தகிக்கும் தவிப்பு!


ஏறெடுத்துப் பார்த்தநொடி ஏனிப்படி ஆனதடி
  எதுவுமெனக்கு உலகிலினித் துச்சம் - நீயோ
சேறெடுத்துப் பூசும்படி செய்துவிட்ட கோலமடி
  செந்தணலில் விழுவதுதான் மிச்சம்!


ஆதரவாய் அன்றிருந்த போதகலக் கண்கள்விரித்து
  அழகழகாய்ப் பேசியது இன்னும் - நீஇன்று
வேதனையாம் இருட்குழியில் வெறுத்தொதுக்கித் தள்ளும்போதும்
  வெளிச்சம்போட்டு என்னுயிரில் மின்னும்!



கண்டபடி என்னுயிரைக் கலைத்துவிட்டாய் இனியெனது
   கண்ணீரின் ஈரமென்று உலரும்? - இங்கே
மண்டிக்கிடக்கும் இருள்விலகி மகிழ்ச்சிபுரளும் நாளைக்காய்
  மறுபடியும் என்றுபொழுது புலரும்?


வெட்டவெளிப் பொட்டலிலே வெறுமைமட்டும் துணையிருக்க
  வெண்ணிலவின் வருகைபார்த்து நாளும்- சோகம்
கொட்டிவிடக் குமுறித்தீர்க்கக் கட்டிருளில் காத்திருப்பேன்
   கவலையெல்லாம் எப்பொழுது மாளும்?



கற்பனைகள் கனவுகளைக் கவிதைகளாய் உருக்கிவிட்டு
   காகிதத்தில் படியும்காதல் வெப்பம்- அவளின்
கற்கள்பதித்த இதயம்தனைக் கசிந்துருகச் செய்யமெல்ல
   காத்திருந்து காத்திருந்து தோற்கும்!


Comments

  1. அசத்தலான கவிதை நண்பரே..
    பாராட்டுகள்..

    ReplyDelete
  2. கவிதை கற்கண்டு, ஆனால் கசப்பாய் உள்ளது! (சோகம்)

    ReplyDelete
  3. வெட்டவெளிப் பொட்டலிலே வெறுமைமட்டும் துணையிருக்க
    வெண்ணிலவின் வருகைபார்த்து நாளும்- சோகம்
    கொட்டிவிடக் குமுறித்தீர்க்கக் கட்டிருளில் காத்திருப்பேன்
    கவலையெல்லாம் எப்பொழுது மாளும்?
    தனிமையின் கொடுமையை தரமாய் சொல்லியிருக்கிறீர்-வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.