அழைக்கிறான் , அழைக்கின்றான் ....எது சரி ..?
அழைக்கிறான் , அழைக்கின்றான் ....எது சரி என அண்மையில் சகோதரி ஒருவர் கேட்டிருந்தார்.
இரண்டுமே சரிதான் .
பகுபத உறுப்பிலக்கணம் படித்திருப்போம் . ஒரு பதத்தைப் பகுக்கும்பொழுது பகுதி, விகுதி ,இடைநிலை ,சந்தி,சாரியை ,விகாரம் என அப்பதம் விரியும்.
ஒவ்வொரு பதமும் இவை அனைத்தையும் அல்லது ஒரு சிலவற்றைக் கொண்டு அமையும் . இவற்றுள் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது இடைநிலை .
இது, வினை இடைநிலையாக வரும் பொழுது முக்காலமும் காட்டும் .
அவற்றுள் நிகழ்கால இடைநிலைகள் தான் கிறு, கின்று ஆநின்று ஆகியவை.
"ஆநின்று கின்று, கிறு மூவிடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை"
நன்னூல் : 143
அழைக்கிறான் :
அழை + க் + கிறு + ஆன்
அழை- பகுதி (ஏவலாக வரும்)
க்- சந்தி
கிறு - நிகழ்கால இடைநிலை
ஆன்- ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதி.
அழைக்கின்றான்
அழை + க் + கின்று + ஆன்
அழை - பகுதி
க்- சந்தி
கின்று - நிகழ்கால இடைநிலை
ஆன் - ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதி.
அழையா நின்றான் - ஆநின்று - எதிர்மறை இடைநிலை.
இறந்த கால இடைநிலைகள் நான்கு.
த், ட் ,ற், இன்.
"தடற ஒற்று, இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை"
(நன்னூல் : 142 )
செய்தான் - செய்+த்+ஆன்
த்- இடைநிலை
பார்த்தான் - பார் +த் +த்+ஆன்
த்-இடைநிலை
கொண்டான் - கொள் + ட் +ஆன்
ட்-இடைநிலை
விட்டான்-விடு+ட்+ஆன்
ட்-இடைநிலை
நின்றாள்- நில்+ற்+ஆள்
ற்-இடைநிலை
சென்றார்-செல்+ற்+ஆர்
ற்-இடைநிலை
வழங்கினான்-வழங்கு+இன்+ஆன்
இன்-இடைநிலை
கட்டினான் -கட்டு+இன்+ஆன்
இன்-இடைநிலை
இன்’ என்னும் இடைநிலை மட்டும் சில இடங்களில் இறுதி மெய் ‘ன்‘ கெட்டு ‘இ’ மட்டும் தனித்து வரும். சில இடங்களில் ‘இ’ கெட்டு ன் மட்டும் வரும்.
எடுத்துக்காட்டு:
எஞ்சியது
- எஞ்சு+இ(ன்)ய்+அ+து
இதில் ‘ன்’ கெட்டு ‘இ’ வந்தது.
போனது
- போ(இ)ன்+அ+து.
இதில் ‘இ’ கெட்டு ‘ன்’ மட்டும் உள்ளது.
எதிர்கால இடைநிலைகள் ப்,வ்.
"பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு
திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில."
நன்னூல் :144
காண்பான் - காண்+ப்+ஆன்
ப்-இடைநிலை
செல்வான் - செல்+வ்+ஆன்
வ்-இடைநிலை.
பெயர்களுக்கு இடையில் நிற்கும் இடைநிலைகள் பெயர் இடைநிலைகள் எனப்படும்.
பெயர் இடைநிலைகளாக ஞ், ச், ந், த் என்னும் எழுத்துகள் அமைகின்றன.
அறிஞன், இளைஞன், கவிஞன் - ‘ஞ்’ இடைநிலை
இடைச்சி- ‘ச்’ இடைநிலை
செய்குநன், பொருநன் - ‘ந்’ இடைநிலை
பாணத்தி - ‘த்’ இடைநிலை
விரிவான விளக்கம் நன்றி சகோதரரே💐💐
ReplyDeleteஅருமை
ReplyDelete