"வானம்"--அறத்தின் மீதூரும் வினா!

"வானம் " படம் பார்க்க நேர்ந்தது.திரைக்கதைக்காகத்தான் எப்படியெல்லாம் மண்டையை உடைத்துக் கொண்டு சிந்திக்கிறார்கள்.பார்வையாளர்களை அரங்கத்துக்குள் வரவழைப்பதும் , வந்தவர்களை இறுதி வரை அமர வைப்பதும் அவ்வளவு எளிதான செயலன்று!
"வானம்" நன்றாகத்தான் இருந்தது. வெவ்வேறு சம்பவங்களை ஒரே  புள்ளியில் இணைக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.அது ஒன்றுதான் அவர்களது ULTIMATE AIM ஆக இருந்திருக்க வேண்டும்.அதன் பிறகு திரைக்கதை தறிகெட்டு ஓடுவது போலத் தோன்றுகிறது.(எனக்கு!) திரைக்கதையானது இயக்குநரின் கட்டுக்குள் இருக்க வேண்டும்.அதன் போக்கில் இயக்குநர் ஓடக் கூடாது.
ஆனால், வானம் பற்றி நான் சொல்ல வருவது, மகனின் படிப்புக்காகத் தன் சிறுநீரகத்தை விற்கச் சென்னை வரும் சரண்யாவின் மாமனாராக வரும் அந்தப் பெரியவரைப் பற்றித்தான்!அவரது பாத்திரப் படைப்பும் ,பாத்திரத்துக்கேற்ற நடிகர் தேர்வும் அற்புதமானவை.உடல் மொழியாலும், முகபாவத்தாலும் மட்டுமே பார்ப்பவர்களின் நெஞ்சைப் பிளந்து விடுகிறார்.மருத்துவமனையில் பணத்தைப் பறிகொடுத்து விட்டு அவர் தவிக்கும் காட்சியில், உண்மையிலே இருக்கையை விட்டு எழுந்துபோய் , அந்தப் பெரியவருக்கு நாம் ஏதாவது உதவி செய்தாக வேண்டும் என்ற பதைபதைப்பையும் . இரக்கத்தையும் ஏற்படுத்துகிறாரந்தப் பெரியவர்.ஆனந்தவிகடன் விமரிசனக் குழுவின் மதிப்பெண்களும் அவர் ஒருவருக்கே சரியாகப் போய்விடுகின்றன.
பணம் திரும்பக் கிடைத்து விட்டதில் அவர் அடையும் மகிழ்ச்சியும், பணத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்ட சிம்பு மறைந்திருந்து கண்ணீர் வடிப்பதையும் பார்த்து உண்மையிலேயே நமக்கும் தொண்டை அடைத்துக் கொள்கிறது.
அரங்கத்தை விட்டு வெளியே வந்தும் கூட அந்தப் பெரியவர் மனத்தை அரித்துக் கொண்டிருந்தார்.உண்மையிலேயே , இது போல எத்தனை பேர் இன்னும் எங்கெங்கு இருக்கிறார்களோ, அவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி என்முன் எழுந்து நிற்கிறது.சக மனிதர்கள் துன்பத்தில் உழன்று கொண்டிருக்க , அவ்வளவு பேருக்கும் அதைத் தீர்க்கும் திராணியில்லாது, சகிக்கவும் வழியில்லாது வாழும் புவி வாழ்க்கை உண்மையில் நரகவாழ்க்கைதான்!எல்லாரும் இன்புற்றிருக்கப் பராபரமே, நீராவது மனம் வைக்க மாட்டீரா?

Comments

  1. நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன் . உண்மையிலேயே அந்தப் பெரியவரின் நடிப்பு என்னையும் பாதித்தது.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி