முதுமை

 டூவீலரில் சென்று கொண்டிருந்த போது அந்த மூதாட்டி கைநீட்டி லிஃப்ட் கேட்டார் . எஃப்.ஸி . போன்ற

ஒரு நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கில் முதிர்ந்த வயதில் இருக்கும் அப்பெண்மணி ஏறி அமர முடியாதென நினைத்தேன்.

ஆனால் 65 வயது மதிக்கத்தக்க , ஒடிசலான உடலையுடைய அந்தப் பெண் கைநீட்டிய தோரணையில் அனிச்சையாக வண்டியை நிறுத்தினேன்.

"நீங்க இந்த வண்டில ஏறி உட்கார்ந்து வர்றது ரொம்பச் சிரமம்" என்றேன் .

அதற்குள் மந்தாகினி யானையில் ஏறுவதுபோல வெகு லாவகமாக பைக்கில் ஏறி அமர்ந்திருந்தார் அந்த அம்மாள்.

அசந்து போன நான் வண்டியை நகர்த்த , " என் பேரன்களும் இதுமாதிரிப் பெரிய வண்டிகள்தான் வச்சிருக்காங்க , என்னை அடிக்கடி பைக்லதான் கூட்டிட்டுப் போவாங்க , எனக்குப் பழக்கம் இருக்கு பயந்துக்காத...!" என்று தெம்பூட்டினார் .

தொடர்ந்து ," பைக் என்னப்பா பெரிய பைக்கு , நான் தென்னை மரத்துலயே ஏறுவேன் ,இன்னைக்குக் காலைல கூட அஞ்சு மரம் ஏறியிருக்கேன் " என்றவர் அவர் செய்யும் வேளாண்மை சார்ந்த வேலைகளைச் சொல்லச் சொல்ல எனக்கு மூச்சு முட்டியது .

வயதைக் கேட்டேன்.

" அதெல்லாம் தெரியாதுப்பா....எண்பதுப் பக்கம் இருக்கும்" என்றார் .

இறைவா......எண்பது வயதில் நான் தென்னை மரமெல்லாம் ஏற வேண்டாம்....டாய்லெட் போய் வர ஓரளவு நடையும் , டைம்ஸ் ஆஃப் இந்தியா படிக்கச் சிறிது பார்வையும் கொடுத்து உதவினால் போதும் .

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?