தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய் - புணர்ச்சி
தலைமையாசிரியர் என்று சேர்த்து எழுதிய போது தலைமை ஆசிரியர் என்று பிரித்துத்தானே எழுத வேண்டும், தலைமையாசிரியர் என்று சேர்த்து எழுதுவது பிழையல்லவா என நண்பர் ஒருவர் கேட்டார். கேட்டவர் யார் என்பது இப்பொழுது நினைவில் இல்லையென்றாலும் இதில் இருக்கும் இலக்கணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
தலைமை + ஆசிரியர்---தலைமையாசிரியர்
இதுபோல் பிரித்து எழுதுக, சேர்த்து எழுதுக என்பவை எல்லாம் தொடக்க நிலை வகுப்புகளிலேயே தமிழ்ப் பாடத்தில் நமக்குத் தரப்படும் பயிற்சிகள்.
இரண்டு சொற்கள் ஒன்று சேர்வதைப் புணர்ச்சி என்கிறோம். முதலில் இருக்கும் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாவதாக வரும் சொல்லை வருமொழி என்றும் சொல்வோம்.
இங்கு, தலைமை + ஆசிரியர் என்பதில் தலைமை என்பது நிலைமொழி. ஆசிரியர் என்பது வருமொழி.
உண்மையில் இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழியின் இறுதியெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தும்தான் புணர்கின்றன. இறுதியெழுத்தை ஈற்றெழுத்தென்போம்.சில இடங்களில் இயல்பாகவும் ,சில இடங்களில் மாற்றங்களுடனும் புணர்ச்சி நடைபெறும்.
உதாரணத்துக்கு, ஒன்றுடன் ஒன்று இணையும் சொற்களின் இறுதியெழுத்து-முதலெழுத்து இரண்டுமே உயிரெழுத்துகளாக இருந்தால் இடையில் புதிதாக ’ய்’ அல்லது ‘வ்’ என்ற மெய்யெழுத்து தோன்றும். இதனை உடம்படு மெய் என்போம்.
இங்கு வருமொழியான ஆசிரியர் என்ற சொல்லின் முதல் எழுத்தான ’ஆ’ என்பது ஓர் உயிர் எழுத்து .
நிலைமொழியான தலைமை என்பதன் இறுதி எழுத்து 'ஐ' யும் ஓர் உயிர் எழுத்து.
முதற்சொல்லின் ஈற்றெழுத்தான ’மை’ என்பது உயிர்மெய் எழுத்துதானே என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. மை என்பது ம்+ ஐ எனப் பிரிகையில் நிலை மொழியான தலைமை என்பதன் ஈற்றெழுத்தாக ’ஐ’ என்ற உயிரெழுத்து நிற்கிறது.
தலைமை -தலை + மை
தலை+ ம்+ஐ
எனவே நிலைமொழியின் ஈற்றெழுத்து ’ஐ’ என்றும் வருமொழியின் முதல் எழுத்து ’ஆ’ என்றும் ஆகிறது.
தலை+ம்+(ஐ+ஆ)சிரியர்
ஐ+ஆ
இங்கு ஓர் உயிர் எழுத்து மற்றோர் உயிரோடு புணர்வதால் இரண்டுக்கும் இடையில் ‘ய்’ அல்லது ‘வ்’ என்ற மெய்யெழுத்துகளில் ஒன்று தோன்றுகிறது..
இந்த மெய்யெழுத்துக்குத்தான் உடம்படுமெய் என்று பெயர். எங்கு ’ய்’ வரும், எங்கு ‘வ்’ வரும் என்பதற்கு நன்னூல் இவ்வாறு விதி கூறுகிறது.
”இ, ஈ ஐ வழி யவ்வும்
ஏனை உயிர்வழி வவ்வும்
ஏ முன் இவ்விருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும்” நன்னூல்-162
இதன்படி,
இ,ஈ,ஐ ஆகிய உயிரெழுத்துகள் முதலில் வரும் சொல்லின் இறுதி எழுத்தாக இருந்தால் யகர மெய்யான ’ய்’ என்னும் மெய்யெழுத்தும்,
’ஏ’ என்னும் உயிர் எழுத்து இறுதியில் வந்தால் ‘ய்’ அல்லது ‘வ்’ என்னும் மெய்யெழுத்துகளுள் ஏதேனும் ஒன்றும்,
இவை தவிர்த்த மற்ற எந்த உயிரெழுத்துக்கள் முதலில் உள்ள சொல்லின் இறுதியில் வந்தாலும் வகர மெய்யான ’வ்’ என்னும் மெய்யெழுத்தும் தோன்றும்.
இப்பொழுது தலைமை ஆசிரியரைப் பார்ப்போம்.
தலைமை + ஆசிரியர்
தலை+ம்+ஐ+ஆசிரியர்
தலை+ம்+ஐ+ய்+ஆசிரியர்
’ஐ’ என்ற உயிரெழுத்து இறுதியில் நிற்பதால்
’ய்’ என்ற மெய்யெழுத்து உடம்படுமெய்யாகத் தோன்றுகிறது.
தலைமை+ய்+ஆசிரியர்
” உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே ”எனும் 204 ஆவது நன்னூல் விதிப்படி,
ய்+ஆ= யா என்று ஆகிறது.
எனவே,
தலைமை +ய்+ஆசிரியர்
தலைமையாசிரியர்
அடுத்து ஒவ்வோர் எழுத்தாகப் பார்ப்போம்.
முதலில் ‘இ’
உதாரணம்:
மணி +அடித்தான்--- மணி அடித்தான்
ம+ண்+இ+அடித்தான் (இ+அ)
ம+ண்+இ+ய்+அடித்தான் (உடம்படு மெய் ‘ய்’)
மணி+ய்+அடித்தான்
மணியடித்தான்.
‘ஐ’
பனை+ஓலை--- பனையோலை
ப+ன்+ஐ+ஓலை (ஐ+ஓ)
ப+ன்+ஐ+ய்+ஓலை (உடம்படு மெய் ‘ய்’)
பனை + ய்+ஓலை--- பனையோலை
இவ்வாறு இ, ஈ,ஐ ஆகிய மூன்று உயிரெழுத்துகளும் மற்றோர் உயிரெழுத்துடன் புணரும்போது ’ய்’ என்ற உடம்படுமெய் தோன்றுகிறது.
இதே போல அ,ஆ,உ,ஊ,எ,ஒ,ஓ,ஔ ஆகிய எட்டு உயிர் எழுத்துகள் நிலைமொழியின் இறுதியில் வந்தால் வருமொழியின் முதல் எழுத்தாக மற்றொரு உயிரெழுத்து வரும்பொழுது இரண்டுக்கும் இடையில் ’வ்’ என்னும் உடம்படுமெய் தோன்றுகிறது.
சான்றுகள்:
‘அ’
சில+ இடங்கள்---சிலவிடங்கள்
சி+ல்+அ+இடங்கள் (அ+இ)
சி+ல்+அ+வ்+இடங்கள் (உடம்படுமெய் ‘வ்’)
சில+வ்+இடங்கள்
சிலவிடங்கள்
‘ஆ’
அம்மா+உடன்--அம்மாவுடன்
அம்+ம்+ஆ+ உடன் (ஆ+உ)
அம்+ம்+ஆ+ வ்+உடன் (உடம்படுமெய் ‘வ்’)
அம்மா+வ்+உடன்
அம்மவுடன்
‘உ’
திரு+அருள் -----திருவருள்
திர்+உ+அருள் (உ+அ)
திர்+உ+வ்+அருள் (உடம்படுமெய் ‘வ்’)
திரு+வ்+அருள்
திருவருள்
‘ஊ’
பூ+அழகு-பூவழகு
ப்+ஊ+ அழகு (ஊ+அ)
ப்+ஊ+வ்+ அழகு (உடம்படுமெய் ‘வ்’)
பூ+வ்+அழகு
பூவழகு
‘ஓ’
உண்டோ+எங்கும்---உண்டோவெங்கும்
உண்+ட்+ஓ+எங்கும் ( ஓ+எ)
உண்+ட்+ஓ+வ்+எங்கும் (உடம்படுமெய் ‘வ்’)
உண்டோ+வ்+எங்கும்
உண்டோவெங்கும்
எ,ஒ ஆகிய எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வாரா. ‘ஔ’ ஓரெழுத்தொருமொழியாய் வரும்.
‘ஏ’என்ற உயிரெழுத்து மற்றோர் உயிரெழுத்துடன் சேரும்போது ‘ய்’,’வ்’ இரண்டுமே உடம்படுமெய்யாக வரும்.
உதாரணம்:
சே+அடி-சேயடி (ய்)
சே+அடி-சேவடி (வ்)
தே+ஆரம்- தேவாரம் (வ்)
அவனே+இவன் - அவனேயிவன் (ய்)
வந்தே + அகன்றான் - வந்தேயகன்றான் (ய்)
கொண்டே + இடித்தான் -கொண்டேயிடித்தான் (ய்)
மண்ணே + அது - மண்ணேயது (ய்)
மண்ணே+அது -மண்ணேவது (வ்)
கீழ்க்கண்ட உதாரணங்களில் எந்த உடம்படுமெய் வந்திருக்கின்றது என்பதை நீங்களே எளிதில் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
வாழை+இலை----வாழையிலை
மா+இலை-----மாவிலை
உரி+அடித்தான் ---உரியடித்தான்
துணி + எடுத்தாள்---துணியெடுத்தாள்
தீ+எரிந்தது--தீயெரிந்தது
ஓடை+ஓரம்--ஓடையோரம்
குற்றியலுகரம், முற்றியலுகரம் ஆகியவை வரும்போது மட்டும் குற்றியலுகரப் புணர்ச்சி விதிகள் பொருந்தும் .அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!