நிலம்பூர்ப் பயணம்-நீங்கா நினைவுகள்

 ச்ச்சும்ம்ம்மா ஒரு ரவுண்டு அடித்து வரலாம் எனச் சனிக்கிழமை நாளொன்றின் காலையில் நண்பர் கணேசனை மட்டும் காரில்  ஏற்றிக் கொண்டு வாளையாரில் கேரள நிலத்தை மிதித்தாயிற்று ....அதாவது கார் டயர் மலையாள மண்ணில் உருள ஆரம்பித்தாயிற்று..

பாலக்காட்டைத் தொடுவதற்குள் அடுத்து எங்கே போவது எனப் பல்வேறு சாய்ஸ்களை அலசிப் பார்த்து விட்டு  நிலம்பூரை எட்டிப் பார்த்துவிட்டு வரலாம் என முடிவு செய்து கோழிக்கோட்டுச் சாலையில் வண்டியைத் திருப்பி ஆக்ஸிலேட்டரை அழுத்தத் தொடங்கினேன்.

மலப்புரம் மாவட்டத்தில் மலைகளுக்கிடையில் சுகமாகப் பொதிந்து கிடக்கும் நிலம்பூர் ரோட் -ட்ரிப்புக்கு அட்டகாசமான ஸ்பாட்...   

 மன்னார்க்காட்டில் ஃப்ரூட்ஸ் நிறைந்த லைட்டான பிரெக்ஃபாஸ்ட் சுகமாக முடிந்த பிறகு  சில்லென்ற காலை வெயிலில் மேலாற்றூரையும் பாண்டிக்காட்டையும்  வண்டூரையும்   கடந்து நிலம்பூரை நெருங்கும்போது காலை 10 மணி ஆகிவிட்டிருந்தது.

சாலியாற்றின் கரையில் கிடக்கும் அழகான டவுனான நிலம்பூரில் CONNOLY'S PLOT தான் நாம் விஸிட் செய்யப் போகும் ஃபர்ஸ்ட் ஸ்பாட். 

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மலபார் மாவட்ட கலெக்டர் அமைத்த மாபெரும் தேக்குக் காடு தான் இந்த  CONNOLY'S PLOT.  நிலம்பூருக்கு மேற்குப் புறமாக சாலியாற்றுக்கும் குறிஞ்சிப்புழ ஆற்றுக்கும் இடையில் மலைகள் சூழப் 12 ஏக்கரில் பரந்து நிற்கிறது இந்தத் தேக்கு மரத் தோட்டம்.

வளாகத்துக்குள் பெரிய கார் பார்க்கிங் வசதி இருக்கிறது. டிக்கெட் வாங்கிக்கொண்டு காட்டுக்குள் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் சாலியாற்றங்கரை வருகிறது. ஆற்றில் தண்ணீர் கரையைத் தொட்டுக் கொண்டு ஓடுகிறது .ஆற்றின் மறு கரையில் தேக்குமர க்காடு இருக்கிறது. ஆற்றைக் கடக்க மிக நீளமான தொங்கு பாலம் ஒன்று இருந்திருக்கிறது. தற்போது அது பயன்பாட்டில் இல்லை. கயிற்றால் இழுக்கும் பெரிய படகு ஒன்று ஷட்டில் சர்வீஸ் அடிக்கிறது .

 30 பேர் ஏறியதும் மெல்ல நகர்ந்து அக்கறையில் இறக்கி விட்டு விட்டு அங்கிருக்கும் ஆட்களை ஏற்றிக்கொண்டு ரிட்டன் புறப்படுகிறது .அக்கரையில் இறங்கியதுமே நடக்க ஆரம்பித்தால் வானளாவ உயர்ந்த ஆயிரக்கணக்கான தேக்கு மரங்களைக் காண முடிகிறது.

