சிறுவாணி இலக்கியத் திருவிழா-2024-கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் பி. எஸ். ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையும், பொது நூலக இயக்ககமும் இரண்டு நாட்கள் நடத்திய சிறுவாணி இலக்கியத் திருவிழாவில் இரண்டாம் நாளில்தான் என்னால் கலந்து கொள்ள முடிந்தது.
இரண்டு நாட்களிலும் 30 நிமிடக் கால அளவில் இலக்கிய உலகின் பல்வேறு ஆளுமைகளின் பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளின் முதல் நிகழ்வாகத் திரு. மகுடேஸ்வரன் அவர்கள், தமிழ் இலக்கணம்: தற்காலச் சூழலும் எதிர்காலத் தேவையும் என்ற தலைப்பில் பேசும் பொழுது, தமிழின் தனிச்சிறப்புகளில் ஒன்று குற்றியலுகரம் எனக் குறிப்பிட்டார் .உண்மைதான், தமிழ்ப் பெயர்ச்சொற்களில் நிறையச் சொற்கள் உகரத்தில் முடிவதாக்வே இருக்கின்றன. அந்தப் பழக்கத்தில்தான் ஆங்கிலச் சொற்களையும் நாம் உகரத்துடனே ஒலித்து முடித்துக் கொல்கிறோம் .
2011 இல் எழுதிய " உகரத்தின் மீது நமக்கு இருக்கும் வெறி "என்ற எனது பதிவுகளுக்கான லிங்க்'களைப் பதிவின் இறுதியில் தருகிறேன். படித்துப் பார்க்கவும் . நம்மையும் அறியாமல் நாம் செய்யும் தவறுகள் புரியும்.
"கதைகளின் பயணம்" என்ற தலைப்பில் அடுத்து திரு .எம் .கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமிழ்ச் சிறுகதைகளில் தன்னுடைய அனுபவத்தைச் சுவைபடப் பகிர்ந்து கொண்டார்.
"மொழிபெயர்ப்பு எதிர்கொள்ளும் சவால்கள்" என்ற தலைப்பில் திரு.மோ.செந்தில்குமார் அவர்கள் பேசுகையில் ,ஒரு பெண்ணின் அழகைச் ஸர்ப்ப ஸௌந்தர்யம் என்று மலையாள மூலத்தில் வருணித்திருந்ததைத் தமிழில் 'அரவ அழகு' என மொழிபெயர்க்கப் பல நாட்கள் தேவைப்பட்டதைச் சுவைபட விவரிக்கும் பொழுதுதான் நமது கூகுள் மொழிபெயர்ப்பை நினைத்துத் தலையில் அடித்துக் கொண்டேன் .தூர்தர்ஷன் காலங்களில் மொழிபெயர்ப்பு நாடகங்களில் பேசப்படும் தமிழை ,'ஜுனூன் தமிழ்' என்றே அழைத்தார்கள். அப்படி ஒரு வினோதத் தமிழ் அது.கூகிள் மொழிபெயர்ப்பும் இப்பொழுது அப்படித்தான் இருக்கிறது.
திரு.இளஞ்சேரல் அவர்கள்," எழுத்தில் வரையப்படும் நிலம்" என்ற தலைப்பில் சொன்ன கேரளத்திலிருந்து கோவைக்குக் கொணரப்பட்ட சிறுவாணி ஆற்றின் வரலாறும், நொய்யல் ஆற்றுத் தகவல்களும் ,திரு.பாமரன் அவர்களின் பகடி நடைப் பேச்சும் வெகு இயல்பாக அமைந்திருந்தன .
பார்வையாளர்களில் 90 விழுக்காடு கல்லூரி மாணவர்கள்தாம். ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் கல்லூரி மாணவர்கள் கேள்விகள் கேட்டு அனுமதிக்கப்பட ,மிக நுட்பமான கேள்விகளைக் கேட்டார்கள் அவர்கள் .
இலக்கியத் திருவிழாவில் இரு கூறுகளாக அமைந்த பண்பாட்டுத் தளத்திலும், படைப்புத்தளத்திலும் மாணவர்கள் கேட்ட வினாக்களைப் பார்த்த பொழுது இளம் தலைமுறையினர் இலக்கியத்தில் கொண்டுள்ள ஈர்ப்பும், ஈடுபாடும் மகிழ்வளிக்கக் கூடியதாக இருந்தன.
ஏறத்தாழ 200 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் கிட்டத்தட்டத் தொண்ணூறு விழுக்காட்டினரின் போக்கு வருத்தம் அளிப்பதாகவே இருந்தது.
எந்த ஒரு நிகழ்வையும் அவர்களால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து கவனிக்க இயலவில்லை .செல்போனை நோண்டிக் கொண்டும் கிசு கிசுவெனப் பக்கத்தில் பேசிக் கொண்டும் எழுந்து போய்க் கொண்டும் வந்தி கொண்டும் இருந்தனர்.
அவர்களின் உலகம் வேறாக இருக்கிறது .அத்துணை பேரும் இலக்கிய தாகம் எடுத்துத் திரிய வேண்டியதில்லை .ஆனாலும் அவர்களின் உலகத்தில் வேறெங்கும் கேட்க முடியாத கருத்துக்களை, புதிய தகவல்களை என்னதான் சொல்கிறார்கள் என்று கவனத்திருக்க வேண்டிய இயல்பான ஆர்வம் கூட அவர்களிடத்தில் இல்லை .
என் அருகில் அமர்ந்திருந்த மாணவி, இன்றைக்கு விட்டால் இனிமேல் செல்ஃபோனைப் பார்க்கவே போவதில்லை என்பதுபோல விரல் ரேகைகளும் Tempered Glass உம் தேய அதில் மூழ்கி இருந்தார். ஓர் இடைவெளியில் எந்தத் துறை எனக் கேட்டேன்: நல்ல வேளை..... தமிழ்த்துறை என்று சொல்லவில்லை....!
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!