அந்த அரபிக் கடலோரம்
அந்த அரபிக் கடலோரம்...
(கண் கவரும் கண்ணூர்க் கடற்கரைகளும், கொள்ளை கொள்ளும் கோழிக்கோட்டுக் கடற்கரைகளும்)
க்யூட்டான சிட்டியான கோழிக்கோட்டில் நம் கார் நுழைந்தபோது நள்ளிரவு ஒரு மணி. ஹோட்டல் ரூமுக்குப் போகும் முன் கோழிக்கோடு பீச்சை இம்முறை இரவில் பார்க்கலாம் என முடிவெடுத்து பீச் ரூட்டை அடைந்தபோது அந்த நள்ளிரவிலும் 40க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள பீச் ரோட்டின் கிழக்குப் புறம் உணவகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் நிறைந்திருக்க மேற்குப் புறம் சாலையை ஒட்டிய ஒரு லேனில் கார் பார்க்கிங்கும் அதையடுத்து நடைமேடையும் அதையடுத்துக் கடற்கரையும் அமைந்திருந்தன.
குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்திருக்க பீச் ஒரே பரபரப்பாய் இருந்தது .மழை பெய்து முடித்திருந்தது. இரவு நேர அலையோசை இதமாகச் செவிகளை நிறைக்க, கடற்காற்று இதமாக உடலை வருட , கடலைப் பார்த்தவாறு காலார நடக்க அஃது ஒரு கனவு போல இருந்தது.
அரை மணி நேரம் கழித்துக் கோழிக்கோட்டை ஒரு ரவுண்டு அடிக்கலாம் எனக் கிளம்பினால் சிட்டி முழுக்க ஏகப்பட்ட கஃபேக்களும்,ரெஸ்ட்ராண்டுகளும் கண்ணைப் பறிக்கும் அலங்காரங்களுடன் ஒளி வெள்ளத்தில் விடிய விடியத் திறந்து இருக்கின்றன . பரபரப்பாக இருந்த பாளையம் பேருந்து நிலைய வாசலில் இருந்த ஒரு கடையில் நாம் சாப்பிட்ட அரிசிப் பத்திரியும் இஞ்சித் தேநீரும் அத்தனை சுவையாக இருந்தது.
அடுத்த நாள் காலை கோழிக்கோட்டின் புகழ்பெற்ற அங்காடித் தெருவான மிட்டாயித் தெருவுதான் நமது முதல் ஸ்பாட். ஷாப்பிங் செய்ய அட்டகாசமான இடம். அழகான மேற்கூரையிடப்பட்டுப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஸ்வீட் மீட் ஸ்ட்ரீட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மிட்டாயித்தெருவில் விதவிதமான இனிப்புகளில் இருந்து ஆடைகள் , கேட்ஜட்கள் என அத்தனை பொருட்களும் கொட்டிக் கிடக்கின்றன. பிரமாதமான ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் கேரன்டி.
அடுத்த கடற்கரை பேப்பூர் பீச் .ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளாக சேரர் காலந் தொட்டுக் கடல் வழியில் சிறந்த தொண்டித் துறைமுகம் அமைந்திருந்த பகுதி இது.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய பிளினி, தாலமி உள்ளிட்ட வரலாற்றுப் பயணிகளும் , பெரிப்ளுயஸ் ஆஃப் எரித்ரியன் போன்ற வரலாற்றுப் பயண நூல்களும் குறிப்பிடும் இந்த பேப்பூர் பீச்சில் நிலம்பூர்க் காட்டின் மழைக்காடுகளில் தோன்றும் மிகப்பெரிய ஆறான சாலியாறு கடலுடன் கலக்கிறது. சங்கத் தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூற்றில் நெய்தல் திணையைப் பாடிய அம்மூவனார் இந்தக் கடல் துறையைத் தான் பார்த்திருந்திருப்பார்.
புலிமுட்டு எனும் கற்களால் ஆன பாலம் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்குக் கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கிறது. மின்விளக்குத் தூண்கள் அழகாகப் பொருத்தப்பட்டிருக்கும் இந்தப் பாலத்தில் சுற்றுலா வாசிகள் குவிகிறார்கள்.
பன்னெடுங்காலந்தொட்டு இன்றுவரை பாய்மரக் கப்பல்களும், படகுகளும் கட்டப்படும் இந்த பேப்பூர்த் துறைமுகத்தில் செம த்ரில்லிங்கான மிதவைப் பாலம் ஒன்று பார்வையாளர்கள் நடந்து செல்வதற்காகக் கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கிறது.
கோழிக்கோட்டின் வடமுனையில் இருக்கும் காப்பாட் பீச் நமது அடுத்த விசிட்டிங் ஸ்பாட். நாம் எல்லாரும் பள்ளியில் படித்திருப்போமே கிபி 1498 ஆம் ஆண்டில் வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையில் வந்து இறங்கினார் என்று , அஃது இந்த இடந்தான் .
