நந்தினியும் ஷிவாத்மிகாவும்
குதிரைகளின் குளம்படிச் சத்தம் அதிகமாகிக் கொண்டே வந்து அப்படியே தேய்ந்து செல்கிறது ....
வடவாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஓசையும், வங்கக்கடலின் பொங்கி எழும் அலை ஓசையும் காதுக்குள் அவ்வப்பொழுது இரைகிறது...
வாளும், வேலும், வில்லம்பும் மோதிக் கொள்ளும் சலங் சலங் என்ற ஓசை ஈரடித் தொலைவில் கேட்கிறது...
தொலைக்காட்சியிலும், youtube இலும், இதழ்களிலும், நேரிலும் ஆங்காங்கு காண நேரிடும் பெண்களை நந்தினியோடும், வானதியோடும், மந்தாகினியோடும் ஒப்பிடத் தோன்றுகிறது ....
சலூனில் ஓடும் டிவியில் திரைப்படத்தில் சரத்குமாரைப் பார்த்ததுமே பழுவூர் அரசருக்குப் பொருத்தமெனமனம் புளகாங்கிதம் அடைகிறது....
நள்ளிரவுகளில் பயணிக்கும் தருணங்களில் பாழடைந்த மண்டபங்களையும், கோவில்களையும் சாலையோரம் தேடத் தோன்றுகிறது....
சற்றுப் பூசினாற் போன்ற தோற்றத்தில் தான் குந்தவை இருந்திருக்க வேண்டும் என அசரீரி ஒலிக்கிறது. ஷிவாத்மிகா ராஜசேகர் நந்தினியாக மனத்திரையில் நடமாடுகிறார் ....
தாள்கள் ஓலைச்சுவடிகளாகத் தெரிகின்றன....
கமுகும் கரும்பும், புன்னையும் கொன்னையும் ,கடம்பமும் காந்தளுமாகச் சாலை மருங்குகள் கண்களில் விரிகின்றன...
பொன்னியின் செல்வனை ஐந்தாம் முறையாகப் படித்துக் கொண்டிருக்கையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன்ஸ் எல்லாம் அடிக்கடி வருகின்றன. இதைவிடப் பேரதிசயங்களும் பெரும் படைப்புகளும் இருந்தாலும், சும்மா சொல்லக்கூடாது... கல்கியின் படைப்பில் பொன்னியின் செல்வன் ஆகப்பெரும் ஆச்சரியங்களுள் ஒன்றுதான்.
கடந்த முறை தஞ்சைப் பெரிய கோயில் மண்டபத்து முற்றத்தின் புல்தரையில் மாலை மயங்கும் நேரத்தில் அமர்ந்து சொக்கிக் கொண்டிருந்தபோது, வாயிலில் அருள்மொழிவர்மனும், கொடும்பாளூர்ப் பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரியும் நின்று கொண்டிருந்ததாகத் தோன்றியது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை .
திரையில் மணிரத்னமும் ரஹ்மானும் என்ன மேஜிக் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை .சில ஆண்டுகளுக்கு முன்பு மேஜிக் லேன்டர்னும் எஸ் எஸ் இன்டர்நேஷனலும் நாடகமாக நிகழ்த்திக் காட்டியது இன்னும் கண்களுக்குள் நிற்கிறது. ஆதித்த கரிகாலனாக பசுபதி நடந்து வரும் அந்த ஒரு சீனே போதும்....
அதற்குப் பிறகு சிலர் நாடகமாக முயன்றாலும் வெறும் வசனங்களாக மட்டுமே அவை நின்று போயின.
புனைவென்றாலும் பொன்னியின் செல்வன் ஒரு பொக்கிஷம்தான்....!
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!