இலக்கும் பயணமும்

  “It’s the not the Destination, It’s the journey.”

 -Ralph Waldo Emerson

கவி- ரம்மியமான மலைப்பகுதி...அதுல அப்படி என்ன விதமான ஈர்ப்பு விசை இருக்குன்னு தெரியல.... மறுபடியும் மறுபடியும் ஈர்த்துட்டே இருக்கு.....

வெள்ளிக்கிழமை பிற்பகல்ல ஒரு ஐடியா தோணுச்சு. அடுத்த நாளே கே எஸ் ஆர் டி சி யோட ஃபாரஸ்ட் டூர் பஸ்ல ஒரு ட்ரிப் போகணும்னு......

 முடிவு பண்ணதுமே கரூரில் இருக்கிற நண்பர் திரு சுரேஷ் அவர்களுக்கு போன் அடிச்சேன் . நம்மைப் போலவே அவரும் ஒரு வாண்டர்லஸ்ட்.  

 எங்கே போறதுன்னு டக்குனு ஒரு ஐடியாவும் கிடைக்கல.... அதனால ஓசூர் பக்கம் அப்படியே சும்மா ஒரு லாங் டிரைவ் போயிட்டு இருக்கேன்னார். விஷயத்தைச் சொன்ன அடுத்த ரெண்டு மூணு நொடி சத்தத்தையே காணோம். என்ன ஆச்சுன்னு கேட்டேன். U- Turn போட்டுட்டு இருக்கேன்னார். அவ்வளவுதான்.... தேனில காலை 8 மணிக்கு மீட் பண்ணலாம்னு முடிவாச்சு .

நைட் 11 மணிக்கு கால் பண்ணினார் சுரேஷ் சார். கார் பிரேக் டவுன் ஆனதால சேலம் அருகே மாட்டிக்கொண்டதால் வர இயலாதுன்னு கூற, நோ ப்ராப்ளம்... சோலோ ட்ரிப்னு முடிவு பண்ணி, விடியற்காலை நாலரை மணிக்குக் கோவை பிரீமியர் மில் ஸ்டாப்ல பொள்ளாச்சி பஸ் ஏறிட்டேன்.

பொள்ளாச்சியில் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கிட்டுப் பழனி பஸ்ல ஏறி பழனில ஏழு மணிக்கு செம டேஸ்டான ஒரு ஸ்ட்ராங் டீ சாப்பிட்டு, அடுத்து மதுரை போற பஸ்ல ஏறி 9 மணிக்கு செம்பட்டியில் இறங்கியாச்சு.

 இரண்டு இட்லி, ஒரு கப் நெய்ப்பொங்கல், நாலு கப் தேங்காய்ச் சட்னி சாப்பிட்டுக் கை ஈரம் காயக் காய தேனி பஸ் வந்து நிற்க, ஈரக் கையோடவே பணத்தை எடுத்துக் கொடுத்துட்டு ரன்னிங்லயே ஏறி தேனிக்கு டிக்கெட் எடுத்தா, என்னா வெரட்டுங்கறீங்க .......மனுஷன் ராக்கெட்    வேகத்துல தேனில கொண்டுபோய் விட்டார். 

அங்கிருந்து குமுளி பஸ் கிளம்பக் கிளம்ப ஏறிட்டேன் . அப்புறம்தான் தெரிஞ்சது அந்த பஸ் கம்பம் வரைக்கும்தான் போகும்னு .

 சரி பரவால்ல கம்பத்துல இறங்கி மாறிக்கலாம்னு உட்கார்ந்துட்டேன். 30 கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல போனா முடி கொட்டிடும்னு யாரோ டிரைவர் கிட்டச் சொல்லியிருப்பாங்க போல..... உருட்டு உருட்டுன்னு உருட்டிக் கம்பத்துல கொண்டுவந்து விடும்போது மணி 11:40.

 குமுளில 12 : 30 க்கு கவி போற ஃபாரஸ்ட் பஸ் கிளம்பிடும். இன்னும் 23 கிலோமீட்டர் போகணும். அதுல 10 கிலோமீட்டர் ஹேர்பின் பெண்டுகளா இருக்கும். டாக்ஸி புக் பண்ணலாம்னு ட்ரை பண்ணா ஓலா, ரெட் டாக்ஸி ன்னு கம்பத்துல எல்லாமே நோ சர்வீஸ் ஏரியா .

  கேரள அரசு பஸ் ஒண்ணு குமுளிக்கு ரெடியா இருந்துச்சி. கண்டக்டர் கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே குமுளி டிப்போவுக்கு போன் அடிச்சு 12:30 பஸ்க்கு அடுத்து 01: 15க்கு ஒரு பஸ் இருக்கிறதா கன்ஃபார்ம் பண்ணுனாரு.

  இந்த பஸ் 12:40க்கு குமுளி போயிடும்னு சொன்னாரு. கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துச்சு. சரியா 12 :35க்கு குமுளி ரீச் ஆயிருச்சு. அஞ்சு நிமிஷம் கேப்ல அந்த 12:30 பஸ் போயிட்டாலும் ஒரு நல்லது என்னன்னா லஞ்ச் சாப்பிட முடிஞ்சது.

 செம டேஸ்டான உருளைக்கிழங்குக் குருமாவோடு ஒரு சப்பாத்தி, நெய்ப் பருப்பு, சோறு, இளஞ்சூடான பால் பாயாசம்...... அசத்தலான லஞ்ச்.

 விறுவிறுன்னு பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைஞ்சா மணி 01: 10 ஆயிருந்துச்சு. 01:30க்குக் கிளம்பற பஸ் ரெடியா இருந்துச்சு. ஒரு ஆள் கூட இல்லை.... ஒரே ஒரு ஸ்லைஸ் டெட்ரா பேக்கும் வாட்டர் பாட்டிலும் வாங்கிட்டு முன்னாடி லெஃப்ட் சைடுல முதல் சீட்டுல உட்கார்ந்துட்டேன்.

 எதுக்கு இவ்வளவு பரபரப்பு, பதற்றம், ஆர்வம்னு உங்களுக்குத் தோணியிருக்கும் . இப்ப நேரா விஷயத்துக்கு வாரேன்....

  கவி (GAVI) ..... இந்தியாவுல ஒவ்வொருத்தரும் லைஃப்டைம்ல பார்த்தே ஆக வேண்டிய 50 இடங்களில் ஒன்றுன்னு நேஷனல் ஜியோகிராபிக் டைரக்டரி ரெக்கமண்ட் பண்ணி இருக்கிற இடம். குமுளியிலிருந்து ரெண்டு மணி நேரம் டிராவல் பண்ணனும். தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை .வல்லக்கடவு செக் போஸ்ட்ல தடுத்து நிறுத்திடுவாங்க. வல்லக்கடவு வழியாகத்தான் முல்லைப்பெரியாறு அணைக்கும் போகணும்கிறதால இது ஒரு சென்சிடிவான ஏரியா. 

கவில eco Tourism Center இருக்கு... முன்பே புக் பண்ணா மட்டும் அனுமதி உண்டு. ஒரு நாளைக்கு 30 பேர் வரைக்கும் அனுமதிப்பாங்க. வல்லக்கடவு செக்போஸ்ட் தாண்டிட்டோம்னா அடுத்த 60 கிலோ மீட்டருக்கு மனுஷங்களைப் பார்க்கிறது அபூர்வம். ஆனா யானை, புலி, கரடி சிறுத்தை மாதிரி விலங்குகளைப் பாக்குறதுக்கு சான்ஸ் அதிகம். குமுளில இருந்து பத்தனம்திட்டைக்குக் கவி வழியா காலையில ஆறு மணி, பகல் 12:30 மணி, மறுபடியும் 1:30 மணிக்கு பஸ் சர்வீஸ் உண்டு. மறுமுனையிலும் அதே மாதிரி.

 6 மணி நேரம் நீண்ட பயணம் ....அதுல அஞ்சு மணி நேரம் டீப் ஃபாரஸ்ட்...

  இந்த 1:30 மணி பஸ் இருக்கிறத எந்த வெப்சைட்லயும் யாருமே சொல்லல ...ஒரே ஒரு சைட்ல மட்டும் அதைப் போட்டு இருந்தாங்க ..ஆனா 12 :30 மணி பஸ் பத்தி அதுல ஒன்னும் சொல்லல ....அதனாலதான் நமக்கு இந்த 1:30 மணி பஸ் இருக்கிறது பற்றி கிளியரா ஒரு ஐடியா கிடைக்கல...

  கவில இருந்து 40 கிலோமீட்டர் ரேடியஸ்க்கு ,அதிலும் கிழக்கு, தெற்கு திசைகள்ல 100 கிலோ மீட்டருக்கு மலையும்காடுகளும்தான். பெரும்பாலான இடங்களில் இதுவரை மனிதக் காலடியே பட்டிருக்காது . கவில ரெண்டு நாள் தங்குகிற பேக்கேஜ் ஒன்னு இருக்கு. லிமிடெட் இடங்கள்தான் ...முன்பே புக் செய்ய வேண்டும் ...காட்டேஜ், படகு சவாரி, ஜீப் சஃபாரி ,ட்ரெக்கிங் ,ஏலக்காய்த் தோட்ட விசிட்னு வேற ஒரு உலகத்துல ரெண்டு நாள் இருந்துட்டு வரலாம். கவிக்கு அடுத்து பம்பை அணை, ஆனத்தோடு அணை, கக்கி அணை,மூழியார் அணைன்னு போற வழியெல்லாம் ஆறு, ஓடை, அருவின்னு செம விஷுவல் ட்ரீட்டா இருக்கும்.

