நீரதிகாரம் - விகடனின் நெடுந்தொடர்

 122 வாரங்கள்....பேரியாற்றுடனேயே  வாழ்ந்தது போல இருக்கிறது. பேரியாற்றின் ஆவேசத்தையும் ,ஆங்காரத்தையும் ,அபரிமிதத்தையும் , மூர்க்கத்தையும் , பெருக்கையும் கூடவே இருந்து பார்த்து, அதிர்ந்து, வியந்து, பயந்து,மகிழ்ந்து நிறைந்தது போல இருக்கிறது.


விகடனில் 122 வாரங்களாக வந்து கொண்டிருந்த முல்லைப் பெரியார் அணை உருவான வரலாற்றுத் தொடரான நீரதிகாரம் சென்ற வாரம் முற்றுப் பெற்றதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


 அ. வெண்ணிலா அவர்களின் சொக்க வைக்கும் சொல்லாடல்களும் , நெகிழ வைக்கும் எழுத்து நடையும் வாசிப்போரை வசப்படுத்தி வைத்துக் கொள்கின்றன.


ஒரு வரலாற்றுப் புதினம் என்றாலே பெருமளவு தரவுகள் தேவைப்படும். அத்தனையையும்  திரட்டுவதற்கு அவர் கொடுத்திருக்கும் உழைப்பை ஊகிக்க முடிகிறது.


வெறுமனே தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் மட்டும் அடுக்காமல் அவற்றைத் தொகுத்துச் சுவைபடப் புதினமாக்கியதோடு மட்டுமின்றி 19 ஆம் நூற்றாண்டில் நம்மை வாழ வைத்தும் இருக்கிறார்.


தாது வருடப் பஞ்சத்தின் கோரத்தையும் ,மதுரை ராமநாதபுர மாவட்டங்களின் வறட்சியையும்  பதைக்கப் பதைக்கப் பதிவு செய்த வெண்ணிலா அதே நேரம் கேரளத்தின் அதிமழையையும், பெருவெள்ளத்தையும் நெஞ்சை உலுக்கும்படி பதிவு செய்கிறார்.


"பேஞ்சும் கெடுக்கும் காஞ்சும் கெடுக்கும்" என்ற மழை குறித்த சொலவடை அப்படியே உண்மையாகிப் போகிறது.


 அரசியல், பொருளாதார, சமூகத் தளங்களில் நின்று அந்தக் காலகட்டத்து வாழ்க்கை முறையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். 


சென்னை மாகாணத்திலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் பல்வேறு இடங்களில் சுற்றிச் சுழன்று இறுதியில் அணை கட்டும் தேக்கடிப் பகுதியில் மையம் கொண்ட புதினம் தொடராக வெளியாகிக் கொண்டிருந்த இந்த இரண்டு ஆண்டுகளில் தேக்கடிப் பகுதிக்குச் செல்லும்போது எல்லாம் பென்னிகுவிக்கும் கூடவே வந்தது போல ஒரு உணர்வு மேலிட்டது உண்மை.


இதற்கு முன்  எத்துணை  முறை சென்றிருந்தாலும் தெவிட்டவே  தெவிட்டாத தேக்கடியை நீரதிகாரம் தொடரை படித்துக் கொண்டிருந்த இந்த 122 வாரங்களில் மீண்டும் இதற்காகவே பலவித ட்ரெக்கிங் பேக்கேஜ்களின் மூலமும் ,மலையின் கீழ் தேனிப் பகுதியைச் சாலைப் பயணங்களின் வழியாச் சுற்றித் திரிந்ததன் மூலமும் ஓரளவேனும் அந்தக் காலகட்டத்திற்குள் நுழைந்து பார்க்க முடிந்தது.


 ஆனாலும் இப்பொழுது  பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையை வாழ்நாளில் பார்க்கவே முடியாது என்ற ஏக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.


 கண்ணகி கோவிலுக்குக் கூட ஒவ்வோர் ஆண்டும்  சித்திரை மாத முழுநிலவு நாளன்று ஒரே ஒரு முறை அனுமதி வழங்கப்படுகிறது.


 பெரு வெள்ளத்தை ஏற்படுத்தும் பேரியாற்றின் ஒரு பகுதித் தண்ணீரை தாகத்துடன் நிற்கும் வைகையாற்றுடன் கலக்கச் செய்ய இயற்கையுடன் மல்லுக்கட்டிப் போராடி வென்ற கதை புல்லரிக்கவே செய்கிறது.


 இயற்கை மட்டுமல்ல இதற்கு முட்டுக்கட்டை மனிதர்களின் உருவிலும் பல்வேறு முறை வந்துள்ளது.


 இன்றைக்குப் பெரியார் என்று வழங்கப்படும் பேரியாறும் வைகையாறும் காவிரியாறும் சேர, சோழ ,பாண்டியநாடுகளில் பாய்ந்து சிலப்பதிகாரத்தில் புகழப்படும் ஆறுகள் ஆகும்.


 இந்த வரலாற்றை வெகு அழுத்தமாகப் பதிவு செய்த வெண்ணிலா அவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் கவித்துவமும் எதிர்பார்ப்பும் தழுவி நிற்கும் விதத்தில் முடித்திருப்பார்.


  ஆரம்ப அத்தியாயங்களில்  ஒன்றின் இறுதியில் ,'பஞ்சாயத்து முடியும்போது ஈசான மூலையில்  இடி மின்னலுடன் மழை இறங்கியது ' என்று முடித்திருப்பார்.

 இந்தப் பிறவியில் எனக்கு அந்த வரிகள் மறக்காது.


 ஈரமும் வறட்சியும் சொட்டும் இந்த

வரலாற்றை நீங்களும் படித்துப் பாருங்கள்...!

மறக்க மாட்டீர்கள் ...!!


Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி