பண்புத்தொகை- பண்புப்பெயர்ப் புணர்ச்சி - புணர்ச்சி விதிகள் - ஓர் எளிய விளக்கம்
அருஞ்சுவை என்பதை எவ்வாறு பிரித்து எழுதுவது.... அதில் இருக்கும் இலக்கணம் என்னவென்று நண்பர் பரமசிவம் அவர்கள் கேட்டிருந்தார்.
அருமை + சுவை = அருஞ்சுவை
அருமை என்பதை நாம் அனைவரும் மிகவும் நல்ல என்ற பொருளிலேயே பயன்படுத்துகிறோம். அரிய என்பதே அதன் முதன்மைப் பொருளாகும்.
அருமை + சுவை எப்படி அருஞ்சுவை ஆகிறது ...?
அருஞ்சுவை என்பது ஒரு பண்புத்தொகை. முதலில் பண்புத்தொகை என்றால் என்னவென்று பார்க்கலாம்.
இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்வதைப் புணர்ச்சி என்கிறோம். அவற்றில் முதற்சொல் நிலை மொழி என்றும் இரண்டாம் சொல் வருமொழி என்றும் கூறப்படும். உண்மையில் இரண்டு சொற்கள் புணர்கையில் நிலைமொழியின் ஈற்றெழுத்தும் ( இறுதி எழுத்து) , வருமொழியின் முதலெழுத்தும்தான் புணர்கின்றன.
எவ்வகைப் பொருளின் அடிப்படையில் இச்சொற்கள் பொருந்துகின்றன என்பதைக் கொண்டு வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என இருவகையாகப் பிரிக்கலாம்.
இரண்டு சொற்கள் இணையும் பொழுது அச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளான ஐ,ஆல்,கு,இன்,அது, கண் என்பவை தொக்கியோ( மறைந்து ) அல்லது விரிந்தோ (வெளிப்பட்டு) வந்தால் அது வேற்றுமைப் புணர்ச்சி.
உருபுகள் தொக்கி (மறைந்து) வந்தால் அது வேற்றுமைத் தொகை .
எ-டு:
பால் + குடித்தான் - பால் குடித்தான்
இங்கு பாலைக் குடித்தான் என்பதில் ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து ( தொக்கி ) வந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகை.
தொகாது வந்தால் அதாவது உருபு வெளிப்பட்டு வந்தால் அது வேற்றுமை விரி.
எ-டு:
பால் + குடித்தான் - பாலைக் குடித்தான்
இங்கு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பட்டது .
நிலை மொழியும் வருமொழியும் வேற்றுமைப் பொருள் அல்லாத வழியில் புணர்வது அல்வழிப் புணர்ச்சி.
இது தொகைநிலை, தொகாநிலை என இரு வகைப்படும்.
தொகை நிலையில் ஐந்து வகைப் புணர்ச்சிகள் உண்டு. வினைத்தொகை,
பண்புத்தொகை,
உவமைத்தொகை,
உம்மைத் தொகை,
அன்மொழித்தொகை.
இவற்றில் ஒன்றான பண்புத்தொகைதான் நாம் இன்று பார்க்க இருப்பது.
நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது "பண்புத்தொகை" எனப்படும்.
பண்புத்தொகை என்பது பண்புப் பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல் ஆகும். பண்பைக் குறிப்பது பண்புப்பெயர்.
எ-டு:
நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்களில் சில - செம்மை, பசுமை, வெண்மை, கருமை
எ-டு:
வெண்ணிலவு = வெண்மை + நிலவு ( "மை" என்னும் பண்பு விகுதி வெண்மை என்ற நிறத்தைக் குறிக்கும் பண்புப் பெயருக்கும், நிலவு என்ற பெயர்ச்சொல்லுக்கும் இடையே மறைந்து வந்தது.)
வடிவத்தைக் குறிக்கும் சொற்களில் சில - வட்டம், சதுரம்.
எ-டு:
வட்டப்பாறை = வட்டமான பாறை (’ஆன’ என்னும் பண்பு உருபு மறைந்து வந்தது)
சுவையைக் குறிக்கும் சொற்களில் சில - இனிமை, கசப்பு
எ-டு:
புளிச்சோறு- புளிப்பான சோறு,புளிக்கும் சோறு
குணத்தைக் குறிக்கும் சொற்களில் சில -நன்மை, தீமை.
எ-டு:
பெருங்கடல் - பெருமை + கடல் ( "மை" என்னும் பண்பு விகுதி மறைந்து வந்தது.)
எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கும் சொற்களில் சில - ஒன்று, இரண்டு, பத்து , முழம், சாண்
எ-டு:
மூவேந்தர் = மூன்று + வேந்தர்
இவ்வாறு பல்வேறு வகையான பண்புப்பெயருடன் பெயர்ச்சொல் சேர்ந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
இவ்வகைப் பண்புப்பெயர்ப் புணர்ச்சிகளுக்கு நன்னூல் சில இலக்கண விதிகளை வகுத்துள்ளது.
”ஈறு போதல் இடை உகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்
தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே” - நன்னூல் : 136
பரமசிவம் அவர்கள் கேட்ட ’அருஞ்சுவை’க்கு வருவோம்.
அருமை+ சுவை =அருஞ்சுவை
அருமை என்ற குணம் சார்ந்த பண்புப் பெயர் , சுவை என்ற பெயர்ச்சொல்லுடன் சேர்ந்தது.
