வெண்பா எழுதுவது எப்படி?
யாப்பருங்கலத்தை அலசி ஆராய்வதற்காகத்தான் இவ்வலைப்பூவை நாம் ஆரம்பித்திருந்தாலும், வெண்பா எழுதுவது எப்படி எனச் சற்றுத் தனித்துப் பார்ப்போம்!
தமிழின் பெருங்கொடைகளுள் வெண்பாவும் ஒன்று!தமிழ்க் கவிதையின் பெரும்பிரிவுகளுல் ஒன்றான வெண்பாவுக்குத் தனியிடம் உண்டு.வெண்பாவானது பாடுவதற்குச் சற்றுக் கடினமானதும்,நுட்பமானதும், படிப்பதற்கு இன்பமானதுமாம்.வெண்பா என்றாலே என்னவோ ஏதோ எனத் தெறிப்பவர்க்கும்,அஃது ஏதோ ஒரு புரியாத புதிர் என்பவர்க்கும்,நமக்கெல்லாம் அவ்வளவு எளிதில் வெண்பா வராது என்பவர்க்கும்,அதன் அழகையும் .இயற்றும் முறையையும்,விளக்குவதும் வெண்பா என்பது எவ்வளவு வசீகரமான ஒன்று என்பதைப் புரிய வைப்பதும்,இவ்விடுகையின் நோக்கம்.தமிழில் குறிலும் நெடிலும் தெரிந்திருந்தால் போதும், வெண்பா இயற்றி விடலாம்.
வெண்பாவுக்கென்றுள்ள விதிமுறைகளை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.ஓர் எழுத்து மாறும்போதுகூட வெண்பா இலக்கணம் கெட்டு, பாடலே சிதைந்துவிடும்.
#வெண்பா இரண்டு அடிகளுக்குக் குறையாமல் வர வேண்டும்.
#இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும்.
#ஒவ்வோரடியும் நான்கு சீர்கள் பெற்றும் , ஈற்றடி ( இறுதியடி ) மட்டும் மூன்று சீர்கள் பெற்றும் வர வேண்டும்.
#ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு, என்னும் வாய்பாடுகளுள் ஒன்றினைப் பெற்று வருதல் வேண்டும்.
#செப்பலிசை பெற்று வர வேண்டும்.
மாமுன் நிரையும், விளமுன் நேரும், காய்முன் நேரும், வருவனவே வெண்பாவுக்குரியவை.ஒவ்வோரடியிலும் நான்கு சீர்கள் ( அளவடி) வரவேண்டும் எனப் பார்த்தோம்.இச்சீர்கள் ஈரசைச்சீர்களாகவோ (இயற்சீர்) காய்ச்சீராகவோ மட்டுமே வெண்பாவில் இருக்க வேண்டும் .
ஈரசைச் சீர்களாவன,
நேர்நேர் - தேமா
நிரைநேர்-புளிமா
நேர்நிரை- கூவிளம்
நிரைநிரை- கருவிளம்
காய்ச்சீராவது நேரசையில் முடியும் மூவசைச் சீராகும்.ஒருசீர் நிரையசையில் முடிந்தாலோ, காயில் முடிந்தாலோ அதற்கு அடுத்து வரும்சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.நேரசையில் ஒரு சீர் முடிந்தால் அடுத்த சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.இவ்வளவுதான் தளை!
நேர், நிரை என்று சொன்னோமே , அப்படிஎன்றால் என்ன?
#குறில் தனித்தும் (எ.கா: 'க' )
#குறில் தனித்தும் ஒற்றடுத்தும் (எ.கா: 'கல்")
#நெடில் தனித்தும் (எ.கா: 'நா')
#நெடில் ஒற்றடுத்தும் (எ.கா: 'நாள்')
வருவனவெல்லாம் நேர் அசையாகும்.
