எளிய தமிழ் இனிய தமிழ் - இனிக்கும் இலக்கணம்

 

மண்வெட்டி கொடுத்தான் (1)

மண்வெட்டிக் கொடுத்தான் (2) இவ்விரண்டுக்கும் இடையே என்ன வேறுபாடு....?

 மண்வெட்டி கொடுத்தான் எனும் பொழுது மண்வெட்டியைக் கொடுத்தான் எனப் புரிந்து கொள்கிறோம்.

  கூட ஒரு 'க்' சேர்த்து மண்வெட்டிக் கொடுத்தான் என்னும்பொழுது மண்ணை வெட்டிக் கொடுத்தான் எனப் புரிந்து கொள்கிறோம்.

   ஒரே ஓர் எழுத்து சேரும்பொழுது பொருள் எவ்விதம் மாறுகிறது எனப் பார்த்தால், 

    நுட்பமாகப் பொருள் உணர்த்துவதும் தமிழின் சிறப்புகளுள் ஒன்று என்பது புரியும்.

    ஆனால் நடைமுறையில் நாம் இரண்டு இடங்களிலுமே மண்வெட்டி கொடுத்தான் என்று பிழையாகவேதான் எழுதி வருகிறோம். 'க்' சேர்த்து எழுதுவது இல்லை.

 சொல்லின் இறுதியில் 'க்' எனும் மெய் எழுத்து வராது எனும் தவறான புரிதலும், 'க்' சேர்க்காவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற அலட்சியமும், திரும்பத் திரும்ப இவ்விதமாக எழுதப்பட்டதையே படித்துப் பழக்கமாகிவிட்டதுமே காரணம்.

 க்,ச்,த்,ப் எனும் வல்லின மெய்கள் பெரும்பாலான இடங்களில் மிகுந்தே வரும் . இது வலி மிகுதல் எனப்படும். 

மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம். 

 1) . வேலை கொடுத்தான் - க் சேர்க்கவில்லை- வேலையைக் கொடுத்தான். இது சரி .

 வேலைக் கொடுத்தான் - வேல் என்னும் பொருளைக் கொடுத்தான் . இங்கு 'க்' சேர்க்கவில்லையெனில் தவறு.

  2) கடலை பார்த்தான்- ப் சேர்க்கவில்லை - கடலை எனும் உணவுப் பொருளைப் பார்த்தான் ( கடலையைப் பார்த்தான் ) -இது சரி , இங்கு 'ப்' வரக்கூடாது.

 கடலைப் பார்த்தான் - கடல் என்னும் நீர் நிலையைப் பார்த்தான். இங்கு 'ப்' வரவேண்டும்.

3) தந்த பலகை - கொடுத்த பலகை

    தந்தப் பலகை - தந்ததால் செய்யப்பட்ட பலகை.

    4) கத்தி பிடித்தான் - கத்தியைப் பிடித்தான். - சரியான தொடர் .

கத்திப் பிடித்தான் - உரத்த குரல் எழுப்பிப் பிடித்தான். இதுவும் சரியான தொடர் 

5) மூட்டை கட்டினான் - பொருள்களைத் துணியில் அடுக்கி மூட்டை கட்டினான்.

 மூட்டைக் கட்டினான்- உடைந்த எலும்பு மூட்டை (மருந்து வைத்துக்) கட்டினான்.

 6) கோட்டை தாண்டினான்- (பாதுகாப்புக்காக கட்டப்பட்ட) கோட்டையைத் தாண்டினான்.

கோட்டைத் தாண்டினான் - (வரையப்பட்ட) கோடு ஒன்றைத் தாண்டினான்.

 இதுபோல எண்ணற்ற உதாரணங்களை நாம் அடுக்க முடியும்.  எங்கெல்லாம் க்,ச்,த்,ப் வரவேண்டும் , எங்கெல்லாம் வரக்கூடாது என எளிமையாக அறிந்து கொள்ளலாம்.

 இதற்கான இலக்கண விதியை எளிமையாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

நிலைமொழியின் ஈற்றில் க்,ச்,த்,ப் எனும் நான்கு வல்லின மெய்களைச் சேர்ப்பதன் மூலம் பொருளுணர்த்தல் எளிது. 

ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வரும்போது க்,ச்,த்,ப் மிகுந்து வரும் .( இது வேற்றுமை விரி எனப்படும்) . 

 ஐ மறைந்து வரும்போது க்,ச்,த்,ப் மிகாது ( இது வேற்றுமைத் தொகை எனப்படும்.

 வேற்றுமை உருபு தொக்கி வருவதால் வேற்றுமைத்தொகை ) .

 பால் குடித்தான் ( வேற்றுமைத் தொகை)

பாலைக் குடித்தான் ( வேற்றுமை விரி, க் என்ற வல்லின மெய் மிகுந்து வந்தது.)

பால் சுவைத்தான் ( 'ச்' வராது, அதாவது வேற்றுமைத் தொகை , 'ஐ' மறைந்து வந்துள்ளது, எனவே வல்லினம் மிகாது).

பாலைச் சுவைத்தான் .( 'ச்' வரும் , 'ஐ' வந்துள்ளது , அதாவது வேற்றுமை விரி , வல்லின மெய் மிக்கு வரும்.)


பால் பருகினான் ( 'ப்' என்ற வல்லினம் மிகாது)

பாலைப் பருகினான் ( மிகும் )


பால் தெளித்தான் ( த் வராது )

பாலைத் தெளித்தான் ( வரும் )

சுருக்கமாகச் சொன்னால் , ஐ என்ற வேற்றுமை உருபு வரும்பொழுது க்,ச்,த்,ப் என்ற நான்கு வல்லின மெய்களும் முதலில் உள்ள சொல்லின் இறுதியில் வரும் .

ஐ என முடியும் சொற்கள் வேறு , ( சிலை , கலை , மழை .....)இங்கு வல்லினம் மிகாது .

ஐ என்ற உருபால் முடியும் சொற்கள் வேறு ( சிலையை , கலையை , மழையை, கல்லை, மண்ணை, பெற்றோரை, ஊரை , நாட்டை.....) இங்கெல்லாம் வல்லினம் மிகும் . 

 அவ்வளவே .....!



Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?