ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

 செந்தேர் உருளும் செந்தேன் கமழும்

செஞ்சேரி ஊருக்கு -அங்கே
செந்தமிழ் மலரும் சிந்தை குளிரும்
செல்லும் யாருக்கும்..!

வந்தோர் எவரையும் வாய்கள்ஆர
வாழ்த்தி வரவேற்கும் - வாய்ப்புத்
தந்தே வணங்கி வாழ வழிதரும்
தலைமுறை தலைமுறைக்கும்..!

உழைப்பும் தொழிலும் உயர்வும் மகிழ்வும்
ஊரின் அடையாளம் -வாழ்வு
தழைக்கும் படியொரு தன்மைக்கு இதுவே
தரணியில் உவமானம்..!

பெருமை மிகுந்த ஊருக்கின்னோர்
பெயர்தரும் இடம் உண்டு- அழியாத்
திருவாம் கல்வி புகட்டும் பள்ளி
தெரிவோம் இங்கின்று..!

மாணவர் வாழ்வில் ஒளியினை ஏற்றும்
மாண்புறு அரும்பள்ளி- கல்வித்
தேனவர் அருந்தி வெற்றியைப் பெரிதாய்த்
தீட்டிடும் பெரும்பள்ளி..!

அழியாச் செல்வம் கல்வியை வாரி
அளிக்கும் கையள்ளி- அவர்தம்
வழியாய் ஒளியாய் வாழ்வில் உருவாய்
வரமாய் வரும்பள்ளி..!

மழலையர் வாழ்வில் உன்னத நெறியுடன்
மனிதம் புகுத்துங்கள்- நாளை
அழகிய உலகம் அனுபவித் திடவே
அவர்களை மலர்த்துங்கள் ..!

வரமாய் வந்து வாழ்வில் ஒளிதரும்
வளமிகு ஆசிரியர்கள்- அவருக்கு
உரமாய் நின்று ஊட்டம் கொடுத்து
உறுதுணை செய்யுங்கள்..!

பள்ளி என்ற தலைமுறைச் சொத்தைப்
பாங்குடன் தாங்குங்கள்- கைகளால்
அள்ளி அள்ளி உதவிகள் நல்கி
அன்புடன் ஏந்துங்கள் ..!

முன்னோர் சொல்படி எதிலும் கல்வியை
முதன்மை ஆக்குங்கள் - நாளை
தன்னே ரில்லாத் தலைமுறை ஒன்றைத்
தரணிக்குத் தாருங்கள்

மூச்சிலும் பேச்சிலும் முன்னேற்றம் ஒன்றே
முழங்கட்டும் என்றைக்கும்- முழு
வீச்சில் கல்விப் பயணம் இன்றே
விரையட்டும் திசையெங்கும்..!

கல்வித் தேரினைக் கரங்கள் நீளக்
கட்டி இழுத்திடுங்கள்- நாளை
வெல்லப் போவது நாமே விரைந்து
வெற்றிக் கொடிநடுங்கள்..!

Comments

Popular posts from this blog

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?