மரங்களின் ஊடாக நடக்க அழகாகப் பாதை அமைத்திருக்கிறார்கள். ஆங்காங்கு அமர்ந்து கொண்டு ரிலாக்ஸ் செய்யச்  சிறு குடில்களும் அமைத்திருக்கிறார்கள் .முழு காட்டையும் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை குறிப்பிட்ட தொலைவில் கம்பி வேலி அமைத்து அதற்கு மேல் செல்லாதவாறு தடுத்து இருக்கிறார்கள் மிகக் குளுமையான அந்தக் காடு செடி, கொடிகள் நிறைந்து  பிரஷ்ஷான உணர்வைத் தருகிறது.  நடுக்காட்டில்

 150 அடி உயரத்தில்,15 அடி அகலத்தில் அடி பருத்த மிகப்பெரிய தேக்குமரமொன்று வீற்றிருந்தது. நண்பரும் இதழாளருமான தமிழ்த்தென்றல் அவர்கள் ஒருமுறை மேற்கோள் காட்டிய மலையாளக் கவிஞர் குஞ்ஞுண்ணியின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

”ஒரு வனம்

அதிலொரு மரம்

அதிலேயே என்மனம்”  

அழகான வரிகள்...

ஒரு மணி நேரம் அங்கு செலவழித்து விட்டு மீண்டும் நடந்து வந்து காத்திருந்து படகைப் பிடித்து, மறுகரை வந்து மீண்டும் நடந்து பார்க்கிங்கை அடையும் முன் Cafeteria வில்  காஃபியை அருந்தி விட்டு அடுத்த இடமான தேக்கு மியூசியம் அமைந்துள்ள BIO RESOURCES NATURE PARK   நோக்கிக் காரைச் செலுத்தினேன்.

கேரள மாநிலத்தின் திருச்சூரைக் கர்நாடக மாநிலத்தின் மைசூருடன் தமிழ்நாட்டின் கூடலூர் வழியாக மலைகளின் ஊடாக இணைக்கும் நெடுஞ்சாலை நிலம்பூர் வழியே செல்கிறது. அதனால் கார்கள்,லாரிகள், டூரிஸ்ட் பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரூட் பஸ்கள் என  மூன்று மாநில ரெஜிஸ்ட்ரேஷன்களும் கொண்ட வாகனங்களால்  சாலையில்  போக்குவரத்து மிகுதியாக இருக்கிறது.

பாண்டிப்புழ, செருப்புழ, கரிம்புழ ஆறுகள் சாலியாற்றுடன் நிலம்பூரில் கலந்து இப்பகுதியைச் செழிப்பாக்குகின்றன .

அடுத்த  ஐந்தாவது நிமிடத்தில் BIO RESOURCES NATURE  PARK வலப்புறமாக எழிலுடன் வரவேற்றது .

கேரளத்தில் ஒவ்வொரு சுற்றுலாத் தலமும் பராமரிக்கப்படும் விதம் மிகவும் அலாதியானது.  பயோ ரிசோர்ஸஸ் நேச்சர்  பார்க்கினுள் நுழையும் முன்னரே வாகனத்திற்கு நுழைவுச்சீட்டுத்  தந்து முறையாக பார்க் செய்யும் வரை கூடவே வந்து கண்காணிக்கிறார்கள். பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களுக்கு ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லி உள்ளே அனுமதிக்கிறார்கள்.

பார்க்கின் முதல் பகுதியான தேக்கு மர அருங்காட்சியகம் அரண்மனை போல ஜொலிக்கிறது . தேக்கு மரத்தின் வரலாறு, புவியியல், பொருளியல், அறிவியல்,உயிரியல்  அனைத்தையும் அலசி  ஆராய்ந்து அழகுற அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார்கள்.  தேக்கினால் செய்யப்பட்ட பழங்காலப் பொருட்கள், தேக்கு மரத்தின் வகைகள் ,புகைப்படங்கள் தேக்கினால் செய்யப்பட்ட மாதிரிக் காடு என நுணுக்கமாக அமைக்கப்பட்ட  மியூசியம் அது.  பொறுமையாகச் சுற்றிப் பார்த்துவிட்டு மியூசியத்தின் மறுமுனையில் இருக்கும் பூங்காவினுள்  நுழைந்தோம்.

   இந்தியாவின் மிக முக்கியமான BIO RESOURCES NATURE PARK களில்  ஒன்றான இப் பூங்கா அவ்வளவு க்யூட்டாக இருக்கிறது. அழகு உணர்வும், கலைரசனையும், நேர்த்தியும் கொண்டு மலைச் சூழலில் அட்டகாசமாகக் காட்சியளிக்கிறது.   இந்தத் தோட்டம் மொத்தத்தையும் சுற்றிப் பார்த்து  ரசிப்பதற்கு மூன்று மணி நேரம் தேவைப்படும் .

