நெஞ்சில் நிலைத்த நெல்லைச் சமையல்
திருநெல்வேலி என்றதும் அல்வா, தாமிரபரணி,குற்றாலம் முதலியவை நினைவுக்கு வரும்.திருநெல்வேலி மண்ணுக்கே உரிய மற்றொரு அம்சம் அவர்களது சப்புக்கொட்ட வைக்கும் சமையல்தான். அண்மையில் விகடனில், மூங்கில் மூச்சு எழுதிவரும் சுகாஇதுபற்றி மிகச்சுவையாகத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.நான் தமிழ்நாடு முழுக்கச் சுற்றி அலைந்திருக்கிறேன்.எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு சிறப்பு இருப்பது உண்மை . ஆனால் நெல்லைச் சமையல் எனக்குக் கிறக்கத்தை ஏற்படுத்திவிட்டது.என்னுடன் பணிபுரியும் தோழி ஒருவர் நெல்லைக்காரர்.அவர் கொணரும் உணவுவகைகள் நாவில் நீர் ஊறச் செய்பவை.நெல்லை ஸ்பெஷலாக அவர் அவ்வப்பொழுது கொணரும் சில அயிட்டங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
#உளுந்துக்கஞ்சி:
வெள்ளை உளுந்து,தேங்காய்ப்பால், நெய், முட்டை, கருப்பட்டி, ஏலம் , சுக்கு, சேர்த்துச் செய்யப்படும் கஞ்சி. சூடாக ஒரு பெரிய கிண்ணத்தில் ஊற்றிக் குடிக்க, அவ்வளவு இனிமையாக இருக்கும்.சளித்தொல்லைக்குத் தீர்வான இது சத்து மிகுந்ததும் கூட.
# ஒட்டுமாவு:பச்சரிசியைநெய் , ஜீனி, முட்டை தேங்காய்ப்பால் விட்டு நன்கு வறுத்து மணல் போன்ற பக்குவத்தில் டப்பாவில் அடைத்து வைப்பார்கள். மாதக்கணக்கில் தாங்கும். சத்துமிகுந்த ஓட்டு மாவு பசியை அடக்கும். ஒரு சிறிய கரண்டியில் அள்ளி அள்ளி வாயில் போடத் தொண்டையில் சுகமாக இறங்கும்.
#மாசி: கடலுணவான மாசியைப் பொரியலாகச் சாப்பிட்டிருக்கிறேன்.சட்னியாகச் செய்து ஆப்பம், இடியாப்பம்போன்றவற்றுக்கும், துவையலாகச் செய்து பழைய சோற்றுக்கும் சேர்த்து உண்பது அலாதி ருசியாக இருக்கும். முள்ளில்லா மீனைத்தான் உப்பிடாமல் மணலுக்கடியில் பதப்படுத்தி மாசியாக விற்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்.
#தக்கடி: தக்கடி என்பது இஸ்லாமியரின் திருமண விருந்துகளில் இடம்பெறும் உணவுப்பண்டமாகும். தேங்காய் போட்டு வறுத்துப் பச்சரிசி மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொழுக்கட்டை போலச் செய்து சிக்கன் அல்லது மட்டன் கிரேவியில் வேகவைத்து இட்லி, தோசைக்குப் பதிலாகப் பரிமாறுகிறார்கள்.நறுக் சுருக் கென்று நாவில் நிற்கும் அயிட்டம் இந்தத் தக்கடி.
#வாவல் மீன்:
முள்ளில்லா வாவல் மீன் குழம்பும், வறுவலும் வாழ்வு முழுதும் மறக்க முடியாதது., நல்ல அகலாமகப் பரந்து விரிந்த வாவல் மீன் ஆவலை அதிகப்படுத்தும் ஒரு பண்டம்.வெறும் கெண்டை, கட்லா வகை, டேம் மீன்களை மட்டுமே இங்கு விற்று வருகிறார்கள்.அவற்ரைத் தவிர்த்து வாவல்,சங்கரா,, செம்மீன், கிளங்கா, விரால், ஊளி, உளுவை, பாறை,வஞ்சிரம், அயிரை போன்ற மீன்வகைகள் சப்புக் கொட்டச் செய்பவை.
