இதைக் கொஞ்சம் வாசிச்சுச்சுட்டுப் போங்க

முன்குறிப்பு:
வெறும் நாஸ்டால்ஜியாவிலோ , இந்த உலகம் போகிற போக்கு எதில் போய் முடியுமோ என்ற எதிர்மறைப் புலம்பலிலோ இதை எழுதவில்லை.

31 அக்டோபர் 1984.... ஊரே பரபரப்பாகப் பேசிக்கொண்டு வானொலிப் பெட்டியின் அருகிலேயே உட்கார்ந்து இருந்தது.

இந்திரா காந்தி அம்மையாரைச் சுட்டுக் கொன்று விட்டதாக ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தது.

"என்னது.... இந்திராகாந்தியை சுட்டுட்டாங்களா....? என்ற அதிர்ச்சிக் கேள்வியச் சுட்ட அன்றே லைவாக மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தபோது அதே பரபரப்பு எனக்கும் தொற்றிக் கொண்டது.

பரபரப்புத் தாங்காமல் அடுத்த நாள் காலை தினத்தந்தி நாளிதழை முதன்முதலாகக் கையில் எடுத்து என்னதான் ஆச்சு எனப் படிக்கத் தொடங்கினேன் .கொலை தொடர்பான செய்திகள் அடுத்தடுத்த நாள்களில் வந்து கொண்டே இருக்க அந்த வயதில் புரிந்தும் புரியாமலும் தற்செயலாக ஆரம்பித்த வாசிப்புப் பழக்கம் வீட்டில் வாங்கும் வார இதழ்களான விகடன், ராணி, தேவி குங்குமம் , ராணி முத்து பிறகு காமிக்ஸ் அடுத்து பூந்தளிர், ரத்ன பாலா சிறுவர் இதழ்கள், ராஜேஷ் குமா, ர் ராஜேந்திர குமார் க்ரைம் நாவல்கள் எனத் தொடர்ந்து 13 வது வயதில் எனது தமிழாசிரியர் ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழ் இலக்கியம் நோக்கித் திரும்பி இன்று வகை தொகை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

9 ,10 வயதுகளில் மாதம் இருமுறை வரும் பூந்தளிர் சிறுவர் இதழுக்காக நாட்களை எண்ணிக்கொண்டு இருந்ததெல்லாம் வரம். 35 ஆண்டுகளாக இன்று வரை விகடனையும் , தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை நாணயம் விகடனையும் மோட்டார் விகடனையும் ஓரிதழ் கூடத் தவறவிட்டது இல்லை.
சுயபுராணம் இத்துடன் நிற்கட்டும் ....

ஆறு ஏழு ஆண்டுகள் முன்பு வரை எங்கு பார்த்தாலும் இருக்கும் புத்தகக் கடைகள், இதழ்கள் விற்கும் பெட்டி கடைகள் இன்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாக இருக்கிறது. முதல் தேதி ஆனதும் காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, கணையாழி, கசடதபற, வடக்கு வாசல், தமிழினி, தடம், சுட்டி விகடன் ,மோட்டார் விகடன், டாக்டர் விகடன், ஸ்போர்ட்ஸ் விகடன், ரசனை என காந்திபுரம் கௌரிசங்கர் அன்னபூர்ணா வாசலில் உள்ள பெட்டிக்கடையில் கை நிறைய வாங்கிக் கொண்டு வருவது வாடிக்கையான நிகழ்வு . அந்தக் கடையை விட்டால் அதற்கு அருகிலேயே ஆர்வி ஹோட்டல் வாசல், மத்தியப் பேருந்து நிலைய உள்வாசல் ,வெளி வாசல், மற்றும் பின்வாசல் அனைத்து பிளாட்ஃபார்ம்கள் என எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம்.
ஆனால் இன்று இந்தக் கடைகள் எதுவுமே இல்லை. இவை தவிரக் கோவையில் ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட கடைகள் இன்று இல்லை. கடைகள் இருந்தாலும் இதழ்கள் இல்லை. பொள்ளாச்சி, திருப்பூரிலும் இதே நிலைதான் .

