இரவின் பாடல்-நள்ளிரவில் எழுதுகிறேன்
இரவின் பாடல்
வழிந்தோடும் இருளில்
வாய்த்த வலிகளற்ற
சஞ்சாரம்
நீண்டு கொண்டே செல்கிறது.
திசை நிரப்பும் கருமை
மெலிதான குரலில்
இரவின் தீரா வேட்கையை
முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறது.
ஏதோ ஒன்றைச் சொல்ல
எந்நேரமும்
இரவு முயன்றுகொண்டே இருக்கிறது.
இன்றுவரை
அஃது என்னவென்று
சொல்லிவிட்டதா இல்லையா
என்பது மட்டும் புரியவே இல்லை.
இந்த இரவுதான் போகுதே போகுதே இழுத்துக் கட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே என்ற திரைப்பாடலினை அண்மையில் கேட்டேன்.வசீகரிக்கும் வரிகளும், மயக்கும் இசையும் வழிந்தோடும் அப்பாடலினை மீண்டும் கேட்கத் தோன்றியது. காணொளியுடன் பார்த்த போது இரவின் மீதான காதல் எல்லாருக்கும் ஒருவிதத்தில் எப்பொழுதும் அல்லது எப்பொழுதாவது பீறிட்டுக் கொண்டுதான் இருக்கிறது எனத் தோன்றியது.பொய்யான வாழ்வில் மெய்யான இன்பந்தரும் மது போதையோ (பாடல் வரிகள்), இலக்கிய இன்பமோ,வாசித்தலின் சுகானுபவமோ, கூடிக்களித்தலின் பேரின்பமோ எதுவோ ஒன்று இரவின் நிறத்தை மாற்றிக் கொண்டேதான் இருக்கிறது.
இரவானது நள்ளிரவாகப் பரிணமிக்கும்போது அதன் நிறமும் அடர்த்தியும் மாறத் தொடங்கி விடுகிறது.பகல்பொழுது இரவையும், இரவு பகலையும் துரத்திப் பிடித்து விளையாடுவது போலத் தோன்றுகிறது.இரவில்லா உலகம் அழகை இழந்துவெறுமையாக்த்தான் இருக்கும்.இரவு , உலகையும் , வாழ்க்கையையும் பொருள் நிரம்பியதாக்குகிறது.சலனமற்ற மனது பெரும்பாலும் இரவில்தான் சாத்தியப் படுகிறது.பகலின் எச்சங்களும் மிச்சங்களும்விழித்திருப்பவனின் நள்ளிரவுகளில் வெவ்வேறு வடிவங்களில் மறுபிறப்பெடுக்கின்றன.பெய்யும் இருளைக் கிழித்து ஊடாட எப்போதும் நம்மிடம் ஓர் ஏக்கமோ, கவலையோ, பகல்பொழுதின் பெருமகிழ்ச்சியோ இருந்து கொண்டேதான் இருக்கிறது. விழித்திருப்பவனின் இரவு . இரவின் ருசி, தேசாந்திரி ...இவற்றையெல்லாம் படித்துப் பாருங்கள்.
சித்தார்த்தன் பார்த்த அதே நிலவைத்தான் தானும் பார்த்ததாக எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.இரவைச் சுவைத்துப் பருகுபவர்க்கே அவ்வுணர்வு வாய்க்கும்.ஒரு தூக்குக் கைதியின் கடைசி இரவை வைரமுத்து வர்ணிப்பார்.வேர்கள் நீர்குடிக்கும் ஒலியும் , நிலவு வளரும் ஒலியும் எல்லார் செவியிலும் விழாது.
இரவு நமக்காக எத்தனையோ வைத்திருக்கிறது.அது நமக்காகப் பகல் முழுதும் காத்துக்கொண்டிருக்கிறது.நோயுற்றவனுக்கு அச்சத்தைத் தருகிறது.நோயாளியின் இரவு நீளமாக இருக்கிறது.முதிர்கன்னியின் இரவில் அனல் தகிக்கிறது.வேலையில்லாதவனின் இரவு விரக்தியைத் தரிக்கிரது.பயணம் செபவனின் இரவும் , மாணவர்களின் இரவும் மிகக்குறுகியதாக இருக்கிறது.காதலிப்பவனின் இரவு அவஸ்தையாகக் கழிகிறது.கவிஞனின் இரவு வண்ணக்காடாய் ஜொலிக்கிறது.
இரவின் குரல் இனிமையானது. அதன் வரிகள் நுட்பமானவை.இரவின் இசை மனதின் இடுக்குகளில் எல்லாம் காற்றைப் போல நிரம்புகிறது.இரவின் விரலைப் பிடித்துக் கொண்டு நெடுந்தொலைவு நடக்கும் வாய்ப்பு நம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.இத்தனைக்கும்
காற்றைப் போல , நீரைப்போல இயற்கையின் தீராத உற்பத்திப் பொருள் அது. நாள்தவறாமல் இரவு நம்மைக் கடந்து செல்கிறது.
என்னை அதிரவைத்த சேரனின் குறுங்கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.படித்து முடித்து நெடுநேரமாகியும் அந்தப் பாதிப்பிலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் மீளவே இல்லை.எனது மொத்த வாசிப்பு அனுபவத்திலும் என்னைப் புரட்டிப்போட்ட கவிதை அது.
யமன்
காற்ரு வீசவும்
அஞ்சும் ஓர் இரவில்
நட்சத்திரங்களுக்கு இடையே
இருக்கிற
அமைதியின் அர்த்தம்
என்னவென்று
நான் திகைத்த ஒரு கணம்
கதவருகே யாருடைய நிழல் அது....?
இரவைப் பருகுங்கள்..இரவைச் சுவாசியுங்கள்..இரவிலும் வாழுங்கள்...!
“இரவின் பாடல்“ இது வரை யோசிக்காததை யோசிக்கத் துாண்டுகிறது கவிஞரே.
ReplyDeleteதங்களின் ரசனை சிந்திக்க வைக்கிறது...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
பகல்பொழுது இரவையும், இரவு பகலையும் துரத்திப் பிடித்து விளையாடுவது போலத் தோன்றுகிறது.
ReplyDeleteஅருமை அருமை..
அழகாகச் சொன்னீர்கள்..
இத்தனை
ReplyDeleteவர்ணப் புடவைகளைக்
கலைத்துப் போட்டும்.....
கடைசியில்
இரவு
கறுப்பைத்தானே
கட்டிக் கொள்கிறது?
என்ற வைரமுத்து கவிதை நினைவுக்கு வந்தது நண்பா.
அன்பு நண்பா.. தங்கள் இடுகையோடு தொடர்புடைய
ReplyDeleteகுறுந்தொகை ச(ஜ)ப்பானியக் கவிதை ஒப்பீடு
http://www.gunathamizh.com/2009/09/blog-post_24.html
என்ற இடுகையை வாசிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
அருமையான சிந்தனை....
ReplyDeleteமேலும் தொடர வாழ்த்துக்கள்....... சிநேகிதா.....