முத்தத்துவம் - மூன்றாம் பகுதி
கோவைப் பழச்சிவப்புக் கொஞ்சும் இதழ்கொண்ட
பாவையைக் கொஞ்சமாய்ப் பார்த்தாலே - சாவையும்
வாரி அணைத்திடுவேன் வாழ்வில் இனியும்நான்
சேர எதுவுண்டு செப்பு!
கொத்துச் சுளையாய்க் குவிந்த குலையிதழைக்
கொத்திச் சுவைத்துக் குடிக்கையில் - மெத்தைமேல்
வித்தை புரிந்தாள் விதவிதமாய் என்னுடன்
அத்தை மகள்தான் அணைத்து!
பதமாய்ப் படர்ந்தாள் பரவசந் தந்தாள்
மிதமாய் இதழிசை மீட்டி - முதலில்
இதமாய்த் தழுவினாள்; இன்னமு தூறும்
இதழால் சிறைசெய்தாள் ஈர்த்து!
தொட்டுச் சுவைத்தேனத் தோகையின் செவ்வருந்தேன்
சொட்டும் இதழின் சுகத்தினை - விட்டேனா
கொட்டினேன் கன்னத்தில் கோடிமுத்தம் கேளுங்கள்
கட்டிலும் வெட்கியது கண்டு
போதும் இறைவா புவியில் வரமாக
ஏதுமினி வேண்டாம் எனக்கென - மாதவள்
ஒற்றைச் சிறுமுத்தம் இட்டாளே அப்போதே
பெற்றேன் பிறப்பின் பயன்!
கவிதையில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேன் சொட்டுக்கள்
ReplyDeleteநன்றி
ReplyDeleteபுது மாப்பிளையின் அனுபவம் தமிழில் விளையாடுகிறது.
ReplyDeleteஉங்கள் கவிதை மிகவும் அழகாக இருக்கிறது. தமிழின் இனிமையை உங்களின் கவிதையில் கண்டேன். மிகவும் நன்றி. ச. கண்ணன்
ReplyDeleteஅன்பே உன் செவ்விதழில் தேன் தடவி புதையல் ஒன்று தேடலாம்.................
ReplyDeleteஅஉங்கள் தொடர்பு எண் வேண்டும்
ReplyDelete