தமிழில் கள்ளிக்கோட்டை, ஆங்கிலத்தில் காலிகட், மலையாளத்தில் கோழிக்கோடு அவ்வளவுதான். காப்பக் கடவு என்றும் அழைக்கப்படும் இங்கு
வாஸ்கோடகாமாவுக்கு ஒரு நினைவுக்கற்றூண் பதிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காப்பாட் பீச் ஓர் ஆச்சரியமான அமைப்பைக் கொண்டது . மிகப்பெரிய கார்டனுக்குள் டிக்கெட் வாங்கி நுழைந்து தான் இந்தக் கடற்கரையை அடைய முடியும். வெளியில் இருந்து இதற்குள் யாரும் வர முடியாது. அழகான கார்டனின் மறுபக்கம் கொட்டப்பட்டு இருக்கும் கற்பாறைகளின் மீதும் பரந்து விரிந்த மணல் பரப்பிலும் அலைகள் மோதிக் கொண்டு நம்மை வா வா எனச் சுண்டி இழுத்து வரவேற்கின்றன . மொத்த பீச்சும் கார்டனும் பளிங்கு போலத் தூய்மையாகத் துலங்கி நிற்கின்றன. கடற்கரை மணலில் எந்த இடத்திலும் தயங்காமல் நாம் அமரலாம். தின்று துப்பப்பட்ட தின்பண்டங்கள் , உணவுக் கழிவுகள் பறவை, விலங்கு, மனிதக் கழிவுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளேட்டுகளின் மிச்ச சொச்சங்கள் எதுவும் நமது உடையின் பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ளாது. கார்டனில் 10, 15 துப்புரவுப் பணியாளர்கள் முழுச் சீருடையில் தொப்பி, முகக் கவசம் சகிதமாக இடைவிடாமல் மொத்தத் தோட்டத்தையும் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் . உடைமாற்றும் அறைகள், இயலாதவருக்கான கழிவறைகள், பிற கழிவறைகள் அனைத்தும் ஸ்டார் ஹோட்டல் கழிவறைகள் போலப் பளபளவெனக் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு நறுமணத்துடன் இருக்கின்றன. கஃபே ஒன்றும் கார்டனுக்குள் இருக்கிறது. நீலக்கடலின் அழகில் நெடுநேரம் திளைத்திருக்கலாம். சொக்க வைக்கும் கடலும் , சுத்தம் மிகுந்த தோட்டமும் நம்மை அங்கேயே கட்டிப்போட்டு விடுகின்றன.
காப்பாட் கடற்கரையிலிருந்து கடலோரமாகவே கொயிலாண்டி மீன்பிடித் துறைமுகம் வரை செல்லும் சாலையின் பெயரே சுனாமி ரோடு என்பதாகும் . கடல் காற்று முகத்தில் அறைய, அரித்துக் கிடக்கும் சாலையில் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டே வெகு கவனமாக டிரைவ் செய்து பாண்டிச்சேரியின் மாஹியைக் கடந்தால் அடுத்து வருவது தலச்சேரி .
ஆடு வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பெயர் பெற்ற தலச்சேரி பிரியாணிக்கும் ஃபேமஸ் ஆனது. நம்மூர் திண்டுக்கல், ஆம்பூர் பிரியாணி களைப் போலத் தலச்சேரி பிரியாணியும் தனித்துவம் வாய்ந்தது. தமிழகத்திலும் ,குறிப்பாகக் கோவையில் பல்வேறு இடங்களில் தலசேரி ரெஸ்ட்ராண்டுகள் அமைந்திருக்கின்றன. இந்தியாவின் முதல் அஃபிஷியல் கிரிக்கெட் மேட்ச் ஆங்கில அணிகளுக்கு இடையே 1800 களின் பிற்பகுதியில் இங்கே தான் நடந்தது என்கிறார்கள். தலச்சேரிக் கோட்டை 1600களில் பிரிட்டிஷாரால் கட்டப்பட்டது. வரலாற்று ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே தலச்சேரிக் கோட்டை மிகவும் பிடித்து விடும்.
கடல் அலைகள் காம்பவுண்டில் மோதிக்கொண்டிருக்கும் தலச்சேரி ரெஸ்டாரண்டில் தலச்சேரியின் ஸ்பெஷலான மட்டன் வகை உணவுகளை ஒரு பிடி பிடித்து விட்டு அங்கிருந்து 15ஆவது நிமிடத்தில் முழப்பிளங்காட் பீச்சை அடைந்தோம்.
ஆசியாவின் நீளமான டிரைவ்-இன் பீச், இந்தியாவின் ஒரே டிரைவ்-இன் பீச் என்ற பெருமைகளுடன் நான்கு கிலோமீட்டருக்கு நீண்டு கிடைக்கிறது இந்த அட்டகாசமான கடற்கரை . விதவிதமான கலர்களில், விதவிதமான டிசைன்களில் , விதவிதமான மேக்குகளில் பைக்குகளும் கார்களும் கடற்கரையை அலங்கரித்துக் கொண்டு அலைகளுக்குள் அதகளம் செய்து கொண்டிருக்கின்றன.