#குறிலிணைந்தும் (எ.கா: ' பல')
#குறிலிணைந்தும் ஒற்றடுத்தும் (எ.கா: ' களம்')
#குறில் நெடில் இணைந்தும் (எ.கா: ' பலா')
#குறில் நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் (எ.கா: 'விளாம்')
வருவனவெல்லாம் நிரையசையாகும்.
ஈற்றடியின் ஈற்றுச் சீர் மட்டும், தனித்த நேரசையாகவோ, நிரையசையாகவோ வருதல் வேண்டும் அல்லது குற்றியலுகரத்துடன் சேர்ந்த நேரசையாகவோ , நிரையசையாகவோ வருதல் வேண்டும். குற்றியலுகரம் அறிய :(http://sezhunkaarikai.blogspot.com/2011/06/blog-post.html)
சூரல் பம்பிய சிறுகான் யாறு' என்ற தலைப்பில் அண்மையில் நான் எழுதிய மரபுச் செய்யுள் தொகுப்பில் முத்தத்துவம் என்ற தலைப்பில் நான் எழுதிய வெண்பாக்களுள் ஒன்றை எடுத்துக் கொண்டு விளக்கலாமென விரும்புகிறேன்.
"கள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
கதவும் திறந்தது கண்டு"
இவ்வெண்பா நேரிசை வகையைச் சேர்ந்தது. ஒவ்வொரு சீராக, அசையாக, தளையாக, அடியாகப் பார்ப்போம்.
முதல் அடியில் முதற்சீர்
கள் வடி யும் - இது மூவசைச் சீர் . காயில் முடிந்துள்ளது
கள் - குறில் ஒற்றடுத்தது - நேர்
வடி - நெடில் இணைந்தது - நிரை
யும் - குறில் ஒற்றடுத்தது - நேர்
கூவிளங்காய் வாய்பாட்டில் காய் என முடிந்துள்ளதால் , அடுத்த சீர் நேரசையில்தான் தொடங்க வேண்டும்.
இரண்டாவது சீர்
பூவிதழ்க் - ஈரசைச்சீர்
பூ - நெடில் தனித்தது - நேர்.
விதழ்க் - குறிலிணைந்து ஒற்றடுத்தது - நிரை
முதற்சீர் காயில் முடிந்ததால் , இரண்டாவது சீர் நேரில் தொடங்கியது. அதேபோல , இரண்டாவது சீர் நிரையில் முடிந்ததால் மூன்றாஞ்சீர் நேரில் தொடங்கியது.
கா/ ரிகை /யை - நேர்நிரைநேர்-கூவிளங்காய்
கை/களில்/- நேர்நிரை -கூவிளம்
அள்/ளினேன் - நேர்நிரை-கூவிளம்
பந்/துபோல்- நேர்நிரை-கூவிளம்
அப்/படி/யே/- நேர்நிரைநேர்-கூவிளங்காய்
துள்/ளும்/- நேர்நேர்-தேமா
இத/ழில்/- நிரைநேர்-புளிமா
கவி/தை/- நிரைநேர்- புளிமா
எழு/தினேன்/- நிரைநிரை-கருவிளம்
சொர்க்/கக்/- நேர்நேர்-தேமா
கத/வும்/ - நிரைநேர்-புளிமா
திறந்/தது/- நிரைநேர்/புளிமா
கண்/டு- நேர்பு- காசு
நிரையிலும் காயிலும் முடிந்த சீர்களெல்லாம் நேரில் தொடங்குவதையும், நேரில் முடிந்த சீர்களை அடுத்து வருபவையெல்லாம் நிரையில் தொடங்குவதையும் பார்க்கலாம்.வெண்பா எழுதும்போது கவனிக்கவேண்டிய பொதுவான சிலகருத்துக்கள்:
#வெண்பாவுக்குப் பொழிப்பு மோனை வருதல் சிறப்பு.
ஓரடியின் முதற்சீரும் மூன்றாம் சீரும் ஓரினிவெழுத்துகளால் அமைய வேண்டும்.
மேற்கண்ட பாடலில்,
"கள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
கதவும் திறந்தது கண்டு"
வண்ணமிட்டுக் காட்டப்பட்டவை பொழிப்பு மோனையாகும்.
#எதுகை நயம் பெறாது வருதல் வெண்பாவுக்கு அழகன்று!அடியின் முதற்சீரில் இரண்டாமெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகையாகும். பாடலைப் பாருங்கள்!
"கள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
கதவும் திறந்தது கண்டு"
நேரிசை வெண்பாவினிரண்டாம் அடியின் இறுதியில் வரும் தனிச்சொல்முதற்சீரின் எதுகையைப் பெறுதல் வேண்டும்.
#செப்பலிசை என்பது இருவர் உரையடிக் கொள்ளுதல் போன்று அமையும்.வெண்பாக்களை வாய்விட்டு ஓசை நயத்துடன் பலமுறை சொல்லச் செப்பலிசை புலப்படும். அதனை உணர்ந்த பிறகு, செவிகளால் கேட்பதன் மூலமே ஒரு வெண்பாவானது தளை தட்டுகிறதா, பிழையில்லாமல் பாடப்பட்டுள்ளதா எனக் கண்டுகொள்ளலாம்.
#மூவசைச் சீரின் இரண்டாம் அசையானது, 'விளாம்' ஆக வரக்கூடாது.வரின் ஓசை சிதையும்.
சான்று:- போய்/விடா/மல்/-நேர்நிரைநேர்-கூவிளங்காய்
இது வெண்பாவில் வரக்கூடாது.
'விடா' என்பது குறில் நெடில் இணைந்த நிரையசை. இத்தகைய நிரையசை இயற்சீரில் வரலாம்.வெண்சீர் என்னும் மூவசைச்சீரின் இடையில் வரக்கூடாது.நாம் சான்று காட்டிய பாடலில், கா/ரிகை/யை/- என்னும் மூவசைச்சீரின் ரிகை என்பது குறில் நெடில் இணைந்த நிரையசை தான் எனினும், இங்கு என்பது குறுகி ஒருமாத்திரை யளவினதாய் ஒலித்து ஐகாரக் குறுக்கமாகிவிடுவதால், செப்பலிசை சிதைவதில்லை.
#விகற்பங்கள், மோனை, எதுகைவகைகள், ஆசு முதலியவற்றையும்வெண்பாவின் வகைகள் மற்றும் இனங்கள் ஆகியவற்றையும் யாப்பருங்கலக் காரிகைப் பாடல்களை நாம் ஒவ்வொன்றாக விளக்குகையில் கண்டுகொள்லலாம்.
#நளவெண்பாவை நான்குமுறை படிக்க வெண்பா எளிதில் கைவரப் பெறும்.முன்னர்ச்சொன்ன "சூரல் பம்பிஒய சிறுகான் யாறு" நூலில் வெண்பாவின் இலக்கணத்தை வெண்பாவிலேயே பாடியிருக்கிறேன்.மேலும் வெண்பா தவிர அனைத்துப் பாக்கள் மற்றும் பாவினங்களையும் இலக்கண விள்க்கத்துடன் பாடியுள்ளமை கண்டுகொள்ளலாம்.
# வெண்பா எழுதுவதும் ஒரு கணித சூத்திரம் போலத்தான். நுட்பமான அழகுடையது வெண்பா.புலமை கைக்கூட எளிதாகும்.
தேவையான பகிர்வு
ReplyDeleteஅன்பு நண்பா தங்ளைப் பற்றி இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html
மிக்க நன்றி நண்பரே! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை..நன்றி
ReplyDeleteநிஜமாகவே தேவையான பதிவு..
ReplyDeleteஇன்றுதான் உங்கள் வலைப்பூ எனக்கு அறிமுகம்..
ReplyDeleteஅரிய தகவல் இது. மிக்க நன்றி...
