ஒரு கடல் ஒரு கோட்டை.....ஒரு மலை ஒரு நடை....

 பேகல் கோட்டையிலிருந்து ராணிபுரத்துக்கு ......

  கேரள மாநிலம் காசரகோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பேகல் கோட்டையைப் பார்வையிட எங்களது மூன்று நாள் பயணத்தில் இரண்டாம் நாளை ஒதுக்கி இருந்தோம். கோட்டையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓக்ஸ் ரிசார்ட்டில் இரவு தங்கி , காலையில் ஆளுக்கு 3 பூரிகளை சப்ஜியுடன் உண்டு, காஃபி அருந்தி 9 :30 மணிக்கு எல்லாம் கோட்டையின் நுழைவு வாயிலில் செல்ஃபி எடுக்க ஆரம்பித்து விட்டோம். நுழைவுக் கட்டணம் 25 ரூபாய். ஏக்கரில் பரந்து விரிந்த கோட்டை கொத்தளங்கள் ஒவ்வொன்றையும் நடந்து சென்று முழுமையாகச் சுற்றிப் பார்க்க மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். புல்வெளிகளும் தோட்டங்களுமாக மூன்று பக்கமும் அரபிக் கடலால் சூழப்பட்டு ரம்மியமாகக் காட்சி தருகிறது பேகல் கோட்டை . கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை இள நீல நிறமாகக் கோட்டையின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் கடல் மூன்று திசைகளிலும் தெரிகிறது. 

  கிபி 1650 இல் கட்டப்பட்ட இக்கோட்டை பம்பாய் படத்தில் மணிரத்னம் எடுத்த உயிரே பாடலின் மூலம் வெகு பிரபலமாயிற்று. குறைந்த பட்சம் மூன்று நான்கு மணி நேரம் கோட்டையுடன் ஒன்றி விட முடியும். பணியாளர்கள் கோட்டை வளாகத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். கர்நாடக எல்லை என்பதால் கர்நாடக, மகாராஷ்டிரா, கோவா மாநில மக்கள் நிறையப் பேரைப் பார்க்க முடிகிறது. 

  

 இங்கிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் கேரளத்தின் ஊட்டி என அழைக்கப்படும் இராணிபுரம் இருக்கிறது. ராஜபுரம், பனத்தடி வழியாக ஒன்றரை மணி நேரத்தில் ராணிபுரத்தை அடையலாம் . பெரிய என்ற ஊர் கடந்ததும்  

 ஆள் நடமாட்டம் குறைந்து விடுகிறது. மலைக்காடுகள் துவங்கும் முன்பு ஏதோ ஐரோப்பிய நாட்டுக்குள் பயணிப்பது போலத் தோன்றியது. ராணிபுரத்தை நெருங்கும்போது மழை பிடிக்க ஆரம்பித்து இருந்தது. ராணிபுரம் என்பது ஓர் ஊர் என்று சொல்ல முடியாது. ஐந்தாறு ரிசார்ட்டுகள் இருக்கின்றன... அவ்வளவுதான். சற்றுத் தள்ளிச் சென்றால் சில குடியிருப்புகள் இருக்கின்றன . நான்கு கிலோமீட்டர் ஏறி மலை உச்சியை அடைய வேண்டும். இதுதான் ராணிபுரத்தில் ஸ்பெஷாலிட்டி. 

 டிக்கெட் கவுண்டரை நெருங்கும்போது மழை விட்டிருந்தது. பிற்பகல் 3 மணிக்கு மேல் அனுமதி இல்லை . நாங்கள் 02: 58க்கு டிக்கெட் கவுண்டரில் நின்று கொண்டிருந்தோம் . ஏற்கனவே இருபது கார்களுக்கு மேல் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்தன. நாங்கள் தான் கடைசி. 

 பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை. குடிநீர்க்குடுவை பிளாஸ்டிக்காக இருந்தால் 50 ரூபாய் டெபாசிட் வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்கள். திரும்பி வரும் போது அந்த பாட்டிலைக் கொடுத்தால் ஐம்பது ரூபாயைத் திருப்பித் தருகிறார்கள். எந்த விதத்திலும் சூழலியலுடன் காம்ப்ரமைஸ் செய்து கொள்வது இல்லை. மலை உச்சி சென்று திரும்பி வர மணிக்கணக்கில் ஆகும் என்பதால் அங்கிருந்த ஒரே சின்ன ஹோட்டலில் ஸ்னாக்ஸ் வாங்கச் சென்றோம் . வழியில் சாப்பிட என்று சொன்னதுமே பிஸ்கட்டுகள், சிப்ஸ் ,கடலை, பாப்கார்ன் என பிளாஸ்டிக் கவரில் பேக் செய்யப்பட்டிருந்ததை எல்லாம் பிரித்து சாதாரணத் தாளில் சுற்றித் தருகிறார்கள். 03:10 மணிக்கு ஏற ஆரம்பித்தோம். தொலைவில் தெரிந்த உச்சியைப் பார்த்ததுமே எங்களில் இருவர் ஜகா வாங்கிக் கொண்டார்கள். அவர்களைக் காரிலேயே விட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம் .

 அவதார் படத்தில் வருவது போல அடர்ந்த காடு. Grass hills எனப்படும் புல்வெளி படர்ந்த மலைப்பகுதி... பிறகு மீண்டும் காடு... மீண்டும் Grass hills என மாறி மாறி வருகிறது. நாலே கால் கிலோ மீட்டர் தொலைவுள்ள ட்ரெக்கிங்கில் இரண்டு இடங்களில் ஐந்தாறு பேர் நிற்கக்கூடிய இரண்டு சிறு குடில்கள் அமைத்திருக்கிறார்கள். கல்லெறியும் தொலைவில் அந்தப் பக்கத்தில் கர்நாடக எல்லை இருக்கிறது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஆள் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. ஏறத்தாழ 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குக் குடியிருப்புகளோ மனித நடமாட்டமோ இல்லாத தனிமையான மலைத்தொடர் .

16 டிகிரி செல்சியஸில் குளிர் சில்லென உடலுக்குள் இறங்குகிறது. பனிப்புகை விரவுவதும் விலகுவதுமாக மலையேற்ற நடையைச் சுவாரசியமானதாக ஆக்குகிறது. உச்சியை வந்தடையும்போது ஒன்றரை மணி நேரம் கடந்திருந்தது. இங்கு தாகம் தணிப்பதற்குத் திரவங்களும் கொறிப்பதற்கான சிறு பண்டங்களும் விற்கும் மிகச் சிறிய கடை ஒன்று இருக்கிறது‌ . சூடான தேநீர் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் அருகே சென்றால் மோர், நாரங்க வெள்ளம் போன்ற குளிர்ந்த நீர்மங்கள் மட்டுமே இருக்க, இஞ்சித் துருவலும் கொத்துமல்லித்தழைப் பிசிறல்களும் தூவப்பட்ட அடர்த்தியான மோர் ஒரு குவளை நிறைய வாங்கிப் பருகினோம் . நாங்கள் பொட்டலம் கட்டிக்கொண்டு சென்றிருந்த டார்க் சாக்லட்டும், சோளப்பொரியும் அவ்வப்போது எடுத்துக் கொறித்ததில் பாதி தீர்ந்து இருந்தது. 

மலையுச்சியில் இருந்து பார்க்க 360 டிகிரியிலும் அழகு மொத்தமாகக் கொட்டிக் கிடக்கிறது . சற்றுநேரம் குளிரை அனுபவித்தபடி அமர்ந்திருந்துவிட்டு இறங்க ஆரம்பித்தோம். சரியாக 6 மணிக்கு எல்லாம் கீழே வந்து சேர்ந்து ஒளி மங்கி இருள் விழத் தொடங்கிய போது முன்பே புக் செய்திருந்த பீகாக் ராணிபுரம் என்ற காட்டேஜை அடைந்தோம்.

 சுறுசுறுப்பான தேநீருடன் எங்களை வரவேற்றார்கள். மிகத் தனிமையான சூழல், மிகக் குளிரான காலநிலை, மிக அழகான ரிசார்ட், மிக மெலிதான மழை, மிகச் சுவையான ஃபுல்கா ரொட்டிகள்,மிகக் காரமான பெப்பர் சிக்கன் வறுவல்.

 மிகப் பாதுகாப்பான காம்பவுண்டுக்குள் முற்றத்தில் இருந்த உணவு மேஜையில் அமர்ந்தபடி உணவருந்திக்கொண்டு மழையையும் குளிரையும் அனுபவித்தபடி, ராணிபுரத்து மலையுச்சியின் பனிப்புகையையும் பசுமையை ஊடறுத்த நடையையும் மனதுக்குள் அசை போட்டபடி அமர்ந்திருந்தோம்.

 ஒன்பது மணிக்கெல்லாம் மர உச்சியில் இருந்த மரவீட்டில் அடைக்கலம் புக, மழையின் அடர்த்தியும், மழையின் நறுமணமும், மரங்களின் செறிவும், மனிதச் சூழல் அற்ற தனிமையும், மயக்கும் குளிரும் ஆட்கொள்ளத் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது.

 மெய்யும் மனசும் குளிர மீண்டும் வரிகா என்டு ராணிபுரம் பறயாது பறயும்.... நன்னி....!

 மூன்று நாட்களும் பயணத்தைக் குதூகலமாக்கிய 

   திரு. கணேசன் 

  திரு. ஜான்போஸ்கோ

    திரு‌. முகமது ரஃபி 

    திரு. சதாசிவன் 

    ஆகியோருக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும் . 

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி