Posts

Showing posts from February, 2011

கவிதைச்சவால் 4

மூவேந்தர் தம்மையும் மும்முன்னூ றாய்ப்பாடிப் பாவேந்தர் செய்த பனுவற் றிரட்டின் பெயரென்ன சொல்வீர் பிசகாமல், எங்கு  முயன்றால் முடியாத துண்டு ? விடையிறுப்பீர்! வினாப்பாடலின் பாவகைதான் விடைக்கும் அமைய வேண்டும் !

அன்பர் சுட்டிக்காட்டிய திருத்தம்

"நெற்றிக்கண் திறப்பினும்  குற்றம் குற்றமே" என்ற நக்கீரன் வழிவந்தவன் தமிழன்! நேற்றைய (11.02.2011)இடுகையில்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதில் வரும் "முன்னாள்" சரியே எனச் சுட்டிக்காட்டிய அன்பு நண்பருக்கு நன்றிகள் பல. உங்கள் திருத்தத்தை ஏற்றுக்கொள்கிறேன்! எனவே "முன்னாள்" என்பதை இடமறிந்து பயன்படுத்துவோமாக!

'முன்னாள்' படும்பாடு!

"முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தொல்காப்பியன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார்". "முன்னாள் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு.கபிலன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்" மேற்கண்ட தொடர்களைப்போலப் பல தொடர்களை நாம் அடிக்கடிக் கேள்விப்பட்டிருப்போம்.  சட்டமன்றம் என்பது இன்றும் தொடர்ந்து இயங்கிவரும் ஓர் அமைப்பு . அதனை முன்னாள் சட்ட மன்றம் என்று கூறினால், என்றோ , எப்பொழுதோ இருந்த மன்றம் என்று பொருள்படும். அல்லது இந்நாளில் இருக்கும் சட்டமன்றத்தினின்றும் ஏதோ ஒருவகையில் வேறுபட்ட ஒரு மன்றம் என்னும் பொருள் கொள்ள நேரிடும். ஆனால் இத்தொடரை எழுதியவர் அல்லது கூறியவர் உணர்த்த விரும்புவது என்னவெனில் , சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த திரு.தொல்காப்பியன் என்பதேயாகும்.  அதன் சரியன வடிவமானது,   "சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு .தொல்காப்பியன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார்" என்பதாகும்.அதேபோன்று , "தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. கபிலன் " என்பதே சரியானதும் முறையானதும் ஆகும்.    தமிழறிவோம் ! தலை நிமிர்வோம்!!

தமிழே அமிழ்து

"தமிழுக்கும் அமுதென்று பேர் " என்று பாடினான் கவிஞன்!மெய்தான், தமிழ் என்ற சொல்லைத் திருப்பித் திருப்பி வேகமாகச் சொல்லிப் பாருங்கள், என்னவென்று ஒலிக்கிறது ? அமிழ்து ,அமிழ்து என ஒலிக்கும்!அமிழ்து , அமிழ்து எனப் பலமுறை சொல்லிப்பார்க்கத் த்மிழ், தமிழ் என்று ஒலிக்கும்.  தமிழ் என்ற சொல்லிலேயே தமிழின் தனிச்சிறப்பெழுத்தான 'ழ' அமைவது வியப்பூட்டும் ஒன்றாகும். மேலும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும்மூன்று எழுத்துக்களும் அமைவதும்  சிறப்பாகும்.  த-வல்லினம் மி-மெல்லினம் ழ்-இடையினம் பாவகையில் மிகச்சிறப்பானவைகளுளொன்றாகக கருதப்படும் வெண்பாவின் ஈற்றுச்சீரில் அமைக்கத் தகுந்த 'மலர்' என்னும் வாய்ப்பாட்டில் அமைந்திருப்பது புலவர்க்கு வாய்த்த கொடையாகும். தமிழுக்கு வழங்கப்படும் எத்தனையோ அடைமொழிகளுள் "தீந்தமிழ்" என்பதும் ஒன்றாகும். இதனை எப்படிப் பிரித்து எழுதுவது எனப் பலருக்கும் ஐயமிருக்கிறது.  தீம்+தமிழ் என்பதே தீந்தமிழ் என்றாகிறது. தீம் என்பதற்கு இனிமை அல்லது தித்திப்பு என்பது பொருளாகும்.  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

கவிதைச் சவாலின் விடை

நேற்று (06.02.2011) நான் கேட்ட கவிதைக் கேள்விக்கு நண்பர் இளந்தென்றல் சரியான விடையைச் செப்பியுள்ளார். வாழ்த்துக்கள் இளமாறன் ! இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிலமைந்த என்னுடைய கேள்விக்கு இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிலேயே விடை தந்து அசத்தியுள்ளார்.நான் கேட்ட வினாவும் அவர் அளித்த விடையும் இதோ! "நறுந்தொகை யென்னும் பெரும்புகழ் நூலின் மறுபெயர் சொல்வாய் மறவாமல் வெண்பா உறுதியாய் வெண்டும் உணர்!" இது வினா. "நறுந்தொகை யென்னும் பெரும்புகழ் நூலின் மறுபெயர் வெற்றிவேற்கை என்பதாம் நண்பா உறுதியாய் சொல்வேன் உணர்!" இது விடை! உறுதியாய்ச் சொல்வேன் என்று வலி மிகுந்து வருதல் சிறப்பு! "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது போன்ற ஆன்ம வரிகளைக் கொண்ட நறுந்தொகையின் மறுபெயர் வெற்றிவேற்கை ஆகும். வாழ்க தமிழ்!

