கொஞ்சம் இதையும் தெரிந்து கொள்வோம்
கீழடி அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் பேரனும் பாட்டியும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது.
காட்சிப்படுத்தப்பட்டிருந்தவற்றைக் காட்டிப் பாட்டியிடம் இவையெல்லாம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டவை எனப் பேரன் கேட்க, மிகப் பழமையானவை என அறிந்திருந்த பாட்டிக்கு அதனை எண்களால் சொல்ல முடியவில்லை.
அந்தக் கணத்தில் மிகப்பெரும் எண்ணாகத் தனக்கு மனதில் பட்டதை வைத்து, "இதெல்லாம் நூறு வருஷம் இருக்கும் ....!" என்றார்.
தூக்கி வாரிப் போட்டது எனக்கு....!
அண்மையில் நண்பர் ஒருவர் பேச்சினிடையே இந்தச் சேர, சோழ ,பாண்டியர்கள் எல்லாம் உண்மையிலேயே இருந்தவர்கள் தானே என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
சேரன் செங்குட்டுவனின் தம்பி தான் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் எனப் பலரும் இன்றும் நம்புகின்றனர் .
செங்குட்டுவனின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு என நம்புபவர்களும் உண்டு .ஆனால் உண்மையில் சேரன் செங்குட்டுவனின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
பல்வேறு உலக நாகரிகங்களுக்கு மத்தியில் தமிழக வரலாறும் செழுமையையும், தொன்மையையும் கொண்டது . இன்றிலிருந்து 6000 -7000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கும் பிற நாடுகளுக்கும் இடையே கடல்வாணிகம் நடந்ததற்கும், நாகரிகம் தழைத்திருந்ததற்கும் ஆதாரங்கள் கிடைத்தாலும் ஆண்டு வாரியாக வரலாற்றை வரையறுத்துக் கூற துல்லியமான சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை.
கீழடி, பொருநை, சிவகளை,ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு,அழகன்குளம், கொடுமணல் என நீண்ட அகழாய்வுகள் தமிழ்நாட்டின் தொன்மையை வெகு தொலைவு வரை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
பல்வேறு ஆய்வாளர்கள், அறிஞர்கள், மொழியியலாளர்கள் ,வரலாற்றாசிரியர்கள், பண்டைத் தமிழகத்தின் வரலாற்றை ஒருவாறு ஆராய்ந்து நிரல்படுத்தி உள்ளனர் .
வாய்மொழிக் கதைகள் ,புனைவுகள் ,தொன்மங்கள், புராணங்கள் தவிர்த்து நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், சங்க இலக்கியங்கள் ,அயல் நாட்டார் குறிப்புகள் ,வடநாட்டார் குறிப்புகள், உலக வரலாறு, அகழாய்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் பழந்தமிழக வரலாற்றில் இவர்களுக்கு இடையில் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் கடைச்சங்க காலத்தொடக்கத்தையும், பழந்தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் வரிசை முறையையும் அவர்தம் காலத்துப் புலவர்களையும் ஆண்டு வாரியாக ஓரளவு தெளிவுடன் வரிசைப்படுத்த முடிந்திருக்கிறது.
சங்க காலச் சேர மன்னர் வரலாற்றைத் தமிழில் ஔவை.சு.துரைசாமிப் பிள்ளைவர்களும்,ஆங்கிலத்தில் கே. ஜி .சேஷய்யரும் தெளிவாக ,விரிவாக விளக்கி இருக்கின்றனர் .
திரு. கனக சபைப்பிள்ளை அவர்கள் மூவேந்தர் காலத்தையும் விரிவாக எழுதியுள்ளார்.
திரு .சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் சங்ககாலப் பாண்டியர் வரலாற்றையும், திரு.மா. ராசமாணிக்கனார் சங்க காலச் சோழர் வரலாற்றையும் சுருக்கமாக எழுதியுள்ளனர் .
ஒட்டுமொத்தமாக இவை அனைத்தையும் ஆராய்ந்து பல்வேறு சான்றுகளுடன் துலக்கமாக காலமுறைப்படி வரிசைப்படுத்தித் தந்திருக்கும் நூல்கள் இரண்டு உள்ளன .
திரு. கணியன் பாலன் அவர்களின் பேருழைப்பில் விளைந்த பழந்தமிழக வரலாறு என்ற நூலும், பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும் என்ற நூலும் தெள்ளத் தெளிவான வரலாற்றை நாம் அறிந்து கொள்ள உதவுகின்றன.
தமிழினி வெளியீடுகளான இவற்றைத் தமிழர்கள் அனைவரும், வரலாற்று ஆர்வலர்களும் தவறாது படிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் .வரலாற்றுக் காலத்திற்கும் பலப் பல நூறாண்டுகள் முற்பட்ட தமிழக வரலாற்றை அறிந்து கொள்ள ஏதேனும் அதிசயம் நிகழ வேண்டும்.
"கங்குலி "தெரியும்....கங்குல் இப்பத்தான்... தொகுப்புகளில் வேறுபாடுகள் இருந்தாலும் தமிழின் தொன்மை வரலாறு உண்மையே எனும்போது கர்வம் பிறப்பதை எனக்குள் உணரமுடிந்தது...செம தலைவா. !
ReplyDeleteThank you
Delete