அழகுத் தமிழ்ப் பெயர் சூடிய எழில் கொஞ்சும் இடங்கள் ....
பாலொழுகும் பாற:
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கோட்டயம் மாவட்ட எல்லையில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான வாகமனில் உள்ள ஓர் அருவி தான் பாலொழுகும் பாறை. பெயருக்கேற்றவாறு பால்போல நீர் ஒழுகும் இவ்வருவிக்குச் செல்லும் சாலையே மனதை மயக்கும் வண்ணம் இருக்கும். மலைச்சரிவுகளில் கொட்டிக் கொண்டிருக்கும் இவ்வருவியில் குளிக்க முடியாது. தொலைவிலிருந்து கண்டுகளிக்கலாம். பால் ஒழுகும் பாறை என்றாலும் பால் பொழியும் பாறை என்று சொல்வதுதான் பொருத்தமென்பது போல வெண்ணிறத்தில் பிரும்மாண்டமாய் நிற்கிறது இந்த அருவி.பெருந்தேனருவி :
பத்தனம்திட்ட மாவட்டத்தில் சபரிமலைப் பகுதியிலுள்ள எழில் வாய்ந்த ஓர் அருவி பெருந்தேனருவி. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அழகுற வீற்றிருக்கும் பெருந்தேனருவியில் இருந்து கொட்டும் நீர் பம்பை ஆற்றில் கலக்கிறது.
இலவீழாப்பூஞ்சிற:
கோட்டையம் மாவட்டத்தில் உள்ள இச் சுற்றுலாத்தலம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் உன்னதமான அழகு மிகுந்த இடமாகும். இலைகள் விழாத, பூக்களால் ஆன ஏரி அல்லது அணை என்பது இதன் பொருளாகும்.
மிக உயரமான மலைப்பகுதியிலுள்ள இவ்வணையைச் சுற்றியுள்ள மரங்களிலிருந்து வீழும் இலைகள் காற்றில் அடித்துச் செல்லப்படுவதால் அவை எதுவும் அணைக்குள் விழுவதில்லை எனவே இது இலை வீழாப்பூஞ்சிறை என்று பெயர் பெறுகிறது.
வனவாசத்தின் போது திரவுபதி இவ்வேரியில் குளிக்க வந்த நேரத்தில் தேவர்கள் சிலர் அவளது அழகில் மயங்கி அங்கு வந்தபோது அவர்களது பார்வையிலிருந்து திரௌபதியைக் காப்பாற்ற இந்திரன் பூக்களால் திரையிட்டுத் தடுத்து மலைத்தொடர்களை நிரப்பியதால் இலைகள் உள்ளே விழ முடியாமல் போனது என்றும், அகத்தியர் வாழ்ந்த இடம் இஃதென்றும், அவர் இன்னும் இங்கு வாழ்கிறார் என்றும், அங்குள்ள கிருஷ்ணன் கோயிலைக் கட்டிய திரௌபதியின் அட்சய பாத்திரத்தை அவர்தான் பாதுகாக்கிறார் என்றும், ராமாயணத்தில் வனவாசத்தின் போது லட்சுமணன் இங்கு தங்கினார் என்றும் நம்பப்படுகிறது.
தமிழ் என்றாலே அழகுதான். அழகுத் தமிழ்ப் பெயர்களைச் சூடி இயற்கை அழகு பொங்கி வழியும் இவ்விடங்களை வாய்ப்பு அமையும் பொழுது பார்த்து வாருங்கள்.... பரவசப்படுவீர்கள்!
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!