மனம் மயங்கும் வயநாடு - PART 1

            டவுளின் படைப்புதான் உலகம் முழுவதுமே எனினும் அவர் மிகுந்த உற்சாகமான மனநிலையில் இருந்தபோது படைத்தவற்றுள் ஒன்றுதான் கேரளம் போலும்.

    இயற்கையின் அத்தனை வித அழகையும் கொட்டிப் படைக்கப்பட்ட ஒரு பரப்பு தான் இந்தக் கடவுளின் நாடு எனப்படும் கேரளம்ஓங்கி உயர்ந்த மலைத்தொடர்கள், பரவி விரிநத கடல் பரப்புகள் , பெருகி வழிந்தோடும் ஆற்று நீர்ப் பெருக்குகள், தெளிந்த பச்சையாய்ப்  பரந்து விரவிய சமவெளிகள் , கொட்டித் தீர்க்கும் பேரருவிகள்,சுழித்துக்கொண்டும் நுரைத்துக்கொண்டும்  ஓடித் தெறிக்கும் சிற்றோடைகள், வயல்வெளிகள் ,வண்ணக் காடுகள், விலங்கினங்கள் ,புள்ளினங்கள்,புல்லினங்கள், பூக்கள், சலிக்காமல் பெய்து புரளும் பெருமழைகள்இப்படியாகப்  படைத்து முடிக்கக்  கடும் பேருழைப்புக்  கடவுளுக்குச் செலவாகியிருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

       . தமிழகத்தின் மிகப்பெரும் அச்சு ஊடக நிறுவனத்தின் இதழ்களில் ஒன்றான மோட்டார் விகடனின்  கிரேட் எஸ்கேப் பயணத்துக்காக இருமுறையும் அதற்கு முன்பு சில முறையும் சென்று மகிழ்ந்து வந்த கேரள மாநில  வயநாட்டின் அழகை என் வாய்ச் சொற்களால் கேட்டுக்கேட்டு ஆர்வமான  நட்பு வட்டத்துக்காக மீண்டும் ஒருமுறை ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தின் அதிகாலை ஒன்றில்  கிளம்பிப் போய்வந்த நாட்களில் சேமித்த நினைவுகள்தாம்  இங்கே எழுத்துக்களாகவும் படங்களாகவும் எடுத்து வைக்கப்படுகின்றன.

    நியூசிலாந்து,ஸ்விட்சர்லாந்து,ஸ்வீடன்  எனப் பல அழகுப் பேரரசுகள் இருந்தாலும் நினைத்த அரைமணிநேரத்தில் எல்லைக்குள் நுழைய முடிகிறபடிக் கடவுளின் சொந்த நாடு வாய்த்தது பயணத்தைச்சுவாசிக்கும் எம் போன்றோருக்குப் பெரும்பேறு எனலாம்.

          நான்கு பேர் என முடிவு செய்து, ஒரு மாதத்துக்கு முன்பே ஒழுங்கு செய்து, அறை பதிந்து அந்த நாளும் வாராதோ என ஆவலை நாள்தோறும் வளர்த்து வந்தபோது அந்த நாளின் முந்தைய நாள் வந்தது. கோயம்புத்தூரில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விருதுநகரில் உறவினர் ஒருவரின் இறப்புச் செய்தியோடு அந்த நாள் விடிந்தது. சென்று துக்கத்தைப் பகிர்ந்து விட்டு இரவுக்குள் திரும்பி விடுவது எனத் திட்டமிட்டாலும் எனக்கு வாய்த்த நேரத்தில் பெரும்பகுதியை இழந்துவிட்ட சூழ்நிலை…. மாலைக்குப் பிறகு காலம் கொஞ்சம் கருணை வைத்ததில் நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் நடுவில் மூன்று மணிக்கு வீடு திரும்ப முடிந்தது.

          பயணம் முடித்துக் குளித்துப் பயணம் தொடங்கியது. நால்வரையும் சுமந்துகொண்டு அதிகாலையில் ஆர்ப்பாட்டமாகக் கார் கிளம்பியதுஎம்மோடு ஐவராக…!

   இயற்கைப் பேரரசிக்கு இம்முறை எங்கள் மீது அப்படி என்ன இரக்கமோ தெரியவில்லை…! கிளம்பிய நொடி முதல் திரும்பிய நொடி வரை முழுமையாக எங்கள் பயணத்தை அழகாக ஆசீர்வதித்து இருந்தாள்..

 கோயம்புத்தூரின் சுற்றுச் சாலை முடிந்து பாலக்காட்டுச் சாலையில்கால்பதித்த கணத்தில் சொட்டத் துவங்கிய  மழை, கால்மணி நேரத்தில் கொட்டத் துவங்கியதுதிசைகளைத் தைத்தபடி சோவெனப் பெய்யத் தொடங்கியிருந்தது பெருமழை…! முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது போலத் துவங்கியிருந்தது பயணம்…!

 ”வாத்திய இசையைச்

சற்றே நிறுத்துங்கள்

வாசலில் மழை…!"

 என்ற மிகப்புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ நினைவுக்கு வந்தது. காரில் வழிந்து கொண்டிருந்த பதியப்பட்ட இசையை நிறுத்தி வெளியே வழிந்து கொண்டிருந்த பதப்பட்ட இசைக்கு மாறினோம்கோபம் தீரக் கொட்டித் தீர்த்தது மழை.

   பாலக்காட்டுக்குள் நுழைந்தவுடன் வலப்பக்கம் திரும்பிக் கோழிக்கோட்டுப் புறவழிச்சாலையில் செல்லத்தொடங்கினோம். பொழுது மெல்லப் புலரத் தொடங்கியிருந்தது… புத்தியும் புதிதாகி இருந்தது…!

      மெல்லமெல்ல, மெதுமெதுவாக, மென்மையாக, மிருதுவாக இருளை வழியனுப்பிக் கொண்டிருந்தது. புதியநாளின் புதிய ஒளி. முதல் அத்தியாயம் இருளும் மழையுமாய் முடிந்து கொண்டிருக்க இரண்டாம் அத்தியாயம் ஒளியும் பனியுமாய்த் தொடங்கிக் கொண்டிருந்த அவ்வேளையில்  தேநீரின் வெம்மை எங்களுக்குத் தேவை எனப்பட்டது.

   காலை ஆறு முப்பது மணி அளவில் பொழுது விடிந்தும் விடியாமலும் இருள் விலகியும் விலகாமலும் இருந்த அந்த அற்புதக் கணங்களில் சிறுவாணி மலைத்தொடரின் முகில் மோதும் முகட்டுக் காட்சியுடன் சூடான தேநீர் இதமாய் இருந்தது.

 பெய்து முடிந்த மழையின் மிச்ச ஈரங்களைச் சுமந்து இதமான காற்று எங்கெங்கும் நிறைந்திருக்கப் பயணம் மீண்டும் தொடங்கியது. எந்த ஒரு ஃபிரேமிலும் எழில் மட்டுமே தெரிய எதைப் பார்ப்பது எதை விடுவது எனத் தெரியாமல் ஈரமான சாலையை மிக மெதுவாக விழுங்கியபடி கார் மெல்லச் செலுத்தப்பட்டது.

    அடுத்த அரை மணி நேரத்தில் மன்னார்க்காட்டை அடைந்தபோது மக்கள் நடமாட்டம் தொடங்கியிருந்தது. கோயம்புத்தூரிலிருந்து ஆனகட்டி வழியாகவும் மன்னார்க்காட்டை அடையலாம்.கோயம்புத்தூரிலிருந்து உலகப் புகழ்பெற்ற SALIM ALI ORNITHOLGY CENTER மற்றும் SILENT VALLEY  வழியாக  வரும்  சாலை எங்களுடன் மன்னார்க்காட்டில் இணைந்துகொண்டது.

 இளங்காற்று இதமாக வருட ஏழரை மணிக்கெல்லாம் மேலாத்தூரில் மீன் குழம்பும் கடலைக் கறியும் முட்டை மசாலாவும் ஊற்றி நிறைத்த இடியாப்பம், அப்பங்கள், தோசையுடன் காலைச் சிற்றுண்டி இனிதே கழிந்தது…! வளைந்து நெளிந்த அதிக ஏற்ற இறக்கம் இல்லாத மலைச் சாலைகளில் பயணம் தொடங்கியது…! மனதும் நிறைந்து வழிந்தது…!

          பொதுவாகக் கேரளச் சாலைகளின் விளிம்பிலிருந்தே பசுமை தொடங்கிவிடும். நீரோட்டம் நிறைந்திருக்கும்… அதிலும் மலைச்சரிவுகளில் அருவிகள் சிறிதும் பெரிதுமாகத் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கும்.

      அழகாக வளைந்து நெளிந்து எங்களை அழைத்துக் கொண்டு போனது சாலை. பசுமை போர்த்திய மலைச்சரிவுகளின் முகடுகளில் முகில்கள் முத்தமிட்டும் மோதிக் கொண்டும் ஊடலும் கூடலுமாயிருந்தன.

 வரலாமா… வேண்டாமா… என்பதுபோல அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது காலைக் கதிரவன். பெய்யலாமா… வேண்டாமா.. எனச் சில நேரங்களில் கருக்கல் கட்டிக் கொண்டிருந்தது வானம். வீசலாமா…. வேண்டாமா…. என வருடிக் கொண்டும் நிரடிக் கொண்டும் இருந்தது தென்றல். இறங்கி இங்கேயே இரண்டு நாட்களைக் கழித்துவிடலாமா… இல்லை வயநாட்டுக்கே போய்விடலாமா… எனக் குழம்பிக் கொண்டிருந்தது மனம்.

 தாமரசேரியும் வந்தது. வரலாற்றில் பெயர் கொண்ட கோழிக்கோட்டையும் மைசூர் இணைக்கும் சாலையில் உள்ள அழகிய நகரமான தாமரசேரியைத் தொட்டோம். கி.பி. 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா வந்திறங்கிய கள்ளிக்கோட்டை தான் இன்று கோழிக்கோடு. தனி ஒரு சமஸ்தானமாக இருந்த பகுதிதான் மைசூர். கோயம்புத்தூரில் இருந்து தாமரசேரி வரை ஆனைகட்டி வழியாகக் கேரள அரசுப் பேருந்து ஒன்று இயங்குகிறது என்பது தகவலுக்காகத் தரப்படுகிறது.

     தாமரசேரியில் ஒரு முறை டிசம்பர் மாத அதிகாலை ஒன்றில் நான்கு மணிக்குக் கடுங்குளிரில் ஐஸ் கட்டி போன்ற தண்ணீரில் குளித்தது நினைவுக்கு வந்தது. வெந்நீர் என நினைத்து ஷவரில் நின்று வேகமாகத் திருகியவுடன் ஒரு நொடியில் உடல் முழுதும் கொட்டி உறையவைத்த ஐஸ் தண்ணீரில் குளித்து முடித்தது மிகப் பெரும் திரில்லான அனுபவம்.

 நெடுஞ்சாலையைத் தொட்டதும் வலப்புறம் திரும்பி வயநாடு நோக்கித் தொடர்ந்தது பயணம். சாலையோரங்களில் கொட்டி விற்கப்பட்டுக் கொண்டிருந்த பழங்களின் அழகில் மயங்கி கண்களுக்குக் கிடைத்த சுவையை நாவுக்கும் கடத்த விரும்பிச் சுவைமிகுந்த நேந்திரம் பழங்களை வாங்கி ரசித்துத் தின்றபடியே இன்னும் சற்று நேரத்தில் கொண்டை ஊசி வளைவுப் பாதைகளில் ஏற இருக்கும் பரவசத்தில் சென்று கொண்டிருந்தோம் .

 நெடிதுயர்ந்த மலைத்தொடர்களில் ஏறத் தொடங்கிய இடத்தில் எல்லோரும் நின்று இளைப்பாறச் சில கடைகள் உண்டு. வெயில் முற்றிலுமாக வடிந்து குளிர்ந்த சூழலுக்கு வழி விட்டிருந்தது. வானம் அடர்ந்த கரு நிறத்தில் இருந்தது. அடுப்பில் முட்டைகள் ஆம்லெட் ஆக மாறிக் கொண்டிருந்தன. பிரெட் ஆம்லெட் அந்த நேரத்தில் எங்களுக்கு அமிர்தமாய் இருந்தது. சுவைத்து முடித்ததும் கிளம்பியவுடன் எங்களை வரவேற்றன வளைவுப்பாதைகள். வாகனங்கள் மிகுதியாகத் கடந்து செல்லும் பரபரப்பான சாலையாகத்தான் அதை எப்போதும் பார்த்திருக்கிறேன்… இப்போதும் அப்படியே…!

 

தூறல் வேகமாகத் தொடங்கியிருந்தது. மூடுபனியும் கவியத் தொடங்கியிருந்தது. பனி விளக்குகளை ஒளிர விட்டபடியே பாதையில் ஏறிக்கொண்டிருந்தது கார். ஆறேழு  வளைவுகளில் தூறல் நின்று போனது. ஆனாலும் பள்ளத்தாக்கில் எங்களுக்குக் கீழே மேகங்கள் புதைந்து கிடந்தன. பக்கத்தில் இருப்பவரைக் கூடப் பார்க்க முடியாதபடி பனிப்புகை படர்ந்து கிடந்தது. சற்று நேரத்திலேயே திரை விலகியது போலப் பனிமூட்டம் கலைந்தது. இரண்டே நிமிடங்களில் இள வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. காலநிலை கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. காரிலிருந்தஉள்ளங்களோ களித்துக்கொண்டிருந்தன.

 குட்டிக் குட்டியாகவும்நீளநீளமாகவும் நுரைததும்பிக் கொண்டும் பெரியதும் சிறியதுமாக மலையிலிருந்து அருவிகள் ஆங்காங்கே கொட்டிக் கொண்டே இருக்கின்றன. மழைநீரால் நனைந்து அடர் கருமை நிறத்தில் பளபளக்கும் மலைச்சரிவுகளில் தாவரங்கள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அவசர அலுவலாக அவ்வழியே பயணிப்போரைக் கூட வாகனத்தை நிறுத்தி இறங்கிப் பார்க்க வைக்கின்றன. வைத்திரி வியூ பாயின்ட் எனப்படும் இவ்விடத்தில் மேலிருந்து பார்க்கும் பொழுது நாம் கடந்து வந்த கொண்டை ஊசி வளைவுகளைக் காண்பது அலாதியாக இருக்கும்..

 

     அடுத்து பூக்கோட்டு ஏரியை அடையும்வரை ஒன்றரை மணி நேரப் பயணம் முழுவதும் இதுவே வழியெங்கும் வாடிக்கையாகிப் போனது. இடையில் சங்கிலி மரம் (CHAIN TREE) என்று ஒரு மரத்தைக் காட்டுகிறார்கள். ஒரு மரத்தின் அடிப்பாகத்தைச் சுற்றிலும் சங்கிலியால் பிணைத்து இருக்கிறார்கள். இதற்கு நிறையக் கதைகளைச் சொல்கிறார்கள்.

    வயநாட்டின் அழகுக்காகவும், அதனுடைய செறிந்த வாணிப வாசனைப் பயிர்களுக்காகவும் கோழிக்கோட்டில் இருந்து ஆங்கிலேயர்கள் பலமுறை பாதை அமைக்க முயன்று தவறினர். மலைப்பாதை துவங்கும் இடமான அடிவாரம் என்ற இடத்திலிருந்து மலைச்சாலை அமைக்க  மலையையும் காட்டையும் நன்கு அறிந்த மலைவாழ் மக்களில் ஒருவரான கரிந்தன்டன் என்ற இளைஞன் வழிகாட்ட ஆங்கிலேயர்கள் வயநாட்டுக்கு மலைப்பாதை அமைக்கின்றனர். இறுதியில் ஆங்கிலேயப் பொறியாளர் இத்தகைய அரிய செயலின் மொத்தப் பெருமையையும் தனக்கு உரித்தாக்க அந்த இளைஞனைக் கொன்றுவிடுகிறார். கொல்லப்பட்ட அந்த இளைஞன் ஆவியாக அவ்வழியாக போவோர் வருவோரை எல்லாம் பயமுறுத்துவதாகவும், குறிப்பாக வெளிநாட்டினரைக் கொன்று விடுவதாகவும், அந்த ஆவியை ஒரு பூசாரி பலவிதமான சடங்குகளைச் செய்து இந்த மரத்தில் சங்கிலியால் பிணைத்து உள்ளதாகவும், மரம் வளர வளர சங்கிலியும் சேர்ந்து வளருவதாகவும் நம்பப்படுகிறது.

 தொடர்ந்து சென்றதில் அற்புதமான ஒரு வளைவில் வயநாடு மாவட்டத்தின் மிகப்பெரும் நுழைவாயில் எங்களை வரவேற்றது. மலைகளின் இடையில் அழகாக அமைந்திருக்கும் ஒரு சிறு நகரம் வைத்திரி. கண்களுக்கும் மனதுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சற்றுக் கீழிறங்கி வயிற்றுக்கும் கொடுப்பது எங்கள் வழக்கம். இன்றைய மதிய உணவு மீனுடன் தான் என்று முன்னரே முடிவாகி இருந்தது. வைத்திரியின் மலைச்சரிவுகளில் அமைந்த அழகான உணவகம் ஒன்றில், வறுத்த மீன் வட்டிலின் ஓரத்தில் இருக்க ,மையப்பகுதியில் பேரரிசிச் சோற்றைக் குவித்து, நடுவில்  மீன் குழம்பை ஊற்றிப் பிசைந்து ஊற வைத்து, சிறு அப்பளங்களுடனும் துவையலுடனும் ருசித்து முடித்து எழுந்தபோது திவ்யமாக இருந்தது.

 நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒளிந்திருந்தது பூக்கோட் ஏரி. மதிய உணவு முடிந்த பின் அங்கு செல்வது தான் திட்டம். காரை நிறுத்திவிட்டுக் குடைகளுடன் இறங்கிக் கட்டணச் சீட்டுப் பெற்று வரிசையில் நின்று உள் நுழைந்தோம்.

      மலைகள் சூழ, முகில்கள் தாழ, பசுமை வாழ, அழகு ஆள, சொர்க்கம் போல சுடர்விட்டுப் பொலிந்து கொண்டிருந்தது பூக்கோட் ஏரி. மிக அழகான, மிக மிக அழகான இயற்கை ஏரியான இதனைப் பொழுது புலரும் அதிகாலையிலும் கண்டிருக்கிறேன்; இருள் விலகிக் காலைக் கதிரவன் வானில் வலம் வரத் தொடங்கிய பின்பும் கண்டிருக்கிறேன்.; முற்பகலில், நண்பகலில், பிற்பகலில் கூடப் பார்த்திருக்கிறேன்; ஆதவன் மறைந்து அந்தி சாயும்காலத்திலும் ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாகக் காட்சியளித்திருக்கிறது. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு நிறத்தில் தன்னைக் காட்டி இருக்கிறது. அதன் இருப்பைப் பல பரிமாணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

 ஏரியைச் சுற்றிலும் முக்கால் வட்டத்துக்குக் காலார நடந்து செல்லப் பாதை இருக்கிறது. மரங்களின் அடர்த்தியும், பொங்கும் பசுமையும், நிறைந்த நீருமாகப் பூரித்து கிடக்கும் இந்தப் பொன்னான ஏரியில் இள மஞ்சள் வெயிலும், மழையும், தூறலும், மெல்லிய தென்றலும் உடனிருக்கச் செல்லும் படகுச்சவாரி பச்சையும் கருநீலமும் கலந்து எதிரொளிக்கும் நீரின் அழகை உடலின் செல்களில் எல்லாம் செலுத்திக் கொண்டிருந்தது.

 ஃபிஷ் ஸ்பா இங்கு கிடைக்கும் சுவாரசியமான தெரபி. 50 ரூபாயில் குறுகுறுப்பான அனுபவம் பாதங்களுக்குக் கிடைக்கிறது. நமது கால்களில் உள்ள அழுக்கை எல்லாம் உணவாக எடுத்துக் கொள்கின்றன இந்தச் சிறு மீன்கள். நமது பாதங்களைக் கழுவியபின், ஒரு சிறு தொட்டியில் நீருக்குள் மூழ்கியபடி வைத்திருக்கும் பொழுது தொட்டியில் உள்ள சிறிய மீன்கள் நமது பாதங்களைத் தமது சிறு வாயினால் கொத்திக் கொத்தி அழுக்கை எல்லாம் எடுத்து விடுகின்றன. இந்த நேரத்தில் மதியம் நாங்கள் உணவாக எடுத்துக் கொண்ட மீன்கள் நினைவில் நீந்தின. மலை விளைபொருட்களும் கைவினைப் பொருட்களும் விற்கும் அங்காடியில் நாம் வாங்குவதற்கு நிறைய இருக்கின்றன. குழந்தைகள  விளையாட வசதிகள் இருக்கின்றன.சுருக்”  என்ற ஒரு தேநீருடன் இந்த மந்திர ஏரியில் இருந்து விடைபெற்று வெளியே வந்தோம்.

       மேலிருந்து பார்க்கும் பொழுது இந்திய வரைபடத்தினை ஒத்திருக்கும் பூக்கோட் ஏரியின் வடிவம் புறா ஒன்று ஒருக்களித்துப் பார்ப்பது போலவும் தோன்றும். கபினி ஆற்றில் சேரும் பனமரம் ஆறு தோன்றும் இடம் தான் இந்த பூக்கோட் ஏரி.

                               அடுத்து,பானாசுர அணையைப் பார்க்கப் போதிய காலம் இராது எனக் கணித்து இருந்தோம். எனவே அதற்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கர்லாட் ஏரியைப்  பார்த்துவிட்டு பானாசுர அணையைப் போகிற போக்கில் பார்த்து விடலாம் எனத் திட்டமிட்டு இருந்தோம். வயநாடு மாவட்டத்தின் தலைமையிடமான கல்பேட்ட வழியாகச் சற்றுச் சுற்றிக்கொண்டு ஏரியை அடைந்தோம். 

 நீரும் வயலும் மரங்களும் ஊடாடும் சாலை அது. போனால் போகிறதென்று வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கும் இடையில் கொஞ்சமாகச் சாலை அமைத்திருந்தார்கள். பசுமையை நாசி வழியாக முகர்ந்தபடி பயணித்தோம்.

 ZIP LINING,ZORBING,KAYAKING,WALL CLIMBING,BAMBOO RAFTING,PEDAL BOATING போன்ற விளையாட்டுகளைக் கொண்ட இந்த இடத்துக்கு மிகுந்த ஆர்வத்துடன் வந்து சேர்ந்த எங்களுக்கு கர்லாட் ஏரி மிகப் பெரும் ஏமாற்றத்தை நுழைவாயிலிலேயே வைத்திருந்தது. நுழைவு நேரம் முடிந்து விட்டதால்  ஐந்தேகால் மணிக்குப் பிறகு உள்நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேறு வழி இல்லாமல் வாயில் கதவின் இடுக்குகள் வழியே எட்டிப் பார்த்துவிட்டு ஏக்கத்துடன் திரும்பினோம். வளாகத்தில் ஒரு கைவினைப் பொருள் அங்காடி இருந்தது. விரக்தியில் எதையும் வாங்கும் மன நிலையில் இல்லாததால்  சுறுசுறுவெனத் தேநீரை மட்டும் உள்ளிழுத்து விட்டுப் பெருமூச்சை மூச்சை வெளியேற்றிவிட்டுப் பெருத்த ஏமாற்றத்துடன் காரைக் கிளப்பினோம்.

 பானாசுர அணையையாவது சற்று வெளிச்சத்தில் வெளியிலிருந்து பார்க்கலாம் என வண்டியைச் செலுத்தினேன். அழகும் நீரும் நிரம்பி, நீளமும் அகலமுமாக மிகப் பரந்து விரிந்து கிடந்தது. இருள் கவியத் தொடங்கிக் கொண்டிருந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக துளிகளும் எங்களைத் தொட்டுவிடத் துடித்துக்கொண்டிருந்தன. பெரு மழைக்கு அப்பகுதி தயாராகிக்கொண்டிருந்ததை உணர்ந்து முதல் நாள் பயணத்தை நிறைவு செய்ய முடிவு செய்தோம்.

 தங்குவதற்குப் பதிவு செய்யப்பட்ட ரிசார்ட் அங்கிருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. சென்றமுறை தங்கிய நூறாண்டு கடந்த சந்திரகிரி பங்களாவுக்குச் சேர்ந்த மீன்முட்டி ஹைட்ஸ் என்ற ரிசார்ட்டில்  தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தோம். தமிழகத்தில் இருந்து ஊட்டி வழியாகக் கூடலூர் கழிந்து சேரம்பாடி வழியாக மேப்பாடியும், தேவர்ஷோல  வழியாக சுல்தான்பத்தேரியும் எனப் பல வழிகளில் வயநாடு வரலாம். வய நாட்டுக்குள் கிழக்கிலிருந்து நுழைவதற்கான வழிகள் . நாங்கள் பாலக்காடு மன்னார்க்காடு எனத் தெற்குத் திசையில் நுழைந்து இருந்தோம். நூற்றுக்கணக்கான ரிசார்ட்டுகள், HOME STAYS,TREE HOUSES வயநாடு மாவட்டம் முழுவதும் பலவிதமான விலைகளில் தங்குவதற்குக் கிடைக்கும் நாங்கள் தேர்ந்தெடுத்தது தமிழக எல்லையைத் தொட்டுக்கொண்டு செல்லங்கோட்டில் இருக்கும் மீன்முட்டி ஹைட்ஸ் என்ற காட்டுக்குள் இருக்கும் விடுதி. ரிசார்ட் ஊழியர்கள் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தனர்.  ஒவ்வொரு முறையும்  அவர்கள் நினைவூட்டிய செய்தி என்னவெனில் இரவு எட்டு மணிக்கு முன்பாக முடிந்தால் 6, 7 மணிக்குள்ளாக வந்து விடுங்கள் என்பதுதான். எனக்கு  ஏற்கெனவே அங்கு சென்றிருந்த அனுபவம் இருந்ததால் அவர்கள் சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்திருந்தது.   நெடுஞ்சாலையில் இருந்து விலகி இரண்டு கிலோமீட்டர் தூரம் மிக அடர்ந்த காட்டுக்குள் கரடுமுரடான சாலையில் ஊர்ந்து செல்ல வேண்டும். யானைக்கூட்டம் மிக உற்சாகமாக உலவிக் கொண்டிருக்கும் பகுதி அது. கடிகாரத்தில் நேரம் ஆறு முப்பது எனக் காட்டிக்  கொண்டிருந்தது. விரட்டிப் பிடித்தால் எட்டு மணிக்குப் போய்ச் சேரலாம்.

         இரவு உணவை வெளியிலேயே முடித்துக் கொள்வதாக நாங்கள் விடுதியில் ஏற்கனவே தெரிவித்திருந்தால் உணவுக்காகவும் எங்களிடம் இருக்கும் நேரத்தில் மிச்சம் பிடிக்க வேண்டும். 45 கிலோ மீட்டரும் மழை பெய்யும் மலைப் பாதை. கல்பேட்ட,மேப்பாடி,ரிப்பன்,வடுவஞ்சால் எனத் தொடர்ந்து இடைவெளியில்லாமல் சிறு நகரங்கள் இருந்தாலும் மெதுவாகவே செல்ல வேண்டிய சாலை. அமர்ந்து உண்டால் நேரம் அதிகம் எடுக்கும் என்பதால் மேப்பாடி நகரில் இரவு உணவைப் பொட்டலம் கட்டிக் கொண்டோம். கேரளத்துப் பரோட்டாவின் சுவை அலாதியானது. வெங்காயத் தோசைகளும், பரோட்டாவும், மிளகு மசாலாவிலும் வெண்ணையிலும் புரட்டிப் பொரித்தெடுக்கப்பட்ட கோழிக்கறியும், ஆம்லெட்களும், காய்கறிகளுடன் வறுக்கப்பட்ட சோறும் நிரப்பப்பட்ட பொட்டலங்களை வாங்கிக் கொண்டு  காரைக் கிளப்பும் வரையில் ஓயாமல் மழை ஊற்றிக் கொண்டே இருந்தது.

     குளிராலும், நாள் முழுக்க நடந்த நடையாலும் வயிற்றில் கனன்று கொண்டிருந்த பசித்தீயைப் பெருமழையால் அணைக்க இயலாததால் விரைந்து சென்று விடுதியில் இந்த உணவுப்பொட்டலங்களை அவிழ்த்துக் கொள்ளலாம்.. பசித்தீயை அவித்துக்கொள்ளலாம் என நாவையும் வயிற்றையும் அமைதிப்படுத்தி அறை நோக்கி ப் பயணித்தோம்.

 எட்டு மணிக்கெல்லாம் பெருஞ்சாலையில் இருந்து பிரிந்து காட்டுக்குச் செல்லும் பாதையை அடைந்துவிட்டோம் அதுவரையில்  மலைச்சாலைப் பயணம் தான் என்றாலும் இடைவெளி இல்லாமல் ஊர்கள் வழியாகப் பெரும்பாலும் வெளிச்சத்திலேயே வந்ததால் இருட்டு இங்கேதான் தனது முரட்டு முகத்தைக் காட்டத் தொடங்கியது.

    ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய அந்தக் கடினமான கரடு முரடுச்  சாலையில் எங்களது கார் ஊர்ந்தபடியே சென்று கொண்டிருந்தது. இருபுறமும் குடம் குடமாய் இருளைக் கொட்டி வைத்தது போல இருந்தது. ஓங்கி உயர்ந்த மரங்களும், செழித்துக் கொழித்திருந்த செடி கொடிகளும் இருபுறமும் மண்டிக்கிடந்த மலைப்பெருவனத்துக்குள் அரை அடி தூரத்தில் இருப்பதைக்கூடக் காண முடியாத அடர் இருட்டைக் கிழித்துக் கொண்டு, பயத்தைக் கொஞ்சம் பதுக்கிக்கொண்டு மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தோம்.

      200 மீட்டர் கடந்த பிறகு, இரண்டு மாதங்களுக்கு முன் இந்தப் பாதையிலா இரு சக்கர வாகனத்தில் தன்னந்தனியே இரவு பத்தரை மணிக்குச் சென்றேன் என்பதை எண்ணும்போது முதுகுத்தண்டில் சிலீரென்றது. சென்றமுறை முன்பே அறையை புக்கிங் செய்யவில்லை….இப்படி ஒரு ரிசார்ட் இருக்கிறது என்பது மட்டும் தெரியும். அதனால் என்னுடன் வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தையும், காரையும் சாலையிலேயே நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்று விசாரித்து விட்டு வருவதாக நான் மட்டும் சென்றேன்.

         கொஞ்ச தூரம் செல்லச் செல்லத்தான் எனக்கு விபரீதம் புரிந்தது. எத்தகைய இடர் மிகுந்த சாலையில் சிந்திக்காமல் வந்து விட்டோம் என்பது மண்டைக்குள் உறைத்தது. வந்தது வந்து விட்டோம் இன்னும் சற்று தூரம் தான் இருக்கும் என மேலும் மேலும் வண்டியைச் செலுத்த பாதை நீண்டு கொண்டே போனது. ஒருவழியாக ரிசார்ட்டின் மதில் சுவரையும் மங்கிய வெளிச்சங்களையும் பார்த்த பின்பு தான் உயிரே வந்தது.

        என்னைப் பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் ஒரு கணம் உறைந்து போயினர்.” யார் இந்த மாவீரன்..? என்று சிலரும்  “யார் இந்த மடையன்…?” என்று சிலரும் பார்ப்பது போல எனக்குத் தோன்றியது. யானைக் கூட்டங்கள் சர்வசாதாரணமாகச் சுற்றித்திரியும் பகுதி அது. அதுவும் முதல் நாள் இரவு இதே நேரத்தில்தான் மூங்கில் தாவரங்களை ரவுண்டு கட்டி தின்று தீர்த்து சென்றிருக்கின்றன என்ற தகவலை அவர்கள் சொன்ன போதுதான் வழியில் நடந்திருந்த சேதாரங்களை பொருத்திப் பார்த்து ஒரு நொடி விக்கித்து நின்றேன் .

    அவர்கள் என்னைப் பார்த்த விதம் எனக்குச் சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகைப் பாடல் ஒன்றின் கடைசி மூன்று வரிகளை நினைவூட்டியது. குறிஞ்சித் திணையில் எழுதுவதில் வல்லவரான கபிலரின் அற்புதமான பாடல் அது.

 ”யாங்கு வந்தனையோ-ஓங்கல் வெற்ப

வேங்கை கமழும் எம் சிறுகுடி

யாங்கு அறிந்தனையோ-நோகோ யானே”

 தலைவியைப் பார்க்க மிகப் பெரும் ரிஸ்க் எடுத்து நள்ளிரவில் மலைகளுக்கு இடையில் அமைந்த சிற்றூருக்கு வந்து சேர்ந்த தலைவனைப் பார்த்து எப்படி வந்தாய்.. எப்படி இந்த இடத்தினை அறிந்தாய்… எனத் தோழி வியந்து கேட்பதாக முடியும் அப்பாடல்.

    இவ்வாறு பல நினைவுகளோடு காரை செலுத்திக் கொண்டு இருந்த எனக்கு இரண்டு நிமிடங்களில் சட்டென ஒரு விஷயம் உறைத்தது. இதுவரையில் கலகலவென இருந்த காருக்குள் அமைதி ஆழமாக நிலவுகிறதே எனத் திரும்பிப் பார்த்தால் நண்பர்கள் மூவரும் மிரட்சியில் பேச்சு மூச்சின்றித் திகைப்பில் ஆழ்ந்திருந்தனர்.

 “என்ன ஆச்சு நண்பர்களே..?”      மெதுவாகக் கேட்டேன்.

   “ஏப்பா தம்பி… எட்டு மணிக்குள்ள வந்துடுங்கன்னு எச்சரிக்கை பண்ணினாங்கன்னு சொன்னியே… இதுதான் காரணம்னு சொல்லலியே…!” என்றனர் பரிதாபமாக…! இருந்தாலும் அனைவருக்கும் அந்த த்ரில் பிடித்திருந்தது. ஒரு வழியாக ரிசார்ட்டை அடைந்து உள்ளே காரைச் செலுத்தினோம். எங்களை வரவேற்ற ஊழியர்கள் ஃபார்மாலிட்டீஸ் முடித்துப் பத்து நிமிடங்களில் எங்களுக்கான அறைகள் இருக்கும் கட்டடத்துக்குக் கூட்டிப் போனார்கள். அங்கிருந்து அவர்களது இரு சக்கர வாகனத்தைப் பின் தொடர்ந்து காரை மேலே செலுத்திக் கிட்டத்தட்ட மலையின் உச்சியில், விளிம்பில் அமைந்த கட்டடத்தின் முன்பு நிறுத்தி இறங்கினோம். மழையின் ஈரத்துடன் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. வேகவேகமாக எங்களது உடைமைகளை எடுத்து உள்ளே வைத்துவிட்டு வெளியே வந்தோம்.  அதலபாதாளத்தில் மீன்முட்டியாறு ஓடும் ஒலி இரைச்சலாகக் கேட்டது. ஆழமான பள்ளத்தாக்கு மறுபுறம்.. அதனையடுத்து நீண்டு உயர்ந்த மலைத்தொடர்கள்…எங்களுக்குப் பின்னாலும் மலைத்தொடர்கள்… இத்தனைக்கும் நடுவில் பாதுகாப்பான  சுற்றுச்சுவர் களுடன் மிரட்டும் அழகோடு அமைந்திருந்தது அந்த ரிசார்ட்.

     ஊழியர்கள் அவர்களது அறைக்குக் கீழே செல்லும் முன்பு உள்ளே சென்றபின் விடியும்வரை கதவைத் திறக்க வேண்டாம்… வெளியிலும் வர வேண்டாம் எனக் கூறினர்…யானைகள் வருமா…?” எனச் சற்று பீதியுடன் கேட்டோம். யானைகள் இவ்வளவு உயரத்திற்கு ஏறி வர முடியாது என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டு நிமிடம்கூட ஆகியிருக்காது.   புலிதான் அவ்வப்போது வரும்…” என்றனர். புயல் வேகத்தில் அறைக்குள் நுழைந்து கதவுகளைத் தாழ்  அடைத்தோம்.

     சற்று ரிலாக்ஸ் செய்து விட்டுக் கட்டடத்தின் மறுமுனையில் இருந்த பால்கனியைத் திறந்து பார்த்தால் இயற்கையின் பிரம்மாண்டத்தை இருட்டிலும் ஓரளவு ஊகிக்க முடிந்தது. விடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என கதவைச் சாத்திவிட்டு வாங்கி வந்திருந்த உணவை வயிறார உண்டு முடித்து உறங்கத் தயாரானோம்.

     மிரட்டும் இருட்டும், மென்மையான இரவொலியும் இயற்கையின் இன்னொரு பரிமாணத்தை எடுத்து இயம்பின. மலையும் மழையும், இருளும் குளிரும், ஆறும் காடும், பனியும் மரமும் எங்களைச் சூழ்ந்து இருக்க, இந்த இரவை இப்படி விழித்தபடியே கழித்து விடலாமா என்ற ஓர் எண்ணமும் இதயத்தின் ஓரத்தில் எட்டிப் பார்த்தது.

இருந்தாலும்,

மலைப்பை அலுப்பு வென்றது;

களிப்பைக் களைப்பு வென்றது..!

          முதல் நாள் பயணம் இனிதே முடிந்து கொண்டிருக்க, இரண்டாவது நாள் இன்னும் எங்களுக்காக என்னென்ன வைத்திருக்கிறதோ என்ற எதிர்பார்ப்பிலேயே உறங்கிப் போனோம் …!

 .

 

 








 

 

 

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?