தமிழறிவோம்

தமிழின் நுட்பமான இலக்கணக் கூறுகளையும், அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டுபயன்படுத்தினால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதையும், பயன்படுத்த அவையாவும் எவ்வளவு எளிமையானவை என்பதையும், நமது பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் அவை எப்படியெல்லாம் மிகச்சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறியும் போது வியப்பு மேலிடுகிறது. பாருங்கள்!
உயிரெழுத்துக்கு முன்பு வரும் சொற்களையும். மெய்யெழுத்துக்கு முன் வரும் சொற்களையும் அறிந்து கொள்வோம்.
'ஒரு,ஓர்':
ஒரு மரம், ஓர் இலை.
மரம் என்னும் சொல் மெய்யில் துவங்கும் போது ஒரு என்பதையும் , இலை என்று உயிரில் துவங்கும் போது ஓர் என்பதையும் பயன்படுத்துகிறோம் . இது இலக்கண விதி . 
சான்று: 

"ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்"
                                                         குறள்-156
நாளை என்பதன் முன் 'ஒரு' என்று வந்துள்ளது.
"வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு"
                                                            குறள்-465
இங்கு , ஆறு என்பது உயிரில் தொடங்குவதால், ஓர் ' வந்துள்ளது.



'ஒடு, ஓடு'
 'ஒடு' என்பதும், ' ஓடு' என்பதும் முறையே மெய்க்கு முன்பும் உயிருக்கு முன்பும் அமையும். திருக்குறள் ஒன்றே போதும் , சான்றுகள் காட்ட.
"விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்"- 
                                                                          குறள்-410
'மக்கள்'  என்னும் சொல் மெய்யில் தொடங்குவதால் அதறகு முன் வரும் விலங்கு என்னும் சொல்லுடன் 'ஒடு' என்று சேர்க்கிறார் வள்ளுவர். ஆனால் , அதன் பின்பு ஏனையவர் என்னும் சொல் உயிரில் தொடங்குவதால், அதற்கு முன் வரும் கற்றார் என்னும் சொல்லுடன் 'ஓடு' என்று சேர்த்துக் 'கற்றாரோடு' என்கிறார். 


'ஆல், ஆன்'

'ஆல் ' என்னும் மூன்றாம் வேற்றுமை 'ஆன்' என்பதையும் கொண்டது. உயிருக்கு முன் 'ஆன்' என்றும், மெய்க்கு முன் 'ஆல்' என்றும் வரும்.
சான்று:
"புறந்தூய்மை நீரான் அமையும்;அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்"
                             குறள்-298
இக்குறளில், அமையும் என்பது உயிரெழுத்தில் தொடங்குவதால், ஆன் என்றும், காண என்பது க்+ஆ என மெய்யில் தொடங்குவதால் 'ஆல்' என்றும் வருகிறது.


'அது, அஃது'

உயிரெழுத்துக்கு முன் 'அஃது' என்றும், மெய்யெழுத்துக்கு முன் 'அது' என்றும் வர வேண்டும் என்பது விதி.
சான்று:
"அன்றறிவாம் என்னா தரஞ்செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை"
                                                                                  குறள்-36
இக்குறளில், பொன்றுங்கால் என்னுஞ் சீர் மெய்யில் தொடங்குவதால், 'அது' என்று வந்துள்ளது.
"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்"
                                                                                    குறள்-38
இக்குறளில் ஒருவன் என்பதற்கு முன் 'அஃது' என்று அமைக்கப் பெற்றுள்ளதனைப் பார்க்கலாம்.,

'தொறும், தோறும்'
உயிர்க்கு முன் 'தோறும்' என்றும், மெய்க்கு முன் 'தொறும்' என்றும் வர வேண்டும்.
சான்று:
"களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது"
                                                                     குறள்-1145
கள்ளுண்டல் என்பதற்கு முன் 'தொறும்' என்றும், இனிது என்பதர்கு முன் 'தோறும்' என்றும் வருதல் காண்க!
உயிரெழுத்துக்கு முன்: ஓர், ஓடு, ஆன், அஃது, தோறும்.
மெய்யெழுத்துக்கு முன்: ஒரு, ஒடு, ஆல், அது, தொறும்.

இவ்வாறு தமிழ் இலக்கண விதிகளைச் சரிவரக் கையாண்டுள்ளார் வள்ளுவர் . அவர் மட்டுமன்றி, இலக்கியம் படைத்த யாவரும் இது போலத்தான் கையாண்டுள்ளனர் . நாம்? மொழியின் அழகு சிதைந்தால் என்ன , இந்த மொழியே வேண்டாம் என்னும் மனநிலைக்குத்தான் வந்துவிட்டோமே!

Comments

  1. மிக்க நன்றி, தமிழ் இலக்கணத்தை இனி நாங்களும் கற்றுக் கொள்கிறோம்.

    ReplyDelete
  2. நன்றி. ஓர், ஒரு மற்றும் அது, அஃது ஆகியவற்றின் விதிகளை நான் எழுதுபவற்றிற் கடைப்பிடித்து வந்திருக்கிறேன். ஆனால் மற்றவற்றை இப்போதுதான் அறிந்தேன். இந்த விதிகளைத் தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றிலுள்ள வாய்ப்பாடுகளிலிருந்து எவ்வாறு பெறலாம் என்றறிய ஆவலாயுள்ளேன்.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி