Posts

Showing posts from September, 2011

நான் ஏன் தமிழ் நாளிதழ்கள் படிப்பதில்லை?

எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை!ஆங்கிலத்தில் பேசும்போதோ, எழுதும் போதோ இலக்கணம் கெட யாரும் பேசுவதுமில்லை, எழுதுவதுமில்லை. அவ்வாறு நிகழ்ந்தாலும் அதனைக் கேட்பவரும் படிப்பவரும் தவறு என உணர்ந்துகொள்கின்றனர். அதனைத் தவறு என ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.பிழைகளைத் தடுக்கவும் தவிர்க்கவும் இருபக்கங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் தமிழில் எளிய இலக்கணம் கூட மீறப்படும்போது அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. நாம் தவறாகப் பேசியிருக்கிர்ரோம் அல்லது எழுதியிருக்கிரோம் என்ற சொரணை பேசியவருக்கோ அல்லது எழுதியவருக்கோ ஏற்படுவதே இல்லை. வாசிப்பவருக்கும் அதனை உணரக்கூடிய திராணி இல்லை எனத்  தோன்றுகிறது. சான்றுடன் சொல்ல வெண்டுமானால், நாளிதழ்களை எடுத்துக் கொள்கிறேன். தமிழ் நாளிதழ்களில் வந்த செய்திகளை மேற்கோள் காட்டினால்: "தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது" "உள்ளாட்சி தேர்தல்" "சாப்பிட மறுத்து போராட்டம்" "தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன" "உள்ளாட்சித் தேர்தல்" "சாப்பிட மறுத்துப் போராட்டம்" என்று வரவேண்டிய சொற்றொடர்கள் அவை! ஆனால் ஆங்கிலத்தில்  ...

ஐநூறா ஐந்நூறா ?

ஐநூறா ஐந்நூறா ? ஐநூறு என்று எழுதுவதா ஐந்நூறு என்று எழுதுவதா என்ற குழப்பம் இன்று நம்மில் பலருக்கும் உள்ளது.  தமிழுக்கு இலக்கணம் வகுத்துத்தந்த தொல்காப்பியத்தையே இங்கு எடுத்துக்கொள்கிறோம். "நூறு முன் வரினும் கூறிய இயல்பே"   (தொல்காப்பியம்,எழுத்ததிகாரம், குற்றியலுகரப் புணரியல், நூற்பா எண் 460) இதன் பொருள் யாதெனில் , ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்களின் முன்னால் நூறு என்ற எண் வரும்போது , பத்து என்ற எண்ணுக்கு என்ன இலக்கணம் கூறப்பட்டதோ அதுவே பொருந்தும் என்பதாகும்.462 ஆம் நூற்பாவில் "நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா" என்று தொல்காப்பியர் கூறுவதால் , ஐந்து + நூறு = ஐந் + நூறு ( 460 ஆம் நூற்பாவின்படி 'து' கெட்டது)                            =ஐந்நூறு (462 ஆம் நூற்பாவின்படி 'ந்' என்ற ஒற்று திரியாமல்                       அப்படியேநின்றது.) ஆக, இந்திய ரூபாய் நோட்டில் உள்ளது போல "ஐந்நூறு"என்பதே சரியெனத் துணியலாம்.நமக்கெல்லாம் ஃபை ஹ‌ன்ட்ரட் என்று சொன்னால்...

முத்தத்துவம் - மூன்றாம் பகுதி

Image
கோவைப் பழச்சிவப்புக் கொஞ்சும் இதழ்கொண்ட பாவையைக் கொஞ்சமாய்ப் பார்த்தாலே - சாவையும் வாரி அணைத்திடுவேன் வாழ்வில் இனியும்நான் சேர எதுவுண்டு செப்பு! கொத்துச் சுளையாய்க் குவிந்த குலையிதழைக் கொத்திச் சுவைத்துக் குடிக்கையில் - மெத்தைமேல் வித்தை புரிந்தாள் விதவிதமாய் என்னுடன் அத்தை மகள்தான் அணைத்து! பதமாய்ப் படர்ந்தாள் பரவசந் தந்தாள் மிதமாய் இதழிசை மீட்டி - முதலில் இதமாய்த் தழுவினாள்; இன்னமு தூறும் இதழால் சிறைசெய்தாள் ஈர்த்து! தொட்டுச் சுவைத்தேனத் தோகையின் செவ்வருந்தேன் சொட்டும் இதழின் சுகத்தினை - விட்டேனா கொட்டினேன் கன்னத்தில் கோடிமுத்தம் கேளுங்கள் கட்டிலும் வெட்கியது கண்டு போதும் இறைவா புவியில் வரமாக ஏதுமினி வேண்டாம் எனக்கென - மாதவள் ஒற்றைச் சிறுமுத்தம் இட்டாளே அப்போதே பெற்றேன் பிறப்பின் பயன்!

முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன் - ஒரு சமகால ஆளுமை

சென்ற வாரத்தில் தமிழின் முதுபெரும் கவிஞரும், தமிழாய்ந்த புலவருமான முனைவர் ஆலந்தூர் . திரு . மோகனரங்கன் அவர்கள் எனக்கு அவருடைய நூல்களில் நான்கை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார்.அவற்றுள் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரைப் பற்றிய சிறப்பாய்வு நூலான தமிழ்க்கவிதைகளில் சந்த அமைப்பு என்ற நூலைக் கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த செம்மொழி மாநாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வாங்கியிருந்தேன். ஆழமான ஆய்வு நூலது. அவரது "பிறர் வாழப் பிறந்தவர்கள்" என்றநூலை இன்று படித்து முடித்தேன். படிக்கப்படிக்க இனிக்கும் பாக்கள் நிரம்பிய அந்நூலில் மரபானது அவருக்கு எவ்வளவு இயல்பாக வாய்த்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.தங்குதடையின்றிப் பாயும் அருவிபோலச் சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன.. என்னைப் போன்ற மரபு ஆர்வலர்களுக்கு இந்நூல் ஓர் உந்துதலாகவும், வழிகாடியாகவும் இருக்கும். நான் சுவைத்து மகிழ்ந்த பாக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  காசும் பிறப்புமாய் முடிந்த குரள் வெண்பாக்களாலான "திருவள்ளுவர் ஒரு பூந்தமிழ்த்தோட்டம்" என்ற முதற்பாடல் வெகு அருமை. "பொய்யைப் பிளந்து" என்ற சொற்பயன்பாடு பாரதிய...

அன்புத் தமிழர்களே, ஒரு நொடி நில்லுங்கள்.

தமிழில் கலந்து விட்ட பிறமொழிச் சொற்களை நம்மில் பலரும் தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர்.தூய தமிழ்ச் சொற்கள் இருக்க நாம் ஏன் பிறமொழிகளிடம் கையேந்த வேண்டும்?  பிற மொழிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவற்றைத் தமிழில் கலக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.இனிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திப் பாருங்கள்.எவ்வளவு இன்பமாக இருக்கும் என்பதை உணர்வீர்கள். எனக்கு உடனடியாக நினைவில் வந்தவற்றை மட்டும் இங்கு பட்டியலிட்டுள்ளேன். பிழைகள் ஏதேனும் தென்பட்டால் சுட்டிக்காட்டுங்கள். போஜனம் -  உணவு, உண்டி மகசூல் - விளைச்சல் ஞானம் - அறிவு ஞாபகம் - நினைவு ஞாபகசக்தி - நினைவாற்றல் சூரியன் - ஞாயிறு, கதிர், கதிரவன் , வெய்யோன் சேவை - தொண்டு , பணி சமுத்திரம் - கடல் , ஆழி, வேலை, முந்நீர் கேசம் - மயிர், கூந்தல் .முடி வியாதி - நோய், பிணி ருசி - சுவை யுத்தம் - போர், சண்டை. பொருதல் பிரதானம் - முதன்மை பயம் - அச்சம் சரித்திரம் - வரலாறு பரிசுத்தம் - தூய்மை யாகம் - வேள்வி ரகம் - வகை, வகுப்பு, பிரிவு, இனம் ரசம் - சாறு தானம் - கொடை திலகம் - பொட்டு               ...

என் நோவு அறியாய்!

ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய் இருநாளுக் கேலென்றா லேலாய் - ஒருநாளும் என்நோ வறியாய் இடும்பைகூ ரென்வயிறே உன்னோடு வாழ்த லரிது. இன்று உணவு கிட்டவில்லை,  ஒருநாள் மட்டும் பொறுத்துக்கொள் என்றால் கேட்டுத் தொலையாது.இன்று மிகுதியாக உணவு கிட்டியுள்ளது, இரண்டு நாள் உணவை ஏற்றுக்கொள் என்றாலும் அதனால் முடியாது.உணவைப் பெறுவதற்கு நான் படும் பாட்டை உன்னால்  அறிந்து கொள்ள முடியாது. உன்னோடு சேர்ந்து வாழ்தல் எனக்கு மிகவும் அரிய செயலாக இருக்கிறது. வாழ்வியல் தத்துவமும், நையாண்டியும், அங்கதமும் பெருகிவழியும் இந்த நேரிசை வெண்பாவில் ஔவைப் பாட்டி யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறதா? ஒருசாண் வயிற்றைத்தான் இவ்வாறு கூறுகிறார். உண்மைதான், எப்பேர்ப்பட்ட பேராசைக்காரனும் போதும் என்று  சொல்லக்கூடிய ஒரே பொருள் உணவுதான். சத்திய சோதனையில் காந்தியடிகள் கூறுவார், இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் போதுமான் அளவு   எல்லாமே உள்ளது. ஆனால் தனிப்பட்ட ஒருவனின் பேராசைக்கு அது போதாது என்று.  எவ்வளவு அழகான பாடல் , அழகான கருத்து. ஔவை மொழி அமுத மொழிதான்.

காலவரையற்ற.......

காலவரையற்ற பயன்பாட்டில் சுருங்கி, ஒலிப்பில் நொறுங்கித் தமிழனின் வாய்களிலும் கைகளிலும் சிக்கிச் சீரழியும் தமிழ்ச்சொற்களின் பரிதாபப் பயன்பாடுகளுள் மேற்கண்டதும் ஒன்று.  காலவரையறையற்ற என்ற சொற்பயன்பாடுதான் இன்று கால வரையற்ற என்று புழங்கிவருகிறது. விகடனில் மதனிடம் மீனா ஐயர் என்றொருவர் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. காலவரையற்ற எனபதுகூட நாளை என்னவாக உலவப்போகிறதோ? இணையத்திலாவது தமிழை வாழவைப்போம்!

முத்தத்துவம் -இரண்டாம் பகுதி

Image
 முத்தத்துவம் என்ற தலைப்பில் எனது சூரல் பம்பிய சிறுகான்  யாறு நூலில் நான் எழுதிய முப்பது வெண்பாக்களை ஐந்தைந்து பாக்களாகப் பதிவேற்றுகிறேன். இது இரண்டாம் ஐந்து பாக்கள்! பாகிடை ஊறும் பழக்கீற் றுதட்டாளே போகிறது மெல்லப் பொழுதெலாம் - ஆகவே புத்தம் புதுப்பூவே போதும் அணைத்தென்னை முத்த்தத்தால் காதல்தீ மூட்டு! கள்வடியும் பூவிதழ்க் காரிகை யைக்கைகளில் அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும் இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக் கதவும் திறந்தது கண்டு! மதுவூறும் மல்லிகையோ மன்மதனின் அம்போ அதுதேவர் தந்த அமுதோ - இதழ்தான் அடடா அடடா அருந்தி மயங்கிக்  கிடந்தேன் கிறங்கிக் கிளர்ந்து! பனிமுத்தம் இட்டாள் பளிங்குச் சிலையாள் இனிப்புத்தேன் சொட்டும் இதழால் - இனியென் பிணிதீரும் ஏழு பிறப்பிலுமம் முத்தம் மனத்துயர் போக்கும் மருந்து! பத்துமுறை மண்ணில் பிறந்தாலும் தேன்முத்தத் தித்திப்பென் றுஞ்சென்று தீராது - புத்தியில் நித்தமும் அந்த நினைவேதான் நீதந்த முத்தத்தில் வாழ்கிறதென் மூச்சு!               ...

ஒரே ப்ரௌசரில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளில் நுழைவது எப்படி?

நம்மில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகள் வைத்திருக்கலாம். சான்றாக நானே ப்ளாக்கருக்கு ஒன்றும், தனிப்பட்ட பயன்பாட்டுக்கு ஒன்றுமாக இரண்டு கணக்குகள் வைத்திருக்கிறேன். இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் சில நேரங்களில் கடுப்பானதும் உண்டு. ஜி மெயில் செட்டிங்ஸை நோண்டிக் கொண்டிருக்கையில் அதற்குத் தீர்வு கண்டுபிடித்தேன். தெரியாதவர்களுக்குப் பயன்படுமே என்று பதிவேற்றுகிறேன். படிப்படியாகச் சொல்கிறேன்: #எதாவது ஒரு ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து கொள்ளவும். #அக்கவுன்ட் செட்டிங்ஸ் (account settings) என்பதனைச் சொடுக்கவும். (மின்னஞ்சல் முகவரியின் மீது கர்சரை வைத்துச் சொடுக்கவும்) #பர்சனல் செட்டிங்ஸ் (personal settings) என்ற கட்டத்தில் மல்டிபிள் சைன் இன் (multiple sign in)என்ற ஆப்ஷனுக்கு அருகில் உள்ள எடிட் (edit)என்பதச் சொடுக்கவும். #அடுத்துத் திரையில் தோன்றும் சன்னலில் On use Multiple Google Accounts in the same web browser  எனபதினுள் நுழைந்து அனைத்து செக் கட்டங்களையும் தேர்ந்தெடுத்து சேமித்துக் கொள்ளவும். #இப்பொழுது கணக்கினை லாக் ஆஃப் செய்து விட்டு அடுத்த கணக்கினுள...

பூமாலையை என்ன செய்யப்போகிறோம்?

"அனைத்துக் கட்சிகள் இதில் கலந்து கொள்கின்றன." இச்சொற்றொடர் நாம் அடிக்கடிக் கேள்விப்பட்ட , பயன்படுத்தும் ஒன்றாகும். . இதனைக் கீழ்க்கண்டவாறு மாற்றும் போது எங்ஙனம் செம்மையாக இருக்கிறது எனப் பாருங்கள்! "இதில் கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்கின்றன." தமிழ் ஓர் அழகான மொழி. நம் கையில் கிடைத்த பூமாலையை என்ன செய்யப்போகிறோம்? (திரு.மா.நன்னன் அவ்ர்களிடம் கற்றது.)

முத்தத்துவம் -நேரிசை வெண்பாக்கள்

Image
முத்தத்துவம் என்ற தலைப்பில் முப்பது வெண்பாக்களை எனது "சூரல் பம்பிய சிறுகான் யாறு" நூலில் காணலாம். அவற்றை ஐந்தைந்து பாடல்களாகப் பதிவேற்றலாம் என்று முதல் ஐந்து பாக்களை இங்கு தருகிறேன். எனது நூலில் அதிகம் பாரட்டப் பெற்ற பாக்களுள் இதுவும் ஒன்று. முப்பதையும் படித்து முடித்த பிறகு முத்தமிட்ட உணர்வுக்கு ஆட்பட்டேன் என்று எனது நண்பர் ஒருவர் கூறியதை என்னால் மறக்கமுடியாது. முத்தேயென் பொற்சிலையே மொட்டவிழ்நத மோகனமே முத்தக் கவிதை மொழிகிறேன் - மொத்தக் கதைசொலவுங் கூடுமோ கண்டாலே உன்னை இதழ்சிவந்து  போகும் எனக்கு! முத்தமல்ல நானுனக்கு மூச்சுமுட்ட இட்டவை அத்தனையும் அன்பின் அழியாத - முத்திரையாம் சித்திரமாய்த் தீட்டினேன் செவ்விதழில் நான்கொண்ட மொத்தக்கா தல்தன்னை மொண்டு! முத்தமன்று நீயே முதன்முதலில் தந்தது சொத்தெனக்கு வேறேன்ன சொல்லுவேன் - இத்தரையில் பெற்றேனுன் முத்தப் பெரும்பே றதன்மூலம் கற்றேன் எழுதக் கவி! தேன்பாகில் ஊறும் திராட்சை உதடுகளை ஏன்தான் படைத்தாய் இறைவனே - நான்கண்டு கவ்விச் சுவைக்கத்தான் காலமெல்லாம் பாடுபட்டுச்  செவ்விதழைத் தந்தாயோ செய்து! கரும்போ க...