அருமை+ சுவை
அரு+ சுவை ( ஈறு போதல் எனும் விதிப்படி நிலைமொழியான அருமை என்பதில் உள்ள ‘மை’ எனும் விகுதி கெட்டது.)
அரு+ ஞ்+ சுவை ( இனம்மிகல் எனும் விதிப்படி வருமொழியின் முதல் எழுத்தான ‘ச்’ ( ச்+உ) என்பதன் இனம் மிகுந்து ‘ஞ்’ தோன்றியது.
பண்புப் பெயர்ப் புணர்ச்சி விதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்புவோர் தொடர்ந்து வாசிக்கலாம்.
”ஈறு போதல் இடை உகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்
தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே” - நன்னூல் : 136
விதி :1 - ஈறு போதல்
ஈறு என்பது இறுதி எழுத்தைக் குறிக்கும்.
எ-டு:
கூர்மை + வாய் = கூர்வாய் ( நிலைமொழியின் ஈற்றெழுத்தான “மை” கெட்டது. )
விதி:2 - இடை உகரம் இ ஆதல்
எ-டு:
பெரியன் =பெருமை+அன்
பெரு + அன் ( ”மை” விகுதி போய் உகரம் இகரம் ஆயிற்று.)
பெரி+ அன்
( நிலைமொழியின் ஈற்றெழுத்தான உ (ரு=ர்+உ) இ என மாறியது)
பெரி+ய்+அன் ( உடம்படு மெய் விதிப்படி இ முன் ய் வந்தது)
பெரியன் - உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ய்+அ = ய என வந்தது )
விதி :3 - ஆதி நீடல்
எ-டு:
மூதூர் = முதுமை + ஊர்
முது + ஊர் ( ஈறுபோதல் )
மூது + ஊர் ( ஆதி நீடல் விதிப்படி ஆதியாகிய முதலெழுத்து நீண்டது)
மூத்+ஊர் ( "உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி நிலைமொழி ஈற்றில் உள்ள
முது ஊர்
(த் + உ) என்பதில் உள்ள உகரம் நீங்கும்.
மூதூர் - த்+ஊ = தூ
(உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி தூ என வந்தது )
விதி: 4 - அடி அகரம் ஐ ஆதல்
பசுமை + தமிழ்= பைந்தமிழ்
பசு+தமிழ் ( ஈறு போதல் )
பைசு + தமிழ் ( அடி அகரம் ஐ ஆதல் )
பை + தமிழ் ( இனையவும் )
பைந்தமிழ் - ( இனம்மிகல் )
விதி :5 - தன்னொற் றிரட்டல்
சிற்றூர் = சிறுமை +ஊர்
சிறுமை + ஊர்
சிறு + ஊர் (“ஈறு போதல்”)
சிற் + ஊர் (“முற்றும் அற்று ஓரோ வழி" -ற்+உ)
சிற் + ற்+ ஊர் (“தன்னொற்றிரட்டல்” - ஒற்று இரட்டித்தது)
சிற்றூர் ( “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” -ற்+ஊ= றூ)
விதி :6 - முன்னின்ற மெய்திரிதல்
செந்தமிழ் = செம்மை + தமிழ்
செம் + தமிழ் ( ஈறு போதல்- மை மறைந்தது)
செ+ ந் + தமிழ் ( ”முன் நின்ற மெய் திரிதல்” - ‘ம்’ என்ற மெய் “ந்” எணும் மெய்யாகத் திரிந்தது.
விதி : 7 - இனம்மிகல்
பசுமை + தமிழ்= பைந்தமிழ்
பசு+தமிழ் ( ஈறு போதல் )
பைசு + தமிழ் ( அடி அகரம் ஐ ஆதல் )
பை + தமிழ் ( இனையவும் )
பை+ந்+தமிழ் - ( இனம்மிகல்- த்+அ என்பதில் “த்” என்ற வல்லின மெய்யின் இனமான “ந்” மிகுந்து வந்தது. )
பைந்தமிழ்.
விதி : 8 இனையவும்
பசுமை + தமிழ்= பைந்தமிழ்
பசு+தமிழ் ( ஈறு போதல் )
பைசு + தமிழ் ( அடி அகரம் ஐ ஆதல் )
பை + தமிழ் ( இனையவும் )
பை+ந்+தமிழ் - ( இனம்மிகல்- த்+அ என்பதில் “த்” என்ற வல்லின மெய்யின் இனமான “ந்” மிகுந்து வந்தது. )
பைந்தமிழ்.
சுருக்கமாகச் சொன்னால் பண்புப்பெயர்கள் புணரும்போது
கடைசி எழுத்து மறைதல்,
இடையில் வரும் உ எனும் எழுத்து இ என்ய்ம் எழுத்தாக மாறுதல்,
முதல் எழுத்து நீண்டு ஒலித்தல்,
முதலில் வரும் அகரம் ஐ எனும் எழுத்தாக மாறுதல்,
அதே மெய்யெழுத்து இரட்டிப்பாகி மீண்டும் வருதல்,
ஏற்கெனவே இருக்கும் மெய்யெழுத்துக்குப் பதிலாக வேறோர் மெய்யெழுத்து வருதல்,
ஏற்கெனவே இருக்கும் எழுத்தின் இன எழுத்து புதிதாகத் தோன்றுதல்,
வேண்டாத எழுத்தை நீக்குதல்
ஆகியவை விதியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!