இனிக்கும் இலக்கணம்- காற்றிசையும் நாற்றிசையும்.

 காற்றிசை  என்பதை எப்படிப் பிரித்து எழுதலாம்.....?

  காற்று + இசை 

  அப்படியானால் நாற்றிசையை....?

   நாற்று + இசை என்றும் பிரிக்கலாம்.

 நான்கு + திசை என்றும் பிரிக்கலாம்.

   தமிழின் நுட்பமும், ஆழமும், செறிவும், அழகும், வளமையும், தொன்மையும் இங்குதான் உச்சத்தில் நிற்கின்றன.

உண்மையிலேயே காற்றுக்கு இசை உண்டா.... காற்றிலே இசை கலந்திருக்கிறதா.... அல்லது காற்று இசையைத் தோற்றுவிக்கிறதா....?

வைரமுத்துவின் வரியிது....."துளை செல்லும் காற்று மெல்லிசையாதல்  அதிசயம்......!"

  புல்லாங்குழலில் நுழையும் காற்று இசையாக வெளிப்படும் அதிசயத்தைச்  சிந்திக்க ஆரம்பித்தால் அது எல்லைகளற்று விரியும். 

  90களில் வாசித்த மாலனின்  கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது.  காற்று ஆனா பெண்ணா என வினவியிருப்பார்.

 காற்று ,

  இருப்பதைக் கலைக்கிறது; 

எல்லைகளைத் தேடுகிறது;

 எப்போதாவது இசைக்கிறது....!

   அப்படியானால் ஆணா ....?

 

 ஈரம் சுமக்கிறது ;

 இதம் தருகிறது ;

 இலக்கில்லாமல் நடக்கிறது.....!

 ஒருவேளை பெண்ணோ....?

 அற்புதமான வரிகள் அவை . 

மண் ,விண்,அனல், புனல், வளி என்னும் ஐம்பூதங்களில் கண்ணுக்குப் புலப்படாதது காற்று மட்டும்தான்.

  நீரைப் போலஃதொரு பாய்மம்.  உலகின் சந்துபொந்து,  இண்டுஇடுக்கு, மூலை முடுக்கெல்லாம் நீக்கமற  நிரம்பி இருக்கிறது.  இமைப்பொழுது கூட விலகாமல் நம்முடனேயே இருக்கிறது.

 உருவமற்று விரவி இருக்கும் காற்றுக்கு அவ்வளவு விசையும் ஆற்றலும் எங்கிருந்து  வருகின்றன எனத் தெரியவில்லை ‌ .....

 உருவமற்ற காற்று எப்படிக் குளுமையைப் பூசி இதம் தருகிறது எனத் தெரியவில்லை.... 

 உருவமற்ற காற்றில்  எப்படி நறுமணம் கலந்து நாசியை  வருடுகிறது என்பதும் தெரியவில்லை....

 காற்று ஓர் அதிசயம்தான்.

 காற்றும் ஓர் இசைதான் .... காற்றே ஓர் இசைதான் .....!

Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.