இப்படியுமா பேசுவது ...?
இன்றைக்கும் தமிழ்நாட்டின் அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மகாபலிபுரம் எனப்படும் மாமல்லபுரம் அன்று
பெருந்திரளால் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது .குறிப்பிட்ட ஒரு துறையைச் சேர்ந்தவர்கள் மிக அதிகமாக வந்திருந்தனர்.
அன்று வந்திருந்த பெருங்கூட்டத்தில் இரண்டு குழுவினரின் உரையாடல்கள் நம்மை உற்றுக் கேட்க வைத்தன.
முதலில் வந்த குழுவில் ஒருவர் தன்னுடன் வந்தவர்களுக்கு மாமல்லபுரத்தின் செறிவான வரலாற்றையும் , சிற்பச் சிறப்பையும் ,கலை நுணுக்கங்களையும் விரிவாக விவரித்தபடி வந்து கொண்டிருந்தார்.
அவரது ஆழமான அறிவும் , விளக்கும் விதமும்
நம்மை வியப்பிலாழ்த்தின.
சிறிது நேரத்தில் மற்றொரு குழுவின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது.
மிக அலட்சியமாக , கேவலமான தொனியில் வரலாற்றையும் , தொன்மையையும் கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று தன்னுடன் வந்தவர்களுக்குத் தனது நகைச்சுவைத் திறனைக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு தனது அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
அவரது ஒவ்வொரு நான்சென்ஸ் காமென்டுகளும், உடன் வந்தவர்களின் சிரிப்பும் நாராசமாக இருந்தது.
நமக்குப் பின்னால் வரும் மடையர்களுக்கு இதுவெல்லாம் தெரியவா போகிறது என்ற
புலிகேசி வசனமொன்றைக் கூறி உரத்த குரலில் சிரித்து அதுபோலத்தான் இதுவெல்லாம் என்று வியாக்கியானம் பேசிக் கொண்டிருந்தார்.
அனைத்துத் தொல்லியல் சான்றுகளுமே கட்டுக்கதைகள் என்பது போலவும் , வரலாற்றாதாரங்கள் யாவுமே புனைகதைகள் என்பது போலவும் அவரது பேச்சு இருந்தது.
காலகட்டங்களையும் வரலாற்றையும் துல்லியமாகக் கணிக்க உதவும் ரேடியோ கார்பன் டேட்டிங், ஜியாலாஜிக் முறைகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் , நாணயங்கள், சாசனங்கள், இலக்கியங்கள் , பயணக் குறிப்புகள் போன்றவற்றையெல்லாம் அவர் கேள்விப்பட்டிருப்பதாகக் கூடத் தெரியவில்லை.
சமுதாயத்தின் பொறுப்பு மிக்க இடத்தில் இருப்பவர்கள் இவ்வாறு மடமை மிகுந்து நடந்து கொள்வது நன்றாக இல்லை.
வரலாறு படைக்காவிட்டாலும் பரவாயில்லை... படிக்கவாவது செய்யலாம்...!
அல்லது வாயை மூடிக் கொண்டிருக்கலாம்....!!
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!