நூறாவது பதிவு.
சுவாசித்துச் சுவாசித்துக்
காற்றை அழகாக்குகிறாய்;
குளித்துக் குளித்து
ஆற்றையும் அழகாக்குகிறாய்!
courtesy:http://www.chakpak.com/celebrity/amala-paul/43675 |
ஐம்புலன்களாலும்
அழகை
அனுப்பி வைக்கிறாய்!
அதனை ரசிக்கவோ
ஐயாயிரம் புலன்கள்
வேண்டும் போலிருக்கிறது.
http://movies.sulekha.com/stargallery/amala-paul/91.htm |
அமர்ந்திருந்தாய்!
கண்டு
உருகிக் கொண்டிருக்கிறது என்
http://movies.vinkas.in/2011/04/amala-paul-shares-her-love-matter-with-us/ |
இரு விழிகளாலும் உன்னை
அள்ளி அள்ளித் தின்றாலும்
காதல் பசி
தீரவே மாட்டெனென்கிறது!
'அ' கரம் முதலான அருந்தமிழ் மொழியில், 'உ'கரம் மூன்றாமெழுத்தாக அமைந்துள்ளது.ஒருமாத்திரை அளவுடைய இந்த 'உ'கரம் தான் நம்மை எப்படியெல்லாம் ஆட்கொண்டுள்ளது எனப் பார்த்தால் பெருவியப்பு மேலிடும்.
'உ' எனும் இவ்வுயிரெழுத்துப் பிறக்குமிடமானது இதழகளாகும். இதழ்கள் குவியும்போது 'உ' பிறக்கிறது. (நன்னூல்)
பொதுவாகக் கைநொடிக்கும் கால அளவையோ அல்லது கண்ணிமைக்கும் கால அளவையோ ஒரு மாத்திரை என்கிறோம். குறிலுக்கு ஒரு மாத்திரை யும் , நெடிலுக்கு இரண்டு மாத்திரை அளவும், மெய்யெழுத்துகளுக்கு அரை மாத்திரை அளவும் ஒலியளவு ஆகும்.ஆனால், ஒரு சில இடங்களில், 'உ'கரமானது தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவினதாய் ஒலிக்கும். அதனை நாம் குற்றியலுகரம் என்று , கூறுகிறோம்.
வல்லுகரங்களான கு,சு,டு,து,பு,று ஆகிய ஆறும் வல்லின மெய்யைத் தொடர்ந்து வருவதுசொல்லின் இறுதியில் வன்றொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
சான்று:
நாக்கு
மூச்சு
பாட்டு
கூத்து
காப்பு
கூற்று.
மெல்லின மெய்யைத் தொடர்ந்து இவ்வாறு உகரங்களும் வருவது மென்றொடர்க் குற்றியலுகரமாகும்.
சான்ரு:
பங்கு
பஞ்சு
வண்டு
பந்து
அம்பு
கன்று.
இடையின மெய்யைத் தொடர்ந்து சொல்லின் இறுதியில் இவ்வாறனுள் ஏதேனும் ஒன்று வருவது இடைத்தொடர்க் குற்றியலுகரமாகும்.
சான்று:
பல்கு
ஆய்சு
மார்பு
கொய்து.
சொல்லின் இறுதியில் இவ்வாறும் அமைந்து, அவற்றுக்கு முன் நெடில் இருந்தால் , அது நெடிற்றொடர்க் குற்றியலுகரமாகும்.
சான்று:
பாகு
காசு
நாடு
பாபு (கதவு)
ஆறு.
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து சொல்லின் இறுதியில் இவை வந்தால் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரமாகும்.
சான்று:
எஃகு
கஃசு
அஃது
இஃது.
சொல்லின் இறுதியில் இவ்வாறனுள் ஏதேனும் ஒன்று அமைந்திருந்து, அதற்கு முன் உயிர்மெய்யாக இருந்தால் , உயிர்த்தொடர்க் குற்ரியலுகரமாகும்.
சான்று:
மதகு
அரசு
பகடு
பழுது
மரபு
வயிறு.
அதே போலத் தனி எழுத்தாக உள்ள எல்லா உகரங்களுமே முற்றியலுகரமாகும்.
தனிக்குறிலை அடுத்து வரும் உகரம்,(நகு,பசு,படு,அது,தபு,மறு,கரு,புழு,கணு போன்றவை)
தனி எழுத்தாக வரும் உகரம்,(உ, கு,சு,து,ணு,டு,பு,று,ளுஆகியவை)
இருகுறிலை அடுத்துவந்த , கு,சு,டு,து,பு,று அல்லாத பிற உகரங்கள்,(கதவு,அரவு,அலமு,விழவு,உழவு போன்றவை)
ஆனால் நமது பேச்சு வழக்கில் மெய்யில் முடியும் சொற்களைப் பெரும்பாலும் உகரம் சேர்த்தே முடிக்கிறோம்.
சான்று:
பல்-பல்லு
நெல்-நெல்லு
வயல்-வயலு
கள்-கள்ளு
மண்-மண்ணு
தேள்-தேளு
தேன் -தேனு
தேர் - தேரு
நான் - நானு
மீன் - மீனு
பேன் - பேனு
யாழ் - யாழு
வால் - வாலு
பகல் - பகலு
திடல் - திடலு
பார் - பாரு
வேர் - வேரு
செய்யுள் - செய்யுளு
பட்டியல் மிக நீளமானது. இதைக் கூடச் சகிப்பே, ஆனால். ஆங்கிலத்தின் நிலைதான் பரிதாபகரமானது.
CAKE-கேக் - கேக்கு
LAND -லேன்ட் - லேன்டு
AND - அன்ட் - அன்டு
ROAST-ரோஸ்ட் - ரோஸ்ட்டு
SONGH - சாங் - சாங்கு
GROUND -க்ரௌன்ட் - க்ரௌன்டு
PRINT- ப்ரின்ட் - ப்ரின்ட்டு
PANIT-பெயின்ட் - பெயின்ட்டு
POINT-பாயின்ட் - பாயின்ட்டு
போன்றவை .
இதைக்கூடச் சகிப்பேன். ப்ரின்ட் ப்ரிவ்யூ(PRINT PREVIEW) என்பதை, கூட்டுச் சதி, பாட்டுப் பெட்டி, பூட்டுக்காரன் பாட்டுக்காரன் என்பது போல ப்ரின்ட்டுப் பிரிவியூ என்று சொல்வதுதான் குருதி அழுத்தத்தைக் கூட்டுகிறது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாம் ஆங்கிலம் பேசுவதைக் கேட்டால் , நாம் ஆங்கிலம்தான் பேசுகிறோம் என்று சத்தியம் செய்தால் தான் நம்புவார்கள்.தமிழில் பேச வேண்டிய இடங்களில் அல்லது பேசக்கூடிய இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் பேசுவது அல்லது ஆங்கிலம் கலந்து பேசுவது என்பது தமிழுக்குச் செய்கிற துரோகம். அவ்வாறுபேசுகிற ஆங்கிலத்தையும் தமிழைப் போலப் பேசுவது ஆங்கிலத்துக்குச் செய்கிற துரோகம்.
ஒருமொழி கொன்றும் ஓய்ந்திடாமல், பிறமொழியும் கொன்றால்தான் பிறவிப்பயன் தீருமோ எனத் தோன்றுகிறது.
என் இதயத்தின் இடுக்குகளில்
எப்போதும் ஒரு தேன்கூடு ததும்பிச்சொரிந்து
நினைவுகளை அழிக்கிறது!
நாசியின் முன்னால் விரவிய
நறுமணம் எப்போதும்
கடந்தகாலத்தை மூச்சிறைக்கச் செய்கிறது.
என் கவிதை ஏட்டின்
பக்கங்களில் மடித்து வைத்திருக்கும்
வானவில்
எழுத்துக்களை உறிஞ்சிக் கொள்கிறது.
நிம்மதி பாவும்
தளத்தின் புல்வெளிகளுக்குள்
எப்போதும் ஒரு புதைகுழி
ஒளிந்து கொள்கிறது.
வாழ்க்கையில் என் இருப்பை
முடிவு செய்வது
யார் என்பதைத்தான்
அறிய முடிவதே இல்லை1
ட்வீட்டுகள்
ஓட்டலுக்குத்தனியாகச்செல்கையில் சப்ளையர்சீக்கிரம் வராவிட்டால்கடுப்பாகும் மனசு, கேர்ள்ஃப்ரண்டுடன் செல்லும்போது மெதுவாக வரட்டுமெனப்படபடக்கிறது
ஆனாலும் ஒரிஜினல் ப்ரொஃபைல் போட்டோவோடு ட்வீட்டுவது என்பது பல சமயங்களில் சிக்கலாகத்தான் இருக்கிறது!
இந்த இரன்டு வரி ட்வீட் தான் உலகையே மாற்றியமைக்கப் போகிறது என்று நினைத்துத்தான் எல்லா ட்வீட்டுகளுமே வெளிப்படுகின்றன.
அழைப்பின் பேரில் விழாக்களுக்குச் செல்வதன் நோக்கம், வாழ்த்துவதை விடவும் மொய் வரவுசெலவுகளையே அதிகம் சார்ந்திருக்கிறது.
கட்டளைக் கலித்துறை எழுதுவதன் நவீன, எளிய வடிவந்தான் ட்வீட்டுவது!
டூவீலரின் ஜெயன்ட் சைஸ் பேக் டயர்கள்தாம் ஆண்களின் 'எக்ஸ்ட்ரா சமாசாரத்தின்' வெளிப்பாட்டு வடிகால்!(புரிகிறதோ?)
முழு இரவும் தெரியும் முழுநிலவை விட, அது நூறு நிமிடங்கள் பூமியால் மறைந்து விடுவதைத்தான் மக்கள் அதிகம் ரசிக்கின்றனர்.#சந்திரகிரகணம்
நிறைவேறாத ஆசைகள்தாம் கனவுகளாக வருகின்றன அல்லது ட்வீட்டுகளாக வெளிப்படுகின்றன!
எல்லாருக்கும் மாதக் கடைசிகள் வரவே செய்கின்றன.ஆனால் தேதிகள்தான் ஆளாளுக்கு மாறுபடுகின்றன.#புலம்பல்
நடன,இசைநிகழ்ச்சிகளில் நடுவராக இருப்பவர்கள் திறமையை மதிப்பிட வருபவர்களா, 'தெறம' காட்டவருபவர்களா என்ற சந்தேகம் எனக்கு ரொம்பநாளாக் இருக்கிறது!
சொன்னால் என்ன நினைப்பார்களோ என்று நினைக்கும் விஷயங்கள்தாம் ட்வீட்டுகளாக வெளிப்படுகின்றன!
ஓட்டலுக்குத்தனியாகச்செல்கையில் சப்ளையர்சீக்கிரம் வராவிட்டால்கடுப்பாகும் மனசு, கேர்ள்ஃப்ரண்டுடன் செல்லும்போது மெதுவாக வரட்டுமெனப்படபடக்கிறது
நிச்சயிக்கப்பட்ட ஆயுளிலிருந்து ஒரு வருடம் குறைந்து போய் விட்டதே எனத் துக்கித்துக்கொண்டிருக்கையில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வருகின்றன!
கோவையின்வணிகவளாகமொன்றில் ஏறுகிறேன்..பெயின்ட்அடித்திருக்கிறோம் இன்னும்காயவில்லைஎன்றுசொன்னாலும் தொட்டுப்பார்த்தால்தான்மனசுகேட்கிறது.
