தேக்கடி என்றொரு தெவிட்டாத இன்பம்

 தேக்கடி  என்றதும்    அதன் உலகப் புகழ் பெற்ற போட்டிங் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதையும் தாண்டி ஏகப்பட்ட ஆக்டிவிட்டீஸ் அங்கு உண்டு.

 கார்டன் விசிட்டுகள்,

 அருவிகள்,

 வியூ பாயிண்ட்டுகள்,

 ஆஃப் ரோடு ஜீப் சஃபாரி,

 ரோஸ் கார்டன் ,யானை சவாரி,

 களரி, கதக்களி, ட்ரைபல் டான்ஸ் லைவ் ஷோக்கள் நடக்கும் ஆர்ட்‌ தியேட்டர்கள்,

மிட் நைட் ட்ரெக்கிங், 

ஃபாரஸ்ட் ஸ்டே ,

ஃபுல் டே ட்ரெக்கிங் பேக்கேஜ் ,

3 நாள் ட்ரெக்கிங் பேக்கேஜ்

 என வெரைட்டியான, செமத்தியான ஆப்ஷன்கள் உண்டு.



நைட் ட்ரெக்கிங்கில்

 மாலை 7 -10, இரவு 10-1 , நள்ளிரவு 1-4  என மூன்று டைம் ஸ்லாட்டுகள் உண்டு.

 நாம் நள்ளிரவு 1-4 ஸ்லாட்டை செலக்ட் செய்திருந்தோம் .


கோவையிலிருந்து மாலை கிளம்பி இரவு பதினொரு மணிக்கெல்லாம் புக் செய்திருந்த காட்டேஜுக்கு வந்து சேர்ந்த பிறகு ஒன்றரை மணி நேரம் சின்னதொரு ரெஸ்ட் .


நள்ளிரவு 12: 45 மணிக்கு தேக்கடியில் உள்ள கேரள அரசின் சுற்றுலா மையமான   Bamboo Grove இல் ரிப்போர்ட் செய்யச் சொல்லி இருந்தார்கள்.


 இதில் என்ன பியூட்டி என்றால் நாம் ஆன்லைனில் புக் செய்யும் போது,

 ஐந்தாம் தேதி மாலை கிளம்புகிறோம், 10 மணிக்குள் போய்ச் சேர்வது கஷ்டம், அதனால் நள்ளிரவு ஒரு மணி ஸ்லாட்டை  புக் செய்யலாம் என முடிவு செய்து ஆன்லைனில் புக்கிங் முடித்தோம் .


ஆனால் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு ஆறாம் தேதி ஆகிவிடும் என்பது அந்த நேரத்தில் நமக்குத் தோன்றவில்லை. அதனால் முதல் நாள் இரவே ஒன்பதரை மணிக்கு கைடு கால் செய்து எங்கே வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.‌


ஷாக்கான நமக்கு ஒன்றும் புரியவில்லை .பிறகுதான் நமது தவறு உறைத்தது.  எல்லோரும் இதே தவறைத் தான் செய்கிறார்கள் என்று அடுத்த நாளுக்கு மாற்றித் தந்தார் .


அன்றைய நாளில் நான்கு பேர் கொண்ட எங்களது குழு மட்டும்தான் அந்த ஸ்லாட்டில் இருந்தது. 12 :45 மணிக்கு முன்பாகவே ஆஜராகி ஃபார்மாலிட்டீஸ்  முடித்தோம் .அட்டைகளில் இருந்து தப்பிக்க முழங்கால் வரை கவர் செய்யக்கூடிய லீச் சாக்ஸ்,  டார்ச் லைட் போன்றவற்றைக் கொடுத்தார்கள்.


 சரியாக ஒரு மணிக்கு நடக்கத் தொடங்கினோம்.  டார்க் கலர் டிரஸ் கோடில் வரச் சொல்லி இருந்தார்கள் .

 முன்னால் ஒரு கைடு , பின்னால் துப்பாக்கியுடன் ஒரு வனக்காவலர்.


