எளிய தமிழ்! இனிய தமிழ்!!
தேனினுமினியநற் செந்தமிழ் மொழியானது இனிமையும் நறுமையும் எளிமையும் மிக்கது.மிக நுட்பமான கூறுகளை உடையது.பல்லாயிரமாண்டுகள் வரலாறுடையது.இலக்கணச் செழுமை உடையது.செறிவும் அடர்த்தியும் நிறைந்தது.ஆனாலும், கவனக்குறைவு மற்றும் போதிய பயிற்சியின்மை காரணமாக இன்று பலரும் தமிழில் பிழையான தொடர்களையும் சொற்களையும் பயன்படுத்தி வருகின்றனர். நமது அன்றாடப் பயன்பாட்டில் நாம் பிழையாகப் பயன்படுத்தி வருவனவற்றை இனங்கண்டு அவ்ற்றினைத் திருத்திக்கொள்ள இத்தளம் வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன்.
"அவன் அங்கிருந்து விலகிச்செல்ல முயற்சித்தான்"
"முயற்சிகள் தவறலாம் ;முயற்சிக்கத் தவறக் கூடாது"
"தொடர்ந்து முயற்சி செய்தால் முடியும்"
மேற்கண்ட தொடர்களில் வரும் "முயற்சித்தான்" "முயற்சிக்க " "முயற்சி செய்தால் " போன்ற சொற்கள் இன்று பரவலாகப் பலராலும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இவை பிழையான சொற்களாகும்.
முயற்சித்தான் - முயன்றான்
முயற்சிக்க- முயல
முயற்சி செய்தால் - முயன்றால்
முயற்சி செய்தல் - முயலுதல்
என்றே வருதல் வரவேண்டும். இவையே இயல்பானவையும் , இலக்கண விதிகளுக்குட்பட்டவையுமாம்.எனவே,
"அவன் அங்கிருந்து விலகிச்செல்ல முயன்றான்"
"முயற்சிகள் தவறலாம் , முயலுவதில் தவறக் கூடாது"
"முயன்றால் முடியும்" என்பனவே சரியான தொடர்கள்!
வள்ளுவர் சொன்னது போல்
"முயற்சி திருவினை யாக்கும் முயற்றினமை
இன்மை புகுத்தி விடும்"
எனவே, தமிழின் இனிமையை உணர்வோம்!சரியாகப் பேசவும், எழுதவும் முயலுவோம்!1ஏனெனில் , முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
நாம் பிழையாகப் பயன்படுத்தும் பல்வேறு சொற்களும் தொடர்களும் வருமிடுகைகளில் விளக்கப்பட்டுக் திருத்தங்கள் தரப்படும். ஐயங்கள் ஏதேனுமிருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! தீர்க்க முயலுகிறேன்!!!
தங்கள் பணி தொடர வாழ்த்துகள்
ReplyDelete