ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.
இளந்தூறலுடனான இரவு .
11:30 மணிக்குக் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சியை நோக்கிப் புறப்பட்ட பேருந்து ஒன்றில் ஏறிய போது பயணிகளால் அது நிறைந்திருந்தது.
முக்கால்வாசிப் பேர் ஆழ்துயிலிலும் அரைத் துயிலிலும் லயித்திருக்க, சிலரிடமிருந்து வந்த மது வாசனை பேருந்து முழுக்கச் சுழன்று அடித்துக் கொண்டிருந்தது .
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவில்பாளையம், சுந்தராபுரம், ஈச்சனாரி என ஒவ்வொருவரும் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தனர்.
" டிக்கெட் ...டிக்கெட்" எனக் கூறியபடி வந்து கொண்டிருந்த கண்டக்டர் தூங்கி வழிந்து கொண்டிருந்த ஒருவரை எழுப்பினார்.
அவர் சட்டென விழித்துப் பார்த்து " எனக்கு வேண்டாம் " என்றார் பெருந்தன்மையாக.
நடத்துனர் கடுப்பாகி, "வேண்டாம்னா இறங்கிக்க" என்றார் .அந்தப் பயணியோ," இல்ல சார்... நான் டிக்கெட் வாங்கிட்டேன்" என்றார்.
" எப்பய்யா வாங்கினே....? நான் இப்பத் தானே இங்க வரேன்....!" என்றார் நடத்துனர் .
"இல்ல சார் ...நான் கவுண்டம்பாளையத்திலேயே வாங்கிட்டேன்..." என்று அவர் கூலாகக் கூறினார்.
கவுண்டம்பாளையத்தில் இருந்து வந்தவர் உக்கடத்தில் இறங்கி, அடுத்த பேருந்தில் ஏறியதையே மறந்து உறக்கத்தின் பேரானந்த நிலையில் இருக்கிறார் என்ற விவரம் நடத்துனருக்குப் புரிந்து அதை அந்த நபருக்கும் புரிய வைத்தார் .அசடு வழிய டிக்கெட் வாங்கினார் அந்தப் பயணி.
அதன் பிறகு தொடர்ந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டே வந்தவர், மூன்று சீட்டுகள் தள்ளித் தூங்கித் தள்ளிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பி "எங்கே போகணும்..?" எனக் கேட்டார். திடும்மென விழித்தவர், உரக்க "உக்கடம் ஒண்ணு " எனக் காசை நீட்டினார்.
"உக்கடத்துலதான்யா இருக்கிற .....அப்புறம் எதுக்கு உக்கடம்கிற ....எங்க போகணும்னு சொல்லித்தொலை ...!"எனக் கண்டக்டர் எரிச்சல் ஆனதும், " என்னது ......உக்கடம் வந்திருச்சா...?" எனக் கேட்டு அரக்கப் பரக்க எழுந்து இறங்கப்போனவர் சுயநினைவு திரும்பி மீண்டும் வந்து அமர்ந்து "ஒரு கிணத்துக்கடவு" என்று காசை நீட்டினார். இவரும் வேறொரு பேருந்தில் உக்கடம் வரை வந்து பொள்ளாச்சி வண்டியைப் பிடித்தவர். இன்னும் முதல் பேருந்திலேயே இருக்கிறோம் என்ற நினைப்பிலேயே இருந்திருக்கிறார் .
நொந்து கொண்ட நடத்துனர் டிக்கெட்டைக் கொடுத்து விட்டு நகர, முழுபோதையில் தள்ளாடித் தள்ளாடி நின்று கொண்டு எல்லோரையும் தொந்தரவு செய்து கொண்டிருந்த ஒருவரை வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கி விட்டார் . பேருந்து மெல்ல நகரத் துவங்க, இறங்கிய ஆள் ஒரு காலைப் படியிலும் ஒரு காலைத் தரையிலும் வைத்துக் கொண்டு உள்ளே ஏற முயன்று கொண்டிருந்தார்.
கண்டக்டர் படிக்கட்டில் நின்றபடி அவனை ஏறவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தார். அவன் நான் ஸ்டாப்பாக, 'நான் என்ன சார் பண்ணினேன்.....?" என்கிற வசனத்தைப் பலவிதமான மாடுலேஷன்களில் சலிக்காமல் கத்திக் கூறியபடியே கண்டக்டரின் கையைப் பிடித்துக் கொண்டு வண்டியை நகர்த்த விடாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.