 நிலவொளி இல்லாத தேய்பிறைக் காலமாதலால் கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி நடந்து கொண்டிருந்தோம் .


செம த்ரில்லான ட்ரெக்கிங் அது.

 பதினைந்து நிமிடங்களுக்குள் திக்குத் தெரியாத அத்துவானக் காட்டுக்குள் இருந்தோம் .கண்ணைக் கட்டிக் காட்டுக்குள் விடுவது என்றால் என்னவென்று அப்போதுதான் புரிந்தது. 


PTR எனப்படும்  இந்தப் பெரியார் டைகர் ரிசர்வ் ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள மிகப்பெரும் மலைக்காடு.

 ஏறத்தாழ 70 புலிகள் இருக்கலாம் எனக் கணிக்கிறேன். அடுத்த டைகர் சென்சஸில் தெரியும்.  அது தவிர நூற்றுக்கணக்கான யானைகள் ,காட்டெருமைகள், வெள்ளைப் புலிகள், சாம்பார் மான்கள்,Malabar grey hornbill, Nilgiri wood pigeon, blue-winged parakeet, Nilgiri flycatcher, crimson-backed sunbird,  white-bellied redstart, black-necked stork, வரையாடு, சிங்க வால் குரங்கு, பறக்கும் அணில் , காட்டுப்‌ பன்றி,மர அணில்‌,‌ லங்கூர் , பன்னூறு வகைத் தாவரங்கள் 

 எனக் கானுயிர்  வாழ்க்கை செறிந்த இந்தியாவின் முக்கியமான சரணாலயங்களில் ஒன்று இது.


 வழிகாட்டிகள் இருவருக்கும் காற்றின் மூலை முடுக்கு, சந்து பொந்தெல்லாம் அத்துப்படியாக இருந்தது .ஆங்காங்கு மான்கள் மற்றும் குரங்குகள் குறுக்கிலும் மறுக்கிலும் ஓடிக்கொண்டிருந்தன. அயலார் வரவையும் , மனித நடமாட்டத்தையும்  உணர்ந்து கொண்ட விலங்குகள்    மற்ற விலங்குகளுக்கும் இந்தச் செய்தியைக் கடத்தி அவற்றின் மொழியில் எச்சரிக்கின்றன . 


புல்வெளி ஒன்று எதிர்பட்டது. அங்கே காட்டெருமைகள்  தூங்கும் அழகே தனி.   

4  காட்டெருமைகள் நான்கு திசைகளிலும் நேராக நின்று காவல் காக்க நடுவில் சில காட்டெருமைகள் தூங்குகின்றன .

முறை வைத்துக் காவலும், தூக்கமும் தொடர்கின்றன.


காட்டில்  இரவின் ஒலி இனம் புரியாததாகவும், இனிமையாகவும் அதே நேரம்  அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது.

ஆங்காங்கு விலங்குகளின் கண்கள் நமது டார்ச் விளக்கொலியில் பட்டு ஜொலி ஜொலிக்கின்றன .பறவைகளின் இறக்கைகள் ஏற்படுத்தும் சடசடவென்ற சத்தம், மரத்துக்கு மரம் தாவுக் குரங்குகளின் சத்தம், எங்கோ கேட்கும் ஓநாய் ,நரிகளின் ஊளை என வித விதமான ஒலிகள் ,

 சில்லென்ற குளிர்நத  காற்றில் எப்போதும் கலந்திருக்கும் ஒரு எச்சரிக்கை உணர்வு என அஃதொரு மறக்க முடியாத அனுபவம் .


அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பக் கொண்டு வந்து சேர்த்தார்கள். சுகமான‌ காஃபிக்குப் பிறகு அறைக்குத் திரும்பியதும் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது.


படகுச்  சவாரிக்குக் காலை 7 :00 மணி, 9:00 மணி, 11:00 மணி  பிற்பகல் 01:00  மணி ,03:00 மணி என ஸ்லாட்டுகள் இருக்கின்றன . பெரியார் ஏரியில் ஒன்றரை மணி நேரம் படகுப் பயணம்.  அதிர்ஷ்டம் இருந்தால் வனவிலங்குகளைப் பார்க்க முடியும் . மிக ரம்மியமான இந்தப் படகு சவாரி வேர்ல்ட் ஃபேமஸ் .