அணை ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களுக்கான அலுவலகங்கள், குவார்ட்டர்ஸ்கள், ஏலக்காய்த் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான சிறு குடில்கள் என மொத்தம் ஒரு 100 150 மக்கள்தான் அந்த பிரம்மாண்டமான மலைக் காட்டுக்குள்ள இருக்காங்க.

  சிரிமாவோ- சாஸ்திரி மறுகுடியேற்ற ஒப்பந்தப்படி 1970களில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு மீள அழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கவிப் பகுதியிலும் தோட்டத் தொழிலாளர்களா வேலை கொடுத்து அவங்க தங்கறதுக்கு வீடு கட்டிக் கொடுத்தாங்க. இன்னைக்கும் அவங்க மட்டும் தான் அந்தப்பகுதியில் இருக்காங்க. அடுத்த ஜெனரேஷன் நிறையப் பேரு டவுன் பக்கம் கிளம்பிட்டாங்க . மீதி இருக்கிறவங்களை கட்டாயப்படுத்தாமல் விருப்பத்தின் பேரில் வேற இடங்களுக்குப் போக அரசாங்க ஸ்டெப் எடுக்கிறது பற்றிச் செய்தித்தளங்கள்ல படிச்சிருக்கேன்.

  பிஸியா இருக்குற குமுளி- கோட்டயம் ரோட்ல வண்டிப்பெரியார் வரைக்கும் பஸ்ல மூன்று பேர் தான் இருந்தோம். வண்டிப்பெரியாரிலிருந்து பஸ் வல்லக்கடவு செக்போஸ்ட் ரூட்ல திரும்பும். 

கவி பாரஸ்ட் பகுதியில் இருக்கிற 200+ இலங்கை ரிட்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வண்டிப்பெரியார் தான் டவுன். அவங்க கிட்டத்தட்ட 20 பேர் ஆண்களும் பெண்களுமாய்க் குழந்தைகளுடன் ஏறினாங்க. துணிமணியிலிருந்து காய்கறி, மளிகைன்னு ஏகப்பட்ட பர்ச்சேஸ் முடிச்சுப் பைகளையும் மூட்டைகளையும் தூக்கிட்டு இந்த பஸ்ஸுக்குக் காத்திருந்து ஏறினார்கள். இந்த பஸ்ஸ விட்டா அடுத்த நாள் காலையில தான் அடுத்த பஸ்.

டிரைவர் கண்டக்டரோட நல்ல பழக்கம் இருக்கிறதால ரொம்ப க்ளோசா பேசிக்கிறாங்க. 70 வயசுல இருந்த ஒருத்தர் கிட்டப் பேச்சுக் கொடுத்தேன். அவர்களோட வாழ்வியல் வேறு ஒரு தளத்தில் இருக்கு . பம்பை அணையில் இறங்கும் வரை அவர் பேசுனது எல்லாம் ஒரு டாக்குமெண்ட்ரியா எடுக்கலாம்.  

செக் போஸ்ட் கடந்து பஸ் காட்டுக்குள்ள போகப் போக மழை தூற ஆரம்பிச்சுது. அப்புறம் மெலிசாப் பனிமூட்டம் .....கிளைமேட் கொஞ்சம் கொஞ்சமா சில்லுனு மாற ஆரம்பிச்சுது.

 பசுமை பொங்கப்பொங்க அடர்ந்த காடுகள் சூழ்ந்த ஆளரவமே இல்லாத மலைத்தொடர்களுக்குள்ள, சில்லுனு ஒரு கிளைமேட்ல, தன்னந்தனியா ஒரு பஸ் மட்டும் மெதுவாப் போயிட்டு இருக்கிறதும் அந்த பஸ்ஸுக்குள்ள நாம இருக்கிறதும் ஒரு தவம் என்று சொல்லலாம்.

