குமரகம் - ஆலப்புழ சொகுசுப் படகுவீடு

 ஒரு முறையாவது சென்று வந்தே தீர வேண்டும் என்பதில் கோவாவுக்கு அடுத்தபடியாகக் குமரகம் ஹவுஸ் போட் (kumarakom-houseboat ) பெரும்பாலானோரின் பட்டியலில் இருக்கும்.

இதற்கு முன்பு இரண்டு முறையும் சுள்ளென்ற வெயில் காலத்தில் போய் வந்ததால், இம்முறை அருமை அண்ணன் லட்சுமணசாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மழைக்காலத்துக்  காலையொன்றில் வேம்பநாட்டு ஏரியை நோக்கி வண்டியைக் கிளப்பினோம்.

வேம்பநாடு ஏரி என்பது கேரள மாநிலத்தின் ஆலப்புழ, எர்ணாகுளம் , கோட்டயம் மாவட்டங்களில்  100 கிலோ மீட்டர் நீளத்திலும் 20 கிலோ மீட்டர் அகலத்திலும் பரந்து விரிந்து 5  கிலோ மீட்டர் தூரத்தில் கடலைத் தொட்டுக் கொண்டு கிடக்கும் பிரும்மாண்டமான ஏரி ஆகும்.

இவ்வேரியின் மேற்குக்கரையில் ஆலப்புழயும்  கிழக்குக் கரையில் குமரகமும் ஹவுஸ்போட்களுக்குப் புகழ்பெற்ற இடங்களாகும் .

ஆலப்புழயானது இந்தியாவின் வெனிஸ் என்று  புகழப்படுகிறது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பொதுப் போக்குவரத்துக்குப் படகுகளைப்  பயன்படுத்துகிறார்கள் . பஸ் ஸ்டாப்புகளை போலப் படகுகள் நின்று ஆள் இறக்கி ஏற்றிச் செல்லும் இடங்கள்  போட் ஜெட்டிகள் எனப்படுகின்றன.  வீடுகளில் கார் , பைக் போலப் படகுகள்  வைத்திருக்கின்றனர்.

பொதுப் போக்குவரத்துக்கு மட்டுமின்றி சுற்றுலாத் துறையிலும் இந்தப் படகுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறிதும் பெரிதுமாக 5,000 ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை பலவிதமான போட்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன.

இம்முறை kumarakomhouseboat.in  என்ற தளத்தின் மூலம்  5 பேருக்கான இரண்டு பெட்ரூம்கள் கொண்ட சொகுசுப் படகு ஒன்றினை புக் செய்திருந்தோம்.

கோயம்புத்தூரில் இருந்து குமரகத்திற்கு ஐந்தரை மணி நேரத்தில் காரில் சென்று விடலாம்.  அதிலும் மூவாற்றுப்புழை வழியைத் தவிர்த்துக்  கொச்சி வழியாகச் சென்றால் சேர்த்தல எனும் நகரம் வரை நான்கு வழிச்சாலையில் சொகுசாகப்  பயணித்து அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில்  குமரகத்தை அடைந்து விடலாம்.

பைகளைக் கார் பூட்டில் திணித்துக் கொண்டு பையக் கிளம்பினோம் .

மழையில் நனைந்து சாலை கருப்புத் தங்கம் எனப் பளபளக்க,  தலைக்கு மேல் வானம் மெல்லிய கருமையைப் பூசிக் கொண்டு சிலுசிலுவென ஓயாமல் பூப்போல மழையைப் பெய்து கொண்டிருந்தது .

தளிர்ப்பச்சையாய் இருமருங்கிலும் ஜொலித்துக்கொண்டிருந்த மரங்களும், செடிகளும் கருப்பு வண்ணத்துடன் இயைந்து   வழியெங்கும் விழிகளில் விஷுவல் ட்ரீட்டாக  விரிந்து கொண்டே வந்தன .

தொடக்கமே குதூகலமாக இருந்தது.பாலக்காடு கடந்ததும்  பைபாஸ் ஓரத்தில்  மலர் ரெஸ்ட்ரான்ட் எனும் சிற்றுண்டியகத்தில்   காரை நிறுத்தி நனைந்தும் நனையாமலும்  இறங்கி வேகவேகமாக ஓடி உள்ளே அமர்ந்தோம்.

வெண்ணப்பங்களும், மசால் தோசைகளும்   எங்களைச் சூடாக  வரவேற்றன . கோழிக்கறியில் செய்யப்பட்ட ஏதேனும் ஓர் உணவு வேண்டி எங்கள் சுவையரும்புகள் நச்சரித்தன. எங்களது  விருப்பத்தைப் பரிமாறுபவரிடம் தெரிவித்தோம் .  10 நிமிடங்களில் மிருதுவான கோழிக்கறித்துண்டங்கள்  நிரம்பிய வறுவல் கிண்ணத்தை ஆவி பறக்கக் கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தினார்.  பொதுவாகக் கேரளாவில் காலைச் சிற்றுண்டிக்கே சிக்கன், மீன் ,பீஃப் முட்டை என எல்லா அசைவ உணவு வகைகளும் ரெடியாகிவிடும்.

காலையுணவு கனஜோராக அமைந்தது. பாலக்காட்டுக்கும் திருச்சூருக்கும் இடையே குதிரான் மலையைக் குடைந்து ஒன்றரைக் கிலோ மீட்டர்  தொலைவுக்கு அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் நுழைந்து வெளியேறுவது புதுவித அனுபவமாக இருக்கும். கொச்சி மாநகரைக் கடந்து திருவனந்தபுரம் சாலையில்  சேர்த்தல  நகரை அடைந்து இடப்புறம் திரும்பிக் குமரகத்தை அடைந்தாயிற்று.

நாம் புக் செய்திருந்த ஹவுஸ்போட் டைமிங்கானது  மதியம் 12 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 9 மணி வரையாகும் .  மூன்று வேளை அசைவ உணவு மற்றும் அன்லிமிட்டட் டீ,ஸ்னாக்ஸ்  எல்லாம் சேர்ந்து மொத்தம் 11,500 ரூபாய் கட்டணம்.

ஷேர் செய்யப்பட்ட லொகேஷனில்   காத்துக்கொண்டிருந்த பணியாளர் ஒருவர் நம்மை  வரவேற்று அழைத்துச் சென்றார். 300 மீட்டர் தொலைவு  ஏரிக்கரை ஓரமாக அவர் பின்னாலேயே சென்றால் கார் பார்க்கிங் ஏரியா வருகிறது. அக்கரையில் உலகப்புகழ்பெற்ற குமரகம் பறவைகள் சரணாலயம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கிறது . நமது உடைமைகளை எடுத்துக்கொண்டு கரையோரம் நின்று கொண்டிருக்கும் ஹவுஸ் போட்டுக்குள் கால் வைத்த  நொடியிலேயே அதனுடைய தரம் தெரிகிறது.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் படகு நகர ஆரம்பிக்கிறது ....இல்லை இல்லை.... அந்த சொகுசு பங்களா நகர ஆரம்பிக்கிறது.

அட்டாச்டு பாத்ரூம் கொண்ட இரண்டு பெட்ரூம்கள், டைனிங் ஹால், லிவிங் ரூம் ,  டிரைவர் கேபின், கிச்சன்,  ஸ்டோர் ரூம் , ஸ்டாஃப் ரூம் என முழுவதும் ஏசி வசதியுடன் கூடிய , மர வேலைப்பாடு மிகுந்த அழகான ஹவுஸ்போட் அது.

டிவி, ப்ளூடூத் மியூசிக் சிஸ்டம்,  கேரம்போர்ட் எனப்‌ பொழுதுபோக்கு அம்சங்கள்  அசத்தலாக இருந்தன.  ஆறு படுக்கையறைகள், எட்டு படுக்கையறைகள்,  மீட்டிங் ஹால் கொண்ட படகுகள் கூட இருக்கின்றன.

ஓட்டுனர், சமையலர், மேலாளர் என மூன்று  பணியாளர்கள் நம்முடன் வருகிறார்கள். படகு நகரத்  தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில்  கண்ணாடிக் குவளைகளில்   எலுமிச்சம் பழச்சாற்றை வெல்கம் ட்ரிங்காகக்  கொடுத்தார்கள்.  அடுத்த மூன்று வேளை உணவும் எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு அடையாளமாக இருந்தது அது.  கூச்சப்படாமல் இரண்டு டம்ளர்கள் வாங்கிக் குடித்தேன்.

குறுகிய நீர்ச்சாலையில் இருந்து கடல் போல் விரிந்த ஏரியை அடைந்ததும் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது படகு.

  பல விதமான வண்ணங்களில், வடிவங்களில், அளவுகளில்  ஹவுஸ் போட்கள் அங்கும் இங்குமாக நகர்ந்து ஏரியை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

மனம் போன போக்கில் மழை பெய்து கொண்டிருந்தது. போரடிக்கும்போதெல்லாம்  பத்து நிமிடம் நின்று மீண்டும் பெய்யும் போல.

பரவசம் என்றொரு சொல் இருக்கிறது. அது படகாக உருக்கொண்டு எங்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தது. ஒன்றரை மணி நேரம் கழித்து மதிய உணவுக்காக பதிரமணல் என்ற ஒரு தீவுக் கூட்டத்தின் அருகில் நங்கூரமிட்டுப்  படகை நிறுத்தி னார்கள்.

அக்மார்க் கேரளச் சமையல்.... மட்டை அரிசிச்  சோற்றில் ஊற்றிப் பிசைந்துண்ண கணவா மீன் குழம்பு ,   பொடி மீன் வறுவல்,  பொரித்த அயிலை மீன், முட்டை கோஸ்ப் பொரியல், கொத்தவரங்காய்க்கறி, கோழிக்கறி மிளகுப் பிரட்டல், ரசம், தயிர், அப்பளம் என உணவு மேசையை நிறைத்து வைத்திருந்தார்கள்.

சுளீரென்ற புளிப்பும், சுரீரென்ற உறைப்புமாக மிக நீளமான எலுமிச்சம் பழத் துண்டுகள் நிறைந்த ஊறுகாயை நினைத்தால் இப்போதும் நாவில் நீர் சுரக்கிறது. நிறுத்தி நிதானமாகச் சுவைத்து மகிழ்ந்து முடிக்கும் பொழுது மீண்டும் மழை தொடங்கியிருந்தது.

நங்கூரத்தை அகற்றி முஹம்ம என்ற இடத்தை நோக்கிப் படகு நகரத் தொடங்கியது.  ஆலப்புழ - கோட்டயம் மாவட்டங்களை இணைக்கும் மிக நீளமான பாலத்தின் கீழ் உள்ள அணையைத் தண்ணிமுக்கம் என்ற இடத்தில் காட்டினார்கள்.   இவ்வணையானது முகத்துவாரத்தை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் உள்ள உவர் நீரை ஏரியில் முழுவதுமாக கலந்து விடாதவாறு நன்னீரையும் உவர் நீரையும் பிரிக்கும் விதமாகக் கட்டப்பட்டுள்ளது.

சரியாக மாலை நான்கரை மணிக்கு சுடச்சுட டீ - ஸ்நாக்ஸ்  காபி டேபிளில் வைக்கப்பட்டது . டொமாடோ கெட்சப்பும் பக்குவமான பிரெஞ்ச் ஃபிரைஸும் டபுள் ஸ்ட்ராங் டீயுடன் குளிருக்கும் மழைக்கும் அத்தனை பொருத்தமாக இருந்தது.

50 அடி ஆழம் கொண்ட ஏரியில் உல்லாசமாக மிதந்து சென்ற படகை அடுத்து ஒரு கரையில் நிறுத்தினார்கள். ஃபிரெஷ்ஷான மீன்கள், நண்டுகள், இறால் விற்கும் மீன் அங்காடியில் நமக்குப் பிடித்ததை   வாங்கி ஹவுஸ் போட் சமையலரிடம் கொடுத்தால் இரவு உணவுக்குச் சமைத்துக் கொடுத்து விடுகிறார்கள்.  நாங்கள் கறிமீன் வாங்கிக் கொடுத்துச் சப்புக்கொட்டிக் காத்திருக்கத் தொடங்கினோம்.

சரியாக ஐந்தரை மணிக்கு ஹால்ட் அடிக்கிறார்கள்.  ஏரிக்கரையில் தென்னை மரங்களோடு சேர்த்துக் கயிற்றால் பிணைத்துக் கட்டி நிறுத்தினார்கள். நிறைய ஹவுஸ் போட்கள் அந்த ஏரியாவில் halt ஆகத் தொடங்கின.  அருகிலுள்ள வீடு ஒன்றிலிருந்து நீண்டு கனத்த கேபிள் ஒன்றின் மூலம் இரவு முழுவதும் படகுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டு, பேட்டரியையும் சார்ஜ் செய்து கொண்டுவிடுகிறார்கள்.

ரம்மியமான சூழலது.   மாலை மங்கும் வேளையில்  தீவு போன்ற அந்தப்பகுதியில் காலார ஒரு சிற்றுலாப் போய் வருவது  அத்தனை சுகமாய் இருக்கிறது  . இருள் கவியத் தொடங்கும் நேரத்தில் மழையும் இறங்கியது.. . சலிக்காமல் நாங்களனைவரும்  நான்ஸ்டாப்பாக வியந்து கொண்டிருந்த ஜென் நிலை அது .

எட்டு  மணிக்கு ஏகப்பட்ட ஐட்டங்களைக் கொண்டு உணவுமேசையில் கடை விரித்து வைத்திருந்தார்கள். எண்ணெய் பூசாமல் தீயில் நேரடியாக வாட்டப்பட்ட  கோதுமையிலான  ஃபுல்கா ரொட்டிகள், நெய்‌ விடப்பட்ட  டால் ஃப்ரை, கொழுக் மொழுக் என  சிக்கன் மஞ்சூரியன்,  கோபி சிக்ஸ்டிஃபைவ்,  உதிர்த்தெடுத்த சோறு,  மிளகு ரசம் ஆகியவை  எங்களை வேகப்படுத்தின .   இவற்றுடன் வட்டவட்டமாக நறுக்கப்பட்டு மிளகுத்தூள் தூவி  , எலுமிச்சைச்சாறு தெளித்து  அடுக்கப்பட்ட காரட் ,பெரிய வெங்காயம் ,  வெள்ளரி ,தக்காளி கொண்ட வெஜிடபிள் சாலடுக்கு நடுவில்  , நாங்கள் வாங்கிக் கொடுத்திருந்த  கறிமீன் வறுவலைப் பொதித்து வைத்திருந்தனர் .  சமையலரின் கைப்பக்குவம் காலத்துக்கும் மறக்காது .

  ஒன்பதரை மணிக்கெல்லாம் அரைக்குவளை  வெந்நீருடன் தூக்கம் சொக்கிக்  கொண்டு வந்தது.

அடுத்தநாள் காலை  அற்புதமாக விடிந்தது. கதகதப்பான  காஃபியைத் தொடர்ந்து கதிரவனின் காலைக்கதிர்கள் நிலத்தில் பதியுமுன் காலார ஏரிக்கரையோரம் மண்சாலையில்  சிறுநடை பயின்று படகு இல்லம் திரும்பிக்‌ குளித்துத் தயாரானபோது   படகு நகரத் தொடங்கியிருந்தது .  8 மணிக்கு  முட்டைக்கறியுடன் அரிசிப் புட்டு அவித்துப் பரிமாறினார்கள். கருந்தேநீருடன்  கச்சிதமான காலை உணவு.... உண்டு முடித்த பத்தாவது நிமிடத்தில் முதல் நாள் நண்பகல்  புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தோம்.

காலை 9 மணிக்கு செக்-  அவுட் .

நண்பகல் 12:00 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை மொத்த அனுபவமும் அலாதியாக இருந்தது.

சொகுசான, தூய்மையான , அழகான ,நன்கு பராமரிக்கப்படும் ஹவுஸ்போட் ....

  செக்- இன் , உணவு , சிற்றுண்டி என அனைத்துமே முன்பே குறிப்பிடப்பட்டதிலிருந்து  ஒரு நிமிடம் கூட முன்பின் மாறாமல் துல்லியமான, தரமான சேவை....
 
   நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ,நாகரீகமான பணியாளர்கள் ....
  
   சுவை மிகுந்த தரமான பல்சுவை உணவு....
  
சொக்க வைக்கும் இயற்கை அழகு சூழ்ந்த ஏரிகள், தீவுகள் ....

மிக ரம்மியமான காலநிலை .....

100 மதிப்பெண்கள் கொடுத்துவிட்டு அங்கிருந்து காரைக்  கிளப்பினோம். வரும் வழியில்   வெண்மணல்பரப்பு விரிந்த, தூய்மையான மராரிக்குளம் கடற்கரையில்   இரண்டு மணி நேரம் இன்பமாகச் செலவிட்டோம்  .

அங்கிருந்து கொச்சிக்குக்  கடற்கரையை ஒட்டிய சாலையில் கடலைப் பார்த்தவாறே 30 கிலோ மீட்டர் தொலைவு பயணித்தோம்.  
சாலையிலிருந்து  100 மீட்டர் தொலைவில் 
சேத்தி பீச்
திருவிழா பீச்
ஆர்த்தங்கல் பீச்
தைக்கல் பீச்
ஒட்டமசெரி பீச்
ஆறாட்டுவழி பீச்
அந்தகாரனாழி பீச்
சப்பக்கடவு பீச்
செல்லானம்‌ பீச்
வச்சக்கல் பீச்
மாலாக்கல் பீச்
புதென்தோட் பீச்
என ஏகத்துக்கும் பீச் மயமாகவே இருக்க திகட்டத் திகட்டக் கடற்கரைக் காட்சிகளை கார்க் கண்ணாடி வழியாகவே கண்டு ரசிக்க முடிந்தது . எல்லா பீச்சுகளுமே பிக்னிக் ஸ்பாட்டுகள்தாம் .

கொச்சியில்‌ நான்கு வழிச்சாலையில் இணைந்து கோயம்புத்தூருக்கு இனிய நினைவுகளோடு வந்து சேர்ந்தோம் .

நன்றிகள்:
திரு .ரவி
திரு.ரங்கசாமி
திரு.சதாசிவன்
திரு.லட்சுமணசாமி ஆகியோருக்கு .

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?