சவாலுக்குத் தயாரா?

அன்பு நண்பர்களே உங்களுக்காக அடுத்த கவிதைக் கேள்வியைக் கொணர்ந்துள்ளேன்.வழக்கம் போல எளிமையானதுதான். பாவகை மட்டும் மாறாமல் விடையிறுங்கள் ! வாழ்த்துக்கள் !! "நறுந்தொகை யென்னும் பெரும்புகழ் நூலின் மறுபெயர் சொல்வாய் மறவாமல் வெண்பா உறுதியாய் வேண்டும் உணர்"  மீண்டும் சந்திக்கிறேன் , வணக்கம்!

எளிய தமிழ்! இனிய தமிழ்!!

"அலுவலர் அவனுக்காகப் பரிந்துரை செய்தார் " "கட்டுரையிலிருந்த பிழைகள் திருத்தம் செய்யப்பட்டன " "முன்னுரிமப் பட்டியலிலிருந்து அவனது பெயர் நீக்கம் செய்யப்பட்டது" "சாலை மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது " மேற்கண்ட தொடர்களெல்லாம் அடிக்கடி நமது விழிகளிலும் செவிகளிலும் விழுபவை.சற்றுக் கூர்ந்து நோக்கினால் "செய்தல் " எனும் சொல் அத்தொடர்களில் பெருவிருப்புடன் எடுத்தாளப்பட்டுள்ளது தெரியவரும். "செய்தச்ல் " என்பது ஓர் அருந்தமிழ்ச் சொல்தான்.வினையெச்சங்களை விளக்குவதற்காக நன்னூலார் "செய்" என்ற பகுதியையே  எடுத்துக்காட்டி விளக்கியிருப்பார் . "செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச் செயின் செய்யிய செய்யியர் வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற ஐந்தொன்றாறு முக்காலமும் முறைதரும்" (நூற்பா எண் :343 ) இதன் மூலம் அனைத்து வினைகளுக்குமான எச்சங்களை வருவித்துக்கொள்ளலாம்.இத்துணைச் சிறப்பு மிகுந்த சொல் என்பதற்காக வகைதொகையில்லாமல் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா ?மின்னும் பொன்னூசியைக் கண்ணிலு...

சவாலுக்குத் த்யாரா ?

அன்புப் பார்வையாளர்களே !இதோ அடுத்த கவிதைக்கேள்வி உங்கள் முன்னே!எளிமையானதுதான். விடை தர முயன்று பாருங்கள் . கேள்வி அமைந்துள்ள பாவகையிலேயே உங்களது விடையும் அமைய வேண்டும் ! " விழுமிய பொருளை வெண்பா வில்தரும் பொதுமறை குறளில் தொண்ணூ றாய்வரும் அதிகா ரந்தனை அறிந்தபின் விளம்பு வீரே, பாமா றாதே !" விடைக்காக்க் காத்திருக்கிறேன்!!   வணக்கம் !!!

எளிய தமிழ்! இனிய தமிழ்!!

தேனினுமினியநற் செந்தமிழ் மொழியானது இனிமையும் நறுமையும் எளிமையும் மிக்கது.மிக நுட்பமான கூறுகளை உடையது.பல்லாயிரமாண்டுகள் வரலாறுடையது.இலக்கணச் செழுமை உடையது.செறிவும் அடர்த்தியும் நிறைந்தது.ஆனாலும், கவனக்குறைவு மற்றும் போதிய பயிற்சியின்மை காரணமாக இன்று பலரும் தமிழில் பிழையான  தொடர்களையும் சொற்களையும் பயன்படுத்தி வருகின்றனர். நமது அன்றாடப் பயன்பாட்டில் நாம் பிழையாகப் பயன்படுத்தி வருவனவற்றை இனங்கண்டு அவ்ற்றினைத் திருத்திக்கொள்ள இத்தளம் வாய்ப்பாக அமையும் என்று  நம்புகிறேன். "அவன் அங்கிருந்து விலகிச்செல்ல முயற்சித்தான்" "முயற்சிகள் தவறலாம் ;முயற்சிக்கத் தவறக் கூடாது" "தொடர்ந்து முயற்சி செய்தால் முடியும்"  மேற்கண்ட தொடர்களில் வரும் "முயற்சித்தான்" "முயற்சிக்க "  "முயற்சி செய்தால் " போன்ற சொற்கள் இன்று பரவலாகப் பலராலும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இவை பிழையான சொற்களாகும். முயற்சித்தான் - முயன்றான் முயற்சிக்க - முயல முயற்சி செய்தால் - முயன்றால் முயற்சி செய்தல் - முயலுதல் என்றே வருதல் வரவேண்டும். இவையே இயல்பானவையு...