வாட்டர் வேடிங் கொண்ட எஸ்யூவிகள் படகுகளைப் போல அலைகளைக் கிழித்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பறக்கின்றன. இங்கு கால்கள் புதையப் புதைய நடக்க மணல் கிடையாது. கட்டாந்தரை போன்றதொரு கடின மண்ணாலான நிலப்பரப்பாகக் கடற்கரை அமைந்திருக்கிறது . ஆனால் வழுக்குவது இல்லை. மறுபுறம் தோப்புகளும் காடுகளும் செழித்திருக்க, கருநீல நிறத்தில் கடலானது மாலைக்கதிரவனின் பொன்னிறச் செவ்வொளியை எதிரொளித்துக்கொண்டு நம் மனங்களையும், புலன்களையும் மயக்கிக்கொண்டு கிடக்கிறது.
சென்ற முன்புற முறை நண்பகலில் இங்கு வந்திருந்த போது பூவாளியில் தெளிப்பது போலப் பெய்து கொண்டிருந்த மழையில் நனைந்தும் நனையாமலும் இந்தக் கடலைக் கண்டிருக்கிறேன்.
கரையோரம் கேலரிகள் போலப் படிக்கட்டுகள் ஆங்காங்கே கட்டப்பட்டு இருக்கின்றன. காலரியின் ஓரிடத்தில் அழகான சிறிய கூடாரம் ஒன்றில் தேநீர்க் கடை ஒன்று இருந்தது. சமோசா போன்ற கோதுமை மாவுப் பரத்தலில் பேரிச்சம் பழத்தை மசித்துப் பொதித்து வைத்துத் தருகிறார்கள். ஆதவன் படத்தில் ஹவுரா பாலத்தில் வடிவேலு ஜிகர்தண்டா தூதை வாங்கி வாங்கிக் குடித்துத் தள்ளுவது போல இந்த டேட்ஸ் சமோசாவை ஒவ்வொன்றாக வாங்கித் தின்று தள்ள வேண்டும் போன்றதொரு தெய்வீக ருசியில் இருந்தது அந்த சம்சா .
அதோடு நிற்கவில்லை கடைக்கார சேச்சி.... முட்டை சம்சா ஒன்றைச் சுவைத்துப் பார்க்கச் சொல்லிக் கொடுக்க, மொத்த முட்டை சம்சாக்களையும் பார்சல் செய்யச் சொல்லலாம் போல இருந்தது. இது போன்றதொரு சுவையில் எங்கும் இதுவரை முட்டை சம்சாவை நான் ருசித்ததில்லை. நிறைவாக ஒரு குவளை இஞ்சித் தேநீரைப் பருகி விட்டு, "என்ன மாயம் செய்தனையோ....!". என முழப்பிலங்காட்டுக் கடலைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே அங்கிருந்து மெதுவாகக் கிளம்பினோம்.
கண்ணனூர் எனப்படும் கண்ணூரில் அமைந்துள்ள பய்யம்பலம் பீச் நமது அடுத்த இலக்கு. கலங்கரைவிளக்கு ஒளிர, ஒருபுறம் சிட்டியின் நவீனத்தையும், மறுபுறம் இயற்கையின் நளினத்தையும் ஒரு சேர உள்வாங்கிக் கொண்டு இரவும் பகலும் இடையறாது அலை வீசிக்கொண்டிருக்கிறது அரபிக்கடல். மாலைப்பொழுதுகள் பய்யம்பலக் கடற்கரையில் போதை ஏற்றும் பொழுதுகளாக மாற்றம் பெறுகின்றன எனத் தோன்றியது.
கண்ணூரைச் சுற்றி எழார பீச், எடக்காடு பீச், கிழுன்ன பீச், தோட்டட பீச், மீன்குன்னு பீச், பள்ளி மூல பீச்,அழிக்கல் பீச், சால் பீச் எனக் கடற்கரைகள் நிறைந்து கிடக்கின்றன . கடல் அலைகள் முத்தமிடும் காம்பவுண்டுகளைக் கொண்ட அழகுமிகு ரிசார்டுகள் எல்லா பட்ஜெட்டிலும் கிடைக்கின்றன.
கிபி 1500-ல் போர்ர்ச்சுக்கீசியரால் கட்டப்பட்ட கண்ணூர்க் கோட்டை எனப்படும் செயின்ட் ஏஞ்சலோ கோட்டை கண்ணூரின் கடலோரத்தில் வீற்றிருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அழகுமிகு இந்தக் கோட்டை மிஸ் செய்யக்கூடாத ஒன்று .கோட்டையின் அழகும், தூய்மையும், வரலாறும், அங்கிருந்து கிடைக்கும் கடற்காட்சியும், காற்றும் நினைவுகளில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
கோழிக்கோட்டிலும் கண்ணூரிலும் சுற்றித்திரிந்து திரும்பிய பின்னர் அரபிக்கடலின் அலையிசையும் , நீலநிறமும் தொடுவானத்திலிருந்து கிளம்பி இன்னும் கைபிடித்துக் கூட நடந்து வருவது போலவே இருக்கிறது .
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!