விரால் மீன் பாம்பு போல நீண்டு கிடக்கும். பிடித்து வந்து கொல்வதே பெரும்பாடு என்பார்கள்.அவ்வளவு எளிதில் சாகாதாம்.நாஞ்சில்நாடன் சொன்னதைப்போல, நமக்கு ஸீஃபூட்(sea food), அல்லது ஃபிஷ் ஃப்ரை(fish fry)... அவ்வளவுதான் மீனைப் பற்றித் தெரிந்தது. நேரில் அவரைச் சந்தித்தபோது கோயம்புத்தூர் உக்கடம் மீன் மார்க்கெட்டில் அவருக்கு நிகழ்ந்த அனுபவத்தை விவரித்தார்.இவை தவிர நெத்திலி, அயிலை,மத்தி, கெழுத்தி போன்ற சிறு அயிட்டங்களும் உண்டு.
#பானைக்கரம்
கடையநல்லூர் சென்றிருந்த போது பானைக்கரம் என்று ஒரு பானத்தைக் குடித்தேன். கரைத்த புளியில் கருபாடி கலந்து தொண்டையில் இதமாக இறங்கும் திரவம் அது. தாகம் தீர்க்கும் பானைக்கரத்தினைப் போத்தல்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானக்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். எளிய, சுவை மிகுந்த நீருணவு.
#உளுந்துச்சோறு; பூண்டும், உளுந்தும்,தேங்காய்ப் பூவும் கலந்து செய்யப்பட்ட சுவைமிகுந்த உளுந்துச்சோறு வாயுத்தொல்லைக்கு நல்லது என்றார்கள்.
குடல் குழம்பு:ஆட்டுக் குடலை வறுவலாகத்தான் உண்டிருக்கிறேன்.ஆனால் ஆட்டுக்குடலை வைத்துக் குழம்பு வைத்துக் கொண்டு தந்தார்.சோற்றில் பிசைந்து சாப்பிடச் சுவைமிகுந்து நாவைச் சுண்டியிழுத்தது குடல் குழம்பு.
பிஸா, பர்கர்,பாஸ்தா என நமது கலாசாரம் மாறிவரும் சூழலில் இவைபோன்ற பாரம்பரிய உணவுவகைகள் என்னுள் வியப்பையும், நாவில் நீரையும் உண்டு பண்ணின. நமது மண், காலநிலை,விளைபொருள், வாழ்வுமுறைகளுக்கேற்ற உணவுமுறைதான்நமக்குப் பொருந்திப் போகிறது.
இவை தவிர வேறு என்னென்ன ரெசிப்பிகள் உள்ளன என விசாரித்த போது குழந்தை பெற்ற தாய்மார்களுக்குத் தெம்பூட்டத் தரப்படும் பொட்டுக்கடலைத் துவையலுடனான முட்டைச் சோறு, மற்றும் மருந்து சேர்த்தல் எனப்படும் சாலியல் , சதக்குப்பை, பட்டை, கசகசா சேர்த்த மருந்துச்சோறு மற்றும் புதுமாப்பிள்ளை ஸ்பெஷலான வண்டல் அப்பம் போன்ற அயிட்டங்கள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
உண்ணும்போது ஊர்மணக்க, உண்டபின்பு கைமணக்க, நினைக்கும்போது நெஞ்சும் மணக்க, எழுதும்போது இணையமே மணக்கும் நெல்லைச் சமையலே , நீ நீடுவாழி!
எங்கள் மண்ணின் உணவுப்பண்டங்களில் சில மறந்துவிட்டன.அதை மீண்டும் நாவின் நரம்பிற்கு நினைவூட்டியதற்கு நன்றி
ReplyDeleteநாவில் நீர் ஊறுகிறது ஐயா
ReplyDeleteநல்லா சாப்பிடுங்க
ReplyDeleteகருபாடி அல்ல கருப்பட்டி அல்லது பனைவெல்லம். பனஞ்சாறிலிருந்து இவ்வெல்லம் தயாரிக்கப்படுவதால் இப்பெயர். நிறம் கருப்பு, தேங்காய் சிரட்டையில் ஊற்றி கட்டியாக்கப்படுவதால் இக் கருப்புக் கட்டி கருப்பட்டி ஆகியிருக்கலாம்
ReplyDeleteஎங்கள் நெல்லைச் சமையலுக்கு எல்லையே இல்லை
ReplyDeleteகருப்பட்டிதான் , தட்டச்சு செய்யும்போது பிழையாகிவிட்டது ஐயா, தங்களின் மேலான தகவலுக்கு மிக்க நன்றி!
ReplyDeletesuperb tasty letters
ReplyDeletegood arti
ReplyDeletegood writing
ReplyDelete