நப்பீட்டியா

இத்தலைப்பைப் படித்ததுமே நமீபியா, ஜாம்பியா போல ஏதோ ஆப்பிரிக்க நாடொன்றின் பெயர் எனவும். பாட்ரீஷியா, மக்டலீனா போலப் பெண்பால் பெயர் எனவும் நினைக்கத் தோன்றும்.


நம்புங்கள்.... இஃதொரு தமிழ்ச் சொல், நாற்பது நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டோரிடையே இன்னமும் கொங்குப் பகுதியில் புழங்கும் வட்டார வழக்கு இது.

நிரப்பி விட்டாயா என்பதன் பேச்சுவழக்கு தான் "நப்பீட்டியா..... !"
உதாரணம், குடுவையிலோ குடத்திலோ நீர் நிரப்பச் சென்றவரிடம் 'நப்பீட்டியா?' எனக் கேட்பது இன்னும் சிற்றூர்ப் பகுதிகளில் நிலவி வருகிறது . நெப்பீட்டியா என்று கேட்பவர்களும் உண்டு.

"நிரப்பி விட்டாயா...?' என்பதை "நப்பீட்டியா...?" என்று கேட்பதைப் போல "நிரம்பி விட்டதா?" என்பதை "நம்பீருச்சா ?" என்கிறார்கள் . "நெம்பீருச்சா என்பவர்களும் உண்டு .

தமிழகத்தின் நடு மற்றும் வட பகுதிகளில் "ரொப்பிட்டியா?' என்று இச்சொல் புழங்கி வருகிறது.
ரொம்புதல் - நிரம்புதல்
ரொப்புதல் - நிரப்புதல்.

நப்பீட்டியா, நப்பி வெய்யி, நப்பவே இல்ல , நப்பு ,நப்பாத ,

நெப்பீட்டியா,நெப்பி வெய்யி , நெப்பவே இல்ல, நெப்பு , நெப்பாத ....

இவையெல்லாம் பல்வேறு விதமான பயன்பாடுகள்.

அதேபோல அதிகமாக, மிகவும், நிறைய, மிகுதியாக என்ற சொற்களுக்கு ரொம்பவும் என்ற சொல் பேச்சு வழக்கில் பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது .

உதாரணமாக, குளிர் மிகுதியாக உள்ளது என்பதை ரொம்பவும் குளிருது என்று சொல்வது பேச்சு வழக்கு .
இதுவே கொங்கு வட்டாரத்தில் நம்பவும் அல்லது நம்பாவும் என்று வழங்கப்படுகிறது.

நம்பக் குளுருது
நம்பாவுங் குளுருது என்பன கொங்கு வட்டாரப்‌ பயன்பாடுகள் .

நம்பாக் காய்ச்சல் அடிக்கிதா என்றால் காய்ச்சல் மிகுதியாக இருக்கிறதா எனப் பொருள்.

நம்பாக் காயி இந்த சலக்கா- இம்முறை மிகுதியான காய்கள் காய்த்திருக்கின்றன.

நம்பவும் பண்ணக்கூடாது - நம்பாவும் பண்ணக் கூடாது - அதிகமாக செய்யக் கூடாது .

குறிப்பாக அதிகமாக அலட்டிக் கொள்ளுதல் , பிகு பண்ணுதல் என்பன போன்ற இடங்களில் இதைப் பயன்படுத்துகின்றனர்.

நம்பாவும் பண்ணக்கூடாது- இதற்கு இணையான நவீன வடிவம் ”ரொம்ப ஓவராப் பண்ற”

அடுத்து,
நம்பா அண்ணம் - அதிக எண்ணிக்கை

” நம்பா அண்ணம் பூச்சி பிடிச்சிருச்சு”- அதிக எண்ணிக்கையிலான காய்கள் பழங்கள் பூக்கள் பூச்சியால் அரிக்கப்பட்டிருக்கின்றன

எண்ணம் என்பது எண்ணிக்கை என்பதைக் குறிக்கும் அது கொங்கு பேச்சுவழக்கில் அண்ணம் என்றாகிறது

இன்னமும் மலையாளத்தில் எண்ணிக்கையை எண்ணம் என்றே கூறுகிறார்கள்

”பழம்பூரி உண்டா ?”

”எத்தர ?”

”ரெண்டெண்ணம்?”

”நாலெண்ணம் மதி”

எண்ணுதல் - எண்ணிக்கையும் நினைத்தலும்.

எண்ணுதலில் இருந்து எண்ணம் .

எண்ணம் -எண்ணிக்கை , நினைப்பு

மனதுக்குள் நினைத்தவாறே எண்ணுவதால் இரண்டும் ஒன்றே .

இணைந்திருப்போம்...

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?