 03:30 க்கு கவி வந்து சேர்ந்தோம் . பத்து இருபது டூரிஸ்ட்கள் இருந்தாங்க... அவங்க தங்கறதுக்கான காட்டேஜையும்,கவி போட்டிங் போற லேக்கையும் நாம பார்க்க முடியும். ஒரு பெயிண்டிங் மாதிரி அந்த ஏரி நம்ம கண்ணுல தெரியும். அதை அடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கான சில குடியிருப்புகள் . அடுத்து 10 நிமிஷத்துல கொச்சுப்பம்பை அணை. அங்கும் ஒரு 10 15 வீடுகள் . வண்டிப்பெரியாறுல ஏறுனவங்க எல்லாரும் இறங்கிக்கிட்டாங்க.... ஒரு நாள் பேக்கேஜில் பத்தனம்திட்டையிலிருந்து காலைல இதே பஸ்ல வந்தவங்க ஒரு 30 பேர் பேக்கேஜ் முடிஞ்சு திரும்பவும் இந்த பஸ்ல ஏறினாங்க. 

 ஆனத்தோட் அணைக்கும் கக்கி அணைக்கும் இடையில் ஒரு அட்டகாசமான லொகேஷன்ல ஒரு அஞ்சு நிமிஷம் பஸ்ஸ நிறுத்தினாங்க. இறங்கிப் போய் அஞ்சு நிமிஷத்துல அத்தனை பேரும் சேர்ந்து ஐயாயிரம் ஃபோட்டோ எடுத்திருப்பாங்க. போன தடவ வந்தப்போ இந்த இடத்தில் 

தான் யானைக் கூட்டங்களைப் பார்த்தேன். ஆயிரம் மீட்டர் உயரமுள்ள அல்லது ஆழமுள்ள கக்கி அணையில் ஒரு அஞ்சு நிமிஷம்.... அதுக்கப்புறம் அஞ்சே முக்காலுக்குக் காட்டின் மறுமுனையில் ஆங்கமூழிங்கிற சிறு மலை நகரத்தில் டீ சாப்பிட நிறுத்தினாங்க . அதுவரைக்கும் மழை நிறுத்தி நிதானமாப் பெஞ்சுக்கிட்டே இருந்துச்சு... இடையில அப்பப்போ பனிமூட்டம் வேறு....

 அப்பப்போ மின்துறை, வனத்துறை அலுவலர்கள், ஊழியர்களுடன் ஜீப்புகள் மட்டும் ஒண்ணு ரெண்டு எதிர்ல பார்த்தோம். ஆங்கமூழி செக் போஸ்ட்டுக்கு அப்புறம் டிபிக்கல் ஆன கேரள ஸ்டைல் மலைப்பகுதி ஊர்கள் ஸ்டார்ட் ஆகுது.. ஆங்கமூழில சூடா ரெண்டு மசால் வடையோட ஒரு பிளாக் டீயும் குடிச்சுட்டு டிரைவரோட ஒரு செல்ஃபி எடுத்துட்டு, எங்களின் பின்னால் தெரிஞ்ச அந்த மாய உலகத்தையும் அது வழியா டிராவல் பண்ண அந்த நாலு மணி நேரத்தையும் நினைச்சுப் பார்த்தேன் பிரம்மிப்பா இருந்துச்சு.

 அங்கிருந்து மறுபடியும் ரெண்டு மணி நேரம் டிராவல். மலைச்சாலைகளில் சீத்தத்தோடு, சித்தார், றானிப்பெருநாடு, வடசேரிக்கர ஆகிய சிறுநகரங்கள் வழியா பத்தனம்திட்ட பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்து போது இரவு மணி 07: 45. டிரைவருக்கும் கண்டக்டருக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டு, இந்த ஆறு மணி நேரம் பயணத்தில் பேசிப் பழக்கமாகிஇருந்த மற்ற டூரிஸ்ட் களுக்கு பை சொல்லிட்டு வெளியே வந்தேன்.

 இளஞ்சாரல்ல நனைஞ்சுட்டே எதிரில் இருந்த ஹோட்டலுக்குப் போனேன். நல்ல காரமான வெங்காயச் சட்னியுடன் மூணு குட்டித் தோசைகள் .....அங்கிருந்து அரை கிலோ மீட்டர் நடை.... 08:45க்கு கோயம்புத்தூருக்கு முன்பே புக் செய்திருந்த ஸ்லீப்பர் பஸ்ஸைப் பிடிச்சு, ஏறிப் படுக்க, மழை வேகம் பிடிக்க, கவி மலைக்காடு இந்த நேரத்துல எப்படி இருக்கும் அப்படிங்கற சிந்தனை மேலோங்க, 

 கண்களை மூடினாலும்
 கவியே தெரிந்தது ....
 தூக்கம் மென்திரையாய்க் 
 கவியத் துவங்கியது.

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி