நாய்ஸ் பொல்யூஷன்
பத்தனம்திட்டயிலிருந்து கோயம்புத்தூருக்கு நான் புக் செய்திருந்த ஸ்லீப்பர் கிளாஸ் பஸ் 600 ரூபாயில் எதிர்பார்த்ததை விட ஸ்மூத்தாக இருந்தது. எனக்குக் கடைசி வரிசை UPPER BERTH கிடைத்தது. இருந்தாலும் அந்த ஏர்பஸ் அலுங்காமல் குலுங்காமல் மிதந்த படி எங்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தது .
கொட்டாரக்கரையிலிருந்து வந்த அந்த பஸ்ஸின் அப்பர் பெர்த்தில் ஏற்கெனவே இருந்த மகராசன் எத்தனை நாள்களாய் அணிந்திருந்தாரோ தெரியவில்லை .....ஸாக்ஸிலிருந்து வந்த வாசனை .....ஓ மை காட்.....!
10 மணி இருக்கும். தூங்கத் தொடங்குகையில் ஏதோ ஒரு சீட்டிலிருந்து செல்போனில் லல லலலா டைப் சினிமா பாடல் ஒன்று நாராசமாக ஒலிக்க ஆரம்பித்தது .
ஒரே நிமிடத்தில் போதுமான அளவு கடுப்பை அது ஏற்றி விட்டதால் வேறு வழி இன்றி, "யாரும்மா அது ... ஆஃப் பண்ணுங்க ....இல்லேன்னா ஹெட் போன் போட்டுக் கேளுங்க....!" என ஒரு சவுண்டு விட்டேன் .
எந்த சீட்டில் இருந்து சவுண்ட் வந்தது என யாருக்கும் தெரிந்திருக்காது. எந்த சீட்டில் இருந்து பாடல் ஒலித்தது என்று எனக்கும் தெரியவில்லை. எல்லாமே கர்டெயின்களை இழுத்து விட்டிருந்தார்கள்.
ஆனாலும் அடுத்த நொடியே இசைக் கச்சேரியை ஆஃப் செய்து விட்டார்கள்.
வாகனங்களில் மியூசிக் ஒலிப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கேரள உயர்நீதிமன்றம் விதித்திருப்பதைச் செய்தித்தளங்களில் படித்திருக்கிறேன். எனவே பேருந்துகளில் இப்பொழுது பாடல்கள், வீடியோக்களை ஓட்டுநர்கள் போடுவதில்லை. ஆதலால் பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அந்தத் தொல்லை இப்பொழுது இல்லை.
ஆனால் பயணிகளில் சிலர் செல்போனில் நாராசமான வீடியோக்களையும் பாடல்களையும் ஹைடெசிபலில் ஒலிக்கவிட்டு அட்ராசிட்டி செய்யும்போது ஆத்திரங்கள் வருது மக்களே.
இன்னும் சிலர் ஃபோனில் பேசுவதைப் பார்த்தால் இவர்களுக்கு செல்ஃபோன் எதற்கு ,செல்ஃபோன் இல்லாமலேயே மறுமுனையில் இருப்பவர்களுக்கு இவர் பேசுவது கேட்குமே எனும் அளவுக்கு மைக்கில் பேசுவது போல கால் பேசிக் கொண்டிருப்பார்கள் .
கேரளப் போக்குவரத்துக் கழகம் இதற்கெல்லாம் தடை விதித்துப் பேருந்துகளில் அதிக சத்தம் போட்டு செல்ஃபோனில் பேசுவதையும், செல்ஃபோன் லவுட் ஸ்பீக்கரில் பாடல்கள், வீடியோக்களை ஒலிக்க விடுவதையும் தடை செய்து, நடத்துனர் சுமுகமாக இவற்றையெல்லாம் ஹேண்டில் செய்து கொள்ள உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இவைபோன்ற விதிகள் இருக்கின்றனவா என எனக்குத் தெரியவில்லை.
இந்தக் கூச்சல்களை எல்லாம் சட்டம் இயற்றித் தடுத்துவிடலாம். குறட்டை விடும் கோமகன்களை என் செய்வது....?
இசை விருந்து இடையிலேயே நின்று போன பத்தாவது நிமிடத்தில் அடுத்த அட்ராசிட்டி ஆரம்பித்தது . நான்கைந்து பேர் விதவிதமான குறட்டைகளால் பஸ்ஸையே குலுக்க ஆரம்பித்திருந்தார்கள். ஒரே ஓர் ஆள் குறட்டை விடும்போது இடைவெளி இருக்கும் . நான்கைந்து பேர் குறட்டை விடும்போது கேப்பே இல்லாமல் குறட்டை ஒலி நிறைந்து வழிந்து கொண்டிருக்கும். உன்னிப்பாகக் கவனித்தால் மிகப் புதுமையாகத் தெரியும் .
என்ன இடையூறு என்று தெரியவில்லை.... சட்டென பிரேக்கை மிதித்தார் டிரைவர்.... ஒரே மைக்ரோ நொடியில் அத்தனை குறட்டைகளும் ஆஃப் ஆகிவிட்டன.
திடும்மென ஏதோ ஒரு சத்தம் கேட்டது. போச்சுடா.... யாரோ அப்பர் பெர்த்திலிருந்து உருண்டு விழுந்து விட்டார்கள் போலிருக்கிறது என அஞ்சி ஸ்கிரீனை விலக்கி எட்டிப் பார்த்தேன். பட்பட் எனப் பெரும்பாலான Berth களில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. நான் கொண்டு போயிருந்த இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டில் சடன் பிரேக்கில் Upper Berth இல் இருந்து நழுவி விழுந்து உருண்டு ஓடி இருக்கிறது. சத்தம் இல்லாமல் இறங்கி எடுத்து வந்து வைத்துக் கொண்டேன். பெரிய பாட்டிலை வைக்க Berth இல் இடமில்லை. Curtain இல் கட்டி வைத்து விட்டேன் .அதிகாலை மூன்றரை மணிக்கு L&T ரிங் ரோட்டில் இறங்கும்வரை குறட்டை ஒலிகளுக்கு அஞ்சாமல் அதுவும் சமர்த்தாகக் கிடந்தது.
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!