தூய்மைப் பணியாளர்கள் இடைவிடாமல் கூட்டிப் பெருக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.  அத்தனை சுத்தமாக பளிங்கு போலப் பளிச்சென்று சுண்டி இழுக்கிறது பூங்கா.தாவரவியல் பிரியர்களுக்குச் சொர்க்கம் போன்ற ஒரு தோட்டமிது . RET எனப்படும் ( RARE ,ENDANGERED and THREATENED)அரிய, அழிந்து வரும் பல்வேறு வகையான தாவரங்களைப் பராமரித்து வருகிறார்கள்.

ORCHID HOUSE எனப்படும் ஒருவித்திலைப் பூக்கும் தாவரங்களுக்கான குடில் 

HYDROPHYTES GARDEN எனப்படும் மிதக்கும் , பாதி மூழ்கும் மற்றும் வேர்பிடித்த நீர்வாழ்த்தாவரங்களுக்கான தோட்டம்

FERN HOUSE எனப்படும் 80 வகையான  பெரணி,சூரல் ,பன்னம் வகைச் சிற்றிலைப் படர் செடியினங்களுக்கான குடில்

BRYOPHYTES and THALLOPHYTES HOUSE - பாசி வகை, ஈரலுரு மற்றும் கொம்புருத் தாவரங்களுக்கான தனித்துவமிக்க நிழற்குடில்

ROCK GARDEN எனப்படும் கற்பாறைத் தோட்டம்

SUCCULUNT and XEROPHYTE GARDEN எனப்படும் வறண்ட நிலச் சதைப்பற்றுள்ள தாவரங்களுக்கான தோட்டம்

CHIKDREN' S PARK

HERBAL GARDEN எனப்படும் மூலிகைத் தோட்டம்

STAR and RASHI GARDEN எனப் பன்னிரண்டு ராசிகளுக்கும் நட்சத்திரங்களுக்குமான தோட்டம்

MEDICINIC PLANT GARDEN எனப்படும் மருத்துவத் தாவரத் தோட்டம்

BUTTERFLY GARDEN 

RET SPECIES ( RARE , ENDANGERED and THREATENED) எனப்படும் அழிந்து வரும் அரிய வகைத் தாவரங்களுக்கான தோட்டம் 

Palm Garden - 40 வகையான சூழலியல்,பொருளியல் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பனை வகைகளைக் கொண்ட தோட்டம் 

TAXONOMIC GARDEN of MONOCOT and ANGIOSPERM  எனப்படும் 100 வகையான ஒருவித்திலைத் தாவரங்களுக்கான தோட்டம் 

EDIBLE BAMBOO GARDEN - உண்ணத் தகுந்த மூங்கில் வகைகளுக்கான தோட்டம்

GYMNOSPERM GARDEN - திறந்த விதை வித்து மூடியிலித் தாவரங்களுக்கான தோட்டம் 

MEGALITHIC BURIAL SITE - 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் இறந்த பின்பு பெரிய கற்களைக் கொண்டு அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை மூடிய இடங்கள் .

நமது தொன்மையையும் , பண்டைய நாகரிகத்தையும் பறைசாற்றும் இப்பகுதி பெருங்கற்காலத்தை ஆராயும் ஆராய்ச்சியாளர்களின் விருப்பமிகு இடமாகும் இது.

மொத்தத்தில் இந்த Bio Resources Natural Park அழகும் நளினமும் எழிலும் அமைதியும் தூய்மையும் பொங்கி வழியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உயிரியல் பூங்காவாகும் . 

போய்ப்‌பாருங்கள்....! புத்துணர்வடைவீர்கள்.....!!

நிலம்பூருக்கு அருகில் உள்ள வேறு சில அட்டகாசமான லொகேஷன்கள்:

காகாடம்போயில் மலைச்சாரலில் உள்ள 

கோழிப்பாற அருவி , பழசிக் குகைகள்  மற்றும் காகாடம்போயில் அருவி 

அடையன்பாற அருவி

கொடிகுத்தி மலைச்சாரல்

வாழந்தோட் அருவி

நெடுங்காயம் மழைக்காடுகள் 









Comments

  1. அழகு அற்புதமான கட்டுரை

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி