ~ ண
ள்+ந ~ ண
எடுத்துக்காட்டுகள்:
ன்+ த ~ ற
பொன்+தாமரை ~ பொற்றாமரை
ல்+ த ~ ற
கல்+தாழை~ கற்றாழை
ன்+ந ~ ன
தன்+நலம் ~தன்னலம்
தென்+நாடு ~ தென்னாடு
ல்+ந ~ ன
பல்+நாடு ~பன்னாடு
கல்+நெய் ~ கன்னெய் ( பெட்ரோலியம்)
ண்+த ~ட
எண்+தேர் ~ எண்டேர்
ள்+த ~ ட
முள்+தாமரை ~ முட்டாமரை
ண்+ந ~ ண
கண்+நீர் ~ கண்ணீர்
ள்+ந ~ ண
எள்+நெய் ~எண்ணெய்
லள வேற்றுமையில் றடவும், அல்வழி
அவற்றோடு உறழ்வும் வலிவரின் ஆம், மெலி
மேவின் னணவும், இடைவரின் இயல்பும்,
ஆகும் இருவழி யானும் என்ப (நன்னூல், 227)
ணன வல்லினம் வரட் டறவும், பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு; அல்வழிக்கு
அனைத்துமெய் வரினும் இயல்பு ஆகும்மே (நன்னூல், 209
எடுத்துக்காட்டுகளில் ,மேற்காண் விதிகளின் படி நிலைமொழியின் ஈற்றெழுத்துகள் ல்,ள், ண்,ன் ஆகியவை வல்லெழுத்துகளின் முன் ட், ற் எனத் திரியும் .
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!