தெளிவான விளக்கம்!
ReplyDeleteவெண்பா நண்பா விளக்கம் சூப்பர்!
ReplyDeleteதமிழ் ஐயா, தலை சுத்துது ஐயா!
ReplyDeleteவெண்பாவைப் பற்றித் தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteசுந்தரவேல்.
enakkum aasaithaan venba ezhutha thankal kuriyapadi muyarchikkiren. anpu nanrikal
ReplyDeleteவெண்பா யாப்பை விளக்கி அழகுதந்த
ReplyDeleteநண்பாநீ வாழி! நலமொடு - பண்ணுற
ஆக்கும் பாவெலாம் அழகு தமிழ்மொழியை
காக்கும் சேர்க்கும் புகழ்.
வெண்பா இயற்றிட வேண்டுமெனு மார்வமோடு
ReplyDeleteபண்பான சொற்கொண்டு பற்றுடனே - கண்போல்
இலக்கணத்தைக் கற்றறிந் தின்றே முயன்றால்
புலப்படுமே வெண்பா புதிர்
ஆர். கஸ்தூரிரங்கன்
ஹோசூர்
வெண்பா யாப்பை விளக்கி அழகுதந்த
ReplyDeleteநண்பாநீ வாழி! நலமொடு - பண்ணுற
ஆக்கும் பாவெலாம் அழகு தமிழ்மொழியை
காக்கும் சேர்க்கும் புகழ்
thalai thattukirathu
This comment has been removed by the author.
ReplyDelete10th Sep 2013
ReplyDeleteபாவால் உம் திரு நாவால் வெண்பா இலக்கணச் சீர்களை உணர்த்திய உமக்கு என் கனிவான வணக்கங்கள்.
ஒரு முயற்சி செய்ய உருவெடுத்த இக் கவிதையும் வெண்பா ஆயிற்றோ என ஐயம் என் மனதில் தோன்றிய வேளையில், ஐயம் தீர்த்திட அருள்வீரென நம்பும் ஒரு தமிழன்.
நிலம் இரு நீரை வேரால் இழுத்து
வளர்ந்திடும் தென்னை மரத்தின் மீது
தேங்காய் அதற்கும் முக்கண் வைத்தார்
பாங்காய் பரமன் நமக்கு
விளக்கம் : பாங்காய் = அழகாய்
"கள்வடியும் பூவிதழ்க் காரிகை" அருமையான நேரிசை வெண்பா. விளக்கத்தில்
ReplyDelete‘வடி - நெடில் இணைந்தது - நிரை’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
வடி - குறிலிணை அல்லவா! - நிரையசை.
எனக்குப் பிடித்த சில நல்ல கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து poemhunter.com என்ற தளத்தில் மூலக் கவிதையும், கவிஞரின் பெயரும் சேர்த்துப் பதிவு செய்து வருகிறேன்.
நட்புடன்,
வ.க.கன்னியப்பன், கண் மருத்துவப் பேராசிரியர் (பணி நிறைவு)
நன்றி வெண்பா என் கண்பாவையில் கலந்தது.
ReplyDeleteமனம் மகிழ்ந்தது.
This comment has been removed by the author.
ReplyDeleteவெண்பா வெழுத விபரம் அளித்தீர்
ReplyDeleteஎண்ண வினிக்கிறது! எட்டிக்காய் - என்றுநீ
எண்ணா தினியெழுது! ஏற்றுப் பயிற்சிபெற
நன்கு கனியும் கவி!
என் சின்ன முயற்சி
அருமையான தெளிவான விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி! வாழ்த்துக்கள் !
சிறந்த தரமான பதிவு. சில நாட்களாக வெண்பா பற்றிச் சிந்தித்து இன்று உங்கள் எழுத்தைப் படித்ததில் நிறைவு. நன்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks so much! I reviewed tamil grammar nicely through your post
ReplyDelete