டாப்- 4 பட்டியலில் நாங்கள் இருக்கிறோம் என்று யாராவது சொன்னால் அவர்கள் நாலாவது இடத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்!
புரிந்து கொள்ளாத ஜென்மம் என்கிறார்கள், புரிந்து கொள்வது எளிதாகத்தான் இருக்கிறது, ஒப்புக் கொள்வதுதான் கடினமாக இருக்கிறது!
அதி நவீன பார் வசதி என்று போர்டு வைக்கிறார்களே , அவர்களுக்கெல்லாம் மனசாக்ஷியே கிடையாதா?
பிசாசின் சொற்கள் இனிமையானவை என்று சொல்கிறார்கள். மனைவியின் சொற்கள் கடுமையானவை என்று அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள்! என்ன லாஜிக்கோ?
நடந்து முடிந்ததைப் புட்டுப் புட்டு வைப்பார் என்று சிலரைப் பார்க்க ஓடுபவர்களுக்கெல்லாம் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் ப்ராப்ளம் இருக்குமோ?
அருகிலிருக்கும் தேநீர்க்கடையில் வெந்நீர் வாங்கி, மாத்திரை விழுங்கியபின் பேருந்தைக் கிளப்பும் ஓட்டுநரைக் காணும்போது மனதை என்னவோ செய்கிறது!
நேரிசை வெண்பாக்கள்:
மூன்றாம் கோணம் வலைபத்திரிகை- கவிதைப்போட்டி- |
மூன்றாம் கோணம் வலைபத்திரிகை அறிவித்துள்ள கவிதைப்போட்டிக்காக அவர்கள் கொடுத்திருந்த படத்தை வைத்து எழுதிய கவிதை இது.
சூழ்ந்த துயரும் சுகமும் மறந்திரவில்
ஆழ்ந்து துயிலும் அழகேநான் - வாழ்ந்து
பெறுவது வேறென்ன பெண்ணரசி உன்றன்
குறுநகை யன்ன கொடை!
திறவாயோ என்றுன் திருவடியில் சாய்ந்தே
உறங்காமல் பார்த்திருப்பேன் உன்னை - நிறமொளிரும்
ஓவியம்போல் எவ்வா றுறங்குகிறாய் பக்தன்போல்
சேவித்து நின்றேன் சிலிர்த்து!
தங்கத் தளிர்க்கொடியே தாமரையே வான்மதியே
பொங்கிப் பெருகுதடி பொன்முகத்தில் - தங்கித்
தினவெடுக்கும் பேரழகைத் தீண்ட வருவேன்
கனவிலுன்மேல் மேகமாய்க் கவிழ்ந்து!
தூங்கிப் புரள்கிறாய் தோகையே கண்டுள்ளம்
ஏங்கித் தவிக்கிறது எப்படித்தான் -தாங்கிக்
கழிப்பேனோ வாழ்வைநான் காதல்நோய் தீண்டக்
கிழியாதோ என்னிதயம் கேள்!
நிலவும் கவியெழுதும் நீயுறங்கும் சீரைச்
சிலநொடி பார்த்தாலே சிந்தை - கலைந்துவிடும்
நில்லாதே என்னாவி நெஞ்சுக்குள் தூக்கத்தால்
கொல்லாதே மூடியகண் கொண்டு!
புரண்டு படுக்காதே பூகம்பம் என்னுள்
திரண்டு பிதுங்கித் திமிறும் - இரண்டு
மலைகள் நிகர்த்த மதுக்கலசம் கண்டு
நிலைகுலையச் செய்யும் நிமிர்ந்து!
அள்ளிக் கரங்களில் அப்படியே தூக்கிவிடத்
துள்ளிக் குதித்துத் துடிக்குதடி - உள்ளம்
கனவில் ஒருமுறைநீ கண்டுவிட என்னைத்
தினமும் புரிவேன் தவம்!
சிற்பமாய் உன்னைச் செதுக்கிய ப்ரம்மனின்
கற்பனைதான் என்னேபோ கண்டவுடன் - பொற்சிலைதான்
தூங்குகிற தென்றே துணிவர் எவரும்நீ
தூங்குகிற பேரழகு பார்த்து!
உறங்குகிறாய் அங்கே உருகிநான் இங்கே
கிறங்குகிறேன் வண்ணநிறைக் கிண்ணந் - திறந்தூற்றிப்
பெய்து முகிலும் பிசகில்லா மெத்தையை
நெய்து கொடுத்ததோ சொல்!
பின்னிரவில் மெல்லப் பிறைநிலவும் வந்தெட்டிச்
சன்னல் வழியே சரிந்தபடி - கன்னிநீ
தூங்குவதைப் பார்த்தபடி தொண்டை செருமிவிடும்
ஏங்கிப்போய் ஓர்பெரு மூச்சு!
ட்வீட்டுகள்
சிரங்கு வந்தவன் கையும் செல்போன் எடுத்த்வன் கையும் சும்மா இருக்காது என்பார்கள்.கீபோர்ட் தொட்டவன் கையும் தான், பொழுதுபோகாம தத்துப் பித்துன்னு நாம ட்வீட் பண்ணதப் படிச்சுப் பாருங்க!
மட்டமான மனிதர்கள் மனிதர்களையும்,சாதாரண மனிதர்கள் சம்பவங்களையும்,வெற்றியாளர்கள் கருத்துக்களையும் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொள்ளுகிறார்கள்
மழைநீர்க்குழாய் என்ற ஒன்றுமட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், கிரைம் நாவல்கள் பல எழுதப்படாமலே போயிருந்திருக்கும்.
பார்ப்பதை எல்லாம் ட்வீட் செய்கிற பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால்....நிச்சயம் உடனே நீங்கள் மருத்துவரைச் சந்திக்கவேண்டும்!
எந்தப்பக்கம்திருகினால் தண்ணீர்வரும் என்பதைக்கண்டுபிடிக்க முடியாதஅளவுக்குவாஷ்பேஸின்குழாய்களைடிசைன் செய்வதற்குத்தான்எவ்வளவுமெனக்கெடுகிறார்கள்?
பத்துப் பேர் கூட இல்லாத பஸ் ஸ்டாப்பில் பத்து லட்சம் பேர் தன்னையே பார்ப்பது போன்ற தன்னுணர்வுடன் நடக்கிறீர்கள் என்றால் , நீங்கள் ஒரு பெண்!
ப்ரியமான் ஸகாக்களோ, ஸகியோ விடைபெறும்போது TATA சொல்வதுதான் எவ்வளவு திவ்யமாக உள்ளது! FEEL பண்ணிப் பாருங்கள்!!
கல்கி இதழில் வெளிவந்த நையாண்டிக் கவிதை, நான் இன்றும் ரசித்து மகிழ்வது:நான் நீ அவன் இவன் டாஸ்மாக்! (ஒண்ணுங் கீழ் ஒண்ணு)
எதற்கெல்லாமோ எக்சேஞ்ச் ஆஃபர் தருகிறார்கள் என்று அலுத்துக்கொள்கிறார் அறுபது கடந்த நண்பர் ஒருவர் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வந்த பிறகு!
ஜீன்ஸ் பேன்ட்டின் மீது பெல்ட்டுக்குப்பதிலாக அரைஞாண் கயிற்றைச் சுற்றிக் கொள்பவர்கள் எல்லாம் உள்ளே கோவணம் கட்டியிருக்கமாட்டார்கள்# நம்பிக்கை
சங்கீதம் என்ற வார்த்தைக்குப் பிறகு சந்தோஷம் என்ற வார்த்தை இல்லாத எந்தத் திரைப்படப் பாட்லையும் நான் கேட்டதே இல்லை
வளர்ச்சியடைந்த நாட்டுக்கான அறிகுறி, அதன் நடுத்தர மக்கள் அடிக்கடிவெளியே சென்று சாப்பிடுவதுதா - பொருளாதார நிபுணர்கள்(தினத்தந்தி- 14.08.2011)
நிலாவில் கவிதை ஊற்றுகள் ஏதேனும் சுரக்கின்றனவா என்று அடுத்த முறை செல்பவர்கள் கண்டறிந்து வரவேண்டும்!
you will only get what you deserve , not what you desire . #first rank in test cricket
வேறுவேறு பெயர்களில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கித் தனக்குத் தானே பின்னூட்டமிட்டுக்கொள்வது, தொடர்பதிவர்களாகக் காட்டிக்கொள்ள வேறுவேறு பெயர்களில் வலைப்பூக்களை உருவாக்குவது இத்யாதி இத்யாதி.... இவையெல்லாம் ஓல்ட் டெக்னிக்ஸ்!உண்மையிலேயே உங்கள் வலைப்பதிவு பிரபலமாக வேண்டுமா? இதோ ... லட்டு லட்டாகச் சில ஐடியாக்கள்!
### உங்கள் பதிவைப் படிப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டுமானால் கணினி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். எனவே நீங்கள் வீட்டுக்கு வீடு இலவச கணினி கொடுக்கலாம். (என்னிலிருந்தே ஆரம்பிக்கலாம் )
###பின்னூட்டமிடத் தலைக்கு ஆயிரம் ரூபாய் தரலாம்!(அக்கவுன்ட் நம்பர் அனுப்பட்டுமா?)
###ரஜினி, கமல்,விஜய்,மணிரத்னம்,ஷங்கர் போன்றோரின் படங்களை ரிலீஸ் ஆகும்முன்னே எப்படியாவது பிரதி யெடுத்து வலைப்பூவில் ஓட்டலாம்(வேலூரில்)
!###நமது ப்ராடக்டை மார்கெட் செய்ய அதாவது போணி பண்ண விளம்பரங்கள் அவசியம்! எனவே தமிழ்த் தொலைக்காட்சிகள் (சன் டிவி, விஜய் டிவி உட்பட)அனைத்திலும் ப்ரைம்டைமில் உங்களது வலைப்பூவைப் பற்றி நாள்தோறும் விள்ம்பரம் செய்யலாம். வார, நாளிதழ்களிலும் தொடர்ந்து அரைப்பக்க அளவில் விளம்பரம் செய்யலாம்.(அரைப்பக்கம் போதும்)
###விக்கிலீக்ஸ் அஸ்ஸாஞ்ச் மாதிரி வல்லரசு நாடுகளின் ராணுவ ரகசியங்களைக் கண்டறிந்து வெளியிடலாம்.(சி.ஐ.ஏ., மொஸ்ஸாட் வகையறாக்கள் லாடம் கட்டினால் என்ன, பிரபலமாவதுதானே நமக்கு நோக்கம்?)
###வாராவாரம் ஒரு வி.ஐ.பி.(சச்சின், ஏ.ஆர்.ரகுமான்,அமீர்கான்,அப்துல்கலாம்,ஒபாமா போன்றோரிடம்) பேட்டி எடுத்து வெளியிடலாம். (பேட்டி கொடுக்க நானும் தயார்)
###சக வலைப்பதிவர்களின் இடுகைகளைச் சகட்டுமேனிக்குத் திட்டித்தீர்த்துப் பின்னூட்டமிடலாம்.அப்பொழுதுதான் திருப்பித் திட்ட அவர்களும் உங்களது வலைப்பூவுக்கு வருவார்கள்!(நமக்குத் தேவை அதிகப் பின்னூட்டங்கள், அவ்வளவுதான்!)
###சக பதிவர்களின் இடுகைகளைத் திருடி வெளியிடலாம்.நிச்சயமாக அவற்றை எழுதியவர்களாவது வந்து பார்ப்பார்கள்!(வீட்டுக்கு அரிவாளோடு..?)
###இது போன்ற பயனுள்ள தகவல்களைத் தொடர்ந்து வெளியிடலாம்!(இதுவரைக்கும் எத்தனை பேர் இதேபோலப் பதிவு செய்தார்களோ, நான் வலைப்பதிவுலகத்துக்கு ரொம்பப் புதுசு.)
###உலகில் இதுவரை யாராலும் தீர்வு காண் முடியாத விஷயங்களுக்குத் தீர்வு கண்டு பதிவேற்றலாம், கூட்டம் அம்மும்!மனைவி நம்பும்படிப் பொய் சொல்வது, பொது இடங்களில் எச்சில், சிறுநீர் மற்றும் இன்னபிற இதர கழிவுச் சமாச்சாரங்களைக் கொட்டாமல் தடுப்பது, மாதச் சம்பளத்தில் மிச்சம் பிடிப்பது போன்றவை. (எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்)
###சில நோய்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவையெல்லாம் உங்களது பதிவைப் படிக்கும்போது குணமாவதாக ஒரு மேட்டரை நீங்களே கிளப்பி விடலாம்!(படித்தபின் பி.பி.யோ மனநோயோ வந்தால் என்ன செய்வது?)
###சர்வதேச ஸ்டைலில் பெயர்வைத்துக்கொண்டு ஓர் அமைப்பை உருவாக்கி அதன் விருதை உங்கள் வலைப்பூவுக்குத் தரலாம்.(நீங்கள் மட்டுமே அதில் உறுப்பினர்)
###ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளோடு பதிவேற்றலாம்!(ஒரு கவன ஈர்ப்புக்குத்தான்)
### அரை மணி நேரத்துக்கு ஒரு இடுகை என்ற வீதத்தில் கூகுளையே கும்மியெடுக்கலாம். (அதென்ன சைபர் க்ரைமா, குண்டாஸா.... நமக்கு சட்ட நுணுக்கமெல்லாம் அவ்வளவாத் தெரியாது!)
###பதிவுகள் மூலமாக முதியோர் கல்வி நடத்தலாம்! (கிராமப் புறங்களில் பெரும் வரவேற்பிருக்கும்!)
ஓகே பாஸ்,போய்க் கலக்குங்க! வாழ்த்துக்கள்!!
பழமொழிகளை வலைமொழிகளாக மாற்றிப்பார்த்தேன்! ஐடியா தோன்றியதும் 'டக்' கென நினைவில் வந்த பழமொழிகளை மட்டும் மாற்றியிருக்கிறேன்!
#ஊரார் வலைப்பூவைப் பின்ன் ஊட்டி வளர்த்தால் தனது வலைப்பூ தானே வளரும்!
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்)
#பதிவரின் மனது இடுகையில் தெரியும் .
(அகத்தின் அழகு முகத்தில் தெரியும்)
#புத்தியில் இருந்தால்தானே இடுகையில் வரும்.
(சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்)
#வலைப்பதிவருக்கு ட்விட்டர் கற்றுத் தர வேண்டுமா?
(மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா?)
#கூறு கெட்ட வலைப்பதிவர் ஏழு, எட்டுனு பதிவிட்டாராம்.
( கூறு கெட்ட எருமை மாடு ஏழுகட்டுப் புல் தின்னதாம்!)
#தட்டச்சு செய்வது கால்மணி நேரம்! திரட்டிகளில் பதிவது முக்கால் மணிநேரம்!!
(சுண்டக்கா காப்பணம், சுமைகூலி முக்காப் பணம்!!!)
#கும்பகோணத்தில் பதிவேற்ற குத்தாலத்தில் டைப் செய்தானாம்!
(கும்பகோணத்தில் மூட்டை தூக்க குத்தாலத்தில் முண்டாசு கட்டினானாம்!)
#இட்டதெல்லாம் இடுகையல்ல!
( மின்னுவதெல்லாம் பொன்னல்ல! )
#எழுத மாட்டாதவன் கைகளுக்கு எழுபத்தெட்டு வலைப்பூக்களாம்!
( அறுக்க மாட்டாதவன் கைகளுக்கு அம்பத்தெட்டு அரிவாளாம் ! )
#ஈ ன்னு இளிக்க இ-மெயில் ஐடி இல்லாதவன் ப்ளாக்குக்குப் பேரு பெருச்சாளின்னு வெச்சானாம்!
(அடியேன்னு கூப்பிடப் பொண்டாட்டி இல்லாதவன் புள்ள பேரு அருணாச்சலம்னு வெச்சானாம்!)
#வம்பளந்து கொண்டே இருப்பவன் வலைப்பதிவு செய்யமாட்டான்!
( குரைக்கிற நாய் வேட்டைக்கு ஆகாது)
#சீரியல் பாக்குறவனுக்குத் தெரியுமா வலைப்பதிவோட வாசனை !
(கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை ?_)
#ப்ளாக்குக்கு ப்ளாக் ஸ்பெல்லிங் மிஸ்டேக்!
( வீட்டுக்கு வீடு வாசப்படி !)
# அழுதாலும் பதிவு அவந்தானே இட வேண்டும்!
( அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும் !)
#ஒரு பின்னூட்டம் கொடுத்துக் கருத்துக் கேட்டவன் ஒன்பது பின்னூட்டம் தந்து விளக்கம் சொன்னானாம்.
( ஒரு ரூபா தந்து அழச்சொன்னவன் ஒன்பது ரூபா தந்து ஓயச் சொன்னானாம் !)
#ப்ளாக்கர் கண்ணுக்கு கண்டதெல்லாம் இடுகை!
( அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!)
#டெம்ப்ளேட் நாறினாலும் போஸ்டிங் நல்லா இருந்தா சரி !
(கோழி குருடானாலும் சாறு ருசியா இருக்கணும் & ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி! )
#எஸ்.எம்.எஸ். அனுப்பத் தெரியாதவன் ப்ளாக் ஆரம்பிச்சு ப்ரைஸ் வாங்கறேன்னு சொன்னானாம்!
(கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டப் போறேன்னு சொன்னானாம் !)
வெண்பா எழுதுவது எப்படி?
யாப்பருங்கலத்தை அலசி ஆராய்வதற்காகத்தான் இவ்வலைப்பூவை நாம் ஆரம்பித்திருந்தாலும், வெண்பா எழுதுவது எப்படி எனச் சற்றுத் தனித்துப் பார்ப்போம்!
தமிழின் பெருங்கொடைகளுள் வெண்பாவும் ஒன்று!தமிழ்க் கவிதையின் பெரும்பிரிவுகளுல் ஒன்றான வெண்பாவுக்குத் தனியிடம் உண்டு.வெண்பாவானது பாடுவதற்குச் சற்றுக் கடினமானதும்,நுட்பமானதும், படிப்பதற்கு இன்பமானதுமாம்.வெண்பா என்றாலே என்னவோ ஏதோ எனத் தெறிப்பவர்க்கும்,அஃது ஏதோ ஒரு புரியாத புதிர் என்பவர்க்கும்,நமக்கெல்லாம் அவ்வளவு எளிதில் வெண்பா வராது என்பவர்க்கும்,அதன் அழகையும் .இயற்றும் முறையையும்,விளக்குவதும் வெண்பா என்பது எவ்வளவு வசீகரமான ஒன்று என்பதைப் புரிய வைப்பதும்,இவ்விடுகையின் நோக்கம்.தமிழில் குறிலும் நெடிலும் தெரிந்திருந்தால் போதும், வெண்பா இயற்றி விடலாம்.
வெண்பாவுக்கென்றுள்ள விதிமுறைகளை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.ஓர் எழுத்து மாறும்போதுகூட வெண்பா இலக்கணம் கெட்டு, பாடலே சிதைந்துவிடும்.
#வெண்பா இரண்டு அடிகளுக்குக் குறையாமல் வர வேண்டும்.
#இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும்.
#ஒவ்வோரடியும் நான்கு சீர்கள் பெற்றும் , ஈற்றடி ( இறுதியடி ) மட்டும் மூன்று சீர்கள் பெற்றும் வர வேண்டும்.
#ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு, என்னும் வாய்பாடுகளுள் ஒன்றினைப் பெற்று வருதல் வேண்டும்.
#செப்பலிசை பெற்று வர வேண்டும்.
மாமுன் நிரையும், விளமுன் நேரும், காய்முன் நேரும், வருவனவே வெண்பாவுக்குரியவை.ஒவ்வோரடியிலும் நான்கு சீர்கள் ( அளவடி) வரவேண்டும் எனப் பார்த்தோம்.இச்சீர்கள் ஈரசைச்சீர்களாகவோ (இயற்சீர்) காய்ச்சீராகவோ மட்டுமே வெண்பாவில் இருக்க வேண்டும் .
ஈரசைச் சீர்களாவன,
நேர்நேர் - தேமா
நிரைநேர்-புளிமா
நேர்நிரை- கூவிளம்
நிரைநிரை- கருவிளம்
காய்ச்சீராவது நேரசையில் முடியும் மூவசைச் சீராகும்.ஒருசீர் நிரையசையில் முடிந்தாலோ, காயில் முடிந்தாலோ அதற்கு அடுத்து வரும்சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.நேரசையில் ஒரு சீர் முடிந்தால் அடுத்த சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.இவ்வளவுதான் தளை!
நேர், நிரை என்று சொன்னோமே , அப்படிஎன்றால் என்ன?
#குறில் தனித்தும் (எ.கா: 'க' )
#குறில் தனித்தும் ஒற்றடுத்தும் (எ.கா: 'கல்")
#நெடில் தனித்தும் (எ.கா: 'நா')
#நெடில் ஒற்றடுத்தும் (எ.கா: 'நாள்')
வருவனவெல்லாம் நேர் அசையாகும்.
#குறிலிணைந்தும் (எ.கா: ' பல')
#குறிலிணைந்தும் ஒற்றடுத்தும் (எ.கா: ' களம்')
#குறில் நெடில் இணைந்தும் (எ.கா: ' பலா')
#குறில் நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் (எ.கா: 'விளாம்')
வருவனவெல்லாம் நிரையசையாகும்.
ஈற்றடியின் ஈற்றுச் சீர் மட்டும், தனித்த நேரசையாகவோ, நிரையசையாகவோ வருதல் வேண்டும் அல்லது குற்றியலுகரத்துடன் சேர்ந்த நேரசையாகவோ , நிரையசையாகவோ வருதல் வேண்டும். குற்றியலுகரம் அறிய :(http://sezhunkaarikai.blogspot.com/2011/06/blog-post.html)
சூரல் பம்பிய சிறுகான் யாறு' என்ற தலைப்பில் அண்மையில் நான் எழுதிய மரபுச் செய்யுள் தொகுப்பில் முத்தத்துவம் என்ற தலைப்பில் நான் எழுதிய வெண்பாக்களுள் ஒன்றை எடுத்துக் கொண்டு விளக்கலாமென விரும்புகிறேன்.
"கள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
கதவும் திறந்தது கண்டு"
இவ்வெண்பா நேரிசை வகையைச் சேர்ந்தது. ஒவ்வொரு சீராக, அசையாக, தளையாக, அடியாகப் பார்ப்போம்.
முதல் அடியில் முதற்சீர்
கள் வடி யும் - இது மூவசைச் சீர் . காயில் முடிந்துள்ளது
கள் - குறில் ஒற்றடுத்தது - நேர்
வடி - நெடில் இணைந்தது - நிரை
யும் - குறில் ஒற்றடுத்தது - நேர்
கூவிளங்காய் வாய்பாட்டில் காய் என முடிந்துள்ளதால் , அடுத்த சீர் நேரசையில்தான் தொடங்க வேண்டும்.
இரண்டாவது சீர்
பூவிதழ்க் - ஈரசைச்சீர்
பூ - நெடில் தனித்தது - நேர்.
விதழ்க் - குறிலிணைந்து ஒற்றடுத்தது - நிரை
முதற்சீர் காயில் முடிந்ததால் , இரண்டாவது சீர் நேரில் தொடங்கியது. அதேபோல , இரண்டாவது சீர் நிரையில் முடிந்ததால் மூன்றாஞ்சீர் நேரில் தொடங்கியது.
கா/ ரிகை /யை - நேர்நிரைநேர்-கூவிளங்காய்
கை/களில்/- நேர்நிரை -கூவிளம்
அள்/ளினேன் - நேர்நிரை-கூவிளம்
பந்/துபோல்- நேர்நிரை-கூவிளம்
அப்/படி/யே/- நேர்நிரைநேர்-கூவிளங்காய்
துள்/ளும்/- நேர்நேர்-தேமா
இத/ழில்/- நிரைநேர்-புளிமா
கவி/தை/- நிரைநேர்- புளிமா
எழு/தினேன்/- நிரைநிரை-கருவிளம்
சொர்க்/கக்/- நேர்நேர்-தேமா
கத/வும்/ - நிரைநேர்-புளிமா
திறந்/தது/- நிரைநேர்/புளிமா
கண்/டு- நேர்பு- காசு
நிரையிலும் காயிலும் முடிந்த சீர்களெல்லாம் நேரில் தொடங்குவதையும், நேரில் முடிந்த சீர்களை அடுத்து வருபவையெல்லாம் நிரையில் தொடங்குவதையும் பார்க்கலாம்.வெண்பா எழுதும்போது கவனிக்கவேண்டிய பொதுவான சிலகருத்துக்கள்:
#வெண்பாவுக்குப் பொழிப்பு மோனை வருதல் சிறப்பு.
ஓரடியின் முதற்சீரும் மூன்றாம் சீரும் ஓரினிவெழுத்துகளால் அமைய வேண்டும்.
மேற்கண்ட பாடலில்,
"கள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
கதவும் திறந்தது கண்டு"
வண்ணமிட்டுக் காட்டப்பட்டவை பொழிப்பு மோனையாகும்.
#எதுகை நயம் பெறாது வருதல் வெண்பாவுக்கு அழகன்று!அடியின் முதற்சீரில் இரண்டாமெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகையாகும். பாடலைப் பாருங்கள்!
"கள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
கதவும் திறந்தது கண்டு"
நேரிசை வெண்பாவினிரண்டாம் அடியின் இறுதியில் வரும் தனிச்சொல்முதற்சீரின் எதுகையைப் பெறுதல் வேண்டும்.
#செப்பலிசை என்பது இருவர் உரையடிக் கொள்ளுதல் போன்று அமையும்.வெண்பாக்களை வாய்விட்டு ஓசை நயத்துடன் பலமுறை சொல்லச் செப்பலிசை புலப்படும். அதனை உணர்ந்த பிறகு, செவிகளால் கேட்பதன் மூலமே ஒரு வெண்பாவானது தளை தட்டுகிறதா, பிழையில்லாமல் பாடப்பட்டுள்ளதா எனக் கண்டுகொள்ளலாம்.
#மூவசைச் சீரின் இரண்டாம் அசையானது, 'விளாம்' ஆக வரக்கூடாது.வரின் ஓசை சிதையும்.
சான்று:- போய்/விடா/மல்/-நேர்நிரைநேர்-கூவிளங்காய்
இது வெண்பாவில் வரக்கூடாது.
'விடா' என்பது குறில் நெடில் இணைந்த நிரையசை. இத்தகைய நிரையசை இயற்சீரில் வரலாம்.வெண்சீர் என்னும் மூவசைச்சீரின் இடையில் வரக்கூடாது.நாம் சான்று காட்டிய பாடலில், கா/ரிகை/யை/- என்னும் மூவசைச்சீரின் ரிகை என்பது குறில் நெடில் இணைந்த நிரையசை தான் எனினும், இங்கு என்பது குறுகி ஒருமாத்திரை யளவினதாய் ஒலித்து ஐகாரக் குறுக்கமாகிவிடுவதால், செப்பலிசை சிதைவதில்லை.
#விகற்பங்கள், மோனை, எதுகைவகைகள், ஆசு முதலியவற்றையும்வெண்பாவின் வகைகள் மற்றும் இனங்கள் ஆகியவற்றையும் யாப்பருங்கலக் காரிகைப் பாடல்களை நாம் ஒவ்வொன்றாக விளக்குகையில் கண்டுகொள்லலாம்.
#நளவெண்பாவை நான்குமுறை படிக்க வெண்பா எளிதில் கைவரப் பெறும்.முன்னர்ச்சொன்ன "சூரல் பம்பிஒய சிறுகான் யாறு" நூலில் வெண்பாவின் இலக்கணத்தை வெண்பாவிலேயே பாடியிருக்கிறேன்.மேலும் வெண்பா தவிர அனைத்துப் பாக்கள் மற்றும் பாவினங்களையும் இலக்கண விள்க்கத்துடன் பாடியுள்ளமை கண்டுகொள்ளலாம்.
# வெண்பா எழுதுவதும் ஒரு கணித சூத்திரம் போலத்தான். நுட்பமான அழகுடையது வெண்பா.புலமை கைக்கூட எளிதாகும்.
சென்ற வாரத்திலொருநாள் கோயம்புத்துர்ரின் புகழ்பெற்ற உயர்தர அசைவ உணவகமொன்றின் 'மெனு கார்டில்' 'கோழி வறுத்த கறி' என்ற ஓர் அயிட்டத்தைப் பார்த்தேன். வறுத்த கோழிக்கறி என்பதைப் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன்;விரும்பிச் சுவைத்துமிருக்கிறேன். ஆனால் , கோழி வறுத்த கறி என்பதை இங்கு பார்த்துச் சற்றுக் குழம்பி விட்டேன். சமையல்காரர் வறுத்த கறியா அல்லது கோழியே வறுத்த கறியா என்னும் குழப்பம் ஏற்பட்டாலும் , சிக்கன் மசாலா, சிக்கன் 65, பெப்பர் சிக்கன் , ஜிஞ்சர் சிக்கன், பட்டர் சிக்கன், சில்லி சிக்கன் வகையறாக்களையே மெனுகார்டில் பார்த்துப் பார்த்துக் கண்களும் , நாக்கும் புளித்துச் சலித்து அலுத்துப் போயிருந்ததால், கோழி வறுத்த கறி என்ற பெயரே நாவில் 1/2 காலன் நீரை ஊற்றெடுக்கச் செய்து விட்டது. ஆணையிட்டதும் (ஆர்டர் செய்ததும்) அடுத்த அரை மணிநேரத்தில் ஆவிபறக்க அள்ளி வந்து ( அடேங்கப்பா .... எத்தனை 'அ') மேசையில் வைத்தார். உறைப்பும் கார்ப்பும் நாவைச் சுண்டியிழுத்தன. நிற்க......
'சிக்கன்' என்ற சொல் தமிழ்ச் சொல்லாகிப் பலநாட்களாகி விட்டன. கவிப்பேரரசு சொன்னது போல 'கார்' 'சிக்கன்' போன்ற சொற்கள் தமிழின் எழுத்திலகணத்துக்குட்பட்டு , தமிழே போல ஒலிப்பதால் , இவற்றைத்தமிழ்ச் சொற்களாகக் கருதிச் சொற்களஞ்சியம் பெருக்கலாம் என்று தோன்றுகிறது.
மகிழ்வுந்து என்பது சற்றுச் சுற்றி வளைத்துச் சொல்வது போல வசீகரமற்றுத் தொனிக்கிறது. ஆனால் 'பஸ்' என்னும் சொல் தமிழ்ச்சொல்லாக முடியாது. பேருந்து என்பதே சரியான வடிவம் . 'ஸகர' எழுத்துகள் கிரந்தமாக இருந்தாலும் அவற்றின் வரிவடிவமின்றி ஒலி வடிவத்தைத் தமிழின் 'சகர' எழுத்துகளே நிரப்பிவிடுகின்றன. 'காசு', 'பசை', 'இசை','பசு'.... எனச் சொல்லிப் பாருங்கள்! அதே போலத்தான் 'காகம் ' என்று சொல்கையில் 'KAA' 'HA' Mஎன்று ஒலிக்கும். கிரந்த எழுத்துகளின்றியே தமிழின் இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன என்பதுவே தமிழின் வளத்துக்குச் சான்று.
அண்மையில் பாலக்காடு சென்றிருந்தேன். கேரளா எனது விருப்பமான இடம் என்பதாலும், கூப்பிடு தூரம்தான் என்பதாலும் அடிக்கடிச் செல்வதுண்டு. கேரள உணவு வகைகள் மீதும் எனக்குமிகப்பெரும் நாட்டம் உண்டு. பேரரசிச் சோற்றை மீன்குழம்பில் ஊறவைத்துத் தின்பதின் சுவை அலாதியானது. பாலக்காட்டின் உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த போது, குழம்பை முடித்து விட்டு ரசத்துக்கு வாங்கும் போதும், உண்டு முடித்துத் தொகை செலுத்தும் போதும், அவர்களது " சோறு வேணுமா?","ரெண்டு சோறு எண்பது ரூபா!" என்ற சொற்பயன்பாடுகள் காதுகளுக்கு இனிமையாக இருந்தன.
தமிழ் குறையும் நல்லுலகை மன்னிக்கவும் தமிழ் கூறும் நல்லுலகை நினைத்துப் பார்த்தேன் !'சோறு' என்ற சொல் அநாகரிகமான சொல்லாகிப் பல்லாண்டுகளாகிவிட்டன. உணவகங்களில், " கொஞ்சம் ரைஸ் வைங்க", "சாப்பாடு தயார்" , "சாப்பாடு இருக்கா?" என்பன போன்ற உரைகளைத் தான் கேட்க முடியும்!
சாப்பாடு என்பது நாகரிகம் என்றும், ரைஸ் என்பது அதிநாகரிகம் என்றும் சோறு என்பது அநாகரிகம் என்றும் ஆழப் பதிந்துவிட்டன நம்மவர்களது மனங்களில்!
"சுத்தம் சோறு போடும்"
"சோழநாடு சோறுடைத்து"
"தேடிச் சோறு நிதந் தின்று"
"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்"
என்பன போன்ற வரிகளை நினைத்து இன்புறலாம்."சோறுண்டான், சோறள்ளித்தின்றான், சோறும் குழம்பும் சுவையாய் இருந்தன"
இவற்றையெல்லாம் சொல்லிப்பாருங்கள்! சொல்லவே சுவை பெருகும்!!
"உமிகொண் டரிசி துறப்பான் - தமிழின்
உலகப் பெருமை மறப்பான்.
தமிழா உன்றன் தலைவிதி மாற்றத்
தரணியில் எவனினிப் பிறப்பான்?"
நன்றி நன்றி நன்றி!
நூறாவது பதிவிற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடேங்கப்பா!!!!!!!! எவ்லவ் பெரிய பதிவு.. ? 100 க்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteVAALTTHUKKAL!!!!!!!
ReplyDeleteGIRI.
congrats
ReplyDeleteநன்றி நண்பர்களே!
ReplyDeleteதங்களின் நூறாவது பதிவு அருமை (நூறுமுறை) வாழ்த்துக்கள் பல நூறு பதிவுகள் காண அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
ReplyDelete