"டேய் என்ன டென்ஷன் பண்ணாதடா.... போலீஸக் கூப்பிடுவேன்..." என நடத்துனர் பலவாறு சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். பேருந்து நின்று,நின்று மெள்ள நகர அவன் விடுவதாக இல்லை.
வசனத்தையும் கேப் விடாமல் கதறிக் கொண்டிருந்தான் .
கண்டக்டர் " நீ விடப் போறியா இல்லையா...!" என அவனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக அவனைக் கழற்றி விட்டுவிட்டுப் பேருந்து வெளியே வந்து திரும்பிக் கொண்டிருந்தது . இந்தக் களேபரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெரும்பாலானோர் விழித்து விட்டனர். இது எதற்குமே அசராத ஒருவர் ஜன்னலோர இருக்கையில் கருமமே கண்ணாக வாயில் நீரொழுக அப்படி ஒரு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார் . அவரை எப்படியாவது டிக்கெட் வாங்க வைத்து விட வேண்டும் என்ற வெறியில் கண்டக்டரும் அவர் மீது பரிதாபம் கொண்ட வேறு சில பயணிகளும் போராடி அவரை எழுப்பி விட்டனர். ஆற அமர விழித்தவர் அப்படியே ஏறத்தாழ 20 நொடிகள் கண்டக்டரையே வைத்த கண் வாங்காமல் வெளியுலகத்தை மறந்து வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். கண்டக்டர் கூறியது எதுவுமே அவரைப் பாதிக்கவில்லை.
வெறுத்துப்போன நடத்துனர் அடுத்த சீட்டுக்குப் போய்விட , தன் நிலை என்ன என்பதும், தான் இருக்கும் இடம் எது என்பதும், அடுத்துத் தான் செய்ய வேண்டியது என்ன என்பதும் அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து, அவர் அணிந்திருந்த ஆடைகளில் உள்ள அனைத்துப் பாக்கெட்டுகளையும் கையை விட்டுத் துழாவிக் காசைக் கண்டுபிடித்து "ஒரு கற்பகம்...!" என்றவாறு நடத்துனரைப் பார்ப்பதற்குள் அவர் 10 பேருக்கு டிக்கெட் கொடுத்து விட்டிருந்தார். பிறகு எழுந்து போய் டிக்கெட் வாங்கித் திரும்பவும் வந்து அமர்ந்து கொண்டார்.
இது மாதிரி ஒவ்வொரு பிரச்சனையிலும் பேருந்து நடுவில் அமர்ந்திருந்த ஒருவர், "ஆளாளுக்கு இப்படிப் பண்ணினா அவர் என்ன பண்ணுவார் பாவம் ....?" என நடத்துனருக்கு ஆதரவாக அவ்வப்பொழுது குரல் கொடுத்தபடி வந்து கொண்டிருந்தார்.
அவருடைய சமூக அக்கறை அந்த நேரத்தில் "இவரைப் போன்றவர்களால் அல்லவா இன்று மதியம் மூன்றரை மணிக்குக் கூட மழை பெய்தது ....!" என்பது போன்ற எண்ணங்களை பயணியரிடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
சிட்கோவுக்கு முன்பாகவே முன்பாக " ஒரு டிக்கெட் குறையுது...!" என நடத்துனர் டென்ஷனாகி ஒவ்வொருவராக செக் செய்து கொண்டு வந்தார் . கடைசியில் அது யாரென்று பார்த்தால், அவ்வப்போது நடத்துனருக்கு ஆதரவாக சவுண்டு விட்ட அந்த ஆசாமி தான் வாங்க மறந்து விட்டிருந்திருக்கிறார். பரிதாபமாகப் பொள்ளாச்சிக்கு ஒரு டிக்கெட் வாங்கி விட்டுச் சத்தம் இல்லாமல் அமர்ந்து கொண்டார்.
அதற்குள் பிரிமியர் மில்ஸ் வந்து விட்டதால் இறங்கிக் கொண்டேன். மழைச்சாரலுக்கு இதமாக அங்கிருந்த அம்மாஸ் கிச்சன் கஃபேயில் அமர்ந்து , நள்ளிரவில் இப்படி ஒரு நான் ஸ்டாப் என்டர்டெயின்மென்ட் கொடுத்த பஸ் போன பாதையைப் போர்ன்விடா பருகியபடியே பார்த்துக் கொண்டிருந்தேன்
வெடிப்பு சிரிப்பு சத்தம்...வருந்தியபடி முடிகிறது
ReplyDelete