ஆர் எஸ் புரத்தில் ஒன்று ,சிங்காநல்லூர் சிக்னலில் ஒன்று, ஒண்டிப்புதூரில் இரண்டு, ஹோப்ஸில் ஒன்று என அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன இதழ்கள் விற்கும் கடைகள்.

பத்தாண்டுகளுக்கு முன்பாகவே சந்திப்பிழைகளைக் காணச் சகிக்காமல் தமிழ் நாளிதழ்கள் படிப்பதை நிறுத்தி விட்டேன். தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை டைம்ஸ் ஆஃப் இந்தியா படிக்காமல் அந்த நாள் முழுமை எனக்கு அடைவதில்லை .

அண்மையில் வீடு மாறிய பிறகு , உலகிலேயே அதிகம் பேர் படிக்கும் ஆங்கில நாளிதழுக்கு ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்தேன் . ஆனால் பேப்பர் ஏஜென்ட் அரை கிலோமீட்டர் தொலைவு முன்பாக உள்ள ஒரு பேக்கரி வரை மட்டுமே வருவதாகவும், ஒரு பேப்பருக்காக அதற்கு மேல் வந்தால் கட்டாது என்றும் கூறி அந்த பேக்கரியிலேயே கொடுத்து விடுகிறார் . எனக்கும் எப்படியாவது பேப்பர் வந்தால் போதும் என்பதால் சம்மதித்து விட்டு அங்கே போய் வாங்கிக் கொள்கிறேன்
.
அவர் சொன்ன தகவலில் அதிர்ச்சி என்னவென்றால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 500 பேப்பர் போய்க்கொண்டிருந்த இந்த பகுதியில் இன்று 50 பேப்பர்கள் மட்டுமே போகிறது என்பதுதான்.

மக்கள் whatsapp யூனிவர்சிட்டியில் வாசிப்பதே போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள் என நினைக்கிறேன்.

அதையும் தாண்டி மக்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்தபோது டெக்னாலஜியின் புரட்சி புரிந்தது. கிண்டில், கூகுள் புக்ஸ் என ஒரு பக்கம் கொடிகட்டிப் பறக்கின்ற நிலையில் பைஞ்ச், பிளாக்ஸ், பிரதிலிபி என அனைவரும் படிக்கிற, எழுதுகிற வாய்ப்புகள் பெருமளவில் இருக்கின்றன.

அண்மையில் கவிஞரும் நண்பருமான திரு .ரகுநாதன் அவர்கள் அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் ஆலா என்ற ஆப் ஒரு புதுமையான முயற்சியாகத் தெரிந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளின் திரட்டியாகப் புது அனுபவத்தைத் தருகிறது.

தாளின் ஸ்பரிசத்தில் படிக்கும் சுகமம் புத்தகக் கண்காட்சியில் கோடிக்கணக்கில் விற்பனையாகும் புத்தகங்களின் எண்ணிக்கையில் புரிகிறது .கோவை செம்மொழி மாநாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வேன் எடுத்துப் போய் நூல்கள் வாங்கி வந்தது நினைவில் இருக்கிறது .

பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வரப்போகிறது என்பதால், ஏற்கனவே நான்கு முறை படித்திருந்தாலும், படம் பார்ப்பதற்கு முன்வருமுறை படித்து விடலாம் என ஐந்தாவது முறையாக ஆரம்பித்து பைஞ்சு ஆப்பில் ஒரே நாளில் 50 அத்தியாயங்களை இன்று கடந்தாயிற்று.

தொழில்நுட்பம் உண்மையில் ஒரு புரட்சிதான். வாசிக்கும் பழக்கம் இல்லை எனில் வாழ்க்கையே முடிந்து விடும் என்று சொல்லவில்லை .....ஆனாலும் நீங்கள் ஆன்மீகவாதிகள் ஆனாலும், அறிவியல் அறிஞர் ஆனாலும், வணிகர் ஆனாலும், ஆசிரியர் ஆனாலும்,மாணவர் ஆனாலும், மருத்துவரானாலும் , எழுத்தாளர் ஆனாலும் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் காணொளிகளாகவே கண்டு கொண்டிருப்பது மட்டும் போதா. வாசித்துத் தெரிந்து கொள்வதும் தேவை... அது வீரியமானவை கூட...! 

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி