ஏன் நள்ளென் கங்குல்....!

எனது வலைப்பூவுக்கு நள்ளென் கங்குல் என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்தது பற்றி நண்பர்கள் சிலர் அவ்வப்பொழுது கேட்பார்கள். "நள்ளென் கங்குல்" என்ற சொற்றொடர்ப் பயன்பாடு சங்க இலக்கியங்களில் , குறிப்பாக எட்டுத்தொகை நூல்களில் அதிகமாகக் காணப்படும். நள்ளென் யாமம் என்ற தொடரையும் அதிகம் காணலாம். இரண்டுமே ஒரே பொருள் தருபவை தாம். எளிமையாகச் சொல்வதென்றால் நள்ளிரவு என்பது இவற்றின் பொருள்.

நள்ளென் யாமம் என்ற தலைப்பை ஏற்கனவே எனது ஆதர்ச எழுத்தாளர் சிவக்குமார்‌ 'நள்ளெண் யாமம்' எனச் சற்றே மாற்றி எடுத்துக் கொண்டு விட்டதால் 'நள்ளென் கங்குல்' என்ற சொற்களை நான் எடுத்துக்கொண்டேன். தமிழில் நள் என்பது நடு என்பதையும், செறிவுற்ற என்பதையும் நள்ளென் கங்குல் என்பது இருளையும், இரவையும் குறிக்கும்.

பள்ளி நாள்களில் இருந்து சுவையான சங்கப்பாடல்கள் திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டே இருக்கும். அவற்றுள் ஒன்றுதான் 'நள்ளென் கங்குல் என்ற பதப் பயன்பாடு.

சான்றுக்குச் சில பகிர்கிறேன்....

நள்ளிரவு நேரத்தில் மலைநாட்டு முள்ளூர்க் காட்டிலுள்ள நறுமணம் வீசும் மலர்களைச் சூடித் தலைவனோடு ஒத்தவளாக அவனைச் சந்திக்கும் தலைவி , பகல் நேரத்தில் தனது வீட்டில் அவற்றையெல்லாம் உதிர்த்துத் தலையில் எண்ணெயிட்டு வீட்டில் இருப்பவர்களை ஒத்தவளாகி விடுகிறாள் .

தலைவனது தொடர்பை அயலார் அறியாவண்ணம் சரியான கள்வியாகத் தலைவி விளங்குகிறாள்.

" இரண்டறி கள்வி நங்காதலோளே....
...................................
நள்ளென் கங்குல் நம்மோரன்னள்
தமரோரன்னள் வகைறையானே."

சுவையொழுகும் இக் குறுந்தொகைப் பாடலைக் கபிலர் இயற்றியிருக்கிறார்.

கபிலர் குறிஞ்சிக்கு என்றால் அம்மூவனார் என்றோர் அரும்புலவர் இருக்கிறார் ...அவருக்குக் கடலும் கடல் சார்ந்த திணையுமான நெய்தல் .

அவர் ஒரு குறுந்தொகைப் பாடலில் உருகுவார்.

"யாரணங்குற்றனை கடலே
நள்ளென் கங்குலுங் கேட்கும் நின் குரலே"

பிரிவால் வாடும் தலைவி ஒருத்தி கடலைப் பார்த்துக் கேட்கிறாள்.
" இரவு முழுவதும் உன் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறதே.... நீ யாரைப் பிரிந்து வாடுகிறாய் ...?" என்பதைப் போல் இருக்கும் அவளது கேள்வி.

தலைவன் வாராக் காலத்து நள்ளிரவுகளில் கானகத்துள் பறவையொலிகளைக் கேட்கும்போதெல்லாம் தலைவன் தேரேறி வருகிறானோ எனத் தலைவி உறங்காமல் கிடக்கிறாள். இது நற்றிணைப் பாடல்.
'நள்ளென் கங்குல் புள்ளொலி கேட்டொறும்
தேர்மணித் தெள்ளிசை கொல்'

மற்றொரு நற்றிணைப் பாடலில்,
'நள்ளென் கங்குல் கள்வன் போல்' வந்த தலைவனைப் புலவர் பாடுகிறார்.

இரவுக்குறிப் பாடல்கள் நிறையவே உண்டு. தொகையும், பாட்டும் யாமத்தையும் கங்குலையும் இனிதே சுமந்து கொண்டு நமக்கும் இனிமை தருகின்றன. இரவைப் பருகத் தரும் இலக்கியங்கள் இனிமையானவை. இதனால் 'நள்ளென் கங்குல் இயல்பாகவே நமக்குத் தலைப்பாயிற்று.

Comments

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.