Bamboo Grove இல் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள படகுத் துறைக்கு 12 பஸ்கள் ஷட்டில் சர்வீஸ் அடிக்கின்றன 

நடந்து போக விரும்புவர்கள் Pug Mark Trail எனப்படும் Self Guided Trekking  புக் செய்தால் காட்டுப் பாதையில் நடந்து செல்லலாம்.  புதுவித அனுபவமாக இருக்கும். சுற்றுலாத் துறையின் ஹோட்டல்களான வனப்பாதையில் இருக்கும்  பெரியார் ஹவுஸ் அல்லது ஏரிக்கரையில் இருக்கும் லேக் பேலஸ்  போன்றவற்றில் தங்குவது ட்ரிப்புக்கு  கூடுதல் அழகைத் தரும். 


 நிறைய ஸ்பைஸ் கார்டன்கள்  தேக்கடியைச் சுற்றிலும் இருக்கின்றன.  நூறு ரூபாய் கட்டணத்தில்‌ முழுவதும் சுற்றிக் காட்டிப்  பலவித புதுமையான அரிய தாவரங்களை விளக்கிக் கூறுகிறார்கள்.  வனிலா, அரபிகா, ரோபஸ்டா, லைபீரிகா காஃபி வகைகள் ,கிராம்பு, ஏலம், பட்டை, மிளகு, ஜாதிக்காய், லவங்கம் முதலான பணப்பயிர்களும் மூலிகைகளும் மலர்களும் வாசனைப் பயிர்களும் மரங்களும் பார்க்க வியப்பூட்டுகின்றன.  அங்குள்ள ஸ்டோர்களில் நம் வீட்டுக்கு வாங்கத் தேவையானவை நிறைய இருக்கின்றன .


வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குவிந்து கிடக்கும் தேக்கடியில் மாலை நேரங்களில் ஆர்ட் தியேட்டர்கள் களை கட்டுகின்றன .தற்காப்புக் கலையான களரிப்பயட்டு, கேரளத்தின் பாரம்பரிய நடனமான கதக்களி,  பழங்குடியினரின் நடனம் , மேஜிக் ஷோக்கள் என இந்த நிகழ்ச்சிகளில் ஃபாரினர்கள் நிரம்பி வழிகின்றனர்‌.



சத்திரம் வரை நான்கு மணிநேர ஆஃப் ரோடு ஜீப் சஃபாரி செம ஃபன்னாக இருக்கும்.  மூன்று வியூ பாயிண்ட் களுக்குக் கூட்டிப்போகிறார்கள்.  அங்கிருந்து கிளம்பவே மனம் வராத அளவுக்கு பிரமாண்டமான அழகான மஞ்சு மூடிய  மலை முகடுகள் அவை.


 பிரன்டிப்பாறை அல்லது நெல்லிப்பாறை எனும் பார்டர் ஹைக்கிங் , தொண்டியார் என ஃபுல்டே ஹார்ட்  ட்ரெக்கிங் பேக்கேஜுகள் காலை எட்டு‌மணிக்குத் தொடங்குகின்றன .ஒரு குழுவுக்கு அதிகபட்சம் 12 பேர் . உடன் 2 கைடுகளும் துப்பாக்கியுடன் ஒரு வனக் காவலரும் வருகின்றனர் .

காலை உணவு, மதிய உணவு, குடிநீர்ப் போத்தல்கள்,  ஆப்பிள் ,ஆரஞ்சு வாழைப்பழங்கள் என ஒரு பையில் போட்டு ஆளுக்கு ஒரு பை தருகிறார்கள்.


 லீச் சாக்ஸ்களை மாட்டிக்கொண்டு பையைச் சுமந்து கொண்டு நடந்தால் காடும் மலையும் நம்மைச் 

சில இடங்களில் மிரள வைக்கின்றன;

 சில இடங்களில் குதூகலிக்க வைக்கின்றன; சில இடங்களில் டயர்டாக வைக்கின்றன;

 சில இடங்களில் சொக்க வைக்கின்றன ;

சில இடங்களில் வியக்க வைக்கின்றன.


 9 மணிக்கு மிகப் பெரும் புல்வெளியை ஒட்டிய காட்டில் பிரெக்ஃபஸ்ட்  பேக்கைப் பிரித்தால் வெஜிடபிள் சாண்ட்விச்சும் வாழைப்பழங்களும்....!  


மீண்டும் நடந்தால் ஏறி இறங்கி, இறங்கி ஏறிக் குறுக்கிடும் ஓடைகளைக் கடந்து அருவிகளில் முகம் கழுவி, ஆங்காங்கு சிறு ஓய்வெடுத்து நாம் கொண்டு போயிருந்த டார்க் சாக்லேட் அல்லது பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டு மலையை நெடுக்கு வாக்கிலும் , காட்டைக் குறுக்கு வாக்கிலும் ஊடறுத்து நடந்து கொண்டே இருக்க  மதியம் ஒரு மணிக்கு மலை மீது இருக்கும் சிறு ஃபாரெஸ்ட்   கேம்ப்பில் ஒரு மணி நேர ஓய்வு .


டிபன் பாக்ஸைப்  பிரித்தால் நெய்ச் சோறும், சென்னா மசாலாவும் மதிய உணவுக்காகக் கட்டிக் கொடுத்திருந்தனர். சாப்பிட்டு ஓடையில் கை அலம்பிச் சற்று ஓய்வெடுத்துப் பின் மீண்டும் நடை .


வழியில் யானைகள், காட்டெருமைகள், மான்கள் உட்படப் பலவித விலங்குகள் ,பறவைகள் , தாவரங்கள்  என Flora and Fauna Rich காடு அது. 


மொத்தம் 15 கிலோமீட்டர் தொலைவு . உடல் சற்றுக் களைப்படைந்தாலும் மனம் மலர்ந்து இருந்தது.


 7 ஸ்டார் ஹோட்டல்களில் இருந்து 700 ரூபாய் ரூம்கள் வரை பல்வேறு விலைகளில் ,தரங்களில் விதவிதமான ஹோட்டல்கள், காட்டேஜ்கள், ரிசார்டுகள் தேக்கடியில் குவிந்து கிடக்கின்றன .


தென்னிந்திய, வட இந்திய, கான்டினென்டல் உணவகங்கள்,  ஆன்டிக்,ஸ்பைசஸ்  ஷாப்பிங் எனத் தேக்கடி ஒரு பக்கா பேக்கேஜ்.

மான்சூன் டூரிஸத்துக்கு பெர்ஃபெக்டான லொகேஷனான தேக்கடி மழைக்காலங்களில் அழகின் உச்சத்தில் இருக்கும். 


சித்திரை மாத முழு நிலவு நாளில்  ஆண்டுக்கொருமுறை மட்டுமே அனுமதி கிடைக்கும் கண்ணகி கோவில் எனப்படும் மங்களாதேவி கோவிலுக்கு வாய்ப்பிருந்தால் சென்று வாருங்கள். பழைமையையும் ,‌வரலாற்றையும் ,தனிமையையும் அனுபவிக்கலாம்.


தேக்கடியில்  இருந்து ஒன்றிரண்டு மணி நேரங்களில் முன்டக்காயம் Ghats,  வாகமன், கவி இக்கோ டூரிசம், பருந்தும்பாற, பாஞ்சாலி மேடு ,மஞ்சுமலை, வலஞ்சங்கானம் அருவி, ம்லாமல அருவி, செல்லார் கோயில், ராமக்கல் மேடு, அருவிக்குழி வியூ பாயின்ட்டுகள் என டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்குப் பஞ்சமே இல்லை .


தேனியில் இருந்து தேக்கடி வழியே கோட்டயம் வரை சும்மா ஒரு முறை பேருந்தில் சென்று வந்தாலே போதும் ,சுகமாக இருக்கும்.....!

Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி