சுகபேதி
கமல்ஹாசன் ஒரு முறை பேட்டியொன்றில் நாம் ஒவ்வொருவரும் ஒரு அவுன்ஸ் மலத்தையாவது எப்பொழுதும் சுமந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பது போலக் கூறி இருப்பார். உண்மையில் ஒரு அவுன்ஸ் அல்ல அதற்கு மேலும் நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் நமது வயிற்றில் சுமந்து கொண்டே தான் இருக்கிறோம். சற்று முகம் சுளிக்கும் விதமாகத்தான் இனி வரும் வரிகள் இருக்கும்.. இருந்தாலும் உண்மை அதுதான்.
நமது வயிற்றை, குறிப்பாக குடலைச் சுத்தம் செய்வது என்பது உடல் நலத்தின் அடிப்படையும், ஆரம்பமும் ஆகும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் நாம் நமது வயிற்றைச் சுத்தம் செய்து கொள்ள முடியும் . நேரடியாகத் தண்ணீரை குடலுக்குள் விட்டு சுத்தம் செய்வதற்கு உண்டான குழாய்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எப்படியேனும் குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளியில் நமது உடலைச் சுத்தம் செய்வது நல்லது. பிறந்ததிலிருந்து இன்று வரை ஒரு முறை கூடச் சுத்தம் செய்து கொள்ளாமல் இருப்பவர்களை இருப்பவர்கள் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன்.
பொது இடத்தில் நாம் நிற்கும்போது நான்கடி தொலைவில் மனிதக்கழிவுகள் கிடந்தாலே நாம் தெறித்து நகர்ந்து விடுவோம். அப்படியிருக்க அதை நாம் வயிற்றுக்குள்ளேயே வைத்துக்கொண்டு வாழ்ந்தால் எப்படி இருக்கும் ...? நம் உடலினுள் இருக்கும் நாட்பட்ட மலக்கழிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிப் பாறை போல ஆகிவிடும் என்பதை ஆயுர்வேத சிகிச்சைகளில் தெரிந்து கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்கள் ட்ரெட்மில் பயிற்சியில் மூன்றே நாள்களில் இதை உணர்வார்கள்.
நண்பர் ஜெயக்குமார் அவர்கள் எனக்கு ஒரு முறையை அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பு பேதி மாத்திரை உட்கொண்டு அதன் மூலமாக வயிற்றைச் சுத்தம் செய்து வந்தேன். அதில் ஒரு சிக்கல் என்னவெனில் அது ஒரு முழு நாளுக்குமான பிராசஸ் ஆகும் . நண்பகலுக்கு மேல் நுரை தள்ளி விடும்... நாக்கு வறண்டு, கண்கள் சொருகிப் பிற்பகலுக்கு மேல் கை கால்கள் சொத்தென விட்டுப்போக அடுத்த நாள் வரை முழு ஓய்வெடுத்து நமது ஆற்றலை மீட்டுக் கொள்ள வேண்டியது இருக்கும்.
ஆனால் ஜெயக்குமார் எனக்கு அறிமுகப்படுத்திய சுகபேதி முறை உண்மையிலேயே சுகமானது; எளிமையானது; செலவில்லாதது.
மூன்று லிட்டர் குடிநீரைக் கொதிக்க வைத்து, அதில் மூன்று முழு எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து, மூன்று மேசைக்கரண்டி கல் உப்பையும் அதில் கரைத்துக் காலை 6 மணிக்கெல்லாம் அதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கத் தொடங்க வேண்டும். சிறிது நேரத்திலேயே வயிற்றைக் கலக்க ஆரம்பித்து விடும்.
ஓர் ஒன்றரை மணி நேரத்திற்குள் பத்தில் இருந்து 15 முறை கழிவறை சென்று வர வேண்டியது இருக்கும். அதன் பிறகு ரசம் சோறு அல்லது பிளாக் டீ அல்லது மோர் உட்கொள்வதன் மூலம் பேதியாவதை நிறுத்திக் கொள்ளலாம். நீண்ட நாட்களாக அல்லது இதுவரை ஒரு முறை கூட வயிற்றைச் சுத்தம் செய்யாதவர்களுக்கு முதன்முறையாக சுக பேதி சாப்பிடும்போது செய்யும் பொழுது சற்று நேரம் எடுத்து வயிற்றைக் கலக்க ஆரம்பிக்கும். ஆறு ஏழு டம்ளர்கள் குடித்த பிறகும் பிராசஸ் ஸ்டார்ட் ஆகவில்லை எனில் அந்த அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக இரண்டு நிமிடங்கள் நடந்தாலும் பிளாக் காபி ஒரு டம்ளர் இளஞ்சூடாகக் குடித்தாலும் உடனே ஆரம்பித்து விடும்.
இந்தச் சுக பேதி முறையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை யாவது செய்வது நல்லது. அதிகாலை நேரமே இதற்கு உகந்தது. இதில் ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவெனில் ஏழரை எட்டு மணிக்கு எல்லாம் இந்த பிராசஸ் நிறைவடைந்து அதற்குப் பிறகு நாம் வழக்கம் போல நமது அன்றாட வேலைகளைக் கவனிக்கலாம் . பயணம் செல்பவர்கள் கூடச் செல்லலாம். நமது உடம்பிலிருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறாமல் நமது உடல் சோர்ந்து போகாமல் இருக்க இந்தச் சுகபேதி முறை உதவும் . அந்த நாள் முழுவதும் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும் அதனால் தான் இந்த முறை சுகபேதி முறை என்று அழைக்கப்படுகிறது . உடலில் உள்ள கழிவுகள் நமது உடலில் தேங்கி விடாமல் முழுவதுமாக வெளியேற்றிக் கொள்வதன் மூலம் நாம் நலத்துடன் இருப்பதை உணர முடியும் .
காலையில் டாய்லெட்டில் வெகு சிரமப்படுபவர்கள் நிறையப்ப்பேர் இருக்கிறார்கள். மலச்சிக்கலும் மிகக் கேடு விளைவிக்கக் கூடியதே.
வைரமுத்து அவர்களின் பொன்னான வரிகள் இவை :
மலச்சிக்கல் இல்லாமல்
விடிய வேண்டும் ....
மனச்சிக்கல் இல்லாமல்
முடிய வேண்டும்.
பொறுப்புத் துறப்பு : தகவலுக்காக மட்டுமே இங்கு பதிவிடப்படுகிறது. இஃது ஒரு மருத்துவக் குறிப்போ அல்லது மருந்துக்கான பரிந்துரையோ அல்ல . இதனைப் பின்பற்ற விரும்புபவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெற்றுச் செயல்படவும்.
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!