இரண்டு நிமிடங்களில் இதைத் தெரிந்து கொள்ளலாம்
மெய்யெழுத்துகளின் மீது தமிழர்களுக்கு அப்படி என்ன வெறுப்பு எனத் தெரியவில்லை .வங்கி ஒன்றின் விளம்பரச் சிறு சுவரொட்டி ஒன்றை நகரில் ஆங்காங்கே பார்க்க முடிந்தது. அவர்களது வங்கியில்
இத்தனை சதவீதத்திலிருந்து Home Loan ஆரம்பிக்கிறது என்பது விளம்பரத்தின் சாராம்சம்.
Home Loan என்பதை அப்படியே தமிழாக்கி வீடு கடன் வசதி என அச்சடித்திருந்தார்கள் .
இரண்டு ஆங்கிலச் சொற்களை இணைக்கும் போது பெரும்பாலும் நேரடியாக அப்படியே இணைத்துக் கொள்ளலாம் .
Home +Loan --Home loan.
அதையே வீடு +கடன் எனும் பொழுது வீட்டுக் கடன் என்றுதான் எழுத வேண்டும், எழுதவும் முடியும்.
அதிகப்படியாக ஒரு 'ட்' டும் ஒரு 'க்' கும் சேர்த்தால் வேலை முடிந்தது. இதைச் செய்யக் குற்றியலுகரப் புணர்ச்சி விதிகளை எல்லாம் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டியது இல்லை ....சும்மா சொல்லிப் பார்த்தாலே தெரிந்து விடும் ... இரண்டையும் சேர்த்து வீடுகடன் எனச் சொல்லும்போது அங்கே ஏதோ முழுமை அடையவில்லை என்று.
எழுதும்போது வீடுகடன் என எழுதிவிட்டு படிக்கும்போது வீட்டுக் கடன் எனப் படிப்பவர்களைப் பார்த்தால் பரிதாபப்படத்தான் முடியும்.
செய்தித்தாள்கள், விளம்பரத் தட்டிகள் ,பெயர்ப் பலகைகள், இணையதளங்கள் என எங்கும் இதையே பார்க்க நேரிடுவதால் இதுதான் சரி என அனைவருமே நம்பிக் கொண்டு அதையே பின் தொடரவும் ஆரம்பிக்கிறார்கள். அடுத்த தலைமுறையும் அதையே செய்கிறார்கள் .
"இப்ப என்ன.... ரெண்டு எழுத்து இல்லேன்னாலும் புரியுது இல்ல....! எனக் கடப்பவர்களும் உண்டு.
விருப்பமுள்ளவர்கள் தொடரட்டும்.....!
அடுத்த தெருவிலேயே பாத்திரக் கடை என வலி மிகுத்து எழுதப்பட்ட கடை ஒன்றின் பெயர்ப் பலகை கண்ணில் பட்டது . பாத்திர கடை என்றே பார்த்து சலித்துப் போயிருந்த நமக்குச் சந்திப்பிழையின்றி இருந்த அப்பலகை புத்துணர்வைத் தந்தது உண்மை.
அவரிடம் சென்று, " எதற்கு ஒரு 'க்'கன்னா தேவையில்லாமல்....." என யாரும் கேட்காமல் இருந்தால் சரி......!
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!