திரு.நாஞ்சில் நாடன் அவ்ர்களுடனான ஒரு சந்திப்பு!

தமிழின் முதுபெரும் எழுத்தாளரும், எளிமையான ஆனால் சொக்கவைக்கும் நடை கைவரப் பெற்றவரும்,தனது அனுபவங்களைப் பிறர்க்கும் பாடமாக்கும் ஆற்றலுடையவரும், நுட்பமான ஆய்வுப் பார்வை உடையவரும்,பழந்தமிழிலக்கியத்தில் தீராத தேடுதல் வேட்கை கொண்டவரும், எண்ணற்ற வாசகர்களைத் தன்பால் ஈர்த்து வைத்திருப்பவருமான திரு.நாஞ்சில் நாடன் அவர்களை ஏப்ரல் மாதத்தில் கோய‌ம்புத்தூரில் அவரது இல்லத்தில் சந்தித்தேன்!

"சூரல் பம்பிய சிறுகான் யாறு" என்ற தலைப்பில், தமிழின் யாப்பு வகை அனைத்திலும் நான் பாடிய செய்யுள் தொகுதிக்கு அணிந்துரை வாங்குவதன் பொருட்டு அவரில்லஞ்சென்றேன்.
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன் என்ற வரிகளை அவ‌ரித்தில் கண்டேன்.மிகப்பெரிய அறிவுஜீவியின் இல்லத்துக்குள் நுழைகிறோம் என்ற உணர்வைவிட, மிக நெருங்கிய உறவினரின் இல்லத்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே மேலிட்டது.அவரது வரவேற்பும் உபசரிப்பும் அந்த அளவு அன்புடன் இருந்தது.ஏறத்தாழ மூன்றுமணிநேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்ததில், அவரது வாசிப்பின் ஆழம், அறிவின் அடர்த்தி,, பார்வையின் வீச்சு, ஆகியவற்றை உணர்ந்தோம் நானும் , என்னுடன் வந்த எனது இனிய நண்பரும், தமிழாசிரியரும்,இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவருமான திரு.கோவிந்தராஜன் அவர்களும்.

மனிதர் சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை அலசி ஆராய்ந்த பாங்கு என்னில் வியப்பேற்படுத்தியது.தமிழில் மரபுக்கவிதை மீது அவர் கொண்டிருக்கும் காதல் ஆழமானது.மரபின் சுகத்தை உணர்ந்து அனுபவித்திருக்கிறார். இலக்கணம் என்பது எழுத்தாளர்களுக்கு, குறிப்பாகக் கவிஞர்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை ஆணித்தரமாக நிறுவிக் காட்டினார்.
 உயிரியல் துறையிலுமவருக்கு ஆழ்ந்த அறிவும் ஆர்வமும் இருக்கிறது.மஞ்சணத்திப் பூவில் துவங்கி மர வகைகள், மீன் வகைகள், மலர்வகைகள், இலைகள், சிறு பூச்சிகள் எனப் பரந்து விரிகின்றன அவரது அனுபவப் பகிர்தல்கள்.
  தமிழினி இதழில் அவர் எழுதும் கட்டுரைகளையும், அவற்றில் அவர் காட்டும் சங்க மேற்கோள்களையும் படித்து வியந்து போயிருந்த நான், அதுபற்றி அவரிடம் சொன்னேன்.
சங்க இலக்கியத்தில் அவர் செய்திருக்கும் சிறு சிறு ஆய்வுகளும், நுட்பமான தேடல்களும் அடர்த்தி மிகுந்தவை.எனது நூலுக்கு அவர் அளித்திருக்கும் அணிந்துரையே ஓர் ஆய்வுக் கட்டுரை போல் அமைந்திருந்தது."சூரல் பம்பிய சிறுகான் யாறு" என்ற பழந்தமிழில‌க்கண மேற்கோள் பாடலை அவர் விரித்து விளக்கியிருக்கிறார்.

அவரது படைப்புகளை ஆழ்ந்து வாசித்தவன் நான். பல செய்திகளை அவரது படைப்புகளிலிருந்து நான் சிலாகித்துச் சொன்னபோது கூட ஒரு மெலிதான புன்முறுவல் மட்டுமே அவரிடத்தில் வெளிப்பட்டது. அருவி போல் பொழிந்த அவரது கருத்துகளை ஆனந்தமாகக் கேட்டுக் உள்வாங்கிவிட்டு, விடை பெற்று வெளியே வந்தோம்.வழியெங்கும் அவரது கருத்துகளையே நானும் நண்பரும் அசை போட்டபடி வந்தோம்.இலக்கணத்தை அலட்சியப் படுத்துபவரையும், இலக்கணம் அறியாதவர்களையும், அறிவது தேவை இல்லை என்பவர்களையும் பற்றி அவர் ஆதங்கப் பட்டது இன்னும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
தாய்மொழியை ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்தச் சமூகம் எதைச் சாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை, அப்படியே சாதித்தாலும் அதைச் சாதனை என எங்ங்னம் ஏற்றுக் கொள்வதோ தெரியவில்லை!


Comments

  1. நாஞ்சில் நாடன் பற்றி பல விஷயங்களை பகிர்ந்ததற்கு நன்றிகள்..

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?