கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா-2022

 கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நேற்று ஞாயிறு அன்று களைகட்டி இருந்தது. 267 அரங்குகளில் நூல்களைக் குவித்து வைத்திருந்தார்கள் .பல்வேறு நிகழ்வுகளும் மேடையில் நிகழ்ந்து கொண்டிருக்க ,ஆண் ,பெண் என அனைத்து வயதினரும் ஆர்வமாக வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர்.


 இளைஞர்கள் பலரும் நூல்கள் வாங்குவது ஒரு நல்ல அறிகுறியாகத் தென்பட்டது. என்ன வாங்குகிறார்கள் என மெதுவாக நோட்டமிட்டபோது பல துறைகளைச் சார்ந்த நூல்களையும் வாங்குகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது .

 

தன் முன்னேற்ற நூல்களை நிறையப் பேர் வாங்கிக் கொண்டிருந்தனர். நேர்மறை எண்ணங்களே வெற்றிக்கான முதல் படி என்பது அனுபவத்தால் உணர்ந்த உண்மை என்பதால் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் இவ்வகை நூல்கள் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.


 தஸ்தாயெவ்ஸ்கி, காஃப்கா, ஆன்டன்‌செகாவ் போன்றோரின் மொழிபெயர்ப்புகளை இளைய தலைமுறையினர் நிறையப் பேர் வாங்கிச் செல்வதையும் பார்த்தேன். கல்லூரி மாணவர் தோற்றத்திலிருந்த ஒருவர் வெண்ணிற இரவுகளை வெளியில் உள்ள பூங்காவில் அமர்ந்து படிக்கவே தொடங்கி இருந்தார் ..

 

மாதத்துக்கு இருநூல்கள் எனும் வழக்கத்துக்கு மாறிவிட்ட நான் முன்பு போலக் கண்காட்சியில் வாங்கிக் குவிப்பதற்குப் பதில் அடுத்த மாதத்துக்கான இரண்டு நூல்களை மட்டும் வாங்கிக் கொண்டேன்.


 சித்ராவிலிருந்து கொடீசியா வரை நடந்தே வந்து சேர்ந்திருந்தால் பசி எடுக்க ஆரம்பித்து விட்டிருந்தது.

 

  டோக்கன் சிஸ்டம் என்பதால் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன்பாக ஒரு தம்பதியர் தமது பத்து வயது மதிக்கத்தக்க மகனுடன் நின்று கொண்டிருந்தனர்.

  அந்தப் பெண்மணி இடையிலேயே உணவு வழங்கும் இடத்துக்குச் சென்று என்னென்ன உணவுகள் இருக்கின்றன எனப் பார்த்து வந்தார்.

   இனி உரையாடல் கீழே:-

   

   " பிரியாணி, சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ், தயிர் சாதம், பஜ்ஜி, போண்டா இதெல்லாம் இருக்குங்க...!"

   

 "அப்படியா.... அப்ப என்ன வாங்கலாம்...?"

 

" எனக்கு ஒரு சப்பாத்தி, ஒரு தயிர் சாதம்... பையனுக்கு ஒரு வெஜ் நூடுல்ஸ்...!"


" ஓகே... எனக்கு ஒரு பிரியாணி வாங்கிக்கிறேன்..."


" அப்பா... எனக்கு பரோட்டா வேணும்..."


" ஓகே..!"


 மீண்டும் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டார்கள். இம்முறை பையனும் சேர்ந்து கொண்டான்.

  "ஒரு சப்பாத்தி...

   ஒரு தயிர் சாதம்...

    ஒரு வெஜ் நூடுல்ஸ்...

     ஒரு எக் பிரியாணி....

      ஒரு பரோட்டா...."

      

மூவரும் சொல்லிக்கொண்டே நகர்ந்தார்கள். வரிசை முன்னேறிக் கொண்டிருந்தது .அவர்களுக்கு முன்பு இப்போது ஒருவர் மட்டுமே இருந்தார்.


 இந்த நேரத்தில் கணவருக்கு மீண்டும் டவுட் வந்துவிட்டது.

 " ஒரு சப்பாத்தி.. ஒரு தயிர் சாதம்..." என ஆரம்பித்தார் .

 அந்தப் பெண் ,

 "ஒரு வெஜ் நூடுல்ஸ்.. ஒரு எக் பிரியாணி.... அப்புறம் ....."என யோசிக்க ஆரம்பித்தார்.

 

" சப்பாத்தி, தயிர் சாதம் ,நூடுல்ஸ், பிரியாணி ….அப்புறம் இன்னொன்னு சொன்னோமே....!"

 எனக் கணவரும் யோசிக்க ஆரம்பித்தார்.

 

" ஆமாம் சப்பாத்தி, தயிர் சாதம், நூடுல்ஸ் பிரியாணி....!" என மனைவியும் இழுத்தார்.


 "சீக்கிரம் சொல்லு.... அடுத்தது நாம தான்...!" இது கணவர்.

 

 "சப்பாத்தி, தயிர்சாதம் ,நூடுல்ஸ், பிரியாணி " என வேகமாக அடுக்கிய அந்தப் பெண் அடுத்து என்ன என யோசிக்க ,

 "பரோட்டா " எனப் பொறுமை தாங்காமல் நான் சொல்லிவிட்டேன்.

 

" ஆமாம் பரோட்டா...." என அனிச்சையாகச் சொல்லிவிட்டு அதற்கப்புறம் "யாருப்பா இது ...!" எனத் திரும்பிப் பார்த்து வெட்கப் புன்னகை பூத்தனர்.


 முட்டை பிரியாணிக்கு டோக்கன் வாங்கிக் கொண்டு போன எனக்கு " முட்டை இல்லை குஸ்கா தான் இருக்கு.. போய் பில்லை மாத்திட்டு வாங்க" எனக் கூறினார்கள்.

 

 மீண்டும் கியூவா என மலைத்து "முட்டைக்குப் பதிலா வேற ஏதாச்சும் கொடுங்க" என டீல் பேசினேன்.

 

 பிரியாணியுடன் இரண்டு மிகப்பெரிய வாழைக்காய் பஜ்ஜிகளை எடுத்துத் தட்டில் வைத்தார். பிரியாணிக்கு பஜ்ஜியா என அப்படியே ஷாக் ஆயிட்டேன்...

 

" தயவு செஞ்சு இதை எடுத்துட்டு அந்தக் காலிபிளவர் சில்லியில் கொஞ்சம் அள்ளிப் போடுங்க" என்று சொன்னேன்.


 சில்லியைக் கை நிறைய அள்ளி வைத்தார் .

 

"புத்தகம் வாங்கப் போன மாதிரி தெரியவில்லை... புத்தியை மாற்ற முடியுமா ...?' என நீங்கள் இப்போது மைண்ட் வாய்ஸ் என நினைத்துச் சத்தமாக பேசுவது எனக்கும் கேட்டு விட்டது...!

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி