சார்.... ஒரு நிமிஷம்!



கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரைச் சேர்ந்த எனது நண்பர் திரு.கமாலுதீன் அவர்களுடன்  ஒருமுறை உணவருந்திக்கொண்டிருக்கும்போது "உணவருந்தி முடித்தபின் இலையில் ஒரு பருக்கைச் சோறு மீதம் இருந்தாலும் அது தஞ்சைப் பகுதியில் அவமரியாதையாகக் கருதப்படும்" என்றொரு கருத்தைத் தெரிவித்தார்.
உண்மைதான், உண்டபின் தட்டிலோ இலையிலோ மீதம் வைப்பது எத்தனையோ பேரின் உழைப்பை வீணடிப்பது மட்டுமின்றி "உணவு என்பது இரவில் எங்களுக்குக் கனவு" என்று எத்தனையோகோடி மக்கள் ஒருவேளை உணவே இல்லாமல் உறங்கச் செல்லும் அவலத்தை எண்ணிப்பார்க்கையில் அது ஒரு அறங்கெட்ட செயல் என்றும் தோன்றுகிறது.


ஜென் கதை என்று நினைக்கிறேன், எப்போத்தோ படித்தது, தட்டில் இருக்கும் உணவில் இருந்து ஒரே ஒரு அரிசியை எடுத்துப் பார்த்து, விதைப்பிலிருந்து எத்தனை இடங்களைக் கடந்து நம்முமன் உணவுத்தட்டில் வந்து அமர்ந்திருக்கிறது எனச் சீடனுக்குக் குரு உபதேசிப்பதாக அக்கதை செல்லும்.
சாப்பிடுவது என்பது ஒரு கலை.எனது பள்ளித்தோழி ஒருவர் உணவருந்தும்போது கவனித்திருக்கிறேன் , அவர் உணவருந்திய இலையில் மிகச்சிறிய அளவில் உப்பும், சில மிளகாய்த்தோல்களுமே கிடக்கும். அன்றிலிருந்து எனக்கும் அதுபோல் சாப்பிட ப் பேராவல் ஏற்பட்டு, அவ்வாரு உணவருந்தும் முறைக்கு அவரிடைய பெயரையே சூட்டி ( பிருந்தா ஸ்டைல்), எனது நண்பர்கள் குழுவில் அது பிரபலமும் ஆகிவிட்டது.


பரிமாறுகிறவரின் இதயத்தில் இருக்கும் ஈரமும் அன்பும் அவரது கைவிரலகளில் வெளிப்பட்டு அந்த உணவுக்குக் கூடுதல் சுவை கிடைக்கிறது எனப் படித்திருக்கிறேன். அதனால்தானோ என்னவோ அம்மாவின் கைப்பக்குவத்தை மிஞ்சி நமது நாவைக் கவர்ந்திழுக்கும் உணவு வகைகள் இல்லை என நினைக்கிறேன். மனையாளின் கைப்பக்குவத்தை அறியும் பேறு எனக்கு இன்னும் வாய்க்கவில்லை.
காஃபி டேயில் கதைத்துக் கொண்டே கருங்காட்டைக் (அதாங்க.... BLACK FOREST) கால் மணிக்கொரு கடிகடித்து (அடேங்கப்பா! எத்த்னை 'க') இருநூற்றைம்பது ரூபாய் என விலைக்குறியிட்ட ஐஸ்க்ரீமை இரண்டு மூன்று நிமிடங்களுள் உருகும் முன் அவுக் அவுக் என விழுங்கி, டிவி பார்த்து, ஏசி யில் ஜில்லிட்டு இன்பமாய்க் கிளம்பும்போதும்,
உள் அலங்காரத்தில் ஓவிய வேலைப்பாடுகளும் ஒளிவிளக்குகளும் ஜொலிஜொலிக்க,சீருடை அணிந்த சிப்பந்திகளின் அன்பான, கனிவான  உபசரிப்புடன் ஓட்டல் சோஃபாக்களில் அமர்ந்து நான்கு வகைச் சட்னி , எண்ணெயில் கலக்கிய பொடியுடன் , சாம்பாரில் ஆனியன் ரவாவைக் கிழித்து நனைத்து ஊறவைத்து உள்ளே தள்ளும்போதும், தலைக்கறி, குடல்கறி,ஈரல்கறி,லெக்பீஸ்,65,651/2,66,661/2 , சில்லி, மஞ்சூரியன், கோலா உருண்டை,எறா, சுறா வகையறாக்களை மூக்கு விடைக்கச் சுர்ரென்று உறிஞ்சும் போதும், நாண், பட்டர் நாண், தந்தூரி,ரொமாலி,ஃபுல்கா,பரொட்ட,சப்பாத்தி என ரொட்டிகளை மசாலாவில் புரட்டி மெல்லும்போதும், பிஸ்ஸா,பர்கர்,பாஸ்தா அல்லது சேவ்,பேல்,பானி,மசாலா பூரிகள், பாவ்பாஜி கொறிக்கும் போதும், அரேபியன், மெக்ஸிகன் முழுக்கோழிகளைக் கத்தியால் கீறிப் பிளக்கும்போதும்
நான் "பிருநதா ஸ்டைலில்" சாப்பிட்டு முடித்த நிகழ்வுகள் மிகச்சிலவே!
ஆனால் மாட்டுப் பொங்கலன்று , மங்கிய நிலவொளியொழுகும் முன்னிரவில், சாணமிட்டு மெழுகிய மண்தரையில் சம்மணமிட்டு அமர்ந்து, விறகடுப்பில் ஆக்கிய சோற்றை நீர் தெளித்த வாழை இலையில் இட்டு, பூண்டு சேர்த்த கெட்டிக் கொள்ளுப் பருப்பை தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசைந்து, அரசாணிக்காய்க் கூட்டையும், தேங்காய்த்துருவல் சேர்த்த அவரைக்காய்ப் பொரியலையும் அவ்வப்போது தொட்டுக் கொண்டு, அடுத்துவரும் ஆட்டி வைத்த குழம்பையும், ரசத்தையும் வழித்து உறிஞ்சி, சோற்றுடன் குழைத்துப் பிசையும் போது விரலிடுக்கில் வெண்ணெய் திரளும் சுத்தப் பசுந்தயிரும் உண்டு, தண்ணீர் ஒரு மிடறு விழுங்கி இலையை மூடி வைத்ததை இப்பொது யோசித்துப் பார்த்தால்தான் அதில் நான் ஒரு பருக்கையையும் விட்டு வைத்திருக்கவில்லை என்பது நினைவுக்கு வருகிறது!

Comments

  1. அட நம்ம ஊரு கொள்ளு :))

    வேர்ட் வெரிபிகேசன் எடுத்து விடுங்க, கமெண்ட் போட கட்ப்பாகும்..

    ReplyDelete
  2. சாப்பிட்ட மாதிரி இருக்கு

    ReplyDelete
  3. word verification எடுத்து விட்டாச்சுங்க

    ReplyDelete
  4. தொடர்ந்து வருவேன்... நன்றி..

    ReplyDelete
  5. wow interesting ,,,, a mini menu card lol>>>>

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.