அண்மையில் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுலா சென்று வந்தேன். தமிழகத்தில்தான் எத்தனை இடங்கள் உள்ளன, சுற்றிப் பார்ப்பதற்கு!கோவில்கள், சரித்திரப் புகழ் பெற்ற இடங்கள், கடற்கரைகள், மலை வாழிடங்கள், அருவிகள், அணைக்கட்டுகள், என எண்ணற்ற இடங்கள்,. ஆனால் நான் பார்த்த பெரும்பாலான இடங்களில், தாம்பூலம் தரிக்கும்போது ஒரு சிறுகல் வாயில் அகப்பட்டு உறுத்துவது போல, ஒரு விஷயம் என்னை அரிக்கத் தொடங்கிவிட்டது. எங்கெங்கு காணினும் குப்பைகளும், அசுத்தங்களும் கிடக்கின்றன. நிறைந்து வழிந்து கொண்டும், நிறையாத போதும் சிதறிய குப்பைகள் சூழ்ந்தும் நிற்கும் குப்பைத்தொட்டிகள்,சேறும் சகதியும் விரவிக் கிடக்கும் தெருவோரங்கள்,மனித , விலங்குக் கழிவுகள் புதைந்து கிடக்கும் கடற்கரை மணல்வெளிகள், வெற்றிலைச் சாறும், உடைந்து முறிந்த சிகரெட் துண்டுகளும், இன்ன பிற லாகிரி வஸ்துக்களைக் கொண்டிருந்து, குறுக்கே கிழிக்கபட்ட உறைகளும் , வாடிய பூச்சரங்களும், தண்ணீர், குளிர்பானப் போத்தல்களும் , தின்பண்ட உறைகளும், பயன்படுத்தித் தூக்கி எறியும் குவளை, தட்டு, வட்டில் வகையறாக்களும், எங்கெங்கும் பொங்கிக் கிடக்கும் சாலைகள், பூங்காக்கள், கோவில் கோட்டை வாசல...