ஏனிந்தக் கொலைவெறி?
இன்றைய கல்விமுறை எத்திசையில் போகிறது என்பதற்கு விடைகள் பலவுண்டு.கல்வி என்பது வயிற்றை நிரப்பும் வழி மட்டும் அன்று, . அது மனிதனை மனிதனாக்கும் ஒன்று என்பது பலருக்கும் தெரியுமோ என்று புரியவில்லை. இன்றைய பள்ளிக் குழந்தைகளைப் பார்த்தால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகத்தான் அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
காலையில் ஒரு தம்ளர் பால் மட்டும் அருந்திவிட்டுப் பள்ளி செல்லும் எத்தனையோ குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். மீறினால் ஓரிரண்டு இட்லிகள் அல்லது பிரட் துண்டுகள் அதனுடன் உண்பார்கள். மதிய உணவாக டப்பவில் அடைக்கப்பட்ட ஜங்க் வகை உணவு.மாலையில் ஏதேனும் கொறித்துவிட்டு ட்யூஷன். "மாலை முழுதும் விளையாட்டு " என்று பாடினார் பாரதியார். மாலையில் பள்ளி விட்டதும் குறைந்தது ஒருமணி நேரமாவது விளையாடுவது என்பது குழந்தைகளில் எத்தனை பேருக்கு வாய்க்கிறது?சக வயதுக் குழந்தைகளோடு சுதந்திரமாக விளையாடுவது எவ்வளவு பயனுள்ளது என்பது பலருக்கும் புரிவதில்லை. உடற்பயிற்சியின் நன்மைகள் மட்டுமின்றி குழு மனப்பான்மை , தலைமைப்பண்பு, வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், என எத்தனையோ பண்புநலன்களை விளையாட்டுக்கள் கற்றுத்தரும். வெறும் வாய்பாடுகள், வினாவிடை, சூத்திர மனனங்கள் மதிப்பெண் பெற உதவுமே தவிர வாழ்வுசார் அனுபவங்களைக் கற்றுத்தரா. வாய்பாடுகளும் வினாவிடைகளும் வேண்டாமென்று சொல்லவில்லை. பள்ளியில் காலை யில் இருந்து அதைத்தானே கற்கிறார்கள்? பிறகு எதற்கு ட்யூஷன்? பெற்றோர்கள் வீட்டுப்பாடத்தை மேற்பார்வையிட வாய்ய்ப்புகள் இல்லாத போது ட்யூஷன் வேண்டும்தான். எனில் அதனை ஆறு மணிக்கு மேல் வைத்துக் கொள்ளலாமே!
" முற்றாத பிஞ்சு மூளைக்குள்ளே வந்தவன் போனவன் வைக்கோல் திணித்ததில் " என்பார் கவிப்பேரரசு வைரமுத்து. குழந்தைகளின் கல்வி இன்றியமையாததுதான் , ஆனால் விளையாட்டுகளும் உடர்பயிற்சியும் சேர்ந்ததுதான் முழுக்கல்வி என்பதை நம்மில் பலரும் உணரவில்லை என நினைக்கிறேன். மதிப்பெண் நோக்கக் கல்வியில் நாம் காட்டும் அக்கறையை சரிவிகித உணவும், நல்ல ஓய்வும், போதுமான உடற்பயிற்சியும் வழங்குவதில் நம்மில் பலரும் காட்டுவதில்லை என்பதே உண்மை!
அழகாகச் சொன்னீர்கள் நண்பா..
ReplyDelete//
ReplyDeleteகுழந்தைகளின் கல்வி இன்றியமையாததுதான் , ஆனால் விளையாட்டுகளும் உடர்பயிற்சியும் சேர்ந்ததுதான் முழுக்கல்வி என்பதை நம்மில் பலரும் உணரவில்லை என நினைக்கிறேன்
//
correct
இந்திய பள்ளிகளில் கிடைக்கும் கல்வி மனிதனை க்ளர்க்காக மாற்றும் வித்தை.. இன்னும் மெக்காலே படிப்பு திட்டத்தையே பிடித்து தொங்கி கொண்டிருப்பதால் பல்வேறு விஷயங்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை...
ReplyDeleteதாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, கல்வி குழந்தைகளுக்குச் சுமையாகாமல் சுகமாகட்டும்
ReplyDelete