பத்து வகைக் குற்றங்கள்

நன்னூலார் வகுத்துத்தந்த பத்து வகை அழகு களை முன்னர்ப் பார்த்தோம். அவரே பத்து வகைக் குற்றங்களையும் பட்டியலிட்டுத்தந்துள்ளார். படைப்பாளிகளுக்கும் பதிவர்களுக்கும் இது பயன்படும். ஒன்றைச் சொல்லும்போது எவ்வாறு சொல்லக்கூடாது என்பதற்கு இவையெல்லாம் சான்றாகும். "குன்றக் கூறல் மிகைபடக் கூறல் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல் சென்று தேய்ந்திறுதல் நின்று பயன் இன்மை"  குன்றக் கூறல் -சொல்ல வேண்டிய அளவுக்கு இல்லாமல், குறைத்துக் கூறுவது மிகைபடக் கூறல்-சொல்ல வேண்டிய அளவினைவிடவும் மிகுத்துச் சொல்வது கூறியது கூறல்- சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லுதல் மாறுகொளக் கூறல்-முன்னுக்குப் பின் முரணாகக்கூறுதல் வழூஉச்சொல் புணர்த்தல் -பிழையான சொற்களைப் பயன்படுத்தல் மயங்க வைத்தல்-குழப்பமான முறையில் கூறுதல் வெற்றெனத் தொடுத்தல்-தேவையில்லாத அதிகப்படியான சொற்களைப் பயன்படுத்துதல் மற்றொன்று விரித்தல்-சொல்லவந்ததை விடுத்து வேறொன்றைச் சொல்லுதல் சென்று தேய்ந்திறுதல் -  செல்லச் செல்லப் பொருள் அடர்த்தி குறைதல் நின்று பயன் இன்மை-ப...

அறிகை அறிக்கை அறிவிக்கை அறிவிப்பிக்கை அறிவிப்பு அறிவு

அறிகை என்பது தன்வினை. அறிந்து கொள்ளுதல் எனப் பொருள்படும். அறிக்கை என்பது பிறவினை. அறியச் செய்தல் எனப்பொருள்படும். அதேபோல, அறிவிக்கை என்பது அறிவித்தல் என்னும் பொருளில் தன்வினையாக அமையும் . பிறரை அறிவிக்கச் செய்தல் என்னும் பொருளில் அறிவிப்பிக்கை என வந்து  அதுவே பிறவினையாக நிற்கும். அறிவித்த அல்லது அறிவிக்கப்பட்ட பொருளை அறிவிப்பு என்றும். அறிந்து கொன்ட அல்லது அறியச்செய்த பொருளை அறிவு என்றும் சொல்வோம்.

மிதித்துவிட்டாவது போ!

Image
என்னை இந்தப் பாடுபடுத்துகிறதே,      உயர்த்தி மடித்து ஒருக்களித்துச் செருகிவைத்த கொண்டையில்  அப்படி  என்னதான் வைத்திருக்கிறாய்? நழுவி விரியாதா என்ற  நப்பாசையுடனும், பிரிந்து விட்டால் பின்னி விடலாமே என்ற  பேராசையுடனும் நான் வெறிபொங்கக் காத்திருக்கிறேன்! ஒற்றை ரோஜாவுடன் நீவரும் பாதையில் காத்திருக்கிறேன்! உனக்காகவே  உதித்த பூவை மிதித்துவிட்டாவது போ! சேலை நெய்யும் போதே வெட்கத்தையும்  சேர்ந்து நெய்தார்களா என்று தெரியவில்லை! பிறகு சேலை கட்டும் போது மட்டும் வெட்கம் உனக்கு  எங்கிருந்துதான் வந்து சேர்